அத்தியாயம் 33
தூயவனுக்கு என்னவோ இரண்டு நாள்களாக மனம் சரியாகவே இல்லை. நெஞ்சு அடித்துக்கொண்டே இருந்தது. யாழிசையைப் பார்த்துவிடத் துடித்தான். ஏன் இப்படி என்று அவனுக்குப் புரியவில்லை.
மாதக் கணக்கில் எல்லாம் அவளைப் பாராமல் இருந்திருக்கிறான். அப்போதெல்லாம் அவள் பற்றிய சின்ன சின்ன நினைவுகளே அவனுக்குப் போதுமானவையாக இருந்திருக்கின்றன.
இப்போது மட்டும் ஏன் இப்படி?
“என்ன மச்சான்?” அவன் புருவங்கள் சுளித்தே கிடப்பதைக் கண்டு வினவினான் குரு.
“தெரியா மச்சான். மனம் சரியே இல்ல. திங்கக்கிழமை இசை அனுராதபுரம் போவாள். அப்ப ஒருக்கா போய்ப் பாக்கட்டோ எண்டு இருக்கு.”
“ஒரு மெசேஜ தட்டிவிடன்.”
அதற்குப் பதில் சொல்லாமல் சின்ன சுள்ளி ஒன்றை எடுத்து முறித்து எறிந்தான் தூயவன்.
“என்னடா?”
“அவள் ஒண்டும் மனம் மாறியோ, என்னோட கதைக்கிற ஆசையிலயோ என்னை ப்ளொக்ல இருந்து எடுத்து விடேல்ல. அவளைப் பொறுத்த வரைக்கும் அவள் என்ன ப்ளொக்ல இருந்து எடுத்திருக்கிறாள், அதுக்காக நான் அவளின்ர அண்ணாவோட கதைக்கப் போகாம இருக்கிறன். அதை ஒரு ஒப்பந்தம் மாதிரி நினைச்சிருக்கிறாள். எனக்கு அது அப்பிடி வேண்டாம். அவளா மெஜேஜோ, கோலோ பண்ணினா மட்டும்தான் இனிக் கதைக்கிறது எண்டு இருக்கிறன்.”
“இருக்கிற நிலைமைக்கு உனக்கு ரோசம் வேற!” என்று திட்டினான் குரு.
“சித்திய ஒருக்கா அங்க அனுப்பிப் பாக்கட்டோ எண்டு இருக்கு.”
“காரணம் கேக்க மாட்டாவா?”
“நான் சொன்னாத்தானே. துளசியை வச்சுச் சொல்லுவம்.” என்றவன் துளசியிடம் சொல்லிவிட்டான்.
அவளும், “இசை எக்ஸாமுக்கு படிச்சிட்டாவா சித்தி. திங்கள் அனுராதபுரம் போகோணும் என்ன?” என்று பேச்சுக்கொடுத்தாள்.
“ரெண்டு நாளா அவான்ர ஃபோன் ஓஃப்லையே இருக்கு துளசி. எப்பவும் எக்ஸ்சாம்ஸுக்கு முதல் என்னோட கோயிலுக்கு வருவா. இந்த முறையும் கூட்டிக்கொண்டு போவம் எண்டா எங்க? ஒருக்கா போய்ப் பாத்துக்கொண்டு வருவம் எண்டு சுவர்ணாவை வரச் சொன்னனான், அவளும் வரேல்ல. நளினிக்கு ஒருக்கா எடுக்கோணும்.” என்றவருக்கும் என்னவோ என்கிற யோசனைதான்.
இடையில் ஒருமுறை நேசனுக்கும் நளினிக்கும் அழைத்திருந்தார். அவர்களும் எடுக்கவில்லை.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அங்கே விறாந்தையில் அமர்ந்திருந்த தமையனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “சுவர்ணா வராட்டி என்ன, வாங்க நான் கூட்டிக்கொண்டு போறன்.” என்றாள் துளசி.
அவள் தமையனுக்காகச் சொல்ல, மாதவிக்கு அவள் தனக்காகச் சொல்கிறாள் என்று தோன்றிற்று. வாஞ்சையுடன் அவள் முகம் தடவி, “வேண்டாமாச்சி. அத்தானுக்கு நீங்க அங்க வாறது எல்லாம் பிடிக்காது. நான் சுவர்ணாவையே இன்னொருக்கா கூப்பிடுறன்.” என்று கைப்பேசியை எடுக்கப் போக, அவரைத் தடுத்தான் தூயவன்.
“நீங்க இருங்க சித்தி. நான் அவாக்கு எடுக்கிறன்.” என்று அவளுக்கு அழைத்து, அவன் கொடுத்த இரண்டு பேச்சில் அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றாள் சுவர்ணா.
“முந்தி அம்மா அம்மா எண்டு நெடுக வருவாய் பிள்ளை. இப்ப இந்த அம்மா கூப்பிட்டாலும் வாறாய் இல்லை என்ன?” என்று அவளிடம் கோபித்துக்கொண்டே புறப்பட்டுப் போனார் மாதவி.
*****
இப்படித் தாம் தவிர்த்தும் மாதவி வந்து நிற்பார் என்று அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், எப்போதுமே யாழிசை கடைசிப் பரீட்சசைகள் எழுதுகையில் அவளோடு அவர் கோவிலுக்குப் போவது வழமை என்பதில் பிழையாக நினைக்கவும் முடியவில்லை.
ஆனாலும், தூயவன்தான் அனுப்பிவிட்டானோ என்கிற சந்தேகம் கோகிலா, நளினிக்கு மட்டுமல்லாமல் யாழிசைக்குமே வந்தது. ஆனாலும், யாரும் யாரிடமும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.
நேசன் வேலைக்குப் போயிருக்க சுரபி எப்போதும்போல டியூஷன் போயிருந்தாள். “வெளிக்கிடுங்கோ அம்மாச்சி. இண்டைக்கு வெள்ளிக்கிழமை வேற. கோயிலுக்குப் போயிற்று ஓடி வருவம்.” என்று எதுவுமறியாத மாதவி யாழிசைக்குச் சொன்னார்.
அவள் என்ன சொல்வது என்று தெரியாத தயக்கத்துடன் அன்னையையும் அண்ணியையும் பார்த்தாள்.
வேகமாகச் சமாளித்த நளினி, “ஓம் மாமி, எல்லாருமா போயிட்டு வருவமன். போன கிழமை சுரபிக்குச் சுகமில்லாம வந்ததால நீங்களும் போகேல்ல எல்லா.” என்றாள் கோகிலாவை அர்த்தமாகப் பார்த்து.
மாதவிக்கு அது வித்தியாசமாகப் படாதபோதும் சுவர்ணா புருவங்களைச் சுருக்கினாள். அவர்கள் மூவரும் இயல்பாக இல்லாததுபோல் ஒரு தோற்றம். ஆனாலும், அதைப் பற்றி அவள் பெரிதாக யோசிக்கவில்லை. அங்கு என்ன நடந்தால்தான் தனக்கு என்ன என்று நினைத்தவள், “அப்ப எல்லாருமா கோயிலுக்குப் போயிற்று அப்பிடியே நீங்க பெரியம்மா வீட்டை போங்கோவன் அம்மா. நான் இப்பிடியே என்ர வீட்டை போறன்.” என்றாள்.
உடனேயே வீடு திரும்பும் எண்ணமில்லாத மாதவியும் சரி என்று அவளை அனுப்பி வைத்தார்.
பெண்கள் மூவரும் புறப்பட்டு முடிக்கையில் சுரபியும் டியூஷனிலிருந்து வந்துவிட அவளையும் சேர்த்துக்கொண்டனர்.
இப்படியான பொழுதுகளில் பெரியவர்கள் மூவரும் ஆட்டோவில் வர, யாழிசை சுரபியோடு ஸ்கூட்டியில் வருவாள். இந்தமுறை, “நீ ஆட்டோவில் ஏறு!” என்றுவிட்டு நளினி ஸ்கூட்டியை எடுக்க, அதுவே யாழிசையைக் காயப்படுத்திற்று.
ஆனாலும், ஒன்றும் சொல்லாமல் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.
கோயிலில் வீற்றிருந்த அன்னையையே பார்த்திருந்தாள் யாழிசை. அவள் உள்ளத்தில் பெரும் போராட்டம். முகம் சிவந்து கண்கள் கலங்கின. ஆனாலும், அழுதுவிட்டு கூடாது என்கிற பிடிவாதத்துடன் இரு கரம் கூப்பி, விழிகளை மூடிக்கொண்டவளின் உள்ளம், அந்தப் பராசக்தியிடம் தனக்கான ஆறுதலைத் தேடிற்று.
பெற்ற அன்னையே பிள்ளையைக் கலங்கவிட மாட்டாள். உலகாளும் அன்னை விடுவாளா என்ன? யாழிசையின் உள்ளமும் மெல்ல மெல்ல அமைதியாயிற்று.
“நீயா சொல்லிவிட்டனி?” திடீரென்று அவள் காதுக்குள் கேட்ட நளினியின் குரலில் திரும்பி, அவளைக் கேள்வியாகப் பார்த்தாள் யாழிசை.
“தூயவன் வாறார்.”
அவள் உள்ளம் துணுக்குற்றது. வேகமாகத் திரும்பி வாசலைப் பார்த்தாள். அந்த நொடியில் கோயிலுக்குள் வந்துகொண்டிருந்தவனின் பார்வையும் அவளில்தான்.
பார்வையாலேயே அவனைக் குற்றம் சாட்டியவள் நளினியிடம் திரும்பி, “என்னட்ட ஃபோன் இல்ல அண்ணி. வீட்டை விட்டு நான் வெளில போகவும் இலை. அப்பிடியே ஃபோன் இருந்தாலும் வெளில போயிருந்தாலும் எதுவும் சொல்லியிருக்க மாட்டன். முதல் நான் ஏன் அவரிட்டச் சொல்லோணும்?” என்று கேட்டாள் யாழிசை.
“பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. என்னை உன்னை நம்பத்தான் ஏலாம இருக்கு.” என்று நளினியும் விடாமல் சொல்லிவிட, சட்டென்று கன்னத்தில் வழிந்துவிட்ட கண்ணீரை துடைத்துக்கொண்டாள் யாழிசை.
எல்லாம் இவனால்! இவன் பார்த்த வேலையால் சொந்த வீட்டின் நம்பிக்கையை மொத்தமாகத் தொலைத்துவிட்டு நிற்கிறாள். இவன் எல்லாம் என்ன மனிதன்? அவனை வெறுப்புடன் நோக்கிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் யாழிசை.
அவள் பார்வையில் இருந்த குற்றச்சாட்டில் தூயவனின் உள்ளம் துணுக்குற்றது. அதைவிட, அவளின் கண்ணீர் நிரம்பிக் கிடந்த விழிகள் அவனைச் சஞ்சலம் கொள்ள வைத்தன. இந்த இரண்டு நாள்களுக்குள் அப்படி என்ன நடந்துவிட்டது? இல்லை, இன்னுமே அவள் அன்று நடந்ததிலிருந்து வெளிவரவில்லையா?
அதைவிட அவள் வீட்டினர் அவனைக் கண்டால் ஒதுங்கிப்போவது எப்போதும் நடப்பதுதான். இந்த முறை அவர்கள் முகம் மாறிப்போனது. அதுவும் அவனைக் கண்டுவிட்டு அங்கிருந்து புறப்படுவதற்குக் கோகிலா காட்டிய அவசரமும் புதிது.
அவன் கேள்வியாக மாதவியை ஏறிட, “என்னப்பு, நீங்களும் கோயிலுக்கு வருவீங்க எண்டு சொல்லவே இல்லையே.” என்றார் அவர்.
“வர இருக்கேல்ல சித்தி. ஐய்யாதான் அரிசி மூட்டைகளை இப்பவே கொண்டு வந்து இறக்கிவிடச் சொன்னவர். அதான் வந்தனான்.” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “ஓம் தம்பி. இறக்கி வச்சுவிட்டா அன்னதானத்துக்கு ஏற்ற மாதிரி நாங்க பிரிக்க ஆரம்பிச்சிடுவம்.” என்றுகொண்டு வந்தார் கோயில் ஐயா.
அவன் அந்த வேலையைப் பார்க்க, சுரபி அவனைப் படு பயங்கரமாக முறைத்துக்கொண்டிருந்தாள். அதுவும் இடறியது.
அப்போதைக்கு மாதவி மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரு வழி என்று தெரிய, “நீங்க போங்க ஐயா. நான் இப்ப வாறன்.” என்று அவரை அனுப்பிவிட்டு, “சித்தி, என்னோட வீட்டுக்கு வரப்போறீங்களா?” என்றான் மாதவியை நெருங்கியபடி.
யாழிசைக்கு கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. அவளின் ஒரு கை மாதவியின் பிடியில் இருந்ததில் அவளால் விலகவும் முடியவில்லை. தவிப்புடன் தாயையும் நளினியையும் பார்த்தாள்.
அதற்குள் வேகமாக வந்த நளினி, “என்ன தம்பி?” என்றாள் மெல்லிய கோபத்துடன்.
“என்ன என்ன? சித்தி வீட்டை வரப்போறாவா எண்டு கேட்டனான்.” என்றவனின் புருவங்கள் சுருங்கி, ‘உனக்கு இப்போது என்ன பிரச்சனை?’ என்பதுபோல் அவளைக் கேள்வியாக ஏறிட்டன.
நளினியும் தான் அவசரப்பட்டுவிட்டதை உணர்ந்து அமைதியானாள். கூடவே, யாழிசையின் திருமணம் முடியும் வரை எதைப் பற்றியும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கணவன் எச்சரித்ததும் நினைவில் வர, “நீங்க போறது எண்டா போங்க அக்கா.” என்றாள் மாதவியிடம்.
அவளுக்கு என்னவோ அவர்கள் வீடு இருக்கும் நிலையில் அவர் இப்படியே போய்விட்டால் பரவாயில்லை என்றுதான் இருந்தது.
மாதவிக்கு முகம் சுருங்கிப்போனது. “இண்டைக்கு உங்கட வீட்டை நிப்பம் எண்டு நினைச்சன்.” என்றார், அது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்கிற தொனியில்.
கோகிலாவுக்கு மாதவியின் முகத்தைப் பார்த்ததும் ஒரு மாதிரியாகிப்போனது. “அது அப்பிடி இல்ல மாதவி. உங்கட பெறா மகன் கேக்கவும்தான் நளினியும் அப்பிடிக் கேட்டவா. மற்றும்படி ஒண்டும் இல்ல. நீங்க வாங்க.” என்று கோகிலா ஒரு பக்கமும் நளினி இன்னொரு பக்கமும் என்று மாதவியைப் பிடித்துக்கொள்ள, விட்டால் போதும் என்று முன்னால் விரைந்தாள் யாழிசை.
அவள் நடையே அவள் ஏதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போலிருந்தது. புருவங்கள் சுருங்க அங்கேயே நின்று போகிறவர்களையே பார்த்திருந்தான் தூயவன்.
பெரியவர்கள் மூவரோடும் நடந்துகொண்டிருந்த துளசி திடீரென்று, “அச்சோ அம்மா, என்ர கால்சங்கிலி கழண்டு விழுந்திட்டுது.” என்று ஒற்றைக் காலைத் தூக்கிக் காட்டினாள்.
அதில் காற்சலங்கையைக் காணவில்லை என்றதும் இருந்த பதற்றத்தில் நளினிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
“ஒண்டுலயும் கவனமா இருந்திடாத நீ. இந்த முறையும் துலச்சியோ இனி உனக்குக் கால்சங்கிலியே இல்ல. போய்க் கோயிலுக்க பாத்துக்கொண்டு ஓடி வா!” என்று அவளை விரட்டிவிட்டாள்.
ஓடி வந்து சற்று முன் தானே கழற்றிவிட்ட காற்சலங்கையைப் பொறுக்கிக்கொண்டு, அங்கே நின்ற தூயவனிடம் ஓடி வந்து, “என்ர அத்தையோட இனி நீங்க கதைக்கக் கூடாது. கதைச்சீங்களோ கல்லால எறிஞ்சு உங்கட மண்டையை உடைப்பன்!” என்று விரல் நீட்டி மிரட்டினாள்.
ஒரு நொடி திகைத்தாலும் அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு. “சரி, இனி நான் உங்கட அத்தையோட ஒண்டும் கதைக்கேல்ல. ஆனா… வீட்டில பிரச்சினையா?” என்று மெல்ல விடயத்தைப் பிடுங்க முயன்றான்.
“ஓம், அண்டைக்கு நீங்க அங்க வந்ததக் கேட்டு அம்மம்மா அத்தைக்கு அடிச்சவா. அம்மா எனக்கும் அடிச்சவா. அத்தையின்ர ஃபோன அப்பா பறிச்சு வச்சிட்டார். ஒருத்தரும் இப்ப அத்தையோட கதைக்கிறேல்ல. எல்லாம் உங்களால. இனியும் அத்தேட்ட வந்து கதைச்சா உங்கட வீட்டை நானே வந்து சொல்லிக் குடுத்து உங்களுக்கும் அடி வாங்கித் தருவன். கவனமா இருங்க!” என்று அப்போதும் அவனைப் பயமுறுத்திவிட்டு அவள் ஓட முயல, “சுரபி, ஒரு நிமிசம்.” என்று வேகமாக அவளைத் தடுத்தான் அவன்.
“ப்ளீஸ்மா, ஒரேயொரு குட்டி ஹெல்ப் மட்டும் செய்வீங்களா?” என்றான் கெஞ்சலாக.
“என்ன?”
“இப்ப எதைப்பற்றியும் யோசிக்காம எக்ஸாம எழுதட்டாம் எண்டு உங்கட அத்தேட்ட சொல்லி விடுங்கோ. அப்பிடியே நான் ஆரிட்டயும் எதப் பற்றியும் கதைக்கேல்லையாம் எண்டும் சொல்லிவிடுங்கோ. போதும்.” என்றான் அவன்.
“ம்ம்!” என்று அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓடிப்போனாள் அவள்.

