அத்தியாயம் 7-2

 இதுவரை என்னில் அவர் கை வைத்ததில்லை என்று நான் எண்ணுவதும் இல்லாது போய்விட்டது. முதுகு சுள்ளென்று எரிந்தது

  “அம்மா உங்களுக்கு என்ன விசரே!” 

  கத்திக்கொண்டு இடையிட்ட கவியின் கன்னத்திலும் பளார் பளார் என்று இழுத்தார் சித்தி.

   இது எங்களில உள்ள கோபமா? புனிதம்  ஆன்ட்டிக்கா?

 “அப்பனில்லாம மூணு பெட்டைகளை வச்சுக் கொண்டு நான் படுற பாடு எனக்குத் தானே தெரியும்? ஒத்த சதத்துக்குப் பிரயோசனம் இல்லாதுகள் எல்லாம் வியாக்கியானம் கதைக்க மட்டும் எங்க இருந்துதான் வருவீனமோ!” 

  வார்த்தைகள் மட்டுமின்றி நெருப்புப் பார்வை பார்த்தார் சித்தி, புனிதம்  ஆன்ட்டியைத்தான்.

  அவரோ, அசரவும் இல்லை; அசையவும் இல்லை.

  “உன்ர அம்மாக்கு விசர் முத்தீட்டுக் கவி!” அவரும் விடுவதாக இல்லை

  “இப்படியெல்லாம் செய்தோன்ன நான் அமைதியாப் போயிருவன் எண்டு மட்டும் நினைக்காத ராஜம். நீ தலைகீழா நிண்டாலும் இந்தக் கலியாணம் நடக்காது. உதயாவின்ட மாமா ஆக்கள், சொந்தபந்தம் எல்லாரையும்  கூப்பிட்டு நியாயம் கேட்கிறன், பொறு!” சளைக்காது கத்தினார்.

  எங்கள் அயல் முழுவதும் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்

  இனியும் நான் அமைதியாக இருந்து பயனில்லை. சித்தியும் அத்தனை சுலபத்தில் பின்வாங்க மாட்டார். வீணாக அடிவாங்கிப் புண்ணாகப் போவது என் தங்கைகள் தான்கடைசியில், சித்தி தான் நினைத்ததைச் செய்து முடிக்கப் போறார்

  சொந்தமும் பந்தமும் வந்து அப்படி என்ன பெரிசா நடக்கப் போகுது? அவர்கள் விசயத்தில் சித்தி சொல்வதில் துளியும் பிழை இல்லை. தம் தலைமீது சுமை விழுந்துவிட்டாலும் என்று ஒதுங்கத் தொடங்கிப் பலகாலம் ஆகிற்றே! அம்மா போனதோடு அந்தத் தொடர்புகளும் விலகிப் போயிற்று!

  “புனிதம்  ஆன்ட்டி…” விரைந்து நகர்ந்து அவர் கரங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.

   “ஐயோ கடவுளே! தயவு செய்து ஒண்ணும் கதைக்க வேணாம் ஆன்ட்டி. நீங்க பேசாம வாங்களன்.” 

  அவரை இழுத்தபடி வெளி வாயில்  நோக்கி நகர, பட்டென்று கரங்களை உதறிக்கொண்டு என்னை முறைத்தார் அவர்.

  “அப்ப உனக்கு இந்தக் கலியாணத்தில சம்மதமா உதயா? அவனக் கட்டிச் சந்தோசமாக் குடும்பம் நடத்த முடியும் எண்டு நினைக்கிறியா நீ? அவன் செத்துப் போன தன்ர காதலிய நினைச்சுக்கொண்டு திரியிறது இந்த ஊருக்கே தெரியும். அப்படிப்பட்டவனோட…” 

  கோபத்தில் அடிக்குரலில் சீறியவரை இடையிட்டு நிறுத்தியது  சித்தியின் சீறல்.

  “என்ர  தம்பியை அவன் இவன் எண்டு சொல்லுற வேலை வச்சுக்கொள்ள வேணாம் அக்கா; பிறகு நானும் கதைச்சா உங்களுக்குத்தான் பரிசிக்கேடு!” கைநீட்டி எச்சரித்தார்.

 சட்டென்று இடையிட்டேன் நான்

  “ப்ளீஸ் ஆன்ட்டி, நீங்க முதல் வாங்க, உங்கட வீட்டில போய்க் கதைக்கலாம்.” 

  மீண்டும் அவர் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு கேட் நோக்கி நடந்தேன்.

   இப்போது என் இயலாமை கோபமாக உருவெடுத்திருந்தது. தெருவே வேடிக்கை பார்க்கின்றது

  புனிதம்  ஆன்ட்டியோ நகர மறுத்தார். என் கரங்களை மீண்டும் உதறிவிட்டு, “இங்க பார் ராஜம்…” என்று சித்தியிடமே திரும்பினார்.

   “ஐயோ! இந்த மனிசிக்கு என்ன விசரே! உங்கட வீட்டு விசயங்களில நாங்க யாராவது வந்து தலையிடுறமா? என்ன சாரதாக்கா பார்த்துக்கொண்டு நிக்கிறீங்க? நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கோ பார்ப்பம்.” அழுதபடி, பின் வீட்டு ஆன்ட்டியைத் துணைக்கழைத்தார் சித்தி.

   அந்த ஆன்ட்டிக்கோ, புனிதம்  ஆன்ட்டி பரம எதிரி. அது ஒரு எல்லைச் சண்டையிலிருந்து தொடங்கியது. இத்தனைக்கும் அவர் இருப்பது, வெளிநாட்டிலிருக்கும் அவரின் உறவினர் வீட்டில்; ‘இந்த வீட்டில கனவருசங்களா (பலவருடங்கள்) இருந்திட்டன், முடிஞ்சா வந்து எழுப்பிப் பார்!’ என்ற சவாலோடு

   சித்தி அப்படிச் சொன்னதும் இதுதான் சாட்டென்று வெளிவாயிலைத் திறந்துகொண்டு விடுவிடுவென்று உள்ளிட்டார் சாரதா ஆன்ட்டி.

  “போதும் போதும் புனிதம்  ஆன்ட்டி! இங்க பாருங்கோ, நான் ஒண்ணும் சின்னப்பிள்ள இல்ல. நான் சம்மதம் சொல்லித்தான் எல்லாம் நடக்குது எண்ட பிறகும் இந்தப் பிரச்சனை வீண் தானே? நீங்க முதல் உங்கட வீட்ட போங்கோ!” 

  அவரை அப்படியே பிடித்து இழுத்துக்கொண்டு நடந்த என்னுள் அப்படி ஒரு ஆவேசம்

  என் வாழ்க்கை இப்படித் தெருவே நின்று வேடிக்கை பார்த்தபடி பேசி முடிவெடுக்கும் நிலைக்குத்  தாழ்ந்து போனதே!

  கோபம் கோபமாக வந்தது. சத்தியமாக என்னில் மட்டுமே. இன்று இக்கணம்ச்சேஇந்தப் பிறப்பு எதுக்கு?’ என்றே எண்ணத் தோன்றிற்று.

  என்னைத் தனியாகத் தவிக்க விட்டுப் போன அம்மாவில், அப்பாவில் எல்லாம் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

  என்னையே அதிர்ந்து போய்ப் பார்த்தார் புனிதம்  ஆன்ட்டி

  அவரை வெளியில் கொண்டு போய் நிறுத்திய பின்னரே கரங்களை விட்டிருந்தேன். மூச்சும் விட்டேன்.

   “உதயா!”

   “ஐயோ ஆன்ட்டி! நீங்க ஒண்டுமே சொல்ல வேணாம். இப்ப வீட்ட  போங்கோ, பிறகு கதைக்கலாம். அதுவும் இந்தக் கலியாணக் கதை எதுவுமே இனி வேணாம்.” 

 நான் சொல்லி முடிக்கவில்லை, சாரதா ஆன்ட்டியின் எகத்தாளக் குரல் இடையிட்டது.

  “அடஅப்படிச் சொல்லு உதயா! இப்பச்சரி சில மனிசருக்கு உறைக்குதா பார்ப்பம்

   கொஞ்சம் சரி வெட்கம் மானம் இல்லாம இனியும் வாய் திறக்க முடியுமா என்ன? யாரைக் காப்பாத்திறன் எண்டு வந்தாவோ அவளே வெளியில இழுத்துத் தள்ளிவிட்டாள். இதுக்கும் பிறகு அவளைப் பாதுகாக்கிறன் அது இது எண்டு என்ன முகத்தை வச்சிக்கொண்டு இங்க வருவீனமாம்

  நீ பேசாமக் கலியாண அலுவலப் பார் ராஜம்! பெரிசா நியாயம் கேட்டு வாற இவையளா உன்ர பெட்டையளுக்குக் கலியாணம் செய்து வைக்கப் போகீனம்? சும்மா படம் காட்டுறது!” சந்தில சிந்து பாடினார் அவர்.

   கன்றிச் சிறுத்துப் போன முகத்தோடு என்னைப் பார்த்தார் புனிதம் ஆன்ட்டி

  எனக்குத் தெரிந்த நாளிலிருந்து தாய் போன்ற அரவணைப்பைத் தந்தவரை நிச்சயம் அவமானப்படுத்திவிட்டேன் என்று புரிந்தாலும், அக்கணம், எனக்கு வேறு வழி தெரியவில்லை.

   அடிவாங்கிய பார்வையோடு நின்றார் ஆன்ட்டி. என்னுள்ளம் வேதனையில் பிசைந்தது.  

   “ப்ளீஸ் ஆன்ட்டி, என்னில கோபிக்க வேணாம்.”

  என் குரலே என் வேதனையை அவருக்கு உணர்த்தியிருக்கும்

   “வீண் பிரச்சனை ஏன் எண்டுதான் உங்களப் போகச் சொன்னன். இந்தக் கதைய இதோட விட்டிருங்கோ! நீங்க எனக்காகக் கதைக்க நான் உங்கள அவமரியாதை செய்யிறன் எண்டு மட்டும் நினைச்சிப் போடாதீங்க! உங்கள நான்என்ர அம்மா போலத்தான் பார்க்கிறனான். அந்த உரிமையிலதான்…” 

  நான் கண்ணீரோடு கெஞ்சியதைக் கேட்க அவர் அங்கு நிற்கவில்லை

 “உன்ர அம்மாட முகத்துக்காகப் பார்த்தன். நீயே இப்படிச் சொல்லேக்க இனி எனக்கென்ன?” போகிற போக்கில் சொல்லிவிட்டே சென்றார்.

  “போ! போ! உன்ர அதிகாரத்தை உன்ர வீட்டோட வச்சிரு!” சற்றும் மரியாதை இன்றி உரத்துச் சொன்னார் சித்தி.

  “ஆன்ட்டி…” பின்னால் இரண்டடி எடுத்து வைத்துவிட்டு நின்று விட்டேன். ‘இப்பவே வேணாம்; பிறகு சமாதானம் செய்வம்.’ என்னுள் சொல்லிக்கொண்டே வீடு நோக்கித் திரும்பிய என் விழிகள் ஓரிடத்தில் நிலைத்து நின்றன

   மிகச் சிறு பொழுதுதான். என்னைக் கூர்மையாகத் தாக்கியது சூர்யாவின் பார்வை. உள்ளே நடுக்கமும் எடுத்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கவே மோட்டார் சைக்கிளைத் திருப்பி வேகமெடுத்துச் சென்று மறைந்தார் அவர்.

 

error: Alert: Content selection is disabled!!