அத்தியாயம் 31
அடுத்த வாரத்தில் யாழிசைக்குப் பரீட்சைகள் ஆரம்பிக்க இருந்தன. அதில், தன்னைப் பாதித்த விடயங்களிலிருந்து வெளியில் வந்து, படிப்பதில் கவனம் செலுத்த முயன்றாள். அது இலகுவாக இல்லை. சிந்தை கலைந்துகொண்டே இருந்தது.
தூயவனிடம் அவள் சொன்ன முடிவில் இப்போதும் மாற்றமில்லைதான். ஆனால், அவன், அவன் சொன்ன காதல், அதற்காக அவன் அவளிடம் போராடிய போராட்டம் எல்லாம் அவளை உலுக்கிக்கொண்டே இருந்தன.
நான் என்கிற இறுமாப்புடன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்த ஒருவன், இந்தளவில் கெஞ்சுவான் என்பதெல்லாம் அவள் யோசனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
அதனாலோ என்னவோ அவள் சிந்தையை விட்டு மறையாமல் நின்று, அவளைப் போட்டுப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்தான்.
அவன், அவன் பார்த்த பார்வைகள், அவன் கெஞ்சிய விதம், ஆழ்ந்து பேசிய தொனி, அவள் அடித்தபோது வாங்கிக்கொண்டு நின்றது, அழுதபோது ஆறுதல் படுத்தத் துடித்தது என்று எதையுமே மறக்க முடியவில்லை.
அன்று கைப்பேசி வாயிலாக நேசத்தைச் சொன்ன கணத்தில் அதிர்ந்தாலும், தன்னோடு விளையாடிப்பார்க்கிறானோ என்கிற ஒரு சந்தேகம் இருந்தது.
இப்போது அப்படியன்று. உண்மையில் நேசிக்கிறான் என்று புரிந்தது. அதை மிக மிகத் தெளிவாகவே அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தான். அதற்காய் அவன் தொட்ட எல்லை? அதுதான் நடுங்க வைத்தது.
வேகமாகத் தலையை உலுக்கி, படிப்பில் கவனத்தைக் குவிக்க முயன்றாள். அது நடக்கவேயில்லை.
என்ன ஆனாலும் பரவாயில்லை, உன்னை வீடு புகுந்து தூக்குவேன் என்றவன்தான், என் அண்ணாவோடு சண்டைக்குப் போகாதே என்று அவள் அழுததும் வளர்த்த நாய்க்குட்டி ஓடி வந்து காலடியில் சுருண்டு கிடப்பதுபோல், சரி என்று கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பதும்.
அவனுடைய அந்த அளவுக்கதிகமான ஆக்ரோசமும் இந்தப் பெருத்த அமைதியும் அவளைப் பயமுறுத்தின. இரண்டும் இரண்டு விதமான உச்சங்களாயிற்றே!
அண்ணாவோடு சண்டைக்கு வரமாட்டான் என்பது மட்டுமே அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். அவளும் சொன்ன சொல்லைக் காக்கிறவளாகக் கைப்பேசியில் அவனைத் திரும்பவும் தடை செய்யப் போகவில்லை. அதில் முடிந்தவரையில் கைப்பேசியை அமைதியிலேயே வைத்திருந்தாள்.
ஆனால், அவனிடமிருந்து எந்தவிதமான அழைப்போ, செய்திகளோ வரவில்லை. அதுதான் அவளுள் மெல்லிய ஆச்சரியத்தைப் பரப்பிற்று.
அவளால் புரிந்துகொள்ளவியலாப் புதிராக இருந்தான் தூயவன்.
அவன் தந்த அந்த முத்தத்தைக் கடந்து தன்னால் இன்னொரு வாழ்க்கைக்குள் போக முடியுமா என்கிற கேள்வி வேறு. அப்படி அவள் போகக் கூடாது என்பதற்காகவே அவன் செய்த ஒன்றை ஏற்று, அவளும் போகாமல் இருக்கக் கூடாது என்று அறிவு சொன்னது.
அப்படியே அவனைக் கடந்து இன்னொரு வாழ்வினுள் சென்றால் அந்த அவனிடம் நடந்ததைச் சொல்ல வேண்டுமா, இல்லையா? முதலில் இவன் போக விடுவானா? வீடு புகுந்து தூக்குவேன் என்றானே.
அன்று கடைசியாக அவன் அனுப்பிய குறுஞ்செய்தியில் கூட அவள் தமையனோடு சண்டை பிடிக்கமாட்டேன் என்றுதான் சொல்லியிருந்தான். சொன்ன நேசத்திலிருந்து பின் வாங்குவதாகச் சொல்லவில்லை. அதுவேறு அவளுக்குள் இன்னுமே கிலியைப் பரப்பிக்கொண்டு இருந்தது.
*****
யாழிசைக்குப் பார்த்த மாப்பிள்ளைக்கு 29 வயது. இவளுக்காகவே மூன்று வருடங்கள் அவன் காத்திருந்துவிட்டதாலும், முப்பதற்குள் முடிக்காவிட்டால் அவனுக்கு ஏதோ கண்டம் என்று சாத்திரம் பார்த்த இடத்தில் சொன்னார்களாம் என்றும் சொல்லி, பரீட்சை முடிந்த கையோடே திருமணத்தை வைக்க வேண்டினர் மாப்பிள்ளை வீட்டினர்.
நேசனும் குறிப்புகளைக் கொண்டுபோய்ப் பார்த்தான். அங்கும் அடுத்த ஆறு மாதத்திற்குள் பெரும் சிக்கல்களுக்கு நடுவில் யாழிசையின் திருமணம் நடக்கும் என்றும், அப்படி நடக்காவிட்டால் அடுத்த நான்கு வருடங்களுக்குத் திருமண யோகமே இல்லை என்றும் சொல்லிவிட, அடுத்த யோசனை என்கிற ஒன்றுக்கே நேசன் தயாராக இல்லை.
கடன் பட்டாவது அவள் திருமணத்தை நல்லபடியாக முடித்துவிட எண்ணினான்.
நளினியும் ஏழை வீட்டுப் பெண். அவள் பெற்றோருக்குச் சொந்தமாகக் காணியும் வீடும் உண்டுதான். என்ன, அது இன்னுமே இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் அவள் பெற்றோரே வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்.
அதனாலேயே தந்தைக்கு ஒப்பாகத் தன்னைப் பேணி வளர்க்கும் அண்ணாவுக்கும் அண்ணா குடும்பத்துக்கும் இருக்கும் ஒரேயொரு சொத்தான அந்த வீட்டைத் தான் எடுத்துக்கொள்வதில் யாழிசைக்கு விருப்பமில்லை. அதையும் தந்துதான் திருமணம் என்றால் தனக்கு அப்படி ஒரு திருமணம் வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.
அவள் தங்களுக்காகப் பாக்கிறாள் என்று தெரிந்ததால் நெகிழ்ந்துபோன நேசன், அவளின் திருமணம் முடிந்தபிறகும் தாம் அந்த வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்றும், காலப்போக்கில் நிச்சயமாகத் தானும் ஒரு காணியைச் சொந்தமாக வாங்கிக்கொண்டு போவேன் என்றும், அப்போது, சொன்னது போலவே இந்த வீட்டை யாழிசைக்கு மாற்றித் தருவதாகவும் மாப்பிள்ளை வீட்டினரிடம் கேட்டிருந்தான். அவர்களும் அதற்குச் சம்மதித்திருந்தார்கள்.
அதில், தங்கைக்கு நகைகளாவது குறைவில்லாமல் போட வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு. அதற்குத் தேவையான பணத்திற்கு அவனோடு வேலை செய்யும் நண்பனிடம் கேட்டிருந்தான்.
அதைப் பற்றிப் பேச இன்று அவனையும் அழைத்துக்கொண்டு ஒரு உணவகத்துக்கு வந்திருந்தான்.
தன் நிலையைச் சொல்லி, தங்கைக்கு நடக்கவிருக்கும் திருமணத்தையும் சொல்லி, வங்கியில் உயர் பதவியில் இருக்கும் அவனுடைய அப்பா மூலம் லோனுக்கு உதவி செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அவன் முன்னால் வந்து அமர்ந்தார் சண்முகம்.
அவரைப் பார்த்ததும் நேசனின் புருவங்கள் சுருங்கின. கருணாகரனின் உறவுக்காரர் என்று தெரியும். அன்று சொத்துகளை மாற்றி எழுதுவதற்கு இவரும்தான் சேர்ந்து வந்தார். அவருக்கு அவனிடம் என்ன அலுவல்? உள்ளத்தில் என்னவோ சரியில்லாமல் படக் கேள்வியாக ஏறிட்டான்.
“எப்பிடி இருக்கிறீங்க தம்பி? உங்களோட கொஞ்சம் கதைக்கோணும். எங்க வச்சுப் பாக்கலாம் எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்க, நீங்களே வந்து கண்ணுல பட்டுட்டீங்க.” அங்கிருந்த தண்ணீரை எடுத்து அருந்திவிட்டு அலட்டலான சிரிப்புடன் சொன்னார் அவர்.
அவர் பார்வை, தோரணை, சிரிப்பு எதுவுமே சரியில்லை. வாகனத்தில் வைத்து அவர் மறைமுகமாக மிரட்டியதை யாழிசை அப்போதே சொல்லியிருந்தாள். அதுவும் நினைவில் வந்து நிற்க, “மச்சான், குறை நினைக்காத. நாங்க பிறகு கதைப்பமா?” என்றான் நேசன் நண்பனிடம் திரும்பி.
அந்த நண்பனுக்கும் அந்தச் சூழ்நிலை சரியில்லாமல் பட, “சரி, நீ அவரைப் பார். என்ன எண்டாலும் கோல் பண்ணு!” என்றுவிட்டு எழுந்துபோனான்.
“பராவாயில்லை, கெட்டிக்காரன்தான். உங்கட சுயரூபம் மற்றவேக்குத் தெரிஞ்சிடக் கூடாது எண்டு தக்க இடத்தில ஒவ்வொருத்தரையும் காய் வெட்டத் தெரிஞ்சிருக்கே.” என்று பாராட்டினார் அவர்.
நேசனின் முகம் மாறியது. “விளங்கேல்ல!” என்றான் புருவங்களை சுளித்து.
“இல்ல, இப்பிடியான கெட்டித்தனங்கள் இல்லாம இவ்வளவு சாமர்த்தியமா நடக்கேலாதுதானே. அதத்தான் சொன்னனான்.”
“இந்தக் குத்தல் குடையல் எல்லாம் இஞ்ச வேண்டாம். என்ன கதைக்கோணும் உங்களுக்கு?” அந்த மனிதரின் பார்வை, பேச்சு, கோணல் சிரிப்பு எல்லாமே நேசனுக்கு எரிச்சலைக் கிளப்பின.
“என்ன தம்பி, செய்றதை எல்லாம் செய்துபோட்டுக் கோவம் வேற வருதோ? அப்ப நாங்க என்ன கத்தி, பொல்லைத்(கொட்டான்) தூக்குறதா?” என்று கேட்டார் அவர்.
“தூக்குங்க. ஆர் வேணாம் எண்டது?” யாழிசைக்குப் போலவே அவர் தன்னையும் மிரட்ட முயல்வது விளங்கியதில் சூடாகவே பதில் சொன்னான்.
அவர் ஒரு மாதிரியாகச் சிரித்தார். “அண்டைக்கு நீங்க சொத்தைத் திருப்பித் தந்த வேகத்தப் பாத்திட்டு, பரவாயில்லை, கஷ்டப்பட்டாலும் மானமுள்ள மனுசர்தான் எண்டு உங்களைப் பற்றிப் பெருமையா நினைச்சனாங்க. ஆனா அது, சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கிற பிளான் எண்டு இப்பதானே தெரியுது.” என்று இப்போதும் பொடி வைத்துப் பேசினார் அவர்.
இன்னுமே அந்த மனிதர் எதற்காக வந்திருக்கிறார் என்று நேசனுக்குப் பிடிபடவில்லை. ஆனாலும், அதற்குள் அவன் இரத்தக்கொதிப்பை உச்சிக்கு ஏற்றியிருந்தார். அவர் நோக்கமும் அவனைக் கோபப்படுத்திப் பார்ப்பதுதான் என்று விளங்க, பொறுமையை இழுத்துப் பிடித்தபடி, “இன்னும் நீங்க விசயத்தச் சொல்லேல்ல.” என்றான்.
“என்ன தம்பி சொல்லக் கிடக்கு? அந்தப் பக்கத்தால சொத்தைத் தாற மாதிரித் தந்துபோட்டு இந்தப் பக்கத்தால மொத்தச் சொத்தையும் பறிக்கிற பிளானா?” என்றதும் அவன் முகம் கோபத்தில் சிவந்து கொதித்தது.
“வார்த்தைகளைக் கவனமா விடுங்க. உங்கட வீட்டுத் தொடர்பே வேண்டாம் எண்டுதான் மொத்தமா ஒதுங்கி இருக்கிறம். திரும்பவும் வந்து சொத்துக் கித்து எண்டு நீங்க தேவையே இல்லாம உளறுறதுக்கு நான் ஆள் இல்ல. வாறன் போயிற்று.”
அங்கேயே இருந்தால் தன் பொறுமை போய், வீண் சண்டை சச்சரவுகள் வந்துவிடுமோ என்று எண்ணி அவன் எழுந்து நடக்க ஆரம்பிக்க, “உண்மை வெளில வந்திட்டுது எண்டுற பயத்தில ஓடுறீங்களோ?” என்றார் அவர்.
அவர் முகத்தையே பெயர்க்கும் அளவுக்குச் சினமும் சீற்றமும் பொங்கிற்று அவனுக்கு. ஆனாலும், என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே என்றெண்ணி மீண்டும் அமர்ந்துகொண்டு, “என்ன உண்மை? ஆரின்ர சொத்தை நாங்க பறிக்கப் பாக்கிறம்?” என்றான் மிக மிக நிதானமாக.
“இன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்களே தம்பி. இல்ல, உங்களுக்குத் தெரியாமத்தான் உங்கட தங்கச்சி தூயவனுக்குப் பின்னால சுத்துறாவா?” என்றதும் இருந்த மிச்ச சொச்ச பெறுமையெல்லாம் பறந்துவிட, கொதித்து எழுந்துவிட்டான் நேசன்.
“ஏய்! ஆரப் பற்றி ஆருட்ட வந்து கதைக்கிறாய்? ஒரு வார்த்த… ஒரு வார்த்த என்ர தங்கச்சியப் பற்றி இன்னொருக்கா பிழையா வந்துது.” என்று உக்கிரத்தோடு விரல் நீட்டி எச்சரித்தான்.
சட்டென்று சூழ்நிலை மாறிவிட சுற்றியிருந்தவர்கள் எல்லாம் கலவரமாக இவர்களை நோக்கினர். அவ்வளவு நேரமாகச் சண்முகத்தின் முகத்தில் இருந்த சிரிப்பும் மறைந்துபோனது. “நான் நிதானமா கதைக்கத்தான் வந்தனான். அதே மாதிரி நீங்களும் இருக்கோணும்!” என்றார் எச்சரிப்பாக.

