ஆனால், கருணாகரன் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார். அவர் நடவடிக்கைகளில் சின்னதாகவேனும் அவனால் சந்தேகம் கொள்ள முடியவேயில்லை. இன்னுமே குழம்பிப்போனான்.
அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவனால் ஊகிக்கவே முடியவில்லை. தந்தையைத் தேவையில்லாமல் சந்தேகப் படுகிறோமோ என்று அது வேறு உறுத்தியது.
ஒரு வழியாக அடுத்த இரண்டு வாரங்களும் எப்படியோ ஓடி மறைந்திருந்தன. அன்று யாழிசை ஊருக்குத் திரும்பும் நாள். மாதவியின் வாயைப் பிடுங்கியதில் மூன்று மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவாளாம் என்று அறிந்திருந்தான்.
பஸ் நிலையத்துக்கே சென்று அவளை ஒரு முறை பார்த்துக்கொண்டு வரலாமா என்று அன்று முழுக்க நிறையத் தடவைகள் யோசித்துவிட்டான். ஆனாலும் போகவில்லை. திரும்ப திரும்ப அவளைச் சங்கடமான சூழ்நிலையில் நிறுத்த வேண்டாம் என்று நினைத்தான்.
இனி அவன் காத்திருக்கப் போவதில்லை. காத்திருக்க அவனால் முடியவும் முடியாது. வீட்டில் அந்தளவில் தேவகியும் மாதவியும் அவன் திருமணத்திற்காக அவனை நச்சரிக்க ஆரம்பித்திருந்தனர்.
அவள் கோபப்பட்டாலும் பரவாயில்லை நேராக அவர்கள் வீட்டுக்கே சென்று பெண் கேட்டுவிடுவது என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.
நேரம் மாலை ஆறினைத் தாண்டியிருந்தது. தென்னந்தோப்பில் வேலைகளை முடித்துக்கொண்டு, அங்கேயே குளித்து உடையையும் மாற்றிக்கொண்டு, தலையை ஒற்றைக் கையால் சிலுப்பி விட்டபடியே பைக்கின் திறப்பை எடுத்துக்கொண்டு பைக்கை நோக்கி அவன் வர, நேசனின் பைக் தோப்பினுள் மிக வேகமாக நுழைந்தது. அவன் பின்னால் கோகிலா அம்மா.
ஒரு கணம் நடை நிற்க அவன் புருவங்கள் சுருங்கின. கண்களில் கேள்வியோடு அவர்களை நோக்கி நடந்தான். இரண்டு எட்டிலேயே அவனிடம் வந்து, “எங்கயடா என்ர தங்கச்சி? சொல்லு, அவளை எங்க கொண்டுபோய் வச்சிருக்கிறாய்?” என்று அவன் சட்டையைப் பற்றி உலுக்கினான் நேசன்.
தூயவன் அதிர்ந்துபோனான். அவர்கள் இருவரிடமும் பார்வை மாறி மாறிச் சென்று வர, “என்ன சொல்லுறீங்க? இசை எங்க? இந்த நேரத்துக்கு அவள் வீட்டுக்கு வந்திருக்கோணுமே?” என்றான் அவனும் பதற்றம் தொற்றிக்கொள்ள.
“நான் சொன்னன் பாத்தீங்களாம்மா? இவன்தான் கடத்தியிருக்கிறான். இல்லாம இவனுக்கு எப்பிடித் தெரியும் அவள் வாற நேரமெல்லாம்?” என்று அன்னையிடம் சொன்னவன், “உனக்கு அப்பிடி என்னடா பாவம் செய்தனாங்க? ஏன் எங்களைப் போட்டு இந்தப் பாடு படுத்திறாய்?” என்று அவனைப் போட்டு இன்னும் உலுக்கினான்.
தனக்கு எதுவுமே தெரியாது என்று அவன் சொல்வதை அவர்கள் நம்புவதாகவே இல்லை.
“தம்பி, என்ன கோவம் எண்டாலும் ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடாதீங்கப்பு. எங்களிட்ட மிச்சமா இருக்கிறது மானம் ஒண்டுதான். உங்களக் கும்பிட்டுக் கேக்கிறன், கலியாணத்துக்கு நிக்கிற என்ர பிள்ளையைத் தந்திடுங்கப்பு.” என்று அழுதார் கோகிலா.
அவனுக்கும் வலித்தது. எங்கே இருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ என்று அவளை எண்ணி பரிதவித்தான். இதில் இவர் வேறு! “என்னம்மா கதைக்கிறீங்க? அண்டைக்கு கோயில்ல வச்சுப் பாத்ததுக்குப் பிறகு அவளை நான் பாக்கவே இல்ல. முதல் அவளுக்கு இண்டைக்குத்தானே எக்ஸாம் முடிஞ்சது. அங்க இருந்து வெளிக்கிட்டாளா எண்டு வடிவா விசாரிச்சனீங்களா?” என்றான் கோகிலாவிடம்.
“அதெல்லாம் உனக்கு எப்பிடித் தெரியும்? முதல் இதையெல்லாம் நீ ஏனடா தெரிஞ்சு வச்சிருக்கிறாய்? அதுதான் உன்னைப் பிடிக்கேல்ல எண்டு அவளே சொல்லிட்டாள் எல்லா. பிறகும் என்னத்துக்கடா அவளுக்குப் பின்னால அலையிறாய்?” என்று திரும்பவும் அவன் சட்டையைப் பிடிக்க வந்தான் நேசன்.
அவனை விட வேகமாக அவன் கையைத் தட்டிவிட்ட தூயவன், “ஏன் எண்டால் அவள் என்ர இசை. இந்தத் தூயவன்ர இசை. அவளுக்குப் பின்னால நான் திரியாம வேற எவன் திரிவான்?” என்று சீறினான்.
கோகிலா அம்மா அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டார். மகள் சொன்னபோது கோபம்தான் வந்தது. அதையே இவன் சொன்னபோது பயம் வந்தது.
நேசனுமே இப்படித் தன் முகத்துக்கு நேராகவே தைரியமாகச் சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்டான்.
“அப்ப நீதான் கடத்தி வச்சிருக்கிறாய். அவள் மாட்டன் எண்டு சொன்ன கோபத்தில அவளைக் கடத்தி, கேவலப்படுத்தி, அதுக்குப் பிறகு உன்ர ஆசைய நிறைவேத்தப் பாக்கிறியாடா? அந்தளவுக்கு என்னடா பாவம் செய்தனாங்க உனக்கு? மனுசனாடா நீ?” என்று திரும்பவும் சண்டைக்கு வந்தவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் தூயவன்.
“கொஞ்சம் நிதானமா இருங்க நேசன். உங்களோட சண்டை பிடிக்கக் கூடாது எண்டு இசை சொல்லியிருக்கிறாள். அதாலதான் பொறுமையா இருக்கிறன். எல்லாத்துக்கும் முதல் வாங்க போய் அவளைத் தேடுவம்.” என்றவன் அவளைப் பற்றிக் கோகிலா அம்மாவிடம் விசாரித்தான்.
அன்று காலை, பதினோரு மணியளவிலேயே அவளுக்குக் கடைசிப் பரீட்சை முடிந்திருக்கிறது. அப்போதே பேருந்து நிலையத்துக்குப் போகப் போவதாகவும், மூன்று மணியளவில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சொல்லியிருக்கிறாள். அரை மணி நேரம் கழித்து இவர்கள் அழைத்துக் கேட்டபோது, பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டதாகவும் பேரூந்துக்காகக் காத்திருப்பதாகவும் சொல்லி வைத்திருக்கிறாள்.
அதுதான் அவர்கள் அவளோடு கடைசியாகப் பேசியது.
“அதுக்குப் பிறகு பஸ் ஏறிட்டாளா எண்டு கோல் பண்ணி கேக்கேல்லையா நீங்க?”
“எப்பவும் அவாவே பஸ் வெளிக்கிட்டதும் ‘பஸ் வெளிக்கிட்டுட்டுது’ எண்டு மெசேஜ் போடுறவா. இண்டைக்கு அது வரேல்லை எண்டதும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்திட்டு கோல் பண்ணினனாங்க. ஆனா, ஃபோன் ஓஃப் ல இருந்தது.”
“அப்ப அப்பவே என்ன எண்டு பாத்திருக்க வேண்டாமா நீங்க?” என்று சீறினான். இவ்வளவு நேரமாக அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு இப்போது வந்து அவன் சட்டையைப் பிடிப்பார்களா என்கிற கோபம் அவனுக்கு.
“அவான்ர ஃபோனுக்கு பற்றி வீக்காகிட்டுது. அதால அடிக்கடி சார்ஜ் போயிடும். அப்பிடி சார்ஜ் போயிட்டுது போல எண்டு நினைச்சம்.” அதைச் சொல்லும்போதே அவருக்கு அழுகை வந்தது. எப்படி, எங்கே மாட்டிக்கொண்டு ஒரு தகவல் கூடச் சொல்ல முடியாமல் துடிக்கிறாளோ தெரியாதே.
அவன் உள்ளமும் அதை எண்ணித்தான் அடித்துக்கொண்டது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “பயப்பிடாதீங்கம்மா. அவளுக்கு ஒண்டும் நடக்காது. நடக்க விடமாட்டன்.” என்றுவிட்டு வேகமாக பைக்கை நோக்கி நடந்தவன் நின்று, “அண்டைக்கு ஆரு வந்து உங்களிட்ட எங்களைப் பற்றிச் சொன்னது?” என்று நேசனை பார்த்துக் கேட்டான்.
“உன்னோட என்ர தங்கச்சியச் சேர்த்து வச்சுக் கதைக்காத!” என்றான் நேசன் பட்டென்று. அவனுக்கு இன்னுமே தூயவன் மீதான சந்தேகம் போகவில்லை.
“நான் மட்டுமில்லை. நீங்களா இருந்தாலும் அவளை என்னோட மட்டும்தான் சேத்து வச்சுக் கதைக்கோணும். வேற எவனோடயும் சேர்க்க நான் விடமாட்டன்.” என்றான் அவனும் விடாமல்.
“அதையும் பாப்பம். நீங்க வாங்கம்மா! நாங்க போலீசுக்கே போவம். அப்ப உண்மை வெளில வரும்தானே.” என்று நேசனும் பைக்கை எடுக்கப் போக, “கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லிப்போட்டுப் போங்க!” என்றான் தூயவன்.
“வேற ஆர்? உன்ர சொந்தக்காரர் அந்தச் சண்முகம்தான் வந்து தேவை இல்லாமக் கதைச்சவர்.” என்றதும் பைக்கை வளைத்துத் திருப்பப் போனவன் அப்படியே நின்றுவிட்டான்.
அவர் உறவுக்காரன் என்பதை விட அவன் அப்பாவுக்கு மிக மிக நெருக்கமானவர்.
“நீங்க சும்மா சொல்லேல்லையே?” என்றான் நம்ப முடியாமல்.
“நீ என்ன லூசாடா? கூடப்பிறந்தவளைத் துலச்சுப்போட்டு நிக்கிறன். இதுல நான் உன்னோட விளையாடிக்கொண்டு இருப்பனா?” என்று கேட்டுவிட்டுப் போனான் அவன்.
விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்த தூயவன், அடுத்த நொடியே வீடு நோக்கி பைக்கை விரட்டினான்.

