அத்தியாயம் 10-2

அவள் தந்தை, கணவர் என்று எல்லோர் முகத்திலும் அப்பட்டமாக அடிபட்ட உணர்வு! பாசமும் அக்கறையுமாக என் கல்யாணத்துக்கு வந்தவர்களாச்சே! இப்படி அமானப்படுத்த இனியும் பார்த்துக் கொண்டிருப்பதா?

 “சித்தி!” என்னையும் அறியாது அழுத்திக் கூப்பிட்டிருந்தேன்

 ‘போதும் நிறுத்துங்க!’ என்ற தொனியேதான். கூடவே, “என்னம்மா நீங்க?” தீபி, சித்தியின் கரத்தை அழுத்திப் பிடித்திருந்தாள்.

  “பச்!” கண்டிப்புப் பார்வையோடு நின்றாள் பெரியதங்கை

 “தொடங்கீட்டாள்கள்! சின்ன விசயம் எண்டால் காணுமே, அக்காளும் தங்கச்சிகளும் சோடி சேர்ந்து என்னை எதிர்க்க வந்திருவீனம்.” முணுமுணுப்போடு, தங்கையின் கரத்தை  உதறிய வேகத்தில்  மனத்தின் எரிச்சல் முகத்தில் தெறிக்கப் பார்த்தார் சித்தி

  நான் அருகில் நின்ற நர்மதாவின் கரத்தை இறுகப் பற்றி அவளோடு நெருங்கி நின்று கொண்டேன்

  அதுவே, நர்மதா குடும்பத்தினர் முகத்திலிருந்த சுழிப்பை அகற்றியதென்றால், சித்தியின் கோபத்தை மேலும் கிளறி விட்டதோ  என்னவோ

  அவர்களிடம் தான் எதையோ சொல்ல முயன்றார். நான் முந்திக்கொண்டேன்

   “சாரி ஆன்ட்டி, குறை நினையாதீங்க! எனக்காக…”  சற்றே நகர்ந்து நர்மதாவின் அன்னையின் கரத்தைப் பற்றியபடி சொல்ல, “இதுக்கெல்லாம் நீர் ஏன் சாரி கேட்கிறீர்?” சித்தியை முறைத்தபடி ஆரம்பித்தவர், “இப்ப இதில நான் எதையாவது கதைக்க இதுதான் சாட்டென்று உம்மட சித்தி தொடங்கீருவா! பேசாமல் விடும், நாங்க உமக்காக வந்தம் உதயா. அவா சொல்லி வரவும் இல்ல, போகப் போறதும் இல்ல.” 

  அடிகுரலில் என்னிடம் சொன்னாலும், அது சித்தியின் காதுகளுக்கு எட்டித்தான் இருக்கும். அவரின் முகத்தில் மின்னிய கோபமே அப்படித்தான் என்றது.

  “அக்கா உள்ள பிரச்சனையே போதும், கொஞ்ச பேசாமல் இருங்கோ. வாசலில வச்சு என்ன இதெல்லாம்?” 

  சித்தியின் மூத்த தங்கை அவரை அப்பால் நகர்த்திச் சென்றார்.

   “அதுதானே! வீட்டுக்கு வந்த விருந்தாளிகளோட இப்பிடியா கதைப்ப?” சித்தியின் அம்மா வேறு ஆரம்பித்தார்.  

  தன் தங்கையின் இழுவையில் சில அடிகள் நகர்ந்த சித்தி நின்ற வேகத்தில் கவி, தீபியைத்தான் பார்வையால் எரித்தார்.

 “ஏய் என்ன நீங்க? இதில நிண்டு பெரியாக்கள் கதைகேக்க இடையில கதைக்கிறது. கெதியா ரெண்டுபேரும் உள்ள போங்க!” உறுமிவிட்டுத் திரும்பி என்னையும்  பார்வையால் பொசுக்கினார்.

 “நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் உதயா, இப்பக்  கொஞ்ச நாளா உன்ர குரல் உயருதே! என்ன விசயம்? எனக்குப் புத்தி சொல்லுற அலுவல் வேணாம் சரியோ! உன்னப் பார்த்து இந்தப் பிள்ளைகளும் கெட்டுக் குட்டிச் சுவராப் போகீனம், பார்த்து நட!” 

  சீறிய வேகத்தில் இன்னமும் உள்ளே செல்லாது நிற்கும் மகள்களைப் பார்த்து, “உள்ள போங்கோ என்றனே!” அதட்டல் போட்டு உள்ளே அனுப்பிவிட்டு, தாயிடம் திரும்பினார்.

  சூரியாவின் தாய் நின்ற நிலையைப் பார்க்கையில் மிகப்பரிதாபமாக இருந்தது

   “கலியாணம் நல்ல படியா முடிய வேணுமெண்டு  கும்பிடாத சாமியை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருந்தனான், இப்பக் கொஞ்ச முதல் தான், ‘அப்பாடா! நல்லபடி கலியாணம் முடிஞ்சிட்டு!’ என்று நிம்மதி மூச்சு விட்டன், அதுக்குள்ள பார் என்ன நடந்திட்டு எண்டு! இவன் ஏன்தான் இப்படிப் புத்தி பிசகிப் போய்  நிக்கிறானோ! போதாதுக்கு உங்கக்கா ராஜம் வேற…” கடைசி மகளிடம் அழுகையோடு சொல்லிக்கொண்டு நின்றார்.

 “அண்ணாவப் பற்றி விடுங்கோம்மா, கலியாணம் நடக்கேக்க வந்திருந்த அவ்வளவு சனத்துக்கு முன்னால அமைதியா இருந்தாரே எண்டு சந்தோசப்படுங்க

  இப்ப இந்தப் பெரியக்கா வந்திருக்கிற ஆட்களோட இப்பிடிக் கதைக்கிறதப் பார்க்கேக்கத்தான் விசரா  வருது. நம்மளப்பற்றி என்ன நினைப்பீனம் சொல்லுங்கோ?” என்ற, சித்தியின் சின்னத் தங்கை குட்டி, சித்தியின்  பார்வையில்  வாயை மூடிக்கொண்டார்.  

 “எல்லாரும் எனக்குக் கதை சொல்லுறதில தான் நிக்கிறீங்க என்ன? வேற ஏதாவது உருப்படியாச் செய்யத் தெரியுமா சொல்லுங்க பார்ப்பம்?” தங்கைகளுக்குப் பொதுவாச் சொன்ன வேகத்தில் தாயிடம் திரும்பினார்

  “இப்ப ஏனன கண்ணக் கசக்கிக்கொண்டு இதில நிக்கிறீங்க? விருந்தாளிகளுக்கும் வம்பு வளர்க்கிற மனுசருக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் இல்ல சரியோ! அதை விடுங்க, இப்பிடியே வாசலிலே எவ்வளவுக்கு நிக்கிறது

  ஆராத்தி எடுத்துத் தான் உள்ள போக வேணும் எண்டால் உள்ள போய்ப் பார்த்து அவனக்  கூட்டிக்கொண்டு வாங்க பார்ப்பம். அதை விட்டுட்டு எனக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவருது விசர்…” தாயைக்  கடிந்து உள்ளே அனுப்பினார்.

  பெரியவரும் விறுவிறுவென்று சென்றவர், அதேவேகத்தில்  கலங்கிய கண்ககளைத் துடைத்துக்கொண்டே வெளியில் வர, பின்னாலோ, பட்டுவேட்டி சட்டையிலிருந்து சாதாரண  டெனிம் ஜீன்ஸ் சாயம் போன கருநீல நிற டிசேர்ட்க்கு மாறியிருந்த சூர்யாவும் வந்தார்.

  உடைமாற்றிக் கொண்டிருக்கையில் அம்மம்மா போய் கூப்பிட்டுவிட்டார் போலும். டி  சேர்ட்டின் கொலர் மடிபடாது கழுத்தை மூடிக்கொண்டு நிக்க, ஒருபக்க டீ சேர்ட் ஒழுங்காக இழுபடாது இடுப்போரம் மேலே நின்றது

  வாயிலில் நின்றவர்கள் முகத்தில்அப்பாடாஎன்ற ஆறுதல் பளிச்சென்று தெரிந்தது. அது எல்லாமே கண்ணிமைப்பொழுதில் மாயமாகியும் போயிருந்தது.

error: Alert: Content selection is disabled!!