மகளை பார்த்துக்கொண்டே சகுந்தலா சாப்பிடவும், தாயின் பார்வை தன்மேல்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவளோ மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
குழலி என்று பல்லை கடித்துக் கொண்டு சகுந்தலா கூப்பிட, இதற்கு மேலும் தாயை கவனிக்காமல் இருந்தால் தோலை உறித்து விடுவார் என்பது புரிந்து பாவமாக அவள் நிமிர்ந்து பார்க்க, தேவை இல்லாமல் மனதில் ஆசையை வளர்க்காத புரியுதா?.
உன் அப்பனும் அண்ணனும் வேந்தனோடு உன்னை வாழ விட மாட்டாங்க.
படிப்பு முடிவதற்குள்ளே உனக்கு கல்யாணம் பேச்சு வார்த்தை எடுத்துட்டானே இதுல இருந்து தெரியலையா உன் ஆசை நிராசை என்கவும், ஏங்க ம்மா சின்ன வயசுல இருந்து அவர்தான் எனக்கு புருஷன்னு எல்லாரும் ஆசை வார்த்தை சொன்னீங்க அது என் மனசுல நல்லா பதிஞ்சிருச்சு.
நடுவுல ஏதேதோ நடந்ததால அதை மாத்திக்கோன்னு சொன்னா எப்படிமா முடியும்?.இது என்ன சட்டையா வேணும்னா போட்டுக்குறதுக்கும் வேணும்னா கழட்டி எறிவதற்கும்?.
என்ன நடந்தாலும் வேந்தன் மாமாவை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இல்லனா என்ன நீங்க உயிரோடவே பார்க்க மாட்டிங்க என்றவளோ பாதி சாப்பாட்டிலே கையை கழுவிட்டு வேகமாக போக மகள் சொன்ன வார்த்தையை கேட்டு சகுந்தலாவோ இடி விழுந்த போல ஆனார்.
வேந்தன் வீடு:
டிராக்டரை ஷெட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தவன் வயலில் நடவு வேலை முடிந்ததில் நிதானமாக குளித்து விட்டு வர,பேரனுக்கு கேழ்வரகு களியையும் நாட்டுக்கோழி குழம்பையும் கனகு பரிமாற,ரசித்து ருசித்து சாப்பிட்டு எழுந்தவனோ பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது, அய்யா என்றவாறு வந்த கனகு, தனது பேரனின் பக்கத்தில் உட்கார்ந்தார்.
“ம்ம் சொல்லு”
அது வந்து கண்ணு,உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என்று தயங்க,உன் அண்ணன் பேத்தி ரோஸ்கலர் பாவாடை சாக்கெட்ல,பச்சை கலர் தாவணி போட்டுக்கொண்டு,நீட்டு முடிய ஆட்டிக்கிட்டு வழக்கம் போல அரசமரத்து பிள்ளையாரை பார்க்க வந்தாள்.
போதாததற்கு அவள் அண்ணன்காரன் என்னமோ உலகத்தில் இல்லாத ரதி தேவியை நகர்வலம் கூப்பிட்டு போறப்போல டிராக்டருக்கு வழி விடாமல் நடு ரோட்டில் ஒய்யாரமாக போறான்.
வந்த கோவத்துக்கு நாலு அப்பணும் போல இருந்தது.சரி அந்த பயலுக்கு தெரிந்தது அவ்வளவு தான்னு அமைதியாக வந்துட்டேன் போதுமா என பல்லை கடித்துக் கொண்டு வேந்தன் கேட்க,ஏங்கண்ணு எனக்கு மட்டும் தான் அண்ணன் பேத்தியா?
உனக்கு தாய்மாமன் மவள் இல்லையா? என்று தனது பேரனை பார்த்து பரிதவிப்போடு கனகு கேட்கவும் கையில் இருந்த பேப்பரை சுருட்டி தூக்கி எறிந்தவன் இன்னொரு முறை தாய்மாமன்னு சொல்லாத. என் தாயைக் கொன்ற கொலைகாரன்னு சொல்லு.
அந்த ஆளால தானே என் அம்மா உசுரு போச்சு சாகுற வரைக்கும் அதை நான் மறக்க மாட்டேன் புரியுதா?
உன் அண்ணன் பேத்தியை தான் நான் கட்டுவேன்னு அநாவசியமான ஆசைகளை வளர்த்துக்காதே..
அந்த குடும்பத்துக்கும் நமக்கும் உறவு முறிஞ்சி 15 வருஷம் ஆகுது முடிச்சது முடிஞ்சு போனதாக இருக்கட்டும் உடைந்த கண்ணாடி திரும்பவும் ஓட்டுனாலும் அங்கங்க கீறல் இருக்க தான் செய்யும்.அது போல தான் உன் அண்ணன் வீட்டு உறவு.
எப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ அப்போ உங்ககிட்ட சொல்லுவேன் அவளை தவிர வேற யாரை வேணாலும் கட்டி வை குடும்பம் பண்றேன் புரியுதா…
இன்னொரு வார்த்தை அவங்களைப் பற்றி பேசினாக்க நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்று வேகமாக எழுந்தவனுக்கு பாரி மாமா என்கும் குரல் காதுக்குள் ஒலிக்க, தனது தலையைத் தட்டி அந்த நினைவுகளிலிருந்து வெளியே வந்தவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டான்.
பேரன் பேசிச் சென்ற வார்த்தைகளை கேட்டு கனகுவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது….
செடி வளரும்…

