“கராஜுக்கு வெளிக்கிட்டாச்சா தம்பி?” அம்மா.
“ம்ம்…” என்றுவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு நகர, “மத்தியானம் சாப்பிட வருவ தானே?” பின்னால் வந்தார்.
நான் எவ்வளவுதான் முகம் திருப்பினாலும் எதுவுமே நடவாதது போல இப்படித்தான் வந்து வந்து கதைக்கின்றார். கதைப்பார் தானே? அவர் நினைத்தது எல்லாம் நடக்கின்றதே!
“அது சொல்ல ஏலாது; நேரமிருந்தாப் பாப்பம்.” அசைட்டையாகச் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறியமர்ந்தேன்.
அப்போதும் கவனமாக அவரின் முகம் பாராது தவிர்த்தேன்.
அவரோ விடவில்லை. “இங்க பார் தம்பி!” அவரைப் பார்க்க வைத்தார்.
“என்ன?”
“இல்ல…இந்த மாதச்சீட்டு ராஜத்துக்குத்தானே? காசு சேர்ந்திட்டு.” கையில் வைத்திருந்த நீள உறையை நீட்டினார். கேள்வியாகப் பார்த்தேன்.
“ராஜம் வீட்டில இந்தக் காசைக் குடுத்திட்டுப் போவன்!”
என் கையில் பணத்தை வைக்க முயன்றார், வாங்கவில்லை நான்.
“இல்ல, எனக்கு அவசரமாப் போக வேணும்; வேற வேல இருக்கு; நீங்க கொண்டுபோய்க் குடுங்கோவன்; இல்லையோ, தங்கச்சிட்டக் குடுத்துவிடுங்கோ!” மறுத்துவிட்டு மோட்டாரை இயக்கினேன்.
“என்ன அவசரமான வேலை என்டாலும் உன்ர கராஜில தானே? போற வழியில இதப் பெரியக்காட்டக் குடுத்திட்டுப் போக எவ்வளவு நேரம் செல்லும் சூர்யா?”
விடாது பிடிவாதமாகச் சொன்னவரை முறைத்தேன்.
“முடியாது எண்டால் முடியாதம்மா!” வெடுக்கென்று சொன்னேன்.
“இங்க எங்களுக்குத் தலைக்கு மேல கலியாண வேலை குவிஞ்சு கிடக்குத் தம்பி.
அதோட, இன்னும் நாலு நாளில வெளிநாட்டில இருந்து பிள்ளைகள் வருகீனம். உன்ர கலியாணத்துக்கு எண்டு அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு வாற பிள்ளைகள வடிவாக் கவனிக்க வேணாமா சொல்லு?
நிக்க இருக்க நேரமில்லாமத் திரியிறம், இது ஒரு சின்ன உதவி தானே? செய்தால் என்ன ராசா!” படபடத்தவர் கெஞ்சலோடு முடித்தார்.
இயக்கிய மோட்டாரை நிறுத்திவிட்டு அம்மாவை நேராகப் பார்த்தேன்.
“இங்க பாருங்கம்மா, உங்கட மூத்தமகள் வீட்ட போக எனக்கு விருப்பம் இல்ல! இதை எத்தனையோ தடவைகள் சொல்லியாச்சு, உங்கட காதில விழவே இல்லயா?
அதோட, இப்ப எனக்குக் கலியாணம் செய்து வையுங்க என்றேனா என்ன?
அதிலும், வெளிநாட்டில இருந்து சின்னக்காவையும் பெரிய தங்கச்சியையும் நானா வரச் சொன்னன்?
கண்டறியாத கலியாணம் எண்டு எடுத்துப் பிடிக்கவும் சொல்லேல்ல. அப்பிடி இருக்கேக்க, தலைக்கு மேல வேலை அப்பிடி இப்பிடியெல்லாம் என்னட்டக் கதைக்க வேணாம் சொல்லீட்டன்.”
மனத்தில் கனன்று கிடந்த கோபப்பொறிகள் என் வார்த்தைகளில் தெறித்தன.
“இங்க பார் சூர்யா, திரும்ப முதலில இருந்து தொடங்காத!” எப்போதும் போலவே குரலை உயர்த்தினார் அம்மா.
“ஓம், எங்கட விருப்பத்துக்கே தான் கலியாணம் செய்து வைக்க நினைக்கிறம். கண்ணுக்கு முன்னால நீ அழிஞ்சு போறன் எண்டு நிண்டா பார்த்துக்கொண்டா இருக்க முடியும்?
அதோட, உனக்கு ராஜத்தில விருப்பம் இல்லாமலும் இருக்கட்டும். அதெல்லாம் வேற கதை. இப்ப எனக்கும் உன்ர தங்கச்சிக்கும் வேற வேல கிடக்கு. இந்தக் காசை அவேட வீட்டில…கவி, தீபிட்டையோ இல்லாட்டி உன்ர பெஞ்சாதியிட்டையோ குடுத்திட்டு கராஜூக்குப் போவன்!”
நீளமாகச் சிடுசிடுத்தபடி என் கரங்களில் அந்த உறையைத் திணித்துவிட்டு விறுவிறுவென்று வீட்டினுள் சென்று மறைந்துவிட்டார்.
‘பெஞ்சாதியா?’ மனம் சற்றும் சசிக்க முடியாது கோணிப் போயிற்று!
கையிலிருந்த உறையையும் அவர் சென்ற திசையும் பார்த்த என்னுள் சுறுசுறுவென்று கோபமேறியது. இருந்தும் என்ன பயன்?
அத்தனையையும் மோட்டார் சைக்கிளை உதைப்பதில் காட்டினேன்.
நான் விரும்பியவள் இனி இல்லவேயில்லை என்ற வேதனையில் மதுவை நாடி, அதில் அப்படியே அமிழ்ந்து கிடந்த போது கூட இந்தளவு சிரமம் இருக்கவில்லை என்பேன். வீட்டினரும் அதிர்விலும் சோகத்திலும் தானே இருந்தார்கள். இப்போதோ…
நாள் நெருங்க நெருங்க இந்தக் கலியாணத்தைத் துளியும் சகிக்க முடியவில்லை. அது தொடர்பாக வீட்டில் நடக்கும் தடல் புடல்களைப் பார்த்திருக்கவும் முடியவில்லை.
‘உன்ர கலியாணமா? என்ர உயிரா?’ என்று என்னை இக்கட்டில் நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நடத்துகிறார் அம்மா. பற்களை நறநறத்துக் கொண்டேன்.
“ஆஆ…” நறுக்கென்று என் நாக்கைக் கடித்து விட்டேன்.
‘இப்பிடி என்னைப் போலவே ஒரு இக்கட்டில் தான் உதயாவும் சம்மதம் சொல்லி இருப்பாளோ! பெரியக்கா செய்யக் கூடியவர்!’
இப்பவெல்லாம் அடிக்கடி இந்த எண்ணம் தான். அதுவும் கல்யாணம் நெருங்க நெருங்க அளவு கணக்கில்லாமல் கூடிக்கொண்டே போகுது.
‘இதை எழுத்து நடக்க முதல் எல்லா நினைச்சிருக்க வேணும்?’ என்ற கேள்வி வருமே! என்னுள்ளேயும் உண்டு.
உண்மைதான்! ‘உனக்கு இவளுடன் கலியாணம்’ என்ற பேச்செடுத்ததும் ‘இன்னுமொரு பெண்ணுடன் கல்யாணம் என்ற ஒரு பந்தத்தை’ ஏற்க முடியாது திணறினேன். அதேநேரம், அதிலிருந்து தப்ப வழிதேடினேனே ஒழிய உதயா பற்றி எண்ணவில்லை. அப்படியிருக்கச் சில தினங்களில் எல்லாம் முடிந்திருந்ததே!
எழுத்து நடந்து முடிந்த பிறகே அந்தப் பக்கம் பற்றி எண்ண வைக்கிறது. அதுவும் அடிக்கடிச் செவிகளில் விழும் ‘உன்ர பெஞ்சாதி’ என்ற சொல்லால்.
நான் கேட்காமலேயே, ‘அந்தப் பிள்ள உன்ன விரும்பித் தலையாட்டி இருக்கு சூர்யா; நீயும் அதுக்கு ஏற்ப ஒழுங்கா இருக்க வேணாமா?’ ஓயாது சொல்வார் அம்மா.
அதை அப்படியே நம்பிவிடும் அளவுக்கு எனக்குகொன்றும் புத்தி பேதழித்துவிடவில்லை!
அதோடு, எழுத்து முடிந்த பிறகு முதல் முதல் கராஜுக்கு போய்விட்டுக் குடிபோதையில் வீட்ட வந்த போது, ‘உதயாவுக்கு நீங்க செய்யிறது பெரும் பாவம்’ என்று, சின்னத்தங்கச்சி சொன்னது எனக்கு நல்லாவே கேட்டிச்சு. குடிச்சிருந்தா காதுகள் செவிடாகுமா என்ன?