அவளைப்போல அவனுக்கும் களைப்பாக இருக்குமே, சிந்தூரியைத் தூக்கிக்கொள்வோமா என்று நினைத்தாள். உறக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மூவரையும் குழப்ப மனம் வராமல் அப்படியே விட்டுவிட்டாள்.
அப்படி, அவர்களையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தவள் எப்படி, எப்போது உறங்கினாள் என்று தெரியாது உறங்கியிருந்தாள். இடையில் விழித்து எழுந்து பார்த்தபோது சின்னவர்கள் இருவரும் அவன் அருகில் கிடக்க, அவர்கள் மேல் ஒரு கையைப் போட்டது போன்று அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான் அவன்.
இப்படி ஒரு காட்சியை இது வரையில் அவள் கண்டதே இல்லை. இந்த அன்பும் அக்கறையும் காலத்துக்கும் அவர்களுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று, நெகிழ்ந்த மனத்தோடு கடவுளை வேண்டிக்கொண்டாள்.
உறக்கம் கலையாமல் பிள்ளைகள் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, பெட்சீட்டையும் இழுத்துப் போர்த்திவிட்டாள். கொஞ்சம் தயங்கிவிட்டு அவன் பெட்சீட்டையும் மார்புவரை இழுத்துவிட்டாள். திருமணத்துக்கு என்று செய்த கிளீன் சேவினாலும் நறுக்கிவிடப்பட்ட மீசையினாலும் மூக்கும் முழியும் தனியாகத் தெரிந்தது. ‘வயது போயிற்றுது யசோ, அங்கங்க நரையும் தெரிய ஆரம்பிச்சிட்டுது’ என்று அவன் சொன்னது நினைவில் வந்து, மெல்லிய முறுவலைத் தோற்றுவித்தது. நரை வந்துவிட்டதுதான். ஆனால், வயது தெரிகிறதா என்ன? அவளுக்கு அப்படித் தோன்றவில்லை. உதட்டைப் பற்றியபடி விழிகளை மூடிக்கொண்டவள் மீண்டும் உறங்கிப் போனாள்.
அதன்பிறகான நாள்கள், மாற்றங்கள் பெரிதாக இல்லாது வெகு இயல்பாகவே நகர்ந்தன. புது மாற்றமாக சிந்தூரியையும் தன்னுடனே கூட்டிச் செல்ல ஆரம்பித்தான் அகத்தியன்.
அவனை வேலை செய்ய விடமாட்டாள் என்று யசோ சொன்னதை ஏற்கவில்லை. எப்போதும்போல நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கமலாம்பிகை சொன்னதையும் கேட்கவில்லை. கடையில் இருந்த மற்ற அறையைப் பிள்ளைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திருந்தான். இத்தனை நாட்களாக விடவும் எடுக்கவும் ஆள் இல்லை என்று சிந்தூரியை நேசரிக்கு விடாமல் வைத்திருந்தாள் யசோ. இப்போது, டவுனிலேயே ஒரு நேசரியில் சேர்த்துவிட்டான்.
நேசரி முடிந்து வருகிற சிந்தூரி, தூரிகா பள்ளிக்கூடம் முடிந்து வருகிற வரையில் அவனுடன் இருப்பதும், பள்ளிக்கூடம் முடிந்த பிறகு தாமினியோடு சேர்ந்து விளையாடுவதுபோல் பார்த்துக்கொண்டான். தினமும் சிந்தூரியோடு அவர்களின் வீட்டுக்கும் சென்று வந்தான். பகல் உணவு சிந்தாமணியே செய்து தந்தார். யசோவையும் தன் கடைக்கு வரவைத்து, அங்கேயே எல்லோரும் பகல் உணவை முடிப்பதுபோல் பார்த்துக்கொண்டான். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் என்கிற அந்த உணர்வைப் பிள்ளைகளுக்குள் உருவாக்கினான்.
இதையெல்லாம் கவனியாததுபோன்று கவனித்துக்கொண்டிருந்த கமலாம்பிகை, நிசாந்தினி, ஆனந்தன் மூவருக்கும் கலக்கங்களும் கவலைகளும் மெல்ல மெல்ல அகலத்தொடங்கின. அவன் மீதான நம்பிக்கையும் பிறந்தது.
தினமும் சேர்ந்திருக்க முடிவதும், விளையாடக் கிடைப்பதும் என்று குழந்தைகள் மூவருக்குமே கொண்டாட்டமாகக் கழிந்தன நாள்கள். இன்னுமே அகத்தியன் மாமா என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தனர். அவனாக அப்பா என்று அழைக்கச் சொல்லித் தூண்டவில்லை. முதலில் அந்த உணர்வை அவர்களுக்குள் விதைக்க விரும்பினான். அதை, அவன் யசோதினியிடம் பகிர்ந்துகொண்டபோது, தன் முடிவு தவறில்லை என்று இன்னுமொருமுறை தெரிந்து மகிழ்ந்தாள் யசோ.
அவர்கள் இருவருக்குமான உறவு மட்டும் அப்படியே இருந்தது. காலையில் எழுந்து நால்வருமாகப் புறப்பட்டு, மாலையிலும் நால்வருமாகவே வீட்டுக்குத் திரும்புவார்கள். அவர்கள் இருவர் மட்டுமான தனிமை அமைவதில்லை. கவனித்து அமைத்துக்கொள்ள இருவரும் முயலவும் இல்லை.
ஆனால், குழந்தைகள் அறியாமல் ஒருவர் பார்வை மற்றவரில் படிய ஆரம்பித்தது. அந்தப் பார்வைகள் இருவர் மனத்துக்குள்ளும் பலவித மாற்றங்களை உண்டாக்கிற்று.
ஒருநாள் அறையில் தனியாக மாட்டியவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டிருந்தான் அவன். அடுத்து வந்த நாள்களில் அவன் முகம் பார்க்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்தாள் யசோ. அன்றிலிருந்து அவர்களுக்கிடையிலான நெருக்கம் அதிகரித்திருந்தது. பார்வைப் பரிமாற்றமும் கூடிப் போயிற்று. அவன் விருப்பு வெறுப்புகளை அறிந்து நடக்க ஆசைப்பட்டாள் யசோ. தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவியாக இருந்தான் அகத்தியன்.
உண்மையில் யசோவிற்குப் பாதிச் சுமை குறைந்திருந்தது. இருக்க நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவள் நிதானமாக நடந்தாள். தேநீரை ரசித்துப் பருகினாள். உணவை ருசித்து உண்டாள். தன்னில் கவனம் செலுத்தினாள். அவன் தன்னைக் கவனிக்கிறான், ரசிக்கிறான் எனும் உணர்வே அவளைப் புத்துணர்வுடன் வைத்திருந்தது. பிள்ளைகளை இன்னும் நன்றாகக் கவனித்துக்கொண்டாள். அவர்கள் சொல்லும் ஓராயிரம் கதைகளைக் காதுகொடுத்துக் கேட்டாள். அவர்களோடு நேரம் செலவளித்தாள்.
இந்த வாழ்க்கையை இன்னும் அனுபவித்து வாழும் ஆசை எழுந்தது. பார்மசி முதலாளியோடு கதைத்து, தினமும் மாலையில் இரண்டு மணிநேரங்கள் முன்னதாக வேலையை முடித்துக்கொண்டாள். பிள்ளைகளைக் கையோடு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து, அகத்தியன் வருவதற்கிடையில் அவர்களைக் கவனித்து, இரவுச் சமையலையும் முடித்துவிடுவாள்.
வேலை முடிந்து வீடு வருகிறவனை ஒற்றைத் தேநீர்க் கோப்பையோடு எதிர்கொள்வாள். அதற்குப் பதிலாய் அவன் தருகிற பிரத்தியேகப் பார்வைக்கும், ஒற்றை முறுவலுக்கும் ஈடிணை எதுவுமில்லை என்று நினைப்பாள் யசோ.
குளிப்பதற்குக் கூட விடாமல், அங்கே கிணற்றடியிலேயே சென்று அமர்ந்துகொண்டு சின்னவர்கள் என்னென்னவோ கதைப்பதும், அவர்களோடு கதைத்தபடியே அவன் குளித்து முடித்து வருவதையும் பார்ப்பதை அவள் தவறவிடுவதே இல்லை.
வார இறுதிகளில் தாமினியையும் சேர்த்துக்கொண்டு அன்றுபோலவே எங்காவது சென்று வந்தார்கள். நிசாவின் பிள்ளைகள் இன்னுமே சின்னவர்கள் என்பதில் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று விட்டிருந்தனர்.
இப்போதெல்லாம் சனி அல்லது ஞாயிறு ஏதாவது ஒரு நாளில் அவர்களைக் குடும்பமாகச் சாப்பிட அழைத்துவிடுவார் சிந்தாமணி. அன்றும் வரச்சொல்லியிருந்தார். இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே என்று அவளை மகனுக்குக் கட்டிவைக்க அவ்வளவு யோசித்த அவரே, மனைவி மக்கள் என்று மகனைக் கண் நிறையப் பார்த்து மகிழ்வதற்காகவே அடிக்கடி வரச்சொன்னார்.
பிள்ளைச் செல்வங்களோடு சிரித்த முகமாக அவன் வந்து இறங்குவதைப் பார்க்கையிலேயே மனம் பூத்துக் குலுங்கிவிடும். இந்திராவுக்கும் அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததில் மனக்கவலைகள் அகன்றிருந்தன. அவள், தன்னையும் வயிற்றில் இருக்கும் பிள்ளையையும் நன்றாகக் கவனித்துக்கொள்வதில் கவலையகன்று தன் வேலையில் கவனம் செலுத்தினான் கஜேந்திரன். தாமினிக்கு விளையாட ஒன்றுக்கு இரண்டு மச்சாள்கள் கிடைத்துவிட்டதில் அவள் துள்ளலும் துடிப்பும் இரண்டு மடங்காகப் பெருகிற்று.
சிந்தாமணிக்கு வேறென்ன வேண்டும்?
உள்ளே பெண்கள் சமையல் வேலையில் இருக்க, வெளியே கஜேந்திரனும் அகத்தியனும் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். யசோவின் கைப்பேசி சத்தமிட்டது. அதை எடுக்க அகத்தியனின் அறைக்கு விரைந்து வந்தவள், அங்கே அவன் நிற்பான் என்று எதிர்பாராமல் மோதிக்கொண்டாள்.
“ஏன் இவ்வளவு வேகம்?” அவளைப் பிடித்து நிறுத்திவிட்டு வினவினான் அவன்.
“அது… ஃபோன்.” அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி வந்த வேகத்திலேயே திரும்பி ஓடப்போனாள். அதற்கு விடாமல் அவள் கைபற்றித் தடுத்து நிறுத்தினான் அகத்தியன்.
“ஏன் இப்பிடி என்னைக் கண்டாலே ஓடுறீங்க?” அவன் முகத்தில் அப்பட்டமான சிரிப்பிருந்தது.
சிரிக்காமல் என்ன செய்வான்? காரணமே அவன்தானே!
“என்னை நேராப் பாத்து, ‘நேரமில்லை எண்டு சொன்னீங்க?’ எண்டு கேட்ட யசோவா இது எண்டு இருக்கு.”
அன்றைக்கு அவள் மனத்தில் எந்தச் சலனமும் இல்லை. இன்றைக்கு? அவன் புகுந்துகொண்டு என்னவெல்லாமோ செய்கிறானே! மீண்டும் அவனிடமிருந்து தன்னைப் பறித்துக்கொண்டு ஓட முயல, அவளை ஒரு சுழற்றுச் சுழற்றித் திறந்திருந்த கதவின் பின்னே கொண்டுவந்து, அவள் திணற திணற முத்தமிட்டான்.
“இதுக்குத்தானே இந்த ஓட்டம்?” அவள் காதோரமாகச் சொன்னவனின் குரல், அவளிடமிருந்து பெற்ற முத்தக் கிறக்கத்தில் கரகரத்தது.
“சும்மா இருக்கிறவனைச் சீண்டி விடுறதே நீங்கதான்!” மீண்டுமொருமுறை அழுத்தமாய் முத்தமிட்டு, “இப்ப போங்க!” என்று அனுப்பிவைத்தான்.
ஒரே ஓட்டமாக ஓடி வந்திருந்தாள் யசோ.
இவர்கள் இருவரையும் கவனிப்பதைத் தவிர சிந்தாமணிக்கு வேறு என்ன வேலை?
கைப்பேசி எடுக்கப்போன யசோ அதை எடுக்காமல் முகத்தில் சிவப்புடன் ஓடி வந்ததும், அவள் பின்னால் வெளியே வந்த மகனின் முகத்தில் தெரிந்த சிரிப்பும் அவருக்குள் ஓராயிரம் இனிய கற்பனைகளைத் திறந்துவிட்டது. அவனை இப்படிப் பார்த்துவிட மாட்டோமா என்றுதானே ஏங்கிக் கிடந்தார்.
அவருக்கு இது போதவில்லை. சின்ன வீடு, ஒற்றை அறை, வளர்ந்த பிள்ளைகள், இருவரும் வேலைக்குச் செல்வது என்று எல்லாமாகச் சேர்ந்து அவர்களுக்கான போதிய தனிமையைக் கொடுக்குமா என்று யோசித்தார்.
என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தவருக்கு வழி காட்டுவது போன்று வந்தது, அவரின் ஒன்றுவிட்ட தங்கை மகளின் திருமணம்.
நிறைமாதத்தை நெருங்கும் இந்திராவுக்குப் போக முடியாது. அவளை அவர் பார்க்க வேண்டும். அதனால் இவர்களைப் போகச் சொன்னார்.
அகத்தியனுக்கு மறுப்பில்லை. பிள்ளைகளுடன் சென்று வருவதாகச் சொன்னான். சிந்தாமணிக்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.
அவர் அதற்கு வேண்டாம் என்று சொல்ல, “சனி ஞாயிறு தானேம்மா. அவேக்கும் இன்னொரு ஊருக்குப் போய்வந்த மாதிரி இருக்கும். முதல், நாங்க இல்லாம அவே இருக்காயினம்.” என்றான் அவரின் அருமந்த மகன்.
“அப்பிடி எண்டு ஆரு சொன்னது?” என்றவர் குழந்தைகளை அப்போதே கூப்பிட்டுக் கேட்டார். அவர்கள் நிற்பதற்குச் சந்தோசமாகச் சம்மதித்தனர்.
மனைவியின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு, “ரெண்டு நாள்தானே அகத்தியன். லீவு போட்டுக்கொண்டு நிண்டு பிள்ளைகளை நான் பாக்கிறன். ஒண்டுக்கும் யோசிக்காம நீங்க போயிற்று வாங்கோ.” என்று கஜேந்திரனும் சொன்னான்.
யசோ அவனை விட அதிகமாகத் தயங்கினாள். விடயமறிந்த நிசாந்தினியும், “ஒரு ரெண்டு நாளைக்கு எங்களை நம்பிப் பிள்ளைகளை விடமாட்டியா?” என்று கேட்டாள்.
மாட்டேன் என்று எப்படிச் சொல்லுவாள்?
ஆனந்தன் வேறு, சின்னவர்கள் பெரியவர்கள் எல்லோரையும் எங்காவது வேனில் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றுவிட்டதில், இவர்கள் இருவரும் மட்டுமே திருகோணமலை சென்று வருவது முடிவாயிற்று.

