கடன் அன்பை முறிக்கும் 27 – 2

கடைசியில் என்ன நடந்தது? இப்போதும் அவள் உள்ளம் தூக்கிப்போட்டது. விழிகளை இறுக்கி மூட, சூடான கண்ணீர் கன்னத்தில் இறங்கி ஓடிற்று. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று முகத்தைக் குனிந்து துடைத்துக்கொண்டாள்.

 

அப்போது, கோயிலைச் சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்த சுரபி, அவள் நெற்றியில் திருநீறு தீட்டிச் சந்தனமும் வைத்துவிட்டாள். திரும்பவும் கண்ணீர் திரண்டுபோனது அவளுக்கு.

 

“அந்தத் தூயவன் மாமா திரும்பவும் உங்களப் பேசினவரா அத்தை?” என்று கேட்டபடி அவளருகில் அமர்ந்தாள் சுரபி.

 

அவளும் ஒன்றும் ஒன்றையுமே கவனிக்கத் தெரியாத குழந்தை இல்லையே. பதின்நான்கு வயதுப் பெண்ணாயிற்றே.

 

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தவள் அழுகையை அடக்கி, சிறு புன்னகையோடு அவள் தலையை வருடிவிட்டாள்.

 

“அழாதீங்க அத்தை. அடுத்த முறை அந்த மாமாவைப் பாத்தா பிடிச்சுப் பேசி விடுவம், சரியா? இல்ல, அப்பாட்ட சொல்லிக் குடுப்பமா?” என்றதும் பதறிப்போனாள்.

 

“இஞ்ச நடந்த எதையும் வீட்டில போய்ச் சொல்ல வேண்டாம் சுரபி.” என்றாள் அவசரமாக.

 

“அப்பிடி என்ன நடந்தது அத்தை? மாதவி அம்மம்மான்ர சொத்தை வாங்கினதுக்குத் திரும்பவும் ஏதும் சொன்னவரா? அதான் நாங்க திருப்பிக் குடுத்திட்டமே.” என்றதும் திகைத்துப்போனாள் யாழிசை.

 

பின்னே, அவளாக வாயை விடப் பார்த்தாளே. சுரபிக்குத்தான் எதுவும் தெரியாதே. இது, இவள் முகம் சரியில்லாமல் இருப்பதாலும், இப்போது அழுததைப் பார்த்துவிட்டதாலும் வந்த கேள்வி.

 

“அப்பிடி எல்லாம் ஒண்டும் நடக்கேல்ல செல்லம். அது… எனக்கு அவரைப் பாத்ததும் ஒரு மாதிரி இருந்தது. நீங்களும் கடைக்குப் போயிட்டிங்களா அதான். அதைவிட, அத்தைக்கு ஃபைனல் எக்ஸாம் வருதெல்லா. அந்தப் பயத்தில அழுகை வந்திட்டுது.” என்று எதையெதையோ பூசி மெழுகிச் சமாளித்தாள்.

 

அப்போது அங்கு வந்து நின்றான் குரு. ஒரு கணம் திகைத்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் யாழிசை.

 

இப்படித்தான் நடப்பாள் என்று எதிர்பார்த்திருந்தான்தான். ஆனாலும், அவள் செய்கையில் குருவின் முகம் கறுத்துப்போனது. அதுவும் நடந்ததை அறிந்த பிறகு இன்னுமே மனத்துக்குள் குன்றினான்.

 

தன்னை நம்பி தன் வீட்டுக்கு வருகிறவளுக்குப் பெரும் தவறு செய்கிறோம் என்று முதலே அவனுக்குத் தெரியும்.

 

ஆனால், அவளை நேசித்துவிட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாது தடுமாறிக்கொண்டிருந்த நண்பனை எப்படி அவனால் அப்படியே விட்டுவிட முடியும்?

 

இல்லை, உண்மையைச் சொல்லி, தூயவன் உன்னோடு கதைக்க வேண்டுமாம் என்று அவன் சொல்லியிருந்தால் வந்திருப்பாளா?

 

அப்படிக் கேட்டு, அவள் மறுத்துவிட்டால் அதன் பிறகு அவனால் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்யவே முடியாமல் போய்விடும்.

 

இதையெல்லாம் யோசித்துவிட்டுத்தான் தவறு என்று தெரிந்தும் செய்தான். ஆனால், அது முடிந்த விதம்?

 

தான் எண்ணியதை எல்லாம் சொல்லி, மனத்திலிருந்து மன்னிப்புக் கேட்கத்தான் விருப்பப்பட்டான். சுரபியும் இருந்ததில் ஒன்றும் சொல்லாமல் கைப்பேசியை மட்டும் அவள் முன்னே நீட்டினான்.

 

அங்கே லைனில் யார் இருப்பார்கள் என்று தெரிந்ததால் முகம் கடுத்துச் சிவந்துவிட, “இன்னுமா இந்த வேலை பாக்கிறத நீங்க நிப்பாட்டேல்ல?” என்றுவிட்டு எழுந்து சுரபியோடு நடக்க ஆரம்பித்தாள்.

 

ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான் குரு. முகத்தில் அறைந்தது போலிருந்தது அவள் கேட்ட கேள்வி.

 

ஆனால், அவளோடு பேசியே ஆக்கவேண்டுமென்று தூயவன் அங்கே லைனில் நிற்கிறானே.

 

“யாழிசை ப்ளீஸ். என்ன எண்டு ஒருக்கா கேட்டுட்டுப் போங்கம்மா.” வேகமாகப் பின்னால் வந்து சொன்னவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “ஸ்கூட்டியடிக்கு போய் நில்லுங்கோ. அத்த இப்ப வாறன்.” என்று முதல் வேலையாகச் சின்னவளை அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினாள்.

 

“சத்தியமா சொல்லுறன். ஏன்டா அண்டைக்கு உங்கட ஃவைப்புக்கு உதவி செய்தனான் எண்டு இருக்கு. ஆர் எக்கேடு கெட்டா எனக்கென்ன எண்டு விட்டுட்டு வந்திருக்க இண்டைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்காது எல்லா?” என்றவள் மனத்தின் கொதிப்பு அடங்கவேயில்லை.

 

எல்லாம் இவனால்தானே. அண்ணா என்று இவனை நம்பி வந்ததால்தானே!

 

“உங்கட நண்பரிட்ட போய்க் கேளுங்க, இண்டைக்கு அவர் என்னட்ட நடந்த மாதிரி அவரின்ர தங்கச்சிட்ட எவனாவது நடந்தா சும்மா விடுவாரா எண்டு. இல்ல, உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா, அவாக்கும் இப்பிடி ஒரு வேலை பாத்திருப்பீங்களா எண்டு நீங்களும் யோசிங்க.” என்றதும் குருவால் அவளை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

 

“தயவு செய்து என்ர கண்ணுக்கு முன்னால நிக்காம போயிடுங்க. உங்களுக்கு இப்பதான் கலியாணம் நடந்திருக்கு. கோயில் வாசல்ல நிண்டு என்னைத் திட்ட வச்சுடாதீங்க. அதே மாதிரி நீங்கதான் உங்கட நண்பர் சொல்லுறதைக் கேட்டு என்ர முடிவைச் சொல்லச் சொன்னனீங்க. நானும் சொல்லிட்டேன். கொஞ்சமாவது மனுசத் தன்மை இருந்தா இனியாவது என்னை நிம்மதியா இருக்க விடுங்க.” என்று பொரிந்து தள்ளிவிட்டு அவள் நடக்க,

 

“இப்ப சந்தோசமாடா உனக்கு?” என்று, இங்கே லைனில் இருந்தவனிடம் பல்லைக் கடித்தான் குரு.

 

“நீ மைக்க போடு!”

 

“என்ன?”

 

“மைக்க போடடா!”

 

அவனும் மைக்கை போட்டான்.

 

“இசை!” என்றான் தூயவன் சத்தமாக.

 

சட்டென்று அவள் தேகம் அதிர்ந்து அடங்க, நடை நின்றது.

 

“ரெண்டே ரெண்டு நிமிசம் எனக்கு உன்னோட கதச்சே ஆகோணும். ஃபோன குருட்ட இருந்து வாங்கு!” என்றான் இப்போதும் சத்தமாக.

 

இரண்டெட்டில் குரு கொண்டுவந்து கொடுக்க அவள் அதை வாங்காமல் குருவைத் தாண்டி நடந்தாள்.

 

“வாங்காமா போறாடா.” என்றான் குரு.

 

“இசை! நீ இப்பிடி நடக்கிறதாலதான் உன்னத் தனியா இஞ்ச கூப்பிட வேண்டி வந்தது. எந்த வழிலயும் உன்னோட கதைக்க நீ விடாட்டி நானும் என்ன செய்ய?” என்றான் தூயவன் கைப்பேசி வழியாக.

 

மனம் குமுறினாலும் அவள் நடை திரும்பவும் நின்றது. அவளிடம் கொண்டு வந்து கைப்பேசியைக் கொடுத்த குரு, “கதையடா!” என்றுவிட்டுத் தள்ளிப்போனான்.

 

“முதல் மைக்க கட் பண்ணிட்டு ஃபோன காதில வை.”

 

அவளும் அவன் சொன்னதைச் செய்தாள்.

 

“நீ உன்ர அண்ணா பார்க்கிறவனைத்தானே கட்டுவாய்?”

 

இப்போது வந்து ஏன் இதைக் கேட்கிறான் என்று புரிந்தும் புரியாத அதிர்வோடு அவள் அமைதி காத்தாள்.

 

“நான் உன்ர அண்ணாவோடயே கதைக்கிறன். அவர் ஓம் எண்டு சொன்னா உனக்கு ஓகேதானே.” என்றதும் அதிர்ந்துபோனாள்.

 

“இல்ல. அது… அண்ணா ஓம் எண்டு சொல்லமாட்டார். அவருக்கு உங்களப் பிடிக்காது.” என்றாள் அவசரமாக.

 

“அது என்ர கவலை.” என்றான் அவன் உடனேயே.

 

அது சினத்தைக் கொடுக்க, “உங்கட அப்பா என்ன மாதிரி? மகன் ஆசைப்பட்டுட்டார் எண்டதும் ஓடிப்போய்க் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்வாரோ?” என்று படபடத்தாள்.

 

“என்ர அப்பாவை, உன்ர அண்ணாவ, ஏன் இந்த ஊரை எல்லாம் சமாளிக்கிறது என்ர வேலை. அதைப் பற்றி நீ யோசிக்காத. உன்ர அண்ணா சொல்லுறவனைத்தான் கட்டுவன் எண்டு சொல்லி இருக்கிறாய். அதுக்கு ரெடியா இரு.” என்றதும் பயந்துபோனாள்.

 

“தயவுசெய்து எனக்குச் செய்த மாதிரி அண்ணாவையும் சித்திரவதை செய்துபோடாதீங்க. எனக்கு அவர் அப்பாக்குச் சமன்.” என்றதும் ஒரு கணம் அவனிடம் பேச்சே இல்லாது போயிற்று.

 

“இண்டைக்கு நான் நடந்துகொண்ட விதம் பிழைதான். ஆனா, அதத் தவிர்த்து உனக்கு எப்ப சித்திரவதை செய்தனான்? என்ன கதைக்கிறாய் நீ? அப்பவும் உன்ன கத்தாம, ஓடாம நில்லு எண்டுதான் சொன்னனான். நீ கேக்காம…” என்றவனின் அது குறித்த பேச்சைக் கேட்க விரும்பாமல், முகம் சிவக்க அழைப்பைத் துண்டித்துக் கைப்பேசியை குருவிடம் கொடுத்துவிட்டுப் போனாள் அவள்.

 

அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்த கைப்பேசியையே கொஞ்ச நேரம் வெறித்தான் தூயவன்.

 

ஒரு நெடிய மூச்சுடன் அவன் நிமிர, மகனை உறங்க வைத்துவிட்டு வந்தாள் துளசி.

 

அதற்கு மேலும் அவளுக்குப் பொறுமை இல்லை. “என்ன அண்ணா இஞ்ச நடக்குது? நான் அவாவா எனக்குச் செய்த உதவிக்காகத்தான் கூப்பிட்டனான். இவரும் கலியாணத்துக்குச் சொன்னனான், வரேல்ல எண்டு சொன்னார். அப்ப ரெண்டுக்கும் சேத்து சாப்பாட்டைக் குடுக்க நினைச்சன். இப்ப பாத்தா அது அப்பிடி இல்ல போல இருக்கே.” என்றாள் அவள்.

 

கொஞ்ச நேரம் சத்தமே இல்லாமல் இருந்தவன் திரும்பி, “அவள்தான் உனக்கு அண்ணி.” என்றான் அமைதியாக.

 

அப்படியும் இருக்குமோ என்று இங்கு நடந்தவற்றை எல்லாம் பார்த்து ஒரு ஊகம் அவளுக்குள் ஓடினாலுமே தமையனின் வாயால் அதைக் கேட்கையில் அவளால் காத்திராமல் இருக்க முடியவில்லை. “என்ன அண்ணா சொல்லுறீங்க? இது எப்பிடி நடக்கும்?” மாதவி நினைவில் வந்து போகப் பதற்றத்துடன் வினவினாள்.

 

“அவாட்ட சொல்லிட்டீங்களா?”

 

“இண்டைக்கு அதுக்குத்தான் இஞ்ச வரவச்சனாங்க.”

 

“உங்களுக்கு இவர் ஹெல்ப் பண்ணி இருக்கிறார் போல.” என்றாள் ஒரு மாதிரி குரலில்.

 

அவன் இருந்த மனநிலையில் அதைக் கவனிக்கவில்லை. “ம்!” என்றான்.

 

உள்ளே நெஞ்சு கொதித்தாலும் அதைத் தமையனிடம் காட்டிக்கொள்ளாமல், “இசை என்ன சொன்னவா?” என்று விசாரித்தாள்.

 

“மாட்டனே மாட்டன் எண்டு நிக்கிறாள்.”

 

“அவாக்குப் பிடிக்காட்டி விட்டிருங்க அண்ணா. பிடிக்காத பிள்ளையை வற்புறுத்துறது சரியில்லை எல்லா?”

 

அப்படி விட முடிந்தால் ஏன் இப்படி இருக்கப் போகிறான்? “அதப் பிறகு பாப்பம். இப்ப நீ போ.” என்று அவளை அனுப்பி வைத்தவனின் சிந்தனை முழுக்க, ணேசனோடு எப்படி என்ன கதைப்பது என்பதில் இருந்தது.

 

error: Alert: Content selection is disabled!!