அதையே யசோதினியிடம் சொன்னாள்.
“அவாவை நான் பாத்திருக்கிறன் அக்கா. அவரும் இதையெல்லாம் என்னட்ட மறைக்கேல்ல. அதைவிட, என்னைத்தான் கட்டப்போறன் எண்டு அவர் நேராவே சொல்லிட்டார். அப்பிடியே அவா ஏதும் பிரச்சினைக்கு வந்தாலும் அகத்தியன் விடமாட்டார்.” என்ற தங்கையிடம் அதற்குமேல் நிசா எதுவும் சொல்லப் போகவில்லை.
காரணம், அமைதியாக இருந்தாலும் அவள் தன் முடிவில் மிகுந்த தெளிவாக இருக்கிறாள் என்று தெரிந்தது. அடுத்தது, அகத்தியனைப் பற்றிப் பேசுகையில் யசோவிடம் தென்படும் அந்தத் திடம். அது, அவள் அவனை முழுமையாக நம்புவதைச் சொல்லிற்று. கூடவே, இதை நாமே முன்னெடுத்துச் செய்திருக்க வேண்டும் என்று கணவனே சொன்னதிலிருந்து, அவளிடமும் மெல்லிய மாற்றம் உண்டாகியிருந்தது. அதைவிட, அகத்தியனைப் பற்றி ஆனந்தன் சொன்னவைகளும் முழுத் திருப்தியைத் தந்திருந்தன.
கமலாம்பிகை தன் பங்குக்கு இருவரினதும் குறிப்பைக் கொடுத்துப் பார்ப்பித்தார். நல்ல பொருத்தம் என்றும், குறிப்பாக இருவருக்குமே இரண்டாம் வாழ்க்கைதான் நிலைக்கும் என்றும் ஐயா சொல்லிவிட, அவர் சமாதானமாகியிருந்தார்.
அவர்களிடம் இருந்து சம்மதம் என்கிற வார்த்தையைப் பெற்றதும் எதற்கும் தாமதிக்கவில்லை அகத்தியன். அடுத்து வருகிற ஒரு நல்ல நாளிலேயே முகூர்த்தத்தைக் குறித்தான்.
அன்றே அவளுக்கு அழைத்து, “உங்களோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்றான்.
“பின்னேரம் வேல முடிஞ்ச பிறகு கடைக்கு வரவோ?” அவளுக்கும் அவனோடு கதைக்கவேண்டி இருந்ததில் கேட்டாள்.
“இல்ல வேண்டாம். பிறகு லேட்டா போறமாதிரி வந்திடும். இப்ப வரேலுமா?”
“இப்பயோ… ஏலாதே. மகிளா இல்ல. வேணுமெண்டால் பின்னேரம் ஒரு மணித்தியாலம் முந்தி வேலைய முடிச்சுக்கொண்டு வாறன்.” என்று சொன்னவள், சொன்னது போலவே அன்று மாலை அவன் கடைக்குச் சென்றாள். அது ஒரு சனிக்கிழமை என்பதில் தூரிகா வரவில்லை.
ஏற்கனவே வடையும் ரோல்சும் வாங்கி வைத்திருந்தான் அவன். இவள் வந்ததும் இருவருக்கும் தேநீர் ஊற்றினான்.
“கலியாணத்துக்குப் பிறகு என்ன ஐடியா வச்சிருக்கிறீங்க?” தேநீரும் சிற்றுண்டியும் உள்ளே செல்ல வினவினான்.
குறிப்பாக எதைப்பற்றிக் கேட்கிறான்? கேள்வியாக அவனைப் பார்த்தாள் யசோ.
“இல்ல, நாங்க எல்லாரும் எங்க இருக்கிறது எண்டு ஏதும் யோசிச்சீங்களா?”
அந்தக் கேள்வியே அதைப்பற்றி அவன் ஏதோ யோசித்திருக்கிறான் என்று சொல்ல, “உங்கட விருப்பம் என்ன?” என்று வினவினாள்.
அவள் அப்படித் தன்னை விளங்கிக்கொண்டதை மனம் இதமாய் உணர, “எனக்கு எண்டு காணி இருக்குதான். எண்டாலும் வீடு கட்டுற அளவுக்கு இப்ப கையிருப்பு இல்ல. லோனுக்கு மேல லோன் போடுறதை விட, கடை லோனை முடிச்சிட்டு வீடு கட்டலாம் எண்டு நினைச்சன். அந்த லோன் முடியிற வரைக்கும்… இல்ல ஒரு வீடு கட்டுற வரைக்கும் அங்க… உங்கட வீட்டிலேயே இருப்பமா?” என்று வினவினான்.
இருக்கலாம்தான். ஆனால், அது சின்ன வீடாயிற்றே.
அவள் யோசிப்பதைக் கண்டு, “அது, இப்ப நாங்க எல்லாரும் இருக்கிறது அக்காக்குச் சீதனமாக் குடுத்த வீடு. அங்க இருக்கலாம்தான். அத்தான் ஒண்டும் சொல்ல மாட்டார். ஆனா, அவரின்ர வீட்டாக்கள் அக்காவைப் பாக்க, பிறக்கப்போற பிள்ளையைப் பாக்க எண்டு அடிக்கடி வந்து போவினம். எனக்கு உங்களோட ஒரு நிம்மதியான வாழ்க்கை வேணும். அதுதான் யோசிக்கிறன்.” என்றான்.
அவன் இவ்வளவு விளக்கம் சொல்லவே தேவையில்லை என்பதுபோல் இடையிட்டு, “இல்ல இல்ல. இப்ப நாங்க இருக்கிறது ஒரு கொட்டில் வீடு. இருக்க ஒரு வீடு எண்டு கட்டினது. நிலம் சீமெந்துதான். சுவரும் அரைச்சுவர். மேல தகரம் அடிச்சிருக்கிறன். ஒரு அறை, ஒரு ஹோல், குசினி மட்டும்தான். பாத்ரூம் வெளில தனியா இருக்கு. கிணறு பொது.” என்றவளை இப்போது அவன் இடையிட்டான்.
“நான் ஒருத்தன் வந்தா அந்த வீடு காணாது எண்டு சொல்லுறீங்களா?”
“அச்சோ அப்பிடி இல்ல. அது கொட்டில் வீடு…” என்று மீண்டும் அவள் ஆரம்பிக்க, “கொட்டில் எண்டா என்ன? நீங்களும் பிள்ளைகளும் அங்கதானே இருக்கிறீங்க?” என்று கேட்டான் அவன்.
“நான் நினைச்சிருந்தா லோன் எடுத்து இன்னொரு அறையோட நல்ல வீடாக் கட்டியிருக்கலாம். இப்ப என்ன அவசரம் எண்டு பிள்ளைகளின்ர பேர்ல காசப் போட்டு வச்சிருக்கிறன். தப்பித்தவறி நானும் இல்லாமப் போயிட்டா அவேக்கு உதவுமே எண்டு…” என்றவளை மேலே சொல்லவிடாமல், மேசையில் இருந்த அவள் கரத்தைப் பற்றித் தடுத்தான் அகத்தியன்.
தன்னிச்சையாய் அவள் கையை இழுத்துக்கொள்ள முயல அவன் விடவில்லை.
“இதோட ரெண்டாவது தரம் என்னட்ட இப்பிடிச் சொல்லுறீங்க. இனிச் சொல்லாதீங்க, சரியா? மற்றும்படி நீங்க சொல்லுறது எனக்கு விளங்குது. இப்போதைக்கு நானும் அங்கயே வாறன். கொஞ்ச நாளைக்கு இருப்பம். எனக்கு அதால ஒரு குறையும் இல்ல. உங்கட அம்மா, அக்காக்கும் நான் நல்லவனா கெட்டவனா எண்டு பாக்க, நான் பக்கத்தில இருந்தா ஈஸியா இருக்கும்.” என்றதும் அவள் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று.
அதோடு, மெதுவாக மீண்டும் கையை உருவப் பார்த்தாள். அவன் விடுவதாக இல்லை. “இந்தக் கைய இனி விடமாட்டன் எண்டு சொல்லியிருக்கிறன்.” என்றான் அவளையே பார்த்து.
“அதுக்கெண்டு? இது கடை. ஆரும் வந்தாலும்.” முணுமுணுத்தபடி மீண்டும் கையை உருவப் பார்க்க, “இந்த அறைக்க தட்டாம ஆரும் வராயினம். ஆனாலும் பரவாயில்ல.” என்றுவிட்டுத் தானே விட்டான்.
“எனக்கு ரெண்டு விசயம் சொல்லோணும்.” மெல்லச் சொன்னாள்.
“சொல்லுங்கோ.”
“அது… கலியாணம் முடிஞ்சவரைக்கும் சிம்பிளா நடக்கட்டும். அக்கா… அக்காவேட்ட எதுவும் வாங்க விருப்பம் இல்ல. உங்களுக்கு எதுவும் வேணுமெண்டால் சொல்லுங்கோ. என்னட்ட இருக்கிற காசில தரப்பாக்கிறன். நகை… நகையும் கொஞ்சம் இருக்கு…”
அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி அவள் சொல்ல, “இப்ப நீங்க சீதனத்தைப் பற்றிக் கதைக்கிறீங்களா யசோ?” என்று அவள் முகத்தையே பார்த்து வினவினான் அவன்.
அவளுக்கு முகம் இலேசாகக் கன்றிற்று. “அது அப்பிடி எண்டில்லை. எனக்கு அக்கா ஏற்கனவே நிறையச் செய்திட்டா. திரும்பவும் அவாக்குச் சிரமம் குடுக்கக் கூடாது எண்டு… அதான்…”
“உண்மையாவே பெரிய செலவு ஒண்டும் வராது யசோ. எனக்கும் பிள்ளைகளுக்கு முன்னால எந்த ஆர்ப்பாட்டமும் செய்ய விருப்பம் இல்ல. அது தேவையும் இல்ல. கலியாணத்துக்கு வரபோறது எங்கட குடும்பங்கள் மட்டும்தான். மற்றும்படி சொந்தக்காரருக்குக் கூடச் சொல்லவேணாம் எண்டு சொல்லீட்டன். அதால அடிப்படைக் கலியாணச் செலவும் சாப்பாட்டுச் செலவும் மட்டும்தான் வரப்போகுது. அத நானே பாப்பன்.” என்றான் விளக்கமாக.
அப்போதுதான் அவளுக்கு நிம்மதியாயிற்று. அவள் நிமிர, “அடுத்தது என்ன?” என்றான்.
“அது… எந்தக் காலத்திலையும் வேலைய விடச்சொல்லி நீங்க சொல்லக் கூடாது. நான் வேல செய்வன்.” மெல்லிய தயக்கம் இருந்தாலும் சொன்னாள்.
“மூண்டாவதா பிள்ளை வந்தாலுமா?” என்றதும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அன்றைக்குப் போன்றே அவள் முகம் சூடாவதைப் பார்த்து ரசித்தான் அகத்தியன். அவனுக்குள் சில்லென்று ஒரு உணர்வு இனித்துக்கொண்டு பரவிற்று.
“அப்பிடி ஒண்டு நடந்தா எப்பிடி நான் வேலைக்கு வருவன்?” அவனைப் பாராமலேயே கேட்டாள். “ஆனா, பிள்ளை வளந்த பிறகு திரும்பவும் வருவன்.”
“ஓகே! எப்பிடியும் என்னைவிடப் பிள்ளைகளில் கவனமாவும் அக்கறையாவும் நீங்கதான் இருக்கப் போறீங்க. அதால, எதுவா இருந்தாலும் அது உங்கட முடிவாத்தான் இருக்கும். சரியா?” வாதாடப் போகாமல் அவள் முடிவுக்கே விட்டான்.
அதன் பிறகுதான் அவளுக்கு நிம்மதியாயிற்று.

