வெளிச்சக்கீற்று 17 – 3

அந்த ஓட்டத்தில் கிசோரை நினைத்து அழ நேரம் இருந்ததில்லை. அவனை ஏதாவது ஒன்று நினைவூட்டிவிட்டாலோ, அவன் இழப்பை உணர்த்திவிட்டாலோ துடித்துவிடுவாள்தான். சில இனிமையான நினைவுகள், அவனோடான அழகிய பயணங்கள், காதலித்த நாள்கள் என்று ஏதாவது நினைவு வருகையிலும் நெஞ்சினுள் பெரும் வலியொன்று பரவிப் படரும்தான். ஆனால், அவளே முயன்று, பிடிவாதமாக நின்று அவற்றிலிருந்து வெளியே வந்தும் விடுவாள்.

 

வேறு வழியும் இல்லையே! அடுத்த நாளும் முதல் நாளின் அதே ஓட்டத்தை ஓடியே ஆகவேண்டுமே!

 

ஆனாலும்கூட, அவள் வாழ்வின் அழகிய அத்தியாயம் அவன்! இளமைக்காலத்தின் மழைத்தூரலும் அவனே! அவனை முற்றிலும் மறந்து, தவிர்த்து வாழ்வது என்பது நடக்கிற காரியமன்று! அதை, அவன் சரியாக விளங்கிக் கொண்டதில், “தாங்க்ஸ், என்னை விளங்கிக் கொண்டதுக்கு. அதேமாதிரி சொறி, உங்களை நோகடிக்கிறதுக்கு.” என்று சொன்னாள்.

 

அவன் முகத்தில் அழகிய முறுவல்.

 

“சரி வாங்க, வெயில் வரமுதல் மேல போயிட்டா நல்லம்.” என்றவன் எழுந்து, அவளுக்குக் கையை நீட்டினான்.

 

பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தானே எழுந்துகொண்டாள் யசோ.

 

அவன் முறுவல் நன்றாகவே விரிந்து போயிற்று. “கஷ்டம்தான் போல.” என்றான் சிறு நகைப்பைச் சிந்தும் குரலில்.

 

விளையாட்டுப்போன்று சிந்தூரியைத் தூக்கித் தன் தோள்களில் இருத்திக்கொண்டான்.

 

வெயில் சுடத் தொடங்கியிருந்தாலும் மலையைச் சுற்றிக் கூட்டங்களாக நின்றிருந்த காட்டு மரங்கள் தந்த காற்று, சூரியனின் சூட்டைச் சமன் செய்தது. ஆனாலும், பிள்ளைகள் மூவருக்கும் கொண்டுவந்த கப்புகளை(cap) போட்டுவிட்டாள் யசோ.

 

மலையில் ஆங்காங்கே புதிதாக வந்து புத்தர் அமர்ந்திருந்தார். அமைதியாகவே அவற்றைக் கடந்து மேலேறினர்.

 

அங்கே, சராசரி மனிதனைப் போன்று இரண்டு மடங்கு உயரத்தில், நால்வர் சேர்ந்து கட்டிப்பிடித்தால் கூட கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியாத அளவில் பருமனான கல் ஒன்று, நிறுத்தி வைத்தது போன்று நின்றிருந்தது.

 

யசோவுக்கு அதைப் பார்க்கவே நெஞ்சு பயத்தில் துடித்தது. பிள்ளைகள் அதனருகில் ஓட, “கடவுளே போகாதீங்கோ!” என்று பதறினாள்.

 

“அது விழாது யசோ. பயப்பிடாதீங்க. இந்த மலையின்ர விசேசமே இதுதான்.” அவளைச் சமாதானம் செய்தான் அகத்தியன். அவர்கள்தான் அந்தக் கல்லை விழாமல் பிடித்திருப்பது போன்று, பிள்ளைகள் மூவரையும் கைகளால் கல்லைப் பிடிக்கச் சொல்லிவிட்டு ஃபோட்டோ எடுத்தான்.

 

அதைப் பார்த்தவர்களுக்குப் பெரும் கொண்டாட்டம்.

 

உச்சியில் மேடும் பள்ளமுமாக இருந்தாலுமே சமதரை போன்று இருந்ததில் பயமில்லாமல் நடமாட முடிந்தது. பள்ளங்களில் மழைத்தண்ணீர் குட்டையாகத் தேங்கி நின்றன. அதற்குள் ஊருப்பட்ட தேரைகள் குதித்து விளையாடின.

 

அதன் அருகில் போகப்போன பிள்ளைகளை இழுத்துப் பிடித்தாள் யசோ. எல்லாவற்றையும் விட, தள்ளிவிட்டால் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்தும் பெரிய பெரிய பாறைக்கற்கள், தனித்தனியாக நிமிர்ந்து நின்று ஆச்சரியத்தையும் பயத்தையும் ஒருங்கே தந்தன.

 

ஒரு இடத்தில், இராட்சத முதலை ஒன்று பாறை மீது படுத்துக்கிடப்பது போலவே கிடந்த கல்லைக் கண்டு, யசோவே வாயைப் பிளந்தாள். ஏழு அல்லது எட்டுப்பேர் நீட்டி நிமிர்ந்து படுத்தால்தான் அடியையும் நுனியையும் தொடமுடியும். அந்தளவில் நீளமாக இருந்து, ஒரேயொரு இடத்தில் மட்டுமே மலையைத் தொட்டபடி இருந்ததுதான் ஆகப்பெரிய ஆச்சரியம். இவையெல்லாம் இயற்கையாக உருவாகியிருக்கும் என்று நம்பவும் முடியவில்லை. யாராவது கொண்டுவந்து மேலே வைத்திருப்பார்கள் என்று எண்ணவும் முடியவில்லை. அப்படியிருந்தது மலையின் மீதிருந்த பாறைக்கற்கள்.

 

சின்னவர்களின் குதூகலத்துக்கு அளவேயில்லை. ஒவ்வொரு கற்களின் மீதும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். அந்த முதலை வடிவக் கல்லின் வயிற்றுப் பக்கம் ஒரு குகை போலவே இருந்தது.

 

பாறையைப் பிளந்து வளர்ந்து நின்ற மரம் ஒன்றின் கிளையைப் பறித்து, அந்த இடத்தைக் கூட்டிவிட்டு அமர்ந்துகொண்டார்கள்.

 

சிந்து வந்து அன்னையின் மடிக்குள் புகுந்துகொண்டாள். அவள் முகத்தைத் துடைத்துவிட்டாள். போனிடெயிலை கழற்றி, கலைந்திருந்த முடிகளை எல்லாம் கையாலேயே மீண்டும் சேர்த்துப் புதிதாகப் போட்டுவிட்டாள். பாறை ஒன்றில் இலகுவாக முதுகைச் சாய்த்தபடி அமர்ந்திருந்த அகத்தியன், அவளையேதான் பார்த்திருந்தான்.

 

சிந்துவுக்கு மட்டுமில்லாமல் மற்ற இருவருக்கும் கூட அதையே செய்துவிட்டாள். கொண்டுவந்த தண்ணீரில் மூவருக்கும் முகத்தையும் கைகளையும் மிகச் சிக்கனமாகக் கழுவிவிட்டாள். அப்படியே, தன்னைச் சுற்றி மூவரையும் இருத்திவிட்டு, உணவை எடுத்து வெளியே வைத்தாள். அவன் முன்னாலும் சின்ன டப்பா ஒன்று வந்து அமர்ந்தது.

 

காலைச் சாப்பாட்டைக் கொடுக்கப் போகிறாள் என்று கணித்து, அவனுடைய பைக்குள் இருந்த பிஸ்கட், மிக்ஸர் பக்கட்டுகளை எடுத்து வெளியில் வைத்தான். பிள்ளைகளின் பார்வை அவன் பக்கமாய்த் தாவிற்று.

 

யசோ நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

 

என்னத்துக்கு இந்த உருட்டு முழி என்று அவன் திகைக்கையிலேயே, “அச்சோ அகத்தியன் மாமா, விடியச் சாப்பாடு பிஸ்கட் சாப்பிடுறதா? அதெல்லாம் கூடாது.” என்று பெரிய மனுசியாகச் சொன்னாள் தூரிகா.

 

ஓ! இதற்குத்தானா அந்தப் பார்வை? கண்கள் சிரிக்க, “இல்ல, அது நான் நீங்க சாப்பிட்ட பிறகு சாப்பிடுறதுக்குத்தான் கொண்டு வந்தனான்.” என்று சமாளித்தவனின் கவனம் மட்டும் அவளில்தான்.

 

அவன் சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொண்டாளா, இல்லையா என்று காட்டாத முகபாவத்தோடு, கொண்டுவந்த புட்டுக்கு வாழைப்பழத்தை உரித்துப்போட்டுப் பினைந்து, பிள்ளைகளுக்கு ஒவ்வொரு வாயாகத் தானே கொடுத்தாள்.

 

அமைதியானவள் என்றாலும் கண்டிப்பானவள் என்று புரிந்து சிறு முறுவல் பூத்தான் அகத்தியன். திடீரென்று அவன் கையும் அவள் புறமாக நீண்டது.

 

“உங்களுக்குத்தான் அந்த டப்பா. அதுக்க முட்டைப் பொரியல், மிளகாய்ப் பொரியல், கத்தரிக்காய்ப் பொரியல், சம்பல் எல்லாம் இருக்கு.” என்று சொன்னாள் யசோ.

 

“அதுக்கென்ன? இதுலயும் ஒருவாய் தாங்களன். எப்பிடி இருக்கு எண்டு பாக்கிறன்.”

 

அவளால் மறுக்க முடியவில்லை. பெரிய ஒரு பிடியாக அள்ளி, உருண்டை போலாக்கி அவன் கையில் வைத்தாள்.

 

அவனும் சாப்பிட்டான். “நல்லாத்தான் இருக்கு.” என்றவன் மீண்டும் கையை நீட்டினான். தூரிகா சற்றே தள்ளி அமர்ந்துகொண்டு, “நீங்களும் கிட்ட வாங்க மாமா.” என்று அவனுக்கும் இடம் கொடுத்தாள்.

 

பெரியவர்கள் இருவர் முகத்திலும் சின்ன முறுவல். அகத்தியனும் சிந்தூரியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு அவள் முன்னே அமர்ந்துகொண்டான்.

 

சிரித்துவிடாமல் இருக்கச் சிரமப்பட்டபடி, அவனுக்கும் சேர்த்து ஒவ்வொரு பிடியாகக் கொடுத்து முடித்தாள் யசோ.

 

அப்படியே மூவருக்கும் வாயைக் கழுவிவிட்டு நிமிர நான்காவதாக நின்றிருந்தான் அவன். யசோவின் விழிகள் திகைப்பில் விரிந்தே போயின.

 

“சேச்சே! கைக்குத் தண்ணிய ஊத்தினா மட்டும் காணும். நானே கழுவுவன்.” என்றவனின் விழிகளில் அப்பட்டமான நகைப்பு.

 

இவன் இருக்கிறானே… பிள்ளைகளை விடவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டு! செல்லமாய்ச் சலித்தபடி அவன் கைக்குத் தண்ணீரை ஊற்றினாள்.

 

“மாமாக்கு நான் கையைக் கழுவி விடுறன்.” என்று ஓடிவந்தாள் தாமினி.

 

மாமாவும் மருமகளும் ஒற்றைக் கையைக் கழுவி முடிப்பதாக இல்லை என்றதும், “தண்ணிய அளவாப் பாவிக்கவேணும் செல்லம். பிறகு குடிக்கிறதுக்கு இல்லாமப் போயிடும்.” என்றாள் யசோ.

 

அதன் பிறகுதான் பெரியவர்கள் சாப்பிட்டார்கள்.

 

“சாப்பாடு நல்லாருக்கு!” மிகுந்த சுவையோடு இருக்கவும் சொன்னான் அகத்தியன்.

 

“சமைச்சது அம்மா.” சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் யசோ.

 

“மகள் எப்பிடி?”

 

“கொஞ்ச நாளில எப்பிடியும் தெரிய வரத்தானே போகுது.”

 

கண்களில் சிரிப்புடன், “அந்த நினைவு இருந்தா சரி.” என்று அவன் சொன்னபோதுதான், தான் என்ன சொன்னோம் என்பதையே உணர்ந்தாள் யசோ.

 

அன்று காலையில்தான் அவனருகில் அமர முடியாமல் தடுமாறினாள். நேரம் மதியத்தைக்கூடத் தொடவில்லை. ஆனால், அவனோடான வாழ்க்கையை இயல்பாகப் பேச வைத்துவிட்டானே!

 

கெட்டிக்காரன்தான் என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்து பார்க்க, உதட்டோரம் வழிந்த முறுவலோடு அவன் பார்வையும் அவளில்தான்.

error: Alert: Content selection is disabled!!