வெளிச்சக்கீற்று 13 – 1

அத்தியாயம் 13

 

 

அவனிடம் வருவதாகச் சொன்ன கணத்திலிருந்து, தன் முடிவு சரிதானா என்கிற கேள்வியை அவள் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் வேலையாகக் கமலாம்பிகைக்கு அழைத்து, வீட்டுக்கு வரக் கொஞ்சம் நேரம் செல்லும் என்று சொல்லிவிட்டு வைத்தாள்.

 

மாலையானது. போவதா என்கிற கேள்வி மீண்டும். வருகிறேன் என்றுவிட்டு இது என்ன அர்த்தமற்ற யோசனை என்று தன்னையே குட்டிக்கொண்டு, அவனுடைய பலசரக்குக் கடைக்குச் சென்றாள். அங்கே, நெற்றியில் திருநீறு சந்தனம் தீட்டி, சாந்தமான முகமும் கனிவான பார்வையுமாக ஒரேயொரு ஐயா மட்டுமே இருந்தார்.

 

அவரிடம் அவனை எப்படிக் கேட்பது என்று அவள் தயங்கி நிற்க, “நீங்கதானே தூரிக்குட்டின்ர அம்மா. பிள்ளைக்குக் காய்ச்சலாம் எண்டு தம்பி சொன்னார். இப்ப எப்பிடி இருக்கிறா?” என்று, நெடுநாள் பழகியவர் போன்று விசாரித்தார் அவர்.

 

உள்ளூர வியப்புப் பரவ, “பரவாயில்லையாம் எண்டு அம்மா சொன்னவா. இனிப் போய்ப் பாத்தாத்தான் தெரியும்.” என்றவள் பார்வை, அகத்தியன் எங்கே என்று தேடிற்று.

 

“தம்பி, நீங்க வருவீங்க எண்டு சொன்னவர். நேராப் போங்கோம்மா. உள்ளுக்கதான் நிக்கிறார்.” என்று அவர் சொல்லும்போதே, ஈரக்கையைத் துண்டு ஒன்றினால் துடைத்தபடி வந்தான் அகத்தியன்.

 

“வாங்க!” என்று அழைத்துப் போனான். முதலில் கடை, அதற்கு நேர் பின்னே ஸ்டோர் ரூம் போன்ற ஒன்று. அதற்கு நேர் பின்னேயும் ஒரு பகுதி இருந்தது. அது இருபக்கமும் இரண்டு அறைகளாகப் பிரிந்திருக்க, அந்தப்பாதை நேராகச் சென்று பின்பக்கக் கதவில் முடிந்தது.

 

அவன், வலப்பக்கம் இருக்கும் அறையின் கதவைத் திறந்து அழைத்துப் போனான்.

 

ஒற்றையடிப் பாதைக்கு மட்டுமே இடம் விட்டது போன்று, பொருட்களால் நிறைந்திருந்த கடை, அங்கு மட்டும் அப்படி இல்லாமல் வெகு நேர்த்தியாக, ஒரு அலுவலக அறையாகக் காட்சி தந்தது.

 

அவன், தன் மேசையின் முன்னே இருந்த இருக்கையைக் காட்டிவிட்டு, “தேத்தண்ணி ஊத்தவா?” என்று வினவினான்.

 

“இல்ல, நான்…”

 

“நான் நல்லாவே ஊத்துவன்.” அவளை மறுக்கவிடாமல் இடையிட்டுச் சொன்னவன் தண்ணீரைக் கொதிக்கவிட்டான். பிஸ்கட் பக்கட் ஒன்றை உடைத்து, ஒரு தட்டில் போட்டு அவள் முன்னே வைத்தான்.

 

பேச வேண்டியதைப் பேசிவிட்டு அவளை அனுப்புவதை விட்டுவிட்டு இதென்ன உபசரிப்பு என்று இருந்தது அவளுக்கு.

 

“எனக்கு நிறைய நேரம் மினக்கெடேலாது.”

 

“எனக்கும் தெரியும். ஆனா, முழுநாளும் வேலை செய்து களைச்சுத் தெரியிற உங்களுக்கு, ஒண்டும் தராம கதைக்கச் சொல்லுறீங்களா? ரெண்டு நிமிசம்தான்.” என்றவன், தேநீரை இலாவகமாக ஊற்றி, அருந்தும் பதத்திற்கு ஆற்றி, அதை இரண்டு கோப்பைகளில் வார்த்து, ஒன்றை அவள் முன்னே வைத்தான். மற்றையதைத் தனக்கு எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

 

ஒரு வாய் பருகிப் பார்த்துவிட்டு, “நல்லாத்தான் இருக்கு. குடிச்சுப் பாருங்க.” என்றான்.

 

அதற்குமேல் அப்படியே இருக்க முடியாமல் எடுத்து அருந்தினாள். உண்மையில் அவள் இருந்த மனநிலைக்கு இதமாக இருந்தது.

 

தன் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, “உங்களுக்கு என்னைப் பற்றி எவ்வளவு தூரத்துக்குத் தெரியும் எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா, முதல் கலியாணத்தில நான் பட்டது நிறைய. இப்ப கூட அந்தக் காலமும், அப்ப அனுபவிச்ச கேவலங்களும் நினைவில வந்தா என்னால நித்திரை கொள்ளேலாது. அப்பிடி ஒரு நரகம் அது. ஒரு நாள் முழுக்க என்னை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க வச்சவள். அண்டைக்கு அங்க இருந்த போலீஸ்காரர் எல்லாரும் என்னைக் கேட்ட கேள்விகள் இருக்கே… அதுக்குப் பேசாம என்னை மண்ணுக்க புதைச்சிருக்கலாம்.” என்று அவன் சொல்ல, அவனையே பார்த்தாள் யசோ.

 

“இதுவரைக்கும் அதைப் பற்றியெல்லாம் அம்மா அக்காட்டக் கூடச் சொன்னதே இல்ல. ஆனா, அண்டைக்குப் பிறகு மொத்தமா வெறுத்தே போச்சு. அதாலதான் இனியும் ஒரு கலியாணம் வேண்டாம் எண்டு இருந்தனான். உண்மையைச் சொல்லப்போனா இன்னொரு பொம்பிளையை நம்பிற அளவுக்குத் தைரியம் இல்ல. அதைச் சாட்டா வச்சு அத்தான் வீட்டாக்கள் திரும்பவும் சவீதாவை என்னோட சேர்த்துவிடப் பாக்கினம்.” என்றவனை இடைமறித்து,

 

“இதுக்காக ஒரு கலியாணம் சரி எண்டு நினைக்கிறீங்களா?” என்று வினவினாள் அவள்.

 

“இதுக்காக எண்டு நானும் சொல்லேல்லையே!” என்றான் அவன் சின்ன முறுவலோடு.

 

“அப்பிடி, ஆரையும் நம்பவே மாட்டன் எண்டு இருந்த நான், உங்களை எப்பிடி நம்பினன் எண்டு எனக்கே தெரியேல்ல. இப்ப வரைக்கும் நான் கேட்ட கேள்வி பிழை எண்டோ, அவசரப்பட்டு வாயை விட்டுட்டனே எண்டோ நினைக்கவே இல்ல. எப்பிடியாவது உங்களை ஓம் எண்டு சொல்ல வச்சுக் கலியாணத்தைச் செய்திடோணும் எண்டுதான் விருப்பமா இருக்கு.” என்றதும் அவளுக்கு அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் போயிற்று.

 

“அம்மா, அக்கா எல்லாருக்குமே விருப்பம். உங்கட பதிலுக்காகத்தான் மொத்தக் குடும்பமும் எதிர்பாத்துக்கொண்டு இருக்கிறம்.” அவளைத்தான் மணப்பேன் என்று வீட்டில் சொன்னதைச் சொல்லி, அவளுக்குச் சங்கடத்தை உருவாக்க அவனுக்கு மனமில்லை.

 

உண்மையில் அவன் முகம் பார்த்துத் தன்னைப் பற்றிச் சொல்லச் சிரமப்பட்டாள் யசோ. ஆனால், பேச என்று வந்துவிட்டுப் பேசாமல் இருக்க முடியாதே.

 

“இவர்… கிசோர் இருக்கிற வரைக்கும் நல்ல சந்தோசமாத்தான் போனது வாழ்க்கை. பிறகும்… இவர் இல்லை எண்டுறதைத் தவிர்த்து, குறை எண்டு சொல்ல…” என்றவள் ஒன்றுமில்லை என்பது போன்று கைகளை விரித்தாள்.

 

“நாளாக நாளாக ஒரு மாதிரியான அழுத்தம். சில நேரங்களில தனி ஒருத்தியாச் சமாளிக்கவே ஏலாம இருக்கும். ஓய்வில்லாம ஓடிக்கொண்டே இருக்கோணும். இதில, ஆரும் ஒரு வார்த்த சொல்லாத அளவுக்கு நடை, உடை, பாவனை எல்லாத்திலயும் கவனமாவும் இருக்கோணும். அவே போட்டு வச்சிருக்கிற அந்தக் கோட்டை நான் தாண்டிட்டா எனக்கு வேற பெயர் வந்திடும். அந்த நேரமெல்லாம் எனக்கு ஒண்டு நடந்திட்டா என்ர பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டுற பயம் வரும். இப்பிடி வறட்சியாவே இருந்த வாழ்க்கை தந்த சலிப்பிலதான் என்னையும் பிள்ளைகளையும் ஏற்கிற நல்ல ஒருத்தர் கிடைச்சா, வாழ்க்கை திரும்பவும் நல்லாருக்குமே எண்டுற ஆசை வந்தது. அதுக்கான முயற்சிகள நானாவே எடுத்தனான். அந்த நேரம் ஒண்டும் அமையேல்ல. பிறகு பிறகு… எனக்கும் அந்த எண்ணம் இல்லாமப் போயிட்டுது.”

 

கடைசி வரியைச் சொல்கையில் அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டதிலேயே ஏதோ நடந்திருக்கிறது என்று விளங்க, “அது ஏன்?” என்றான் அவன் சுருக்கமாக.

 

“அது… ஏனோ விருப்பம் இல்லாமப் போயிற்றுது.”

 

இப்போதும் தன் பார்வையைத் தவிர்க்கிறாள் என்பதைக் குறித்துக்கொண்டு, “ஆரம்பத்தில இருந்தே உங்களுக்கு அந்த விருப்பம் இருந்திருக்காட்டி அது வேற. ஆனா இருந்திருக்கு. தெளிவா யோசிச்சுத்தான் அந்த முடிவை எடுத்தும் இருக்கிறீங்க. பிறகு வேணாம் எண்டு நினைச்சிருக்கிறீங்க எண்டா என்னவோ நடந்திருக்க வேணும். என்ன எண்டு சொல்லுங்கோ?” என்று, இதமாகவே அவளைப் பேசவைக்க முயன்றான் அவன்.

 

அவளுக்குச் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பம். அன்னையே அவளைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. அவன் எப்படி?

 

“யோசிக்காமச் சும்மா சொல்லுங்கோ. என்ன எண்டாலும் நான் பிழையா நினைக்க மாட்டன். அம்மா அக்காட்டக் கதைக்காத விசயங்களைக் கூட இப்ப உங்களிட்டச் சொல்லி இருக்கிறன். அதுக்குக் காரணம், அவேயே விட என்ர நிலைமைல இருக்கிற உங்களுக்குக் கூட விளங்கும் எண்டுறதுதான். அதேதான் உங்களுக்கும். நீங்க சொன்னா உங்களை எனக்கு இன்னும் கொஞ்சம் கூட விளங்கலாம். இல்ல, உங்கட மறுப்பில இருக்கிற நியாயம் விளங்கலாம்.” என்றதும் தன் தயக்கம் உதறினாள் அவள்.

 

“அது… நானாத்தான் ஆரம்பிச்சு, நானாத்தான் புரோக்கர் வரைக்கும் போனனான். அது… அம்மாக்குப் பிள்ளைகளில பாசம் இல்லாம நான் என்ர… சந்தோசத்துக்காகப் பாக்கிற மாதிரிப் பட்டிருக்குப் போல. அதுக்கு அம்மா… பிள்ளைகள் இருக்கிறதைச் சொல்லாம நீ ஒரு கலியாணத்தை கட்டு, நான் உயிரோட இருக்கிற வரைக்கும் ரெண்டு பிள்ளைகளையும் வச்சுப் பாக்கிறன், அதுக்குப் பிறகு கடவுள் விட்ட வழி எண்டு சொன்னவா…” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் முகம் சிவந்து, விழிகள் நிறைந்து போயின.

 

அவளைப் பார்க்கவே அவனுக்குப் பாவமாயிற்று. கிட்டத்தட்ட அவளைத் துணைக்கு அலைவதாக எண்ணியிருக்கிறார். இல்லாமல் அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அலைதலுக்கும் தேடுதலுக்கும் வித்தியாசம் உண்டே! அலைதல் கண்ணில் படுவதைப் பற்றிக்கொள்ளும். தேடுதல் பொருத்தமானதைக் கண்டடையும். அவள், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பொருத்தமான ஒருவனைத் தேடிக் கண்டடைய முதலே, வார்த்தைகளால் அடித்துத் தடுத்து நிறுத்தியாயிற்று.

 

பிள்ளைகள் மீது எவ்வளவு பாசமும் கவனமுமாக இருப்பாள் என்று அவனுக்கே தெரியும். அப்படியானவளிடம் போய் இப்படிச் சொன்னால் நொறுங்கித்தான் போவாள்.

 

மலை முட்டியும் அசையாதவன் மயிர் தடுக்கி மரணித்த கதைதான் அவளுக்கு நடந்திருக்கிறது. இரண்டாவது திருமணத்தைத் தானே முன்னெடுக்கும் அளவுக்கு மனத்திடம் நிறைந்தவளையே உடைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது பெற்ற அன்னையின் பேச்சு.

 

இதற்குள் அவள் தன்னைச் சமாளித்திருந்தாள். “அதுக்குப் பிறகு ஒரு வைராக்கியத்தில அதைப் பற்றி நான் யோசிக்க இல்ல. ஆனா இப்ப, உண்மையா எனக்கு விருப்பமில்ல. பிள்ளைகள் ரெண்டு பேருமே வளந்திட்டினம். இனி என்ன…” என்று முடிக்காமல் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

 

இனி அவளுக்கென்று ஒரு வாழ்க்கையை யோசிக்க என்ன இருக்கிறது என்று கேட்கிறாள். அந்தளவுக்கு இவள் வயதும் வாழ்க்கையும் போயிற்றா என்ன? இப்படித்தானே இத்தனை வருடங்களாக நீயும் இருந்தாய் என்று உள்மனம் குட்டியதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை அவன்.

 

error: Alert: Content selection is disabled!!