“என்னடி குரல் உயருது?” என்ற சித்தி, நம்பமுடியாது என்னைப் பார்த்தார்.
“பின்ன என்ன? தொட்டதுக்கும் அவளவயப் (அவர்களை) போட்டு அடிக்கிறீங்க? இந்த வீட்டில அப்பா இருக்கேக்கயும் சரி இப்பவும் நீங்க வச்சதுதானே சட்டம்? பிறகு எந்தநேரமும் அறம் கொட்டிக்கொண்டு, அடிச்சு, கத்திக் குளறி எண்டு என்ன இதெல்லாம்?
அவளவை என்ன சின்னப்பிள்ளைகளா? பிழை செய்த பிள்ளைகளைத் தண்டிச்சாலும் பரவாயில்ல. உங்களுக்கு என்ன பிரச்சினை எண்டாலும் ஓடி வந்து ரெண்டு அறை விடுறது…
இங்க பாருங்க சித்தி, இனி ஒருதரம் இவையள் ரெண்டு பேரிலும் கைவச்சா நான் என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது.
இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை? விசர்ப் பிடிச்சிட்டா என்ன? கலியாணம் செய்யேல்லையோ இந்தாச் செத்துப் போறன் எண்டீங்க. யாரு எவன் எண்டு தெரியாமலே தலையாட்டினன் தானே?
பிறகு என்ன தான் பிரச்சினை? எழுத்தும் முடிஞ்சிட்டு. உங்கட தம்பிக்கு ஏதாவது பிரச்சினை எண்டா அங்க போய்க் கதையுங்க; இங்க கத்தாதீங்க!
அயலட்டம் எல்லாம் எங்கள என்ன நினைக்கும்? நாளைக்கு நாங்க வெளியில போறதில்லையா?”
கடகடவென்று உறுமிக் கொண்டு வந்த நான் தங்கைகளும் சித்தியும் என்னைப் பார்த்து மிரண்டு போனதும் தான் கத்துவதையே உணர்ந்து கொண்டேன்.
தொப்பென்று மீண்டும் அமர்ந்துவிட்டேன்.
‘இப்ப எனக்கு என்ன ஆயிற்று? எனக்குத்தான் பைத்தியமோ!’
சித்தியைப் பார்த்தேன். அதிர்ந்து போய் நின்றிருந்தார்.
“ச்சே!” எழுந்து விறுவிறுவென்று வெளியேறி கிணற்றடியில் உள்ள சிறு தண்ணித் தொட்டியின் விளிம்பில் சென்றமர்ந்து கொண்டேன்.
பின்னால் ஓடிவந்தார்கள் தீபியும் கவியும். எனக்கு அருகில் அமர்ந்தவர்கள் “அக்கா!” கட்டிப் பிடித்து அழுதார்கள். நானும் மனம் விட்டு அழுதேன்.
ஏன்? எல்லாவற்றுக்குமாக…
ஆனால், அதன் பிறகு என் மனம் ஒரு நிலைக்கு வந்துவிட்டது என்றே சொல்வேன். எதையும் எதிர்கொள்ளத் தயார் என்ற நிலையில். பார்ப்போமே!
சித்தியும் ஒத்தவார்த்தை கதைக்கவில்லை. ‘எனக்கே வாய்காட்டும் அளவுக்கு வந்திட்டியா?’ அப்படி இப்படி நிறையக் கதைப்பார், பிரச்சனை வளர்ப்பார் என்றும் எதிர்பார்த்தேன். அவரோ, அடுத்துவந்த தினங்களில் மிகத் தேவையென்றால் அன்றி என்னோடு கதைப்பதையே தவிர்த்துவிட்டார். நானும் விட்டுவிட்டேன்.
இப்படிச் சரி வீட்டில் அமைதி வந்தால் சரிதான்.
ஆனாலும், தன் அம்மாவிடம் போய் சூர்யா இப்படிக் கேட்டது என்று சொல்லி பிரச்சனைப்பட்டதாகக் கவி வந்து சொன்னாள்.
நான் அதையும் காதில் வாங்கவில்லை.
“இங்க பார் கவி, இப்பிடி அங்க இருந்து கதை வந்து சொல்லுற பழக்கத்தை இண்டையோட விட்டிரு!” அவளைக் கண்டித்துவிட்டேன்.
இப்படி, வரவிருக்கும் கல்யாணத்தை எதிர்நோக்க நான் தயாரானாலும் கவியும் தீபியும் கொஞ்சமும் சமாதானம் ஆகவில்லை; முகத்தைத் தூக்கிக் கொண்டே திரிந்தார்கள்.
யார் யார் எப்படி எப்படித் திரிந்தாலும் நாட்கள் நிற்குமா?
திருமணநாளும் வந்தது. எனக்குத்தானா திருமணம்? என்றவகையில், எந்தவிதமான பிரத்தியேக உணர்வுகளுமின்றி அமைதியாகக் கிடந்த என் உள்ளத்தில் மகிழ்வலைகளை உற்பத்தியாக்க வந்திறங்கினாள் நர்மதா.
சத்தியமாக அவளை நான் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.
அவளின் கலியாணத்துக்குச் சென்று வந்தபின்னர் என்னோடு கதைக்கவில்லை. புதிதாகத் திருமணம் புரிந்தவர்களாச்சே என்று நானும் அமைதியாக இருந்தாலும், இடையில் இரண்டுதடவைகள் எடுத்தும் என் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.
என் திருமணம் தொடர்பாக, தான் சொன்னதைக் கேட்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறாள் என்று முடிவெடுத்த நான், அவள் திருமணத்துக்கு வருவாள் என்று துளியும் நம்பியிருக்கவில்லை. கெளதம் அண்ணாவும் அவளின் பெற்றோரும் கூட வந்திருந்தார்கள்.
புனிதம் ஆன்ட்டிதான் வரவில்லை. அதன் பிறகு என்னைப் பார்ப்பதே இல்லையே! அவரோடு கதைக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் படு தோல்வியே கண்டன.
இருந்தும் மனம் கேட்கவில்லை. எப்பவும் என் நலனில் அக்கறை கொண்டிருப்பவர் அவர். விரும்பியோ விரும்பாமலோ எனக்கு இன்றைக்குத் திருமணம். அதில் அவர் இல்லை என்றால் எப்படி?
விடியப்புறம் எழும்பி ஓடினேன். என்னைக் கண்டதும் முகத்தைத் திருப்பிவிட்டார் ஆன்ட்டி. கண்கள் கலங்கி நின்றேன். அவரின் எதிர்பார்ப்பில்லா அன்பு எனக்குத் தெரியாதா என்ன? அன்றைய சூழ்நிலையில் அப்படிக் கதைக்கவில்லையோ பெரிய பிரச்சனை தான் வந்திருக்கும்.
“புனிதம் ஆன்ட்டி! இங்க பாருங்கோவன்; நான் அண்டைக்குக் கதைச்சதில உள்ள கோபத்தை வச்சுக்கொண்டு இண்டைக்குக் கலியாணத்துக்கு மட்டும் வராமல் இருந்திராதீங்கோ; கட்டாயம் வரவேணும்; பார்த்துக் கொண்டிருப்பன் ஆன்ட்டி.”
குரல் நடுங்கச் சொல்ல, அவரோ, விசுக்கென்று உள்ளே சென்றுவிட்டார்.
அங்கிள் தான் என்னைச் சமாதானப்படுத்தினார்.
“நாங்க வருவம் மா, உன்ன வீட்டில தேடப் போகீனம்; போய் வெளிக்கிடு!” என்று, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இருந்தும், இதோ கல்யாண மண்டபத்தில் இருந்தும் அவரைத் தான் தேடுகின்றேன். இதுவரை வரவில்லை.
யார் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன என்றளவில் கலியாணச் சடங்குகள் விறுவிறுவென்று நடந்தேறின.
திருமண எழுத்து அன்று, நேரம் செல்ல வந்து என் விரலில் மோதிரம் போட்ட அடுத்த நிமிடம் காலில் கொதிநீர் ஊற்றிய கணக்கில சென்ற சூர்யா, இன்றும், அத்தனை சடங்குகளிலும் அவ்விடத்தில் கட்டாயத்தின் பெயரில்தான் அமர்ந்திருக்கிறார் என்று அப்பட்டமாகவே தெரிந்தது.
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னைப் பார்வையால் சுட்டுப் பொசுக்கினார். அவர் உள்ளத்தில் எரிமலை குமுறிக்கொண்டுள்ளதை ஜொலித்த விழிகள் பறைசாற்றின.
‘இருக்காதா என்ன? உயிராக நேசித்தவளோடுடனான இந்தக் கணத்துக்காகக் காத்திருந்து ஏமாற்றம் கொண்டவராச்சே!’ குறுக்கிட்டது என்னுள்ளம். கடிந்து அடக்க முயன்றேன்.
பின்ன? இனி இவரோடு கழிக்கவுள்ள ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் காலமாகிப் போன அந்தப் பெண்ணை இழுத்தால்?
என்னையே நான் கடிந்து கொண்டேன். இருந்தாலும், ‘அவளை என்னால் மறக்க முடியாது’ என்று அழுத்திச் சொல்லி என்னை இப்படிச் சிந்திக்கத் தூண்டியதே இவர் தானே?
மறைக்க முடியாத தவிப்போடு மனம் முணுமுணுப்பதையும் மீறியே திருமணத்தில் மனத்தைச் செலுத்த முயன்றேன்.
மிகவும் அழகாகக் கல்யாணத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். உண்மையில் இதை நானே எதிர்பார்க்கவில்லை.
“வீண் எடுபாடு எடுத்துக் காசைக் கரியாக்காமல் நமக்குள்ள செய்திட்டா அந்தக் காசு மிச்சம்.” என்று, சித்தி அடிக்கடிச் சொல்லியும் பயனிருக்கவில்லை. சூர்யாவின் மற்றைய சகோதரிகள் தான் முழுவதையும் முன்னின்று ஒழுங்கு செய்திருந்தார்கள்.
‘இந்தத் திருமணம் இத்தனை விமரிசையாக நடப்பது போல எங்கட வாழ்வும் இருக்குமா?’
என்னையும் மீறிய ஏக்கம்! கூடவே சிரிப்பும் வந்திச்சு. எது வந்தாலும் ஏற்கத் தயாராக வந்தவளுக்கு என்ன ஏக்கம் வேண்டிக் கிடக்கு?
கூரைப்பட்டை உடுத்தும் பொழுது அருகில் நின்ற நர்மதா, “இப்பவும் காலம் போகேல்ல உதயா, நல்லா யோசி! இந்தக் கலியாணம் உனக்குத் தேவையா? வேணாம் எண்டு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இப்பவே எங்களோட வந்திரடி; இப்பிடியே கொழும்புக்குப் போயிறலாம்.”
என் கரங்களைப் பிடித்தபடி விழிகள் கலங்கக் கெஞ்சினாள்.
என் விழிகளும் கலங்கிப் போயின. அதை மறைக்க முயன்றபடி மெல்லச் சிரித்துக் கொண்டேன்.
“நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லடி… கவலைபடாத!”
தடங்கல் சிறிதுமின்றிச் சொல்லி அவளைத் தேற்றவும் செய்தேன். எதுவென்றாலும் பார்க்கலாம் என்ற எண்ணம் வலுவாகிக் கொண்டே இருந்தது.