உணவு மற்றும் மாற்றுடைகள் அடங்கிய பைகளை இவர்கள் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். சுற்றியிருந்த மரங்கள் குளிர்மையைப் பரப்ப, ஒற்றையடி போன்ற பாதையில் சின்னவர்களை முன்னே விட்டு, பெரியவர்கள் பின்தொடர்ந்தனர்.
மூவரும் தம்மை அறியாமலேயே ஓட முயல, “மாமா சொன்னதை மறக்கிறேல்ல. ஓடாம மெல்லமா ஏறவேணும்.” என்று நினைவூட்டிவிட்டான் அகத்தியன்.
கவனம் அவர்களிடம் இருக்க, “நான் கோவமா இருக்கிறன் எண்டு தெரிஞ்சா சமாதானம் எல்லாம் செய்ய மாட்டீங்களா?” என்றான் இவளிடம்.
இதையெல்லாம் எதிர்பார்ப்பானா என்கிற மெல்லிய வியப்புடன் அவனைப் பார்த்தாள் யசோ.
“என்ன பார்வை? கோவமா இருக்கிறன் எண்டு தெரிஞ்சும் முகத்தைத் திருப்பிக்கொண்டு உங்கட பாட்டுக்கு வாறீங்க.” என்றான் மீண்டும்.
அவன் பேச்சுச் சிந்தூரியை நினைவூட்டுவது போலிருக்க அவளிடத்தில் சின்ன முறுவல். கவனத்தை ஏறும் மலையின் மீது குவித்தபடி, “கோவம் என்னத்துக்கு எண்டே தெரியாம என்னத்தக் கதைக்கிறது?” என்று வினவினாள்.
“பின்ன, முன்னுக்கு ஏறினதும் அப்பிடி ஒடுங்கி இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்காதா? அந்தளவுக்கு நான் என்ன உங்களுக்கு ஆரோவா?” என்றான் ஆதங்கத்துடன்.
யசோவின் நடை நின்றுபோயிற்று. அவள் தன்னளவில் தடுமாறித் தனக்குள்தான் போராடினாள். அதைக் கவனித்திருக்கிறானே! ஆனால், அது அவளையும் மீறி நடந்த மனப்போராட்டம் என்று எப்படிச் சொல்வாள்?
“உங்களுக்கும் எனக்கும் இன்னும் மூண்டு கிழமையில கலியாணம் யசோ. அதைப் பிள்ளைகளிட்டச் சொல்லத்தான் இண்டைக்கு இங்க வந்திருக்கிறம். ஆனா நீங்க, பக்கத்தில இருக்கிறதுக்கே விருப்பப்படுறீங்க இல்ல.”
அவளுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. “சொறி.” என்றாள் உடனேயே. “ஆனா, வேணுமெண்டு எதையும் செய்யேல்ல. திடீரெண்டு அப்பிடி இருக்கவேண்டி வந்ததும் கொஞ்சம் சமாளிக்கேலாம போயிற்றுது. மற்றும்படி, உண்மையா வேற ஒண்டும் இல்ல.”
பார்வை பிள்ளைகளிடம் சென்று வர, “நிக்க வேண்டாம். நடவுங்க. நடந்துகொண்டே கதைப்பம்.” என்றவன், “முதல் கோபம் வந்தாலும் பிறகு எனக்கும் விளங்கினது. அதுதான் நானாக் கதைச்சனான்.” என்றான்.
இல்லாவிட்டால் என்ன செய்திருப்பானாம்? மென் முறுவலுடன் திரும்பி அவனைப் பார்த்தாள். பிள்ளைகளில் கவனம் வைத்தபடி நடந்தவனின் குணம் அவளை ஈர்க்க, “இதுக்கு முதலும் இங்க வந்து இருக்கிறீங்களா?” என்று பேச்சுக் கொடுத்தாள்.
“நிறையத்தரம். சின்ன வயதில ஊர் சுத்துறதுதானே வேலையே. இனி லீவு கிடைச்சா இப்பிடி ஒரு நாள் டூர் மாதிரி ஒவ்வொரு இடமாப் போவம்.”
ஆரம்பத்தில் இலகுவாக இருந்த மலை, போக போக மேடும் பள்ளமுமாக இருந்து, கற்பாறைகளாக மாறி ஒரு காலை வைத்தால் மற்றக் காலை எங்கே வைப்பது என்று தடுமாற வைத்தது. யசோவுக்கு மூச்சு வாங்கியது. உண்மையில் அவன் சொன்னதுதான் நடந்தது. கிட்டத்தட்ட அரைவாசி மலையை ஏறியிருப்பார்கள். சின்னவர்கள் மூவரும் உற்சாகம் கொஞ்சமும் குறையாமல் ஏறிக்கொண்டே இருந்தனர். அவர்களின் சின்ன கால்களுக்கு அங்கங்கு வைத்து ஏறுவது சுலபமாய் இருந்தது. சில நேரங்களில் பற்றிக்கொள்ள கைகளும் அவர்களுக்கு உதவின. அதுவும் சிந்தூரி மற்ற இருவரை விடவும் மும்முரமாக ஏறினாள். அவர்களுக்கு மலையின் அமைப்பும், அவர்களின் தடுமாற்றமும் விளையாட்டாயிற்று.
ஆனால், யசோவினால் ஒரு கட்டத்துக்குமேல் முடியவே இல்லை. செங்குத்தாக இருந்திருந்தால் கூட வேறு போலும். அந்த மலை தரையில் பரவிப் படர்ந்து படுத்துக் கிடந்து, முதுகை மட்டும் தூக்கிப் பிடித்திருந்தது. சின்ன ஓய்வு ஒன்று எடுத்தேயாக வேண்டும் என்றாகிவிட, அங்கிருந்த ஒற்றைக் கல்லில் அமர்ந்துகொண்டாள்.
“என்ன, இப்பவே இருந்தாச்சு?”
சிறு சிரிப்புடன் வினவியவனை முறைத்தாள் அவள்.
“உங்களை நம்பி வந்தன் பாருங்கோ, என்னைச் சொல்லோணும். தொண்டை எல்லாம் வறண்டு போச்சு.” மூச்சு வாங்கச் சொன்னவளால் கதைக்கக் கூட முடியவில்லை.
“வாழ்க்கை முழுக்க வாறன் எண்டு சொல்லிப்போட்டு ஒரு மலைக்கே இந்தப் பாடு.”
“நாங்க என்ன ஒவ்வொரு நாளும் மலையா ஏறப்போறம்?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“அதுவும் சரிதான்.” என்றபடி அவனும் அவள் எதிரில் அமர்ந்துகொண்டான்.
“பிள்ளைகள், கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவம், வாங்கோ.” இவர்கள் அமர்ந்துவிட்டதைக் கவனிக்காமல் ஏறிக்கொண்டிருந்தவர்களை அழைத்தாள் யசோ.
அப்போதுதான், மூவரும் திரும்பிப் பார்த்தனர். இவர்கள் சற்றே கீழே இருப்பதைக் கவனித்து, “நாங்க இங்கயே இருக்கிறம் அம்மா. இறங்கி வந்தா திரும்ப ஏறவேணும்.” என்றாள் தூரிகா.
அப்படியே, பாறையைப் பிளந்து வளர்ந்து நின்ற இள மரம் ஒன்றின் கீழே, வெயில் படாமல் அமர்ந்துகொண்டனர்.
யசோ, தன் பைக்குள் இருந்த தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்து அருந்தினாள். அவனும் கையை நீட்ட, தன்னுடையதை வைத்துவிட்டு மற்றப் போத்தலை எடுக்கப் போனாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவளதை எடுத்து அருந்தினான்.
யசோவால் அவன் முகம் பார்க்க முடியவில்லை. அவள் வாய் வைத்து அருந்தவில்லைதான். என்றாலும்… வேகமாகப் பிள்ளைகளைப் பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“களைப்பா இல்லையா?” சின்னவர்களும் இங்கே பார்க்க வினவினாள்.
“இல்லையே அன்ட்ரி. உங்களாலதான் நாங்களும் இருக்கிறம். இல்லையோ மேலே ஏறி இருப்பம். என்ன தூரி?” பதில் இவளிடமும் கேள்வி அவளிடமும் என்று சொன்னாள் தாமினி.
“கால் நோகேல்லையா?”
“இல்லையே.”
“சிந்துக்குட்டிக்கும் கால் நோகேல்லையா?”
“ம்ஹூம்!” என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள்.
“அம்மாட்ட வரப்போறீங்களா?”
“ம்ஹூம்!”
அவளுக்குப் பெரியவர்கள் செய்கிற எல்லாம் தானும் செய்ய வேண்டும். மகளின் நினைப்பில் அவள் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று.
“சிந்து கொஞ்சம் அமைதி டைப்பா?” என்று வினவினான் அகத்தியன்.
“அப்பிடி எண்டு இல்ல. அவா கிசோர் மாதிரி. தூரி மாதிரிக் கலகலப்பு இல்லதான். ஆனா பழகிட்டாப் பழகு…” பார்வை மகள் மீதிருக்கச் சொல்லிக்கொண்டு வந்தவள், திடுக்கிட்டவள் போன்று பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பி, அவனைப் பார்த்தாள்
“என்ன?” என்றான் அவன் இயல்பாக.
அவள் ஒரு விதமான சங்கடத்துடன் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைக்க, “கிசோரைப் பற்றி என்னட்டக் கதைச்சதை யோசிக்கிறீங்களா?” என்று அவனே கேட்டான்.
“அது நான் வேணுமெண்டு கதைக்கேல்ல. நீங்க சிந்துவைப் பற்றிக் கேக்கவும் தானா வந்திட்டுது.” சற்று முன்னர்தான் மெல்லிய முறுகல் ஒன்று வந்து சீராகியிருந்தது. மீண்டும் ஒன்றா என்றெண்ணியபடி விளக்கம் சொன்னாள்.
அப்போதுதான் அவனுக்கு உண்மையில் முகம் மாறியது.
“என்ன யசோ நீங்க? என்னைப் பாக்க அந்தளவுக்கு மோசமான ஒருத்தன் மாதிரியா இருக்கு? விடிய என்னடா எண்டா அப்பிடிச் செய்றீங்க, இப்ப இப்பிடிச் சொல்லுறீங்க. எனக்கு அமைஞ்சது கசப்பான வாழ்க்கை. அதையே என்னால மறக்கேலாம இருக்கு. உங்களுக்கு அமைஞ்சது அருமையான வாழ்க்கை. அவே ரெண்டுபேரும் அவரின்ர பிள்ளைகள். அப்பிடியிருக்க அவரைப்பற்றிக் கதைக்கக் கூடாது எண்டு எப்பிடி நினைப்பன்? உங்கட வாழ்க்கைல உங்களோட கொஞ்சத் தூரம் அவர் வந்தார். மிச்சத் தூரத்துக்கு நான் வரப்போறன். அந்தத் தெளிவு எனக்கு இருக்கு. அதால, இதக் கதைக்கலாமா, கதைக்கக் கூடாதா எண்டெல்லாம் யோசிச்சுத் தடுமாறாதீங்க. இயல்பா இருங்க.” என்றான் தெளிவாக.
அவளுக்கு மிகவும் இதமாக இருந்தது. அல்லும் பகலும் கணவனை மாத்திரமே நினைத்து, கண்ணீர் வடித்துத் துடித்துக்கொண்டிருந்தாள் என்று அவளே அவளைப் பற்றிச் சொல்லமாட்டாள். ஆரம்ப நாள்களில் உலகமே இருண்டுவிட்டது போன்று துடித்துத் துவண்டு போனாள்தான். மருந்துக்கும் எதிர்பாராத இழப்பாயிற்றே! அதுவும், அவன் வீட்டினர் வந்து உன்னால்தான் என்று தூற்றித் திட்டியபோது முற்றிலுமாக உடைந்து போனாள்.
அதன்பிறகு, காலம் காயத்தை ஆற்றியதா என்று கூட அவளுக்குத் தெளிவில்லை. சுற்றமும் சூழலும்தான் அவளை முடங்கியிருக்க விட்டதில்லை. துரத்தியடித்து எழுந்து நிற்க வைத்தது. வீட்டு நிலையும் சேர்ந்து கொண்டதில் வேலைக்குப் போயாக வேண்டும் என்கிற கட்டாயம், ஒன்றுக்கு இரண்டு பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே என்கிற பயம், வாழ்க்கையே போயிற்று என்று மூளையில் முடங்கிவிட்டால் ஏறி மிதித்துவிடுவார்கள் என்கிற எச்சரிக்கை, பிள்ளைகள் முன்னே அழுதுவிடக் கூடாது என்கிற கவனம், வாழ்ந்து காட்டுகிறேன் என்கிற வைராக்கியம் என்று எல்லாமாகச் சேர்ந்துதான் அவளை ஓடவைத்தவை.

