கடன் அன்பை முறிக்கும் – 29

அத்தியாயம் 29

 

 

யாழிசை அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அவளின் நல்ல நேரத்திற்கு நேசனும் நளினியும் இருக்கவில்லை. டவுனுக்குப் போயிருந்தார்கள்.

 

கோகிலாதான் இருந்தார். இருவரின் நெற்றியிலும் இருந்த திருநீறு சந்தனத்தைக் கண்டுவிட்டு, “கோயிலுக்குப் போனனீங்களோ பிள்ளைகள்?” என்று கொஞ்சம் அதிர்ச்சியுடன் வினவினார்.

 

“ஓம் அம்மா. வாற வழிதானே அம்மன் கோயில்.” முடிந்தவரை அவர் பார்வையைச் சந்திப்பதைத் தவிர்த்தபடி இயல்பாகச் சொல்வதுபோல் சொன்னாள் யாழிசை.

 

கோகிலா அம்மாவுக்கு வந்ததே கோபம்.

 

“அங்க விருந்தில மச்சம் எல்லா சாப்பிட்டு இருப்பீங்க. அதச் சாப்பிட்டுப்போட்டுக் கோயிலுக்குப் போனனீங்களோ?” என்று கேட்டபிறகுதான் அவளுக்கும் அது நினைவில் வந்தது.

 

அவள் இருந்த மனநிலைக்கு வீட்டில் ஆறுதல் கிடைக்காது என்று தெரியும். அன்னையின் கோயிலைக் கண்டதும் அங்கே ஓடியிருந்தாள்.

 

இப்போது என்ன சொல்வது என்று தெரியாது அவள் விழிக்க, “எத்தின வயசு பிள்ளை உங்களுக்கு? இப்பிடி நடக்கக் கூடாது எண்டு தெரியாதோ. இதுல சுரபியையும் கூட்டிக்கொண்டு போயிருக்கிறீங்க.” என்று கடிந்துகொண்டார்.

 

ஏற்கனவே நொந்துபோய் இருந்தவளுக்கு அன்னையும் கடினத்தைக் காட்ட கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன. “அது எக்ஸாம்ஸ் வருது எல்லாம்மா. அதான் கோயிலைக் கண்டதும் யோசிக்காமப் போயிட்டன்.” என்றாள் உள்ளே போன குரலில்.

 

“அப்பிடி எப்பிடி யோசிக்காம இருப்பீங்க?அந்தளவுக்கு என்ன மறதி? அதுவும் இந்த வயசில. பாவத்தைத் தேடுற வேலை எல்லா இது.”

 

இதில் எல்லாம் மிகவும் கவனமாக இருப்பவர் கோகிலா. அவரால் மகள் செய்த காரியத்தை இலகுவாக எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. அந்தக் கோபத்தில் இருந்தவர் மகளின் முகத்தை ஊன்றிக் கவனிக்காமல் போனார்.

 

அதுவே யாழிசைக்கும் வசதியாகிப்போனது. மெல்ல அவரிடமிருந்து நழுவி, அறைக்குள் போய் முடங்கிக்கொண்டவளுக்கு அங்கு நடந்த விடயத்தை மறக்கவே முடியவில்லை.

 

அதை நினைக்கவே கூடாது என்று எத்தனை முறை தனக்குத் தானே கட்டளையிட்டுக்கொண்டாலும் அடங்காமல், அவன் அவளிடம் நடந்துகொண்ட முறைகள் திரும்ப திரும்ப கண் முன்னே காட்சிகளாக வந்து வந்து போயின.

 

அண்ணாவோடு வேறு கதைக்கப்போகிறானாமே. அப்படி என்ன கதைப்பான்? என்ன சொல்லிப் பெண் கேட்பான்? உன் தங்கைக்கு இப்படி முத்தம் கொடுத்துவிட்டேன், அதனால் அவளை எனக்கே கட்டித்தா என்று கேட்பானோ என்று நினைத்த மாத்திரத்தில் பாயில் சரிந்திருந்தவள் விருட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள்.

 

அப்படி ஒன்று நடந்தால் நிச்சயமாக அவளால் தாங்கவே முடியாது. நிச்சயமாக முடியாது!

 

பேசாமல் எல்லாவற்றையும் அன்னையிடம் சொல்லிவிடலாமா என்று நினைத்தாள்.

 

அப்படிச் சொன்னால், அது அவள் தமையனின் காதுக்குப் போகும். அவன் நிச்சயம் இதைச் சும்மா விடவே மாட்டான். நிச்சயம் தூயவனின் சட்டையைப் பிடிப்பான். அவன் மட்டும் சும்மா இருப்பானா?

 

இதனால்தானே எல்லாவற்றையும் தன்னோடே வைத்திருக்க நினைத்தாள். அன்று மதியம் அவன் பேச என்று வந்து நின்றபோதுகூட இன்றோடு இதைப் பேசி முடித்துவிடுவோம் என்று முடிவெடுத்ததும் இதனால்தானே!

 

சும்மாவே அவளின் கடமை அவள் தமையனை அவன் வாழ்க்கையில் உய்யவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. இதில் திரும்பவும் அவளால் அவனுக்கு ஒரு பிரச்சனை வருவதா?

 

இதையெல்லாம் அறிகிற கருணாகரன் மட்டும் அவள் தமையனைச் சும்மா விட்டுவிடுவாரா? அந்த அருளை போதைப்பொருள் கடத்தலில் உள்ளுக்கு வைக்கவில்லையா? தப்பித்தவறி அவள் தமையனின் உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிட்டால்?

 

கடைசியில் தன்னால் தன் குடும்பமே அழிந்துவிடுமா என்று என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் வந்து, அவள் உயிரை ஊசலாட வைத்தன.

 

அவள் நடந்தவற்றைச் சொன்னால் மட்டுமல்ல தூயவன் தமையனோடு பேசுகிறேன் என்று வந்தாலும் இதுதானே நடக்கும்?

 

எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க தனக்கு இனி வாழ்க்கையில் நிம்மதியே இல்லையோ என்று அழுதாள்.

 

அவளால் இந்த மன அழுத்தத்தைத் தாங்கவே முடியவில்லை. நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.

 

அவள் அறிவுக்கு எட்டியவரையில் இதற்கெல்லாம் தீர்வு தூயவன் மட்டுமே என்று புரிய, வேகமாக எழுந்து வீட்டுக்குப் பின்னால், வேலிப்பக்கமாக இருக்கும் மலசலகூடத்துக்கு ஓடினாள்.

 

அவர்களுக்கு வீட்டோடு குளியலறை வசதியெல்லாம் இல்லை. கிணற்றிலிருந்து டேங்குக்கு தண்ணீர் எடுத்து, அங்கிருந்து வீட்டுக்கு பைப் லைன் செய்திருந்தார்கள். ஆனால், இது வெளியில்தான்.

 

கைக்குள் பொத்திக்கொண்டு வந்த கைப்பேசியில் அவனைத் தடை செய்து வைத்ததை எடுத்துவிட்டு, “உங்களக் கெஞ்சிக் கேக்கிறன், எங்களை விட்டுடுங்க ப்ளீஸ். நான் உங்களிட்டக் கோவப்பட்டது, உங்களக் கோவப்படுத்தினது, நீங்க சொல்லியும் கேக்காம ஓடி வந்தது எல்லாமே பிழைதான். அதுக்கு எத்தின தரம் வேணுமெண்டாலும் மன்னிப்புக் கேக்கிறன். ஆனா, அந்தக் கோவத்துல அண்ணாவை எதுவும் செய்துபோடாதீங்க. நாலு பொம்பிளைகள் இருக்கிற வீடு இது. அவர் ஒருத்தர்தான் எங்களுக்கு எண்டு இருக்கிறார். இனி நான் உங்கள ப்லொக் பண்ணேல்ல. நீங்க கோல் பண்ணினா எடுக்கிறன். ஆனா ஆனா அவரோட ஒண்டும் கதைக்க வேண்டாம் ப்ளீஸ்.” என்று கன்னத்தில் கண்ணீர் வழிய வழிய பயமும் பதட்டமுமாகப் பேசி அனுப்பிவிட்டாள்.

 

இன்னும் வேறு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. முதலில் அவள் இப்போது செய்திருக்கும் காரியம் சரியா என்றும் தெளிவில்லை. அவள் அவளாக இல்லை. அதுவும் அவன் குடும்பத்தால் தமையனுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்கிற எண்ணம், அவளை நிலைகுலைய வைத்திருந்தது.

 

அப்படி ஒன்று நடந்துவிட்டால் அண்ணியின் முகம் எப்படிப் பார்ப்பாள்? சுரபி? அவள் வாழ்க்கை என்னாகும்? கடவுளே என்று தலையைச் சுவரில் சாய்த்துக்கொண்டவளுக்கு இதை எப்படிக் கையாள்வது என்று விளங்கவேயில்லை.

 

*****

 

அன்று மாலை வீடு வந்த தூயவனுக்குத் தலை விண் விண்ணென்று வலித்தது. அன்னையிடம் கேட்டுத் தலைவலி மாத்திரை ஒன்றை விழுங்கிக்கொண்டு வந்து கட்டிலில் விழுந்தான். ஆனாலும், அவனால் ஒரு நொடிக்கேனும் விழிகளை மூட முடியவில்லை.

 

அவன் ஒன்றும் நினைத்து நினைத்துப் பூரிக்கும் எந்தக் காரியத்தையும் செய்துவிட்டு வரவில்லையே. இத்தனை காலமும் விட்ட தவறுகளுக்கு எல்லாம் சேர்த்து அவளைச் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டு, இத்தனை காலமும் நீ செய்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு இன்றைக்கு ஒன்றைச் செய்துவிட்டு வந்திருக்கிறான்.

 

அவனை என்ன செய்தால் தகும்? என்ன செய்தாலும் தகும்! இல்லாமல் எப்படி அப்படி ஒரு காரியத்தைச் செய்வான்?

 

அப்போதுதான் யாழிசையின் குறுந்தகவல் அவன் கைப்பேசிக்கு வந்து விழுந்தது. சத்தம் கேட்ட போதிலும் யார் என்று தெரியாததால் அதைப் பார்க்க அவன் அவசரம் காட்டவே இல்லை.

 

முக்கியமான யாரிடமும் இருந்தோ என்று யோசித்துவிட்டும் அலுப்போடுதான் கைப்பேசியை எட்டி எடுத்தான். அதில் இசையரசி என்று விழவும், அதுவும் அவள் பேசி அனுப்பி இருக்கிறாள் என்று காட்டவும் எங்கிருந்துதான் அவனுக்கு அவ்வளவு வேகம் வந்ததோ தெரியாது.

 

மின்னல் விரைவில் எழுந்தமர்ந்து அதைக் கேட்டவன் இடிந்துபோனான். அவள் மீது எந்தத் தவறுமே இல்லை என்று அவனுக்கே தெரியும். எல்லாவற்றையும் செய்தவன் அவன் மட்டுமே. ஆனால், அவள் நடந்துகொண்டதற்கு எல்லாம் மன்னித்துவிடட்டுமாம்.

 

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு குண்டூசிகளாக மாறி அவனைக் குத்திக் கிழித்தன.

 

ஆரம்பத்தில் இருந்தே யாழிசையின் குடும்பத்தைச் துச்சமாக எண்ணி ஒதுக்கி வைத்தவன் தூயவன். அப்போதிருந்தே நேசனுக்குத் தூயவனைப் பிடிக்காது. இதில் சொத்தை மாற்றி எழுதிய அன்று, இவன் பேசி வைத்தவைகளாலும் நடந்துகொண்ட முறையினாலும் அவன் இவனை அறவே வெறுத்திருப்பான் என்றும் தூயவனுக்குத் தெரியும்.

 

இதில் சாதிப் பிரச்சனை வேறு. விரலுக்கேற்ற வீக்கத்தில் வாழ விரும்புகிறவன் நேசன். இவர்கள் குடும்பத்தில் பெண்ணைக் கொடுத்தால் தம் மொத்த வீட்டினதும் நிம்மதியும் போய்விடும் என்று எண்ணியே மறுப்பான்.

 

அதனால்தான் முதலில் நேசனுடன் கதைப்பதைப் பற்றி அவன் யோசிக்கவில்லை.

 

யாழிசையும் தன்னை விரும்புகிறாள் என்று சொன்னாலாவது லட்சத்தில் ஒரு வாய்ப்பாக, அப்போதும் விருப்பம் இல்லாமல் யாழிசைக்காக அவன் இசைந்து வரலாம்.

 

அதனால்தான் முதலில் அவள் சம்மதம் வாங்க நினைத்தான்.

 

அவளானால் அவனைப் பிடிக்கவே இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாள். அவளுக்குப் பிடிக்கிற ஒருவனாக ஏன் இருக்காமல் விட்டுவிட்டோம் என்று எண்ணியெண்ணி நொந்தான். ஆனாலும் அவனுக்கு அவள் வேண்டும். அவனுடைய இசையரசி அவனுக்கு வேண்டுமே வேண்டும்.

 

அதனால்தான் உன் அண்ணாவோடு பேசுகிறேன் என்று சொன்னான்.

 

அதற்கு அவள் எதையெல்லாம் எண்ணிக் கலங்கியிருக்கிறாள்? நினைக்க நினைக்க அவனுக்கு அவன் மீதுதான் கோபம் வந்தது,

 

ஏற்கனவே தன் செய்கையை எண்ணி வெறுத்துப்போய் அமர்ந்திருந்தவன் இப்போது தன் நெற்றியில் தானே திரும்ப திரும்ப அறைந்துகொண்டான்.

 

இதில் அவனை இனித் தடை செய்யவில்லையாம். அவன் பேசினாலோ, செய்தி அனுப்பினாலோ பதில் சொல்லுவாளாம்.

 

இனி அவளுக்கு அழைக்கும் தைரியம் அவனுக்கு வருமா என்பதுதான் சந்தேகம்.

 

ஆனாலும், அவள் பயத்தைப் போக்குவது முக்கியமாகப் பட, “பயப்பிடாத. நான் அவரோட எந்தச் சண்டைக்கும் போக மாட்டன்.” என்று வேக வேகமாக எழுதி அனுப்பிவிட்டான்.

 

“உண்மையாவா? உங்கள நம்பலாமா?” என்று உடனேயே அவளிடமிருந்து பதில் வந்தது.

 

இப்படி அவளிடமிருந்து சின்னதாகவேனும் ஒரு பதில் வராதா என்று எத்தனை முறை ஏங்கியிருப்பான். ஆனால் இன்று, வருவதை எண்ணி மகிழ முடியவில்லை. கனத்துவிட்ட நெஞ்சத்தோடு, “உண்மையாத்தான்.” என்று எழுதி அனுப்பினான்.

 

“உண்மையாத்தானே? நீங்க பொய் சொல்ல இல்லையே?”

 

‘திரும்ப திரும்ப கேப்பியாடி?’ என்று கோபப்பட முடியவில்லை. அந்தளவுக்குப் பயந்துபோயிருக்கிறாள் என்று விளங்க, “அம்மா சத்தியமா!” என்று அனுப்பிவிட்டான்.

 

 

“தேங்க்ஸ்! நூறு, ஆயிரம் முறை தேங்க்ஸ்!”

 

அதை அவள் எவ்வளவு பெரிய ஆசுவாசத்தோடு அனுப்பியிருப்பாள் என்று அவள் அனுப்பிய விதத்திலேயே அவனால் உணர முடிந்தது.

 

அவளைத் தேற்றிவிட்டோம், தைரியம் கொடுத்துவிட்டோம் என்று அவனால் மகிழ முடியவில்லை. இனி என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல், மனம் முழுக்க பாரத்தோடு திரும்பவும் கட்டிலில் விழுந்தான்.

 

அந்த மலசலகூடத்துக்குள் வரும்போது இருந்த பயம் பதற்றமெல்லாம் வடிய, பெரும் நிம்மதியோடு வெளியே வந்தவள் நேராகக் கிணற்றடிக்கு நடந்தாள்.

 

வாளியைத் தூக்கிக் கிணற்றில் போடுகையில், ‘நீ தள்ளு’ என்றுவிட்டுக் கயிற்றைப் பற்றியவன் தடுக்கவே முடியாமல் நினைவில் வந்து போனான்.

 

தண்ணீரை அள்ளி, அப்போது போலவே இப்போதும் நன்றாக முகத்தை அடித்துக் கழுவிக்கொண்டு வீட்டுக்கு நடந்தவள் தெளிந்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!