அத்தியாயம் 16
நிசாந்தினிக்கு இதையெல்லாம் எப்படிக் கணவனிடம் சொல்வது என்று தெரியவே இல்லை. சொல்லாமல் இருக்கவும் முடியாதே! அன்றிரவு ஹயர் முடிந்து வந்தவனிடம் பெரும் தயக்கத்துக்கு மத்தியில் பகிர்ந்துகொண்டாள்.
அவள் பயந்ததற்கு மாறாக, “எவ்வளவு பெரிய நல்ல விசயம் இது? உண்மையச் சொல்லப்போனா இத நாங்க பாத்துச் செய்து வச்சிருக்க வேணும் நிசா. ரெண்டு பிள்ளைகளோட கட்ட எவன் வருவான் எண்டு நாங்களாவே முடிவெடுத்து விட்டிருக்கக் கூடாது. இப்பவும் ஒண்டும் கெட்டுப் போகேல்ல. டவுனுக்க கடை எண்டா சிம்பிளா விசாரிக்கலாம்.” என்றான் அவன்.
நிசாந்தினிக்கு இவன் உண்மையாகத்தான் சொல்கிறானா என்கிற சந்தேகம் வந்தது. “என்ன சொல்லுறீங்க? உங்களுக்கு இதால ஒண்டும் இல்லையா? எனக்கு அயலட்டைச் சனம் என்ன கதைக்குமோ எண்டு இருக்கு.” என்றாள்.
“அயலட்டைச் சனம் எதைத்தான் கதைக்காம விட்டது? நான் அவாவை வேன்ல கூட்டிக்கொண்டு போனாலே ஆயிரம் சொல்லும். இத விட்டு வைக்குமா? அதுக்கெண்டு நாங்க பேசாம இருக்கேலாதெல்லா. நான் விசாரிச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்று முடித்துக்கொண்டான் அவன்.
உண்மையில் நிசாந்தினிக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதியாயிற்று. கணவனே பார்த்துக்கொள்கிறேன் என்றதில் அவள் மனத்தின் பாரம் அகன்றிருந்தது. ஆனாலும், யசோ மீதான கோபம் போவதாக இல்லை. அடுத்தநாள் காலையில் வேலைக்குப் புறப்பட்டு வந்தவளைக் கண்டுவிட்டு, “அம்மா, அந்த அகத்தியனைப் பற்றி நாங்க விசாரிக்கிறதா எண்டு கேளுங்க. இல்ல, அதையும் அவளே செய்திட்டாளாமா?” என்றாள்.
யசோவுக்குச் சுருக்கென்று வலித்தது. காட்டிக்கொள்ளாமல், “இல்ல விசாரிங்கோ.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.
கூடவே, நேற்று அத்தனை மோசமாகக் கதைத்தவளின் இந்த மாற்றம் எப்படி என்கிற யோசனையும் ஓடிற்று.
அவள் அந்த யோசனையில் இருக்க, “அம்மா, ஏன் பெரியம்மா அகத்தியன் மாமாவைப் பற்றி விசாரிக்கப் போறாவாம்?” என்று, ஸ்கூட்டியின் பின்னிருந்து வினவினாள் தூரிகா.
இவளுக்கு ஒருமுறை திக் என்று இருந்தது.
“அது… அவரின்ர கடையில அரிசி, மா, சீனி எல்லாம் இருக்கெல்லோ. அவரிட்ட வாங்கலாமா, இல்ல, விலையோ எண்டு விசாரிக்கப் போறாவாம்.”
“அகத்தியன் மாமா விலையா எல்லாம் விக்கமாட்டார்.” உடனேயே அவனுக்காகப் பரிந்து வந்தாள் அவள் மகள்.
யசோவின் உதட்டோரம் முறுவல் அரும்பிற்று. கூடவே, ‘அவே ரெண்டுபேருக்கும் என்னைப் பிடிக்கும். அவே உங்கள மாதிரி இல்ல.’ என்று அவன் சொன்னதும் நினைவில் வந்து போக, “அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்? அவரிட்ட சரியான விலையாம் எண்டுதான் ஊருக்க கதை அடிபடுது.” என்று பேச்சுக் கொடுத்தாள்.
“அது அகத்தியன் மாமா நல்லவர். அவர் அப்பிடியெல்லாம் செய்யமாட்டார்.”
“ஓ! அப்ப உங்கட அகத்தியன் மாமா லாபமே பாக்காமத்தான் விக்கிறாரோ? பிறகு எங்கால அவருக்குச் சாப்பிடக் காசு வருதாம்?”
“அது… சாப்பிட மட்டும் எடுப்பார். அதைவிடக் கனக்க எடுக்கமாட்டார்.”
யசோவின் உதட்டோர முறுவல் சின்ன நகைப்பாய் மாறிற்று. “அப்பிடியா? அப்ப நான், தூரிகா சொன்னவா, அவர் விலையா விக்க மாட்டாராம், அவரை விசாரிக்க வேண்டாமாம் எண்டு சொல்லிவிடுறன், சரியா.” என்று சொன்னவள் மனத்தில் மெலிதான இதம் பரவிற்று.
காலையில் தமக்கையால் உண்டான காயம் கூட ஆறிய உணர்வு.
அன்று, பள்ளிக்கூடம் முடிந்து அவளை ஏற்றிச்செல்ல வந்தபோது, அவளுக்கு முதலே வந்து நின்றிருந்தான் அகத்தியன்.
அவன் பார்வை, சற்றுத் தடித்திருந்த அவள் கண்மடல்களில் தங்கி மீள, “தாமினியும் வருவா. தூரிய நான் கூட்டிக்கொண்டு போகட்டா?” என்று வினவினான்.
மறுக்க ஒன்றுமில்லைதான். ஆனால் உணவு? அவன் அவளைக் கூட்டிக்கொண்டு போனால் அவள் கொண்டுவந்தது வீணாகிவிடுமே. அதைச் சொன்னால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். என்ன செய்ய என்று அவள் யோசிக்க, “நாங்களும் உங்கட பார்மசிக்கே வாறம். அவவின்ர சாப்பாட்டைத் தாங்க. நாங்க மூண்டுபேரும் பங்கிட்டுச் சாப்பிடுறம்.” என்றவனின் உதட்டினில் மெல்லிய சிரிப்பு.
அவளைக் கண்டுகொண்டிருக்கிறான். என்னவோ, அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் போயிற்று. பிள்ளைகள் வருகிறார்களா என்று பார்ப்பதுபோல் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தாள்.
அகத்தியனும் அவளைக் கவனித்தாலும் அதற்குமேல் அங்கு வைத்து எதுவும் கதைக்கவில்லை.
தூரிகா வரும்போதே இவனைக் கண்டுவிட்டு, “அகத்தியன் மாமா!” என்று கத்திக்கொண்டு ஓடிவந்தாள்.
சின்னவர்கள் இருவரையும் பின்னால் ஏற்றிக்கொண்ட அவன் பைக், அவளின் ஸ்கூட்டியை பின்தொடர்ந்தது. ஏதோ ஒரு புதுவித உணர்வில் தத்தளித்தபடி ஸ்கூட்டியை செலுத்தினாள் யசோ.
தூரிகாவின் உணவை வாங்கிக்கொண்டு புறப்படுகையில், “தனிய எண்டுபோட்டுச் சாப்பிடாம இருக்கிறேல்ல. சாப்பிடோணும். பிறகு வரேக்க கேப்பன்.” என்று அவள் கண் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
எப்போதுமே, இப்படித் தனியாகச் சாப்பிடும் சூழ்நிலைகள் அமைந்தால் சரியாக உண்ணமாட்டாள். உண்ண முடிவதில்லை. உணவை ரசித்து உண்ட நாள்களெல்லாம் தொலைதூரக் கனவுகளாகத் தொலைந்தே போயிற்றே! ஆனால் இன்றைக்கு, அவன் சொன்னதற்காகவே சாப்பிட்டாள். அவளுக்குள் என்ன நிகழ்கிறது என்று சொல்ல முடியாத அளவில் மெல்லிய மாற்றங்கள் பலப்பல!
அன்று மாலை, தூரிகாவை விட வந்தவனின் கண்களில் அப்பட்டமான சிரிப்பு. காரணம் புரியாமல் பார்த்தாள் யசோதினி.
“தூரிக்குட்டி, உங்கட அகத்தியன் மாமாக்கு இவ்வளவு நாளும் ஒரு குடும்பம்தான். இனி, ரெண்டு குடும்பமாகப்போகுது. பொறுப்பும் கூடப்போகுது. காசுத் தேவையும் நிறைய வரப்போகுது. அதால கட்டுபடியாகிற லாபம் வைக்கத்தான் வேணுமாம் எண்டு உங்கட அம்மாட்டச் சொல்லிவிடுங்கோ, சரியா?” என்றவனின் பேச்சில் ஒருகணம் திகைத்தாலும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் யசோ.
இதில், “ஓம் அம்மா. நான் மாமாவைக் கேட்டனான். அவர் விலையா விக்கிறேல்லையாம்.” என்று தூரிகா வேறு விளக்கம் சொல்ல, அவளுக்கு முகமே சூடாயிற்று.
கண்களால் அவளிடம் சிரித்துவிட்டுப் போனான் அகத்தியன்.
“உன்னை ஆரம்மா இதையெல்லாம் போய் அவரிட்டக் கேக்கச் சொன்னது?” என்று அதட்ட முயன்றாள்.
“அப்பதானே அகத்தியன் மாமா விலையா விக்கேல்ல எண்டு பெரியம்மாட்டச் சொல்லலாம். அதுதான் கேட்டனான்.”
“சரிசரி, அத நானே உங்கட பெரியம்மாட்டச் சொல்லுறன். நீங்க போய்ப் படிக்கிற வழியப் பாருங்கோ!” பொய்யாக அதட்டி அவளை உள்ளே அனுப்பியவளுக்குக் கண்ணால் சிரித்துவிட்டுப் போனவனின் நினைவுதான்.
அங்கே, பைக்கில் சென்றுகொண்டிருந்த அகத்தியனின் முகத்திலும் இளம் முறுவல் மலர்ந்தே கிடந்தது. அதுவும், அவள் முகம் சூடானதும், அவன் பார்வையைத் தவிர்த்த விதமும் நெஞ்சை அள்ளியது. ‘அடேய்! எத்தின வயசடா உனக்கு? இப்ப போய்…’ பின் கழுத்தைத் தடவிக் கொடுத்தவனால் அந்தச் சுகமான உணர்வில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. திரும்ப திரும்ப அதையே நினைத்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
அடுத்த ஒரு பத்து நாள்கள் பெரிய சலசலப்புகள் எதுவுமற்று, யசோ வீட்டினர் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்தே கடந்தன.
நானாக எதையும் கேட்பதில்லை என்று இருந்தவளிடம், “என்னைப்பற்றி டவுனுக்க ரெண்டு மூண்டு பேர் வந்து விசாரிச்சவையாம் எண்டு கத வந்தது. வேல நடந்துகொண்டுதான் இருக்கு. வெய்ட் பண்ணுவம்.” என்று அகத்தியனும் சொல்லியிருந்தான்.
ஆனந்தனும் பெயருக்கு விசாரிக்காமல் தன் தகப்பனைக் கொண்டு, நம்பிக்கையான நண்பர்களைக் கொண்டு அவர்கள் வாழும் ஊரில், அவர்களின் சொந்த இடத்தில், டவுனில் என்று நன்றாகவே அலசி ஆராய்ந்தான்.
சவீதா என்கிற ஒரேயொரு கரும்புள்ளியைத் தவிர்த்து அவனுக்கு எல்லாமே திருப்திதான். நிசாந்தினிக்கு அந்தப் புள்ளி பெரிதாகத் தெரிந்தது. சும்மாவே இவள் இரண்டு பிள்ளைகளோடு இன்னொரு வாழ்க்கைக்குள் போகப்போகிறாள். அங்கே, ஏற்கனவே ஒருத்தி நெருஞ்சி முள்ளாகக் காலம் முழுக்க இருப்பாள் என்றால் எப்படி?

