அத்தியாயம் 21
‘When you’re sad, you might as well be sad and eat something that makes you happy.’
– Amber Deckers
இறுதிப்போட்டி நடந்து வெற்றியாளர் அறிவிக்கப்படுகையில் மாலை மூன்று மணியாகியிருந்தது. அது முடிய, கலந்துகொண்டவர்களுக்கு விருந்தொன்றை ஒழுங்கு செய்திருந்தது, ஹோம் குக்கிங் குழு!
அது ஆரம்பிக்கையில் ஆரோன் டேல் அங்கிருக்கவில்லை. கிறிஸ்டினாவும் வேர்த்தும் தேடிப்பார்த்தார்கள். அவசரமென்று சொந்த வேலைக்காக வெளியே சென்றுள்ளார், வந்துவிடுவார் என்றிருந்தார், நிகழ்ச்சிப்பொறுப்பாளர்.
இருந்தபோதும், உங்களை மிஸ் பண்ணுகிறோம் செஃப். எங்கே எங்கே என்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. விரைவில் வாருங்கள் என்று, குறுஞ்செய்தியொன்றைத் தட்டி விட்டிருந்தான், வேர்த்.
இறுதிப்போட்டியாளர்கள் மூவரும் மிகவுமே களைத்துப் போயிருந்தாலும் மகிழ்வும் ஆரவாரமாகவும் இருந்த அச்சூழலில் வலு உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். இதுவரை நடந்த போட்டிகளுக்கு விசேடமாக அழைக்கப்பட்ட சமையற்கலை வல்லுநனர்கள் அனைவரும் வருகை தந்திருந்தார்கள். போட்டியாளர்கள் பலருக்கு நல்ல நல்ல வேலை வாய்ப்புகள், பயிற்சி வேலைகள் என்று கிடைக்க, அங்கு, நேர்மறையான அலையே சூழ்ந்திருந்தது.
ஒலிவியா! இது அவளுக்கே அவளுக்கான கொண்டாட்டமாச்சே! போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமன்றி, திட்டமிடாதே, தம் காதலை வெளியுலகுக்குத் தெரிவித்த நாளும் ஆகிற்று. கூடவே, இத்தனை சீசன்களில் நடவாத நிகழ்வாக, பரிசுத்தொகை முழுவதையும் நன்கொடையாகவும் வழங்கியிருந்தாள்! பிறகென்ன? நிச்சயமாக மகிழ்வின் உச்சியில் தான் இருந்தாள். திகட்ட திகட்ட பாராட்டு மழையில் தெப்பலாக நனைந்தபடியிருந்தாள்.
இதெல்லாம் கடந்து, மனதுள் மிகவுமே குழம்பியிருந்தாள். தாய் முகம் கண்டதும் அதிர்ந்து நின்ற ஆரோனும் அழைப்பைத் துண்டித்துவிட்ட தாயும் மனதுள் நின்று மிகவும் தொந்தரவு செய்தார்கள். அதில், ஆரோன் வேறு அங்கில்லை என்றதும் குழப்பம் அதிகரித்திட்டு. அந்த இடத்தில் தகப்பனோடு இது பற்றிக் கதைக்க விரும்பவில்லை, அவள்.
நாளை வீடு சென்றதும் தாயிடம் நேரடியாகவே கேட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகே சற்று இலகுவாக உணர்ந்தாள், அவள்.
அப்படியிருக்கையில், திடீரென்று டெனிஸ்ஸை அழைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தான், வேர்த். என்ன விசயம் என்று யோசித்தபடியிருந்தவள், சில நிமிடங்களில் உதவியாளர் ஒருவர் வந்து அவள், சகோதரங்கள், துர்க்கா என்று அழைக்கவும் என்னவோ ஏதோவென்று சென்றால்…
அன்று மாலை, வெற்றிக்கேடயத்தோடு எப்படியெல்லாம் மகிழ்ந்தது அந்தக் குடும்பம்! அதற்கு நேர்மாறாக கண்ணீரோடு, மெல்பேர்னில் இருந்து சிட்னி நோக்கிப் பறந்துகொண்டிருந்தார்கள். அவுஸ்திரேலியாவில், இரவு பத்தரைக்குப் பின் எந்த விமானமும் தரையிறங்க முடியாது என்பது சட்டம். அதுவே, சிட்னியில் இருந்து ‘ஆமடேல்’ வரை காரில் போகும் திட்டத்தில் வேர்த்தும் உடன் வர, பயணப்பட்டார்கள்.
“ஒலிவியா நீ லிசியின் மகளா? உன் அம்மாவை எனக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால், ஆரோன், தன் இனிய சிநேகிதி என்று எப்போதுமே சொல்வார். தன் முன்னேற்றத்திற்குத் துணை நின்றதாகவும் சொல்லியிருக்கிறார். ஏதோ மனக்கசப்பில் தொடர்பில்லாது போய்விட்டாலும் நினைவில் நிற்கும் இனிய நட்பு என்பார்! இப்போ எங்கிருக்கிறார் என்று தெரிந்ததும் முக்கியமாக எங்கள் எல்லோருக்கும் பிடித்த ஒலிவியாவின் அன்னையென்றதும் தேடிப் போயிருக்கிறார். அந்த நேரம் பார்த்து இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா? உன் அம்மாவிற்குச் சுகம் வந்துவிடும் ஒலிவியா. யோசிக்காமல் போயிட்டு வா!” என்றிருந்தார், கிறிஸ்டினா.
அவருக்கும் உடன் செல்ல விருப்பம்தான். விருந்தினர்களோடு நிகழ்ச்சி நடக்கையில் நடுவர்கள் மூவரும் இல்லையென்றால்? வெற்றியாளரும் இல்லை. ஹோம் குக்கிங் பொறுப்பாளர் முணுமுணுத்ததில் சரியென்று நின்றுவிட்டார்.
அங்கிங்கு நின்று மினக்கெடாது வந்தவர்களை, அந்த அதிகாலைப்பொழுதில் வைத்தியசாலைக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார்கள். சிறு ஊர், எல்லோரும் ஒருவர் ஒருவருக்குத் தெரிந்தவர்களே!
“லிசி நல்ல நித்திரை. ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். அதோடு நாளையே வீட்டுக்கு வந்துவிடுவார். காலையில் வந்தால் பார்க்கலாம்.” என்றதும், பிள்ளைகள் இருவரையும் துர்க்காவையும், தாம் வந்த காரிலேயே வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தாம் மட்டுமாகப் பார்த்துவிட்டுச் செல்வதாக உள்ளே நடந்தார்கள்.
வேர்த் தான் முன்னால் ஓடிவந்து ஆரோனை உலுப்பி எழுப்பியது.
பின்னால், பதைபதைப்பும் கண்ணீருமாக வந்தவர்களை நேராக நிமிர்ந்து நின்று பார்க்க முடியவில்லை, ஆரோனால். ஒலிவியாவைப் பார்க்கத் துடித்த விழிகளுக்கு அனுமதியாது நின்றார், அவர். அவள் ஓடிச்சென்று மெல்ல அறைக் கதவைத் திறந்து உள்ளிட்டிருந்தாள்.
இரவு டியூட்டியில் இருந்த தாதியோடு கதைத்தபடி வந்தார், டெனிஸ். ஆரோனைக் கடந்து சென்றவர் பார்த்த பார்வையில் ஆரோன் உடல் கூனிக்குறுகிப் போயிற்று! மனமோ துவண்டிட்டு. அவ்வளவு குற்றச்சாட்டும் வெறுப்பும் உக்கிரமும் அதிலிருந்தது.
டெனிஸ் பார்த்துச் சென்ற விதம் கவனித்த வேர்த் மிகையாகவே திகைத்துப் போனான்.
“என்ன செஃப் இதெல்லாம்?” ஆரோன் நின்ற நிலை வேறு மிகையாகவே குழப்பிற்று. முதல், அவரை இப்படிக் காணவே பிடிக்கவில்லை. இறுகக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னான்.
தனக்கே தனக்கென்று துணையாக ஒருவன்! ஆரோன் மனம் குலுங்கிற்று. மனப்பாரத்தை அவனிடம் இறக்கி வைக்க முடிந்தால்? அது, ஒருபோதும் முடியாது!
“லிசி என் நல்ல நண்பி…இடையில் தொடர்பு விட்டுப் போயிருந்தது. இன்று ஒலிவியாவின் அன்னையாகக் கண்டதும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று ஓடிவந்தேன். அது பார்த்தால்…” இறங்கிவிட்ட குரலில் எங்கோ பார்த்தபடி சொன்னவரையே பார்த்து நின்றவன், “தெரியும், கிறிஸ்டினா சொன்னார்.” என்றான்.
தலையாட்டியவர் அமைதியாக நிற்க, “நான் சென்று ஆன்ட்டியை பார்த்து வருகிறேன்.” என்று நகர்ந்தான், அவன்.
‘இனி எனக்கு இங்கு என்ன வேலை? வேர்த் வரவிட்டுச் சொல்லிக்கொண்டு வெளிக்கிட வேண்டியதுதான்.’ என்று, ஆரோன் எண்ணிக்கொண்டு நிற்கையில், “எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற இறுக்கமான குரல் திரும்ப வைத்தது.
உக்கிரம் கொப்பளிக்கும் விழிகளோடு உறுத்து விழித்தார்,டெனிஸ்.
“டெனிஸ்…” ஆரோன் தொடங்க…
“அந்தப் பக்கமாக வாருங்கள், உங்களோடு கதைக்க வேண்டும்.” விறுவிறுவென்று நடந்து அந்தக் கொரிடோரால் தோட்டத்தில் இறங்கி நின்று கொண்டார், டெனிஸ்.
இருளின் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது அந்த வைத்தியசாலை. ஆங்காங்கே மிகச் சில நடமாட்டம் மட்டுமே. டெனிஸ் அருகில் சென்று நின்ற ஆரோனால் கதைக்க முடியவில்லை.
“அழகான அமைதியான குடும்பம் என்னுடையது. நீ அதில் பாறாங்கல்லையே தூக்கிப் போட்டு விட்டாய் ஆரோன்!”
முகத்துக்கு நேரே உதாசீனமாகச் சீறினார், டெனிஸ். அந்தளவுக்கு அவர் இரத்தம் கொதித்துப் போயிருந்தது.
“நாங்கள் அங்கு நிற்கையில் உனக்கு இங்கு என்ன வேலை? என்ன நினைத்துக் கொண்டாய் நீ? உன் பணம், பதவி, பட்டம், பாரம்பரியம், அந்தஸ்து என்ன மயிராக இருந்தாலும் அது உன்னோடு!” காறித் துப்பாத குறையாக உக்கிரமாக வெளிவந்திருந்தது, டெனிஸ் குரல்.
“உலகே பாராட்டும் பெரிய மனிதனாக இருக்கும் நீ செய்வது கீழ்த்தரமான செயல் என்று கூடவா உனக்கு விளங்கவில்லை?”
“டெனிஸ் டெனிஸ் பிளீஸ்… லெட் மீ டோக். நான் எந்தவிதமான கெட்ட இன்டென்சனிலும் இங்கு வரவில்லை. சத்தியமாக!” பதற்றத்தோடு குறுக்கிட்டு இருந்தார், ஆரோன்.
“பிறகு ஏன் வர வேண்டும்? நன்றாக இருந்த என் மனைவியை இந்த நிலைக்கு நீ கொண்டுவரவில்லை என்கிறாயா?”
ஆரோன் விழிகள் கசிந்தன.
“ஷி இஸ் மை ஃப்ரெண்ட் டெனிஸ், நொட் எ எனிமி!”
“ஃப்ரெண்ட் என்ற வார்த்தையைப் பாவித்துக் கொச்சைப்படுத்தாதே! அறைந்து விடுவேன். பின்விளைவுகளை யோசிக்கவே மாட்டேன்.” கையோங்கிக் கொண்டு நெருங்கிவிட்டார், டெனிஸ்.
அசையாது நின்றார், ஆரோன்.
“என்னை அடிப்பதால் உனக்கு அமைதி கிடைக்கும் என்றால் அடி, டெனிஸ்! உன் மனைவி தந்த அடியை எப்படி அசையாமல் நின்று வாங்கினேனோ அப்படியே வாங்கிக்கொள்வேன். என் மகளை இவ்வளவு காலமும் மிக மிக அருமையாக வளர்த்ததற்கு இதற்கு மேலாகவும் உன்னிடம் தண்டனை வாங்கத் தயார்!”
டெனிஸ் முகம் விகாரமாகியது. இதயத்துள் வலித்தது. “யார் மகளை யார் உரிமை கொண்டாடுவது?” வாய்விட்டே கேட்டிருந்தார்.
“இதைக் கேட்க நீ இங்கு வந்திருக்கவே வேண்டாம் ஆரோன். அங்கு வைத்து என்னிடமே கேட்டிருக்கலாம். ஒலிவியா எனக்கும் லிசிக்கும் பிறந்தவள். இடையில் நீ எங்கு வந்தாய்?”
வருத்தமாகச் சிரித்தார், ஆரோன்.
“உண்மை உனக்குத் தெரியும் பிறகென்ன?” சொல்லவும் செய்தார்.
“அவள் என்…” மீண்டும் அவர் வாயால் ‘மகள்’ என்று சொல்லத் தொடங்கவும் உக்கிரமாகிவிட்டார், டெனிஸ்.
“நிறுத்து! இப்போதும் உனக்கு நான் சிறிதேனும் மரியாதை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம் தான், என் மகள் ஒரு சமையற்கலை வல்லுநராக உன்னை மிகவுமே நேசிப்பவள். அவ்வளவும்தான்.” கண்களால் கண்ணீர் வழிய கோபத்தில் குரல் நடுங்கத் தொடர்ந்தார், டெனிஸ்.
“லிசி… என் அருமை நண்பி லிசி, அன்று, 3 மாதக் கருவைத் தாங்கியபடி, பாரம்பரியமிக்க கத்தோலிக்கர்களான அவளது குடும்பத்தில் தான் ஒருவனிடம் ஏமாந்துவிட்டதைச் சொல்லும் வழி தெரியாது தற்கொலைக்கு முயன்ற போது என்னால் காப்பாற்றப்பட்டவள்.
அன்று, அவள் வருந்துவது பொறுக்காமல் எதையுமே யோசியாது ‘நான் இருக்கிறேன் வா’ என்று அவள் வீட்டுக்கு அழைத்துப் போனேன். அதுவரை, தங்களில் ஒருவன் நான் என்றவர்கள் என் மதத்தைக் காட்டி விலகிப் போகச் சொன்னார்கள். லிசியின் வயிற்றில் குழந்தையுண்டு என்றதும் அவளையும் சேர்த்தே விலக்கி வைத்துவிட்டார்கள்.
அன்று, இந்த வேதனைகளில் இருந்து அவளை மீட்க நான் பட்ட பாடு வார்த்தைகளால் சொல்லி உனக்குப் புரியாது, எனக்குத்தான் தெரியும். பிள்ளையையும் சுமந்துகொண்டு வீட்டாரும் ஒதுக்கியதில் அவள் பட்ட பாடும் எனக்குத் தான் தெரியும்.
இத்தனை வருடங்கள் கடந்து மனைவி, குழந்தைகள் என்று அமைதியாக இருக்கையில் எங்கிருந்து நீ முளைத்தாய் மேன்? யாருக்கு யார் மகளென்று சொல்கிறாய்? இப்போ, மீண்டும் என் மனைவியை வைத்தியசாலையில் படுக்க வைத்திருக்கிறாய்!
நீ நடுவராக இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என் மகளை அந்தப் போட்டிக்கு விட்டிருக்கவே மாட்டேன். தெரிந்த பிறகு, வர வைத்துவிடுவோம் என்று என் மனைவி சொல்லவும், நான் தான் கேட்காது முட்டாள் வேலை பார்த்து விட்டேன்.
போட்டிக்கு நடுவராக வந்தாயோ அந்த வேலையைப் பார்த்துவிட்டு போ! இல்லை, இனியும் என் மனைவியைச் சங்கடப்படுத்தி, என் மகளுக்கு வேண்டாத கதைகளைச் சொல்வது என்று நடக்க நினைத்தால், உன் உயிரை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன், புரிந்ததா?”
வார்த்தை ஒன்று ஒன்றும் சாட்டையடிகளாக விழ, உறுமியபடி அடித்துவிடும் வகையில் நெருங்கினார், டெனிஸ்.
அதற்கு நேர்மாறாக அமைதியாக நின்றார், ஆரோன்.
“நான் லிசிக்கு, உன் மனைவி லிசிக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன் டெனிஸ். ஒலிவியா என் மகள் என்று என் வாயால் நான் சொல்லப் போவதில்லை. ஒருபோதும் சொல்லமாட்டேன். இனி உங்கள் வாழ்வில் இந்த ஆரோனின் பிரசன்னம் இராது! நீ ஒரு கொலையாளி ஆகும் நிலைக்கு உன்னைத் தள்ள மாட்டேன்!”
உச்சபட்ச வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னவர், அங்கிருந்து அகன்றுவிடும் நோக்கில் திரும்பினார். மறுநொடி, அப்படியே வேரோடி நின்றுவிட்டார்.
இதோ போகிறேன் என்றவர் அசையாது நிற்கவும் விசுக்கென்று திரும்பிய டெனிஸ் தலையில் பெரும் கட்டிடம் பொலபொலவென்று பொறிந்து கொட்டியது போன்று அதிர்ந்து போனார். அவர் விழிகளால் சரசரவென்று கண்ணீர் கொட்டியது.
அவர்களுக்குப் பின்னால், வேர்த் அணைத்துப் பிடித்திருக்க, அதிர்வில் ஆடாது அசையாது கண்ணீர் ஆறாக வழிய நின்றிருந்தாள், ஒலிவியா. இருவருமே, உச்சபட்ச அதிர்வில் நின்றிருந்தார்கள்.

