அத்தியாயம் 27
யாழிசையின் ஸ்கூட்டி அந்த வீட்டின் கேட்டைத் தாண்டி மறைந்ததும் வேகமாகத் திரும்பிய குரு, இரண்டெட்டில் தூயவனின் முன்னால் வந்து நின்றான்.
“அந்தப் பிள்ளைக்கு என்னடா செய்தனி? உன்னைக் கதை எண்டுதானே விட்டனான்?” என்றான் சீற்றமாக.
அந்தக் கேள்வியில் அதிர்ந்துபோய்த் தமையனைப் பார்த்தாள் துளசி. தூயவனின் பார்வையும் தங்கையைச் தொட்டு மீண்டு நண்பனை முறைத்தது.
அதையெல்லாம் பொருட்டில் கொள்ளாமல், “ஒழுங்கா என்ன நடந்தது எண்டு சொல்லு தூயவா. அந்தப் பிள்ளைட்ட போய் நான் மன்னிப்புக் கேக்கிறன்.” என்று நின்றான் அவன்.
“டேய்! என்னைப் பிறகு விசாரிக்கலாம். நீ முதல் போய், அவள் அவளின்ர வீட்டுக்கு ஒழுங்காப் போய்ச் சேருறாளா எண்டு பாத்துக்கொண்டு வா!” என்றான் தூயவன்.
“எனக்கு விசரக் கிளப்பாத தூயவா. அந்தப் பிள்ளை என்னை நம்பித்தான் வந்தவா. உன்னோட கதைக்கச் சொல்லி விட்டதுக்கு என்ன சொன்னவா எண்டு கேட்டனிதானே. அதே என்னைப் போட்டுக் குத்துது. இதுல நீ என்னவோ பெருசா செய்து அழ வச்சிருக்கிறாய்.” என்றதும் செய்த தவறும் சேர்ந்து குத்தியதில் உச்சிக்கு ஏறியிருந்தது அவனுக்கு.
“என்னட்ட வாங்கிக் கட்டாம சொன்னதைச் செய் குரு!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் தூயவன்.
“ஓ! அடிப்பியோ. அண்ணா எண்டு வாய் நிறையக் கூப்பிட்ட பிள்ளைக்கு நான் பாத்த வேலைக்கு எனக்கு இது தேவைதான். அடி! நீ நல்லா அடி!” என்று, தூயவன் தள்ளிவிட்டதால் பின்னால் போனவன் திரும்பவும் அவனோடு மோதுகிறேன் என்று வந்தபடி சீறினான்.
பார்த்திருந்த துளசி நடுங்கியே போனாள். இங்கே என்ன நடக்கிறது என்று அவளுக்கு விளங்கவேயில்லை. அவள் கைக்குள் இருந்த மிதிலன் வேறு நன்றாகப் பயந்திருந்தான். அவனோடு ஓடி வந்து ஆண்கள் இருவருக்கும் நடுவில் புகுந்துகொண்டு, “என்ன செய்றீங்க ரெண்டு பேரும்? ஆராவது ஒரு ஆளாவது நிதானமா இருக்க மாட்டீங்களா? அண்ணா என்னன்னா இது? தம்பி நிக்கிறான் எண்டு கூடப் பாக்க மாட்டீங்களா?” என்று இரு ஆண்களிடமும் பரிதவித்தாள்.
இடையில் கைகளை ஊன்றி மூச்சை இழுத்துவிட்ட தூயவன், “போய் அவளைப் பாத்துக்கொண்டு வாடா. நான் போனா ஊருக்கே சீனாகும். அதாலதான் உன்னச் சொல்லுறன். சும்மாவே நடுங்கிக்கொண்டு இருந்தவள். போ மச்சான். ஒழுங்கா வீடு போய்ச் சேருவாளா எண்டு எனக்குப் பயமா இருக்கு.” என்று, இப்போது தன்மையாகச் சொன்னான்.
“அந்தளவுக்கு அந்தப் பிள்ளையை என்னவோ செய்திருக்கிறாய் என்ன?” என்று அப்போதும் கேட்டுவிட்டு, “அந்தப் பிள்ளை நல்லபடியா போறது எனக்கும் முக்கியம் எண்டுறபடியால இப்ப போறன். ஆனா வந்து இருக்கு உன்னோட சண்டை!” என்றுவிட்டு வேகமாய் வெளியேறி, தன் இருசக்கர வாகனத்தைச் சுழற்றித் திருப்பி எடுத்துக்கொண்டு பறந்தான் குரு.
அவன் போகும் வேகத்தைப் பார்த்த துளசிக்கு இவன் முழுதாகத் திரும்பி வருவானா என்கிற பயமே வந்திருந்தது.
திரும்பித் தமையனைப் பார்த்தவள் விழிகளில் பெரும் கலக்கம். அவனிடம் என்ன கேட்பது, எப்படி விசாரிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. இத்தனை காலத்தில் அப்படியெல்லாம் அவனிடம் கேள்விகள் கேட்டதில்லை.
ஆனால், இன்றைக்கும் அப்படி அவளால் இருக்க முடியவில்லை. அந்தளவில் யாழிசையின் அழுத முகமும், அக்கா அக்கா என்று அவள் பின்னாலேயே திரிந்து, ஒருமையில் அழைக்கச் சொல்லி வற்புறுத்தி, இனிமையாகப் பழகிவிட்டு போகையில் இவளை நிமிர்ந்தும் பாராமல் போன செய்கையும் துளசியைப் பாதித்திருந்தன.
அவள் விழிகளில் தொக்கி நின்ற கேள்வியைத் தூயவனும் படிக்காமல் இல்லை. ஆனாலும், “தம்பியப் போய்ப் படுக்க வச்சிட்டு வா!” என்றுவிட்டுப் போய் சோபாவில் விழுந்தான்.
வேறு வழியில்லாமல் மகனோடு அவள் அறைக்குள் செல்ல, இங்கே தூயவன் மிகுந்த களைப்புடன் தலையைப் பின்னால் சாய்த்து, விழிகளை மூடிக்கொண்டான்.
மூடிய விழிகளுக்குள் அவளின் அழுத முகம் வந்து நின்றது. என்ன நினைத்திருப்பாள் அவனைப் பற்றி? மிக மோசமாகத்தானே?
அவனும் பேச என்று வரவழைத்துவிட்டு என்ன செய்து வைத்திருக்கிறான்? அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் நாசமாக்கி, அவளிடம் இன்னுமே வெறுப்பையும் சம்பாதித்து இன்னுமின்னும் தன் நிலையை மோசாமாக்கி வைத்திருக்கிறான். தன் நெற்றியில் தானே அறைந்துகொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
இனி முற்றிலுமாக அவனை வெறுத்து ஒதுக்கிவிடுவாளா? அந்த நினைப்பே ஈட்டியாய் நெஞ்சுக்குள் பாய, மிக வேகமாக நிமிர்ந்தவன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். நெஞ்சு பாரம் கூடிப்போய்க் கனத்தது. அவளையும் வருத்தி, தன் உயிரையும் குடிக்கும் இந்தக் காதல் அவனுக்குள் ஏன் வந்ததோ தெரியவில்லை.
காற்றை வாயால் ஊதித் தள்ளியவனுக்கு அவள் இல்லாத வாழ்க்கையை இப்போதும் யோசிக்க முடியவில்லை. இதை எப்படி அவளுக்குப் புரிய வைப்பது என்றும் தெரியவில்லை.
அப்போது தூயவனுக்கு அழைத்தான் குரு.
“அவா கோயிலுக்குப் போறா.” எரிச்சலுடன் மொட்டையாகச் சொன்னவனின் தொனி, ‘இனி நான் என்ன செய்ய’ என்று கேட்டது.
“அங்க ஏன்?”
“எனக்கென்ன தெரியும்? நீ செய்த கொடுமை தாங்காம சொல்லி அழுறதுக்குப் போறா போல.” என்றதும் அமைதியாகிப்போனான் தூயவன்.
அப்படித்தானோ என்று அவனுக்கும் தோன்றிவிட்டதில் கீழுதட்டை அழுத்திக் கடித்தான். இல்லாமல் மச்சத்தைச் சாப்பிட்டுவிட்டு, அதை மறந்து கோயிலுக்குப் போவாளா?
“டேய் என்ன? எதையாவது சொல்லு.”
“நான் கொஞ்சம் பிழையாத்தான் நடந்திட்டன் மச்சான். ஆனா, வேணுமெண்டு எதையும் செய்யேல்லையடா.” என்றவனின் குரலில் தெரிந்த கலக்கத்தில் குரு அப்படியே நின்றுவிட்டான்.
இப்படிக்கு கலங்குவது தூயவனின் இயல்பில்லை. மார்க்கண்டேயர் இறந்த ஆரம்ப நாள்களில் இறுக்கமாக இருந்தானே தவிர்த்துக் கலங்கிப் பார்த்ததில்லை.
“டேய் தூயவா!” என்றான் வேறு பேச வராமல்.
“அவளுக்கு என்னைப் பிடிக்கவே இல்ல போல மச்சான்.
“லூசாடா நீ? அப்பிடியெல்லாம் இருக்காது. நீயா எதையாவது நினைக்காத.” அவள் வேண்டுமே வேண்டும் என்று சொன்ன நண்பன், இப்போது இப்படிச் சொல்லவும் அந்த நிமிடமே அவனை அணைத்து, ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது குருவுக்கு.
“நான் திரும்பி வரவாடா?” என்றான் வேகமாக.
இல்ல, அவள் வீட்டை போற வரைக்கும் போயிட்டு வா.”
“அப்பிடி என்னடா செய்தனி? நீயும் இப்பிடிப் புலம்பி, அந்தப் பிள்ளையையும் அழ வச்சு, என்ன மச்சான்?”
உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றவனால் தான் செய்த காரியத்தைத் தைரியமாகச் சொல்ல முடியவில்லை.
கண நேர அமைதியின் பின், “அவளை கிஸ் பண்ணிட்டன்.” என்றான் உள்ளடங்கிய குரலில்.
“அட நாசமா போனவனே! நானே…” என்று பேச்சு வேகத்தில் வாயை விடப்போனவன் சட்டென்று நிறுத்திவிட்டான். “என்ன மச்சான் நீ. என்ன இருந்தாலும்…” என்றவனை இடையிட்டு, “அதைப் பற்றிக் கதைக்காத குரு.” என்றான் தூயவன் வேகமாக.
அதுவே அதைப் பற்றித் தான் பேசுவதை அவன் விரும்பவில்லை என்று விளங்க அமைதி காத்தான்.
“இப்ப விளங்குது மச்சான். அப்பவும் அப்பிடி எல்லாம் நடக்கிற எண்ணம் இருக்கவே இல்லையடா. ஆனா அவள் திரும்ப திரும்பக் கோவத்தை வரவைக்கிற மாதிரியே நடக்கவும் நிலை தடுமாறி… அவளை மிஸ் பண்ணிடுவனோ எண்டுற பயத்தில…”
“விடு! உன்ன விளங்குது. ஆனா அந்தப் பிள்ளை…” என்றவனுக்கும் யாழிசையை எண்ணி மிகவுமே கவலையாயிற்று. அப்படியே, “விடு, கொஞ்ச நாள் போகச் சமாதானமாகிடுவா. பிறகு நேரா கால்ல விழு.” என்று தூயவனைத் தேற்றினான்.
அப்போதும் அவள் சமாதானமாகுவாள் என்கிற நம்பிக்கை தூயவனுக்கு இல்லை. அதற்கான கால அவகாசமும் அவனிடம் இல்லையே.
*****
குரு தூயவனிடம் சொன்னதுபோல் தன் மனத்தின் பாரத்தை அன்னையின் சந்நிதியில் தீர்க்க முடியுமா என்றுதான் வந்திருந்தாள் யாழிசை. இப்படியே வீட்டுக்குப் போனால் அவள் முகமே அவளைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்கிற பயமும் இருந்தது.
கோயிலுக்குள் வந்தவள் சுவாமி கும்பிடவும் இல்லை. அப்படியே அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். அங்கிருந்து பார்க்க அருள்பாலிக்கும் அம்மன் முழுமையாகத் தெரிந்தாள். அன்னையைப் பார்க்க பார்க்க கண்ணீர் முட்டி மோதிக்கொண்டு வந்தது.
தன் அத்துமீறிய செய்கையால் அவள் உடலிலும் உள்ளத்திலும் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிவிட்டிருந்தான் தூயவன். தலை விண் விண் என்று வலித்தது. நடந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை. அப்படி அது திரும்ப திரும்ப நினைவில் வந்துகொண்டே இருப்பது பிடிக்கவும் இல்லை. அறவே வெறுத்தாள். அதை முற்றிலுமாக மறக்க நினைத்தாள்.
அவர்களை நம்பி ஏன் போனோம் என்று கேட்டு கேட்டு மனம் அழுதுகொண்டே இருந்தது. என்னதான் அக்கா, அண்ணா என்று சொல்லி அழைத்தாலும் அவர்கள் யாரோ தானே? அப்படி அவளை யாரோவாகப் பார்த்ததால்தானே இப்படி ஒரு வேலையை அவளுக்குப் பார்க்க முடிந்தது.
முதலில் அவர்களின் வீட்டுக்குப் போகும் எண்ணம் அவளுக்கு மருந்துக்கும் இருக்கவேயில்லையே. குடும்பத்தையே அழைத்துவா என்று துளசி சொன்னதால்தான் நம்பினாள். அதோடு, துளசியும் குருவும் தவறாக நடக்க மாட்டார்கள் என்று நினைத்தாள்.
அப்படியே அவர்கள் வீட்டில் தூயவன் நின்றாலோ, இல்லை அவள் போன பிறகு வந்தாலோ சொந்தத் தங்கையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவளோடு கதைக்க வரமாட்டான் என்று நினைத்தாள். இவளோடு சுரபியும் இருக்கிறாளே.
ஆனால், தூயவன் அவளோடு தனியாகப் பேச முற்பட்டதைக் காட்டிலும் அதற்குத் துணையாகத் துளசியும் குருவும் நடந்துகொண்டதுதான் அதிகமான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
ஆனாலும் கூடத் தன்னைச் சமாளித்து, என் முடிவில் நான் உறுதியாக இருக்கையில் அவன் என்ன பேசி, எது மாறிவிடப் போகிறது என்று எண்ணி, இன்றோடு இதைப் பேசி முடித்துவிட்டால் அவளை அவள் பாட்டுக்கு விட்டுவிட மாட்டானா என்கிற நப்பாசையில்தான் பேசுவதற்கு சம்மதித்தாள்.
அது பார்த்தால்… மேலே யோசிக்க முடியாமல் மூக்கு முகமெல்லாம் சிவந்து, கண்ணீர் திரண்டது அவளுக்கு.
இப்போது யோசிக்கையில் அவனுக்குக் கோபம் வரும் வகையில் நடந்திருக்க வேண்டாமோ என்று இருந்தது. குறைந்த பட்சமாக அவன் ஓடாதே என்று சொன்னதையாவது கேட்டிருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் உச்சபட்ச அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்தவள் சிறு சந்தர்ப்பம் கிடைத்ததும் தப்பித்துவிட நினைப்பது தன்னிச்சையாய் நடப்பதுதானே.

