அத்தியாயம் 15
அடுத்த இரண்டு நாள்களும் எப்படியோ கடந்து போயின. அம்மா, அக்கா இருவரினதும் முகம் பார்க்கத் தயங்கினாள் யசோதினி. ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு. மனதறிந்து அவர்களுக்கு மறைக்கவோ, அவர்களை ஒதுக்கிவிட்டு எதையும் செய்யவோ நினைவில்லை என்றாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
நான் பார்க்கிறேன், யாரிடமும் எதுவும் கதைக்கவேண்டாம் என்றவன் வேறு சத்தமே இல்லாமல் இருந்தான். அழைத்துக் கேட்கவும் தயக்கமாய் இருந்தது. சம்மதிக்க அவ்வளவு தயக்கம் காட்டிவிட்டு, இப்போது இரண்டு நாள்கள் கூடப் பொறுக்க முடியவில்லையா என்று நினைத்துவிட மாட்டானா? இனி என்ன செய்வது, சுசீலா அக்காவைக் கேட்டுப் பார்ப்போமா என்று யோசித்தபடி வேலை முடிந்து வீடு வந்தவளை வரவேற்றது, அவர்கள் வீட்டு வாசலின் முன்னே நின்றிருந்த ஓட்டோ.
யாரோ வந்திருக்கிறார்கள். மெல்லிய படபடப்புடன் ஸ்கூட்டியை உள்ளே கொண்டுவந்து நிறுத்தும்போதே கஜேந்திரன், இந்திரா, சிந்தாமணி, சுசீலா என்று எல்லோரும் அமர்ந்திருப்பது தெரிந்தது.
“வாங்கோ!” வரவேற்பாகத் தலையசைத்தவள் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். தாய், தமக்கை இருவர் முகத்தை அவர்கள் அறியாமல் ஆராய்ந்தபோது, மெல்லிய குழப்பம் மட்டும்தான் தெரிந்தது. ஆக, விடயம் இன்னும் சொல்லப்படவில்லை.
“இப்பயாம்மா வேல முடிஞ்சது?” அவள் பதற்றமறிந்து, அவளை இயல்பாக்க எண்ணி வினவினார் சுசீலா.
“ஓம் அக்கா.” என்றவள், “தாமினி வர இல்லையோ?” என்று இயல்புபோல் காட்டி இந்திராவிடம் வினவினாள்.
“தூரி வீட்டை போறம் எண்டு சொன்னதுமே அவாதான் முதல் ஆளா வெளிக்கிட்டு வந்ததே. எல்லாரும் உங்கட வீட்டை இருந்து விளையாடினம்.” என்றாள் இந்திரா.
“ஓ!” அடுத்து என்ன பேச என்று தெரியாது நின்றாள்.
“ஏதும் குடிக்கிறது, சாப்பிடுறது எண்டால் சாப்பிட்டுப்போட்டு வாங்கோவன்மா. உங்க எல்லாரோடையும் கதைக்கத்தான் வந்தனாங்க.” என்று மெதுவாக ஆரம்பித்து வைத்தார் சிந்தாமணி.
“இல்ல, பரவாயில்ல அன்ட்ரி. இப்ப எனக்கு ஒண்டும் வேண்டாம்.” நெஞ்சு அடிக்கிற அடிக்கு எதுவும் வாய்க்குள் போகும் என்கிற நம்பிக்கை அவளுக்கில்லை.
அதற்குள், “ஊத்தின தேத்தண்ணி கிடக்கம்மா.” என்று, தேநீரை வார்த்துக்கொண்டு வந்து கொடுத்தார் கமலாம்பிகை.
அவள் இரண்டு வாய் பருக, எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, “என்னடா இது, புது ஆக்கள் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் எண்டு வந்து நிக்கினம், என்னவோ ஏதோ எண்டு யோசிக்காதீங்கோம்மா. எல்லாம் நல்ல விசயம் கதைக்கத்தான் வந்திருக்கிறம்.” என்று, நல்லமுறையில் ஆரம்பித்தார் சுசீலா.
“யசோ வேலை செய்ற பார்மசிக்குத்தான் நான் நெடுகவும் போறனான். அதால அவாவை எனக்கு நல்ல பழக்கம்.” என்றவர், அவளைப் பற்றித் தெரிந்து கொண்டது, இன்னொரு திருமணத்துக்கு ஊக்கியது என்று எல்லாவற்றையும் சொல்கையிலேயே நிசாந்தினியின் முகம் மாற ஆரம்பித்திருந்தது.
அதற்கே கை நடுங்கும் போலிருக்க, தான் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்திலேயே தேநீர்க் கோப்பையைத் தரையில் வைத்தாள் யசோ.
“இவேயையும்(இவர்களையும்) எனக்குச் சின்ன வயதில இருந்து தெரியும். நல்ல நம்பிக்கையான மனுசர். அகத்தியனும் அருமையான பிள்ளை. அவருக்கும் டிவோர்ஸ் ஆயிற்றுது.” என்றவர், கஜேந்திரனும் சங்கடப்படாத வகையில் சுருக்கமாக அகத்தியனின் விவாகரத்தைப் பற்றிச் சொன்னார்.
நிசாந்தினிக்கும் கமலாம்பிகைக்கும் அப்பட்டமான அதிர்ச்சி. தம் கட்டுப்பாட்டை மீறிக் கஜேந்திரனைப் பார்த்தனர்.
“அவா சொல்லுறது உண்மைதான். அது என்ர தங்கச்சிதான்.” இலேசாக முகம் கன்றச் சொன்னான் அவன்.
வேதனையோடு கணவனைப் பார்த்தாள் இந்திரா. முடிந்தவரையில் மேலோட்டமாகச் சொல்லும்படி சுசீலாவிடம் சொல்லித்தான் அழைத்து வந்தாள். கஜேந்திரனுக்குமே இதைப்பற்றிக் கதைக்கவேண்டி வரும் என்று சொல்லியிருந்தாள்.
வேறு வழியில்லை. நம் நெருங்கிய சொந்தங்களின் தப்புகளால் நாமும் அவமானப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை!
“அதுதான், அகத்தியனுக்கும் யசோக்கும் ஒரு கலியாணத்தைச் செய்து வச்சா நல்லாருக்குமே எண்டுதான் உங்களோட கதைக்க வந்தனாங்க.” நயமாகவே வந்த விடயத்தைச் சொன்னார் சுசீலா.
கமலாம்பிகையால் நம்பவே முடியவில்லை. யசோ இந்த எண்ணத்தையே விட்டுவிட்டாள் என்றல்லவா எண்ணி நிம்மதி கொண்டிருந்தார். ஒன்றரை வருடங்களுக்கு முதலே மறுத்த மூத்தவள், இதற்கு உடன்படமாட்டாள் என்பது தெரிந்திருந்ததால் அவராகப் பதில் சொல்லப் பயந்தார்.
“நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான். ஆனா, இவள் தனியா இருந்தா அது வேற. ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கினம். நடக்கிறது தெரியாம இருக்க அவே ஆகச் சின்னப் பிள்ளைகளும் இல்ல. விவரம் தெரிய ஆரம்பிச்சிட்டுது. இப்ப போய் இதெல்லாம் செய்யச் சரியா வராது. எங்களுக்கு அவேன்ர எதிர்காலம் முக்கியம்.” என்றாள் நிசாந்தினி.
“நீங்க சொல்லுறது உண்மைதானம்மா. ஆனா, நாங்க நினைக்கிறதை விட இந்தக் காலத்துப் பிள்ளைகள் கெட்டிக்காரர். பொறுமையா, அன்பா எடுத்துச் சொன்னா விளங்கிக் கொள்ளுவினம். அவே ரெண்டுபேருக்கும் எங்கட மகனைத் தெரியும். அகத்தியன் மாமா எண்டு அவனில நல்ல விருப்பமும். அதால பிள்ளைகள் மனம் பாதிக்காதம்மா. பாதிக்கிற அளவுக்கு நாங்க நடக்காம இருந்தா சரிதானே. எல்லாத்தையும் விட ஒரு குழந்தை கிடைக்காம ஏமாந்து போனவன். பிள்ளைகளின்ர அருமை அவனுக்குத் தெரியும். கட்டாயம் நல்ல தகப்பனா இருப்பான்.” என்று தன் மகனுக்காகப் பேசினார் சிந்தாமணி.
ஆக, இவளுக்கு அவர்களை ஏற்கனவே தெரியும். நல்ல பழக்கமும் இருக்கிறது. வந்ததும் தாமினி எங்கே என்று வேறு விசாரித்தாளே. அடக்கப்பட்ட கோபத்துடன் தங்கையை முறைத்தாள் நிசாந்தினி. யசோவுக்கு நெஞ்சு தடதடத்தது. எல்லோர் முன்னும் தமக்கையிடம் எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.
“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இதெல்லாம் சரிவரும் எண்டுற நம்பிக்கை இல்ல. தெரிஞ்ச பிள்ளைகள் எண்டு பாசமாப் பழகிறதுக்கும் தகப்பன்ர இடத்தில இருந்து பிள்ளைகளை வளக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்பிடிச் சொல்லுறதால உங்கட மகனைப் பிழையா நினைக்கிறோம் எண்டு அர்த்தம் இல்ல. எங்களுக்கு எல்லாத்தையும் விட சின்னாக்களின்ர வாழ்க்கை முக்கியம். யசோவுக்கே இதில விருப்பம் இருக்காது. அப்பிடியிருக்க நாங்க ஏன் இதைப்பற்றிக் கதைக்க?” என்று அந்தப் பேச்சை முடிக்க நினைத்தாள்.
நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டாலும், “அக்கா… எனக்கு இதில விருப்பம்தான். என்னைக் கேட்டு, நான் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் வந்திருக்கினம்.” என்று, தனக்காகப் பேச வந்தவர்களை விட்டுக்கொடுக்க மனமற்றுச் சொன்னாள் யசோதினி.
நிசாந்தினியால் இதை நம்பவே முடியவில்லை. சுர் என்று ஒரு கோபம் உச்சிக்கு ஏறியது. அதை அவர்கள் முன் காட்ட முடியாமல், “ஓ! நீயே முடிவெடுத்திட்டாய் எண்டா, நாங்க சொல்ல என்ன இருக்கு?” என்றவளை இடைமறித்தார் சுசீலா.
“அவாவக் குறையா நினைக்காதீங்கோம்மா. வேண்டவே வேண்டாம் எண்டு நிண்ட பிள்ளையைக் கதைச்சு கதைச்சு மாத்தினது நான்தான். அப்பவும் அக்கா, அம்மாவோட கதைச்ச பிறகுதான் எது எண்டாலும் முடிவாகும் எண்டுதான் சொன்னவா. அதாலதான் நாங்க இங்க வந்ததே. பொறுமையா, ஆறுதலா எல்லாருமா இருந்து கதைங்கோ. கையோட குறிப்பையும் கொண்டு வந்தனாங்க. அதையும் பாருங்கோ. அகத்தியன் டவுனுக்கதான் கடை வச்சிருக்கிறார். அங்க அவரைப்பற்றி விசாரிங்கோ. ஊருக்க இவேன்ர குடும்பத்தைப் பற்றி விசாரிங்கோ. அப்பிடி விசாரிச்சா உங்களுக்கு முடிவு எடுக்க ஈஸியா இருக்கும். அதுக்குப் பிறகு உங்கட முடிவைச் சொல்லுங்கோவன்.” என்றுவிட்டு மற்றவர்களோடு புறப்பட்டார்.
கலங்கி நின்றவள் கரம் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டுப் போனாள் இந்திரா.
அவர்கள் வந்த ஓட்டோ புறப்பட்டதும் கமலாம்பிகையிடம் வெடித்தாள் நிசாந்தினி.
“எவ்வளவு தைரியம் பாத்தீங்களாம்மா இவளுக்கு? எங்களிட்ட ஒரு வார்த்த சொல்லேல்ல. ஆனா, அங்க கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லியிருக்கிறாள். அப்ப, நாங்க எல்லாம் ஆரு இவளுக்கு?”
விழிகள் கலங்கத் தமக்கையைப் பார்த்தாள் யசோ. ஆயினும், அவர்கள் திருமணத்திற்குக் கேட்டது, முதலில் தான் மறுத்தது, பின் அவன் அழைத்துப் பேசியது, தான் தன் முடிவை மாற்றிக்கொண்டது என்று அனைத்தையும் சொன்னாள்.
நிசாந்தினிக்கு எரிகிற அடுப்பில் எண்ணெயை ஊற்றியது போலாயிற்று. “என்ன ஆளடி நீ? அவன்ர கடைக்கே தனியாப் போய்க் கதைக்கிற அளவுக்கு உனக்குத் துணிவு வந்திருக்கே! அதுசரி, அந்த வயதிலேயே ஆருக்கும் தெரியாம கலியாணம் கட்டிக்கொண்டு வந்தவள்தானே நீ!” என்றதும் நொருங்கியே போனாள் யசோ.
கமலாம்பிகைக்கும் வருத்தமாயிற்று. “பழசையெல்லாம் ஏனம்மா கதைக்கிறீங்க?” என்று கேட்டு, மூத்த மகளின் கோபத்தைக் குறைக்கப் பார்த்தார்.
“ஏன் கதைக்கக் கூடாது? நான் என்ன இல்லாததையா சொல்லுறன்? முதல், என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுதாம் இவளுக்கு? அவளுக்கு ஒரு பிரச்சினை எண்டால் மட்டும் நான் வேணும், மற்றும்படி நாய்க்கும் மதிக்கமாட்டாளாமா? இதையெல்லாம் அறிஞ்சா இவர் என்ன நினைப்பார்? நாளைக்கு ஒரு பிரச்சினை எண்டு வரேக்க, இவளைக் காட்டி என்னையும் ஏதும் சொல்லிட்டார் எண்டா என்னம்மா செய்வீங்க? ஆருக்காவது இதெல்லாம் தெரிய வந்து, என்ன இது எண்டு கேட்டா என்ன சொல்லுறது? என்ர தங்கச்சிக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தும் இன்னொரு கலியாண ஆசை வந்திட்டுது எண்டா? காறித் துப்பாதுகள்?”

