“டேய் அகிலனடா!” என்று துள்ளிக்கொண்டு எழுந்தான் தூயவன். “அவன்தான். பஸ் ஓடுறது அவன்தான். இசைக்கு நல்லா தெரிஞ்ச நம்பிக்கையானவனும் அவன்தான். வேற ஆரோடயும், ஏன் என்னோடயே அவள் வந்திருக்க மாட்டாள்.”
அதன் பிறகு நொடியும் தாமதிக்கவில்லை அவர்கள்.
கடை பூட்டும் நேரம் கடந்தும் சினக்காமல், அவர்களின் தவிப்பை உணர்ந்து பொறுமையாகப் போட்டுக்காட்டி, திரும்ப திரும்பக் கேட்டதையும் போட்டுக்காட்டி, அப்படியே அதைத் தன் கைப்பேசியில் ரெக்கோர்ட் செய்யும் வரையும் காத்திருந்த அந்தக் கடைக்காரனைக் காற்றுக் கூடப் புக முடியாத அளவில் இறுக்கிக் கட்டிக்கொண்டு நன்றி சொன்னான் தூயவன்.
“நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறீங்க எண்டு உங்களுக்குத் தெரியாது. என்ர உயிர் இருக்கிற இடத்தக் காட்டித் தந்து இருக்கிறீங்க. நிச்சயமா ஒரு நாளைக்கு அவளோட வருவன்.” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டான்.
முதல் வேலையாகச் சுவர்ணவனுக்கு அழைத்தான்.
“இசையைப் பற்றி எதுவும் தெரிஞ்சதா அண்ணா?” எடுத்ததுமே கேட்ட சுவர்ணாவிடம் உண்மையான தவிப்பும் பயமும் தெரிந்தன.
“எங்க? கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருக்கு சுவர்ணா. பஸ் டிப்போல போய் விசாரிப்பம் எண்டா உள்ளுக்கு விடுறாங்களே இல்லை. அகிலனைக் கூட்டிக்கொண்டு போய்க் கேப்பமோ எண்டு பாக்கிறன். எங்க அகிலன்?”
“இவர் இல்லையே அண்ணா. வேலைக்குப் போய்ட்டாரே.”
“ஓம் என்ன. எப்பவும் அவருக்கு மத்தியான ஷிப்ட் எண்டுறதை மறந்திட்டன்.” என்று நடித்தான்.
“ஓம் அண்ணா. ஆனா இந்த முறை நேற்று விடியவே போயிட்டார். இன்னும் வரேல்ல. இப்ப கொஞ்சத்துக்கு முதல் எடுத்தனான். எப்பவும் போல இண்டைக்கு இரவு வந்திடுவன் எண்டு சொன்னவர்.”
“ஓ சரி, ஆனா ஏன் இப்பிடித் தொடந்து ஓவர் டைம் பாக்கிறார்?”
“அது அவரோட வேலை செய்ற ஆரும் லீவு எடுத்தா அப்பிடித்தான். பிறகு ரெண்டு நாள் மாதிரி இவருக்கும் தொடந்து லீவு கிடைக்கும்தானே.”
“சரி சரி. அப்ப களைச்சுப்போய் வாற மனுசனிட்ட ஒண்டும் சொல்ல வேண்டாம். எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விடு, வந்திட்டார் எண்டு. தேவை எண்டா நானே வாறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு அகிலனின் கழுத்தை நெரிக்கும் வெறியே வந்தது.
“அவனேதான்டா! எவ்வளவு தைரியம் இருந்தா இசையில் கைய வச்சிருப்பான். கிடைச்சான் செத்தான்டா.” என்று பல்லைக் கடித்தான்.
“செய்தது அவன் எண்டாலும் சொன்னது ஆர் எண்டு கண்டுபிடி.”
“இன்னும் என்னத்தக் கண்டு பிடிக்க? அப்பாதான். என்னைப் பெத்திட்டாரே. பாசமா வேற வளத்துத் துலச்சிட்டாரே! அதால அடங்கி நிக்க வேண்டி இருக்கு.” என்று குமுறினான்.
இல்லையானால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது!
அவரின் இடத்திலிருந்து பார்க்கையில் அவரின் கோபத்தை அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஒரு அப்பாவாகவும், தன் இனத்தைப் பெரிதாக நினைத்து வாழும் ஒரு மனிதராகவும் இருப்பவரின் மனநிலை, அவன் செய்கையால் எப்படி மாறியிருக்கும் என்றும் அவனால் கணிக்க முடிந்தது.
ஆனால், அவர் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டியது அவனிடம். அவளிடம் அன்று! அது மிக மிகத் தவறு!
“இனி என்னடா செய்றது?”
குருவுக்குப் பதில் சொல்லாது, அவனுடைய தென்னந்தோப்பில் வேலை செய்கிறவனுக்கு அழைத்து, இன்னும் இருவரோடு சென்று, சுவர்ணா வீட்டைக் கண்காணிக்கச் சொன்னான்.
ஏற்கனவே தன் வீட்டைக் கண்காணிக்க ஆட்களை வைத்திருந்தான். கருணாகரன் எங்குப் போனாலும் பின்தொடரச் சொல்லியிருந்தான். இப்போது சுவர்ணா வீட்டிலும்.
“அவன் இரவுக்கு எப்பவும் மாதிரி வீட்டுக்குப் போனா, இசையை எங்க வச்சிருப்பான்?”
அதுதான் அவன் கேள்வியும். நிச்சயமாக வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகமாட்டான்.
“நேரா போய்க் கோழியை அமுக்கிற மாதிரி ஒரே அமுக்கா அமுக்குவமா?” குருவுக்கும் யோசிக்க யோசிக்க அகிலன் மீது அப்படியொரு கோபம் முளைத்தது. “தோப்புக்க கொண்டுபோய்த் தேங்காயாலேயே நாலு சாத்துச் சாத்தினா எல்லா உண்மையும் வெளில வரும்.” என்று பல்லைக் கடித்தான்.
தூயவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனாலும் மறுத்துத் தலையசைத்தான்.
“இது எல்லாமே எங்கட கணிப்பு. அவன்தான் அந்த பஸ்ஸுக்க இருந்தான் எண்டுறதுக்கு எந்த ஆதாரமும் இல்ல. எங்களிட்ட இருக்கிற வீடியோவில கூட பஸ் நிக்கிறதும் இசை போய் ஏறுறதும்தான் இருக்கு. அதைவிட அவன் சுவர்ணான்ர மனுசன். அவளின்ர வாழ்க்கையப் பாக்கோணும். ரெண்டு பிள்ளைகளோட இருக்கிறாள். அவன்தான் எண்டு தெரிஞ்சாலும் யோசிச்சுத்தான் கை வைக்கோணும். இல்ல, கைய வச்சது நான் எண்டு தெரியாம வைக்கோணும்.
“அதோட என்ன மிதிச்சாலும் தான் இல்லை எண்டு சாதிப்பான். சுவர்ணாவே சண்டைக்கு வருவாள். ஆதாரம் கேப்பாள். அவனும் செய்ததை ஈஸியா ஒத்துக்கொள்ளப் போறேல்ல. சோ முறையான ஆதாரத்தோட அவனுக்கு முன்னால நிக்கோணும். அதையும் விட அவனெல்லாம் அம்படா. அவனை என்ன செய்தும் என்னடா வரப்போகுது?” கசப்பும் வெறுப்பும் நெஞ்சில் மண்டச் சொன்னான்.
அவன் எதிரில் துரோகியாக நிற்பது அவன் தந்தை. யாழிசை மீது காதல் வருகிற வரைக்கும் அவரின் பாதடி பற்றி நடந்தவன் அவன். அவரின் பெருமைகளைத் தன் பெருமைகளாகக் கொண்டாடியும் இருக்கிறான். அவரைத் தன் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டிருந்திருக்கிறான். அப்படியானவர் அவன் கண் முன்னாலேயே சிறுத்துக்கொண்டு போவது வேறு நெஞ்சை அறுத்தது.
இதற்குள் துளசியோடு பேசிவிட்டு வந்த குரு, “இனி என்ன மச்சான் செய்றது? இப்பவே இரவு பன்னிரண்டு தாடிட்டுது. அங்க அந்தப் பிள்ளை பயத்தில என்ன பாடு படுறாவோ தெரியா. எங்க தங்க வச்சிருக்கிறாங்கள் எண்டும் தெரியேல்ல.” என்றான்.
தூயவனுக்கும் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், இந்த நேரத்தில் அவன் பலகீனமாகக் கூடவே கூடாது. அதில், “வா, போவம்!” என்றவன் திறப்பை அவனிடம் நீட்டினான்.
நண்பனை நிமிர்ந்து பார்த்த குரு எதுவும் செல்லாமல் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
“இந்தளவு ஆழமா ஒரு பிள்ளையை விரும்பிறியே எண்டு பாத்து வியக்கிறதா, இல்ல, அது நடக்காம இருந்திருந்தா அந்தப் பிள்ளைக்கும் இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது, உனக்கும் இந்தத் துன்பமெல்லாம் இருந்திருக்காது எண்டு நினைக்கிறதா எண்டு எனக்குத் தெரியேல்லடா. ஆனா, உன்ர இசை உன்னட்ட வருவா. வா!” என்று அவன் நெஞ்சில் தட்டிச் சொல்லிவிட்டு அவனோடு புறப்பட்டான்.
நேசன், மாதவி, ஜீவன், துளசி என்று எல்லோரும் அடிக்கடி அழைத்து விசாரித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
நண்பர்கள் இருவரும் யாரிடமும் சிறு பிடியையும் கொடுக்கவில்லை. கருணாகரனோ அவர் ஏவிய ஆட்களோ எந்த இடத்திலும் உசாராகிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
அங்கே வீடு வந்த அகிலன், உடனேயே தூயவனுக்கு அழைத்தான்.
“இப்பதான் வீட்டை வந்தனான் தூயவன். டிப்போக்கு போகோணும் எண்டு சொன்னீங்களாம். விடியப் போவமா?”
“இல்ல, நான் விசாரிச்சிட்டன் அகிலன். எந்த பஸ்ஸும் பிரேக் டவுன் ஆகேல்லயாம். எனக்கு என்னவோ இஞ்ச வவுனியா வந்து இறங்கின இசையத்தான் ஆரோ தூக்கி இருக்கினம் எண்டு டவுட்டா இருக்கு. அது சம்மந்தமாத்தான் இப்ப விசாரிச்சுக்கொண்டு இருக்கிறன்.” என்று பதில் சொன்னான் தூயவன்.
“அப்பிடி ஆர் தூயவன் இவ்வளவு தைரியமா இந்த வேலை பாத்தது?”
“அதுதான் தெரியேல்ல. ஆனா, பிடிக்காம விடமாட்டன். சரி அகிலன், நீங்க படுங்கோ. களைச்சு வந்திருப்பீங்க. தேவை எண்டா நானே எடுக்கிறன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு அவனிடமே எதுவும் தெரியாதவன் போல் நடித்தவனைச் சராமாரியாகச் சாத்தும் அளவுக்குக் கைகள் பரபரத்தன.
தூயவன் தன் வீட்டுக்குப் போகவில்லை. போக விருப்பமில்லை. கருணாகரனின் முகத்தில் விழிப்பதையே வெறுத்தான். நேராக நேசனிடம்தான் போனான்.
அழைத்துக் கோபமாகப் பேசிய தேவகியிடமும், “இசையைக் கண்டு பிடிச்சிட்டுத்தான் அம்மா வருவன்.” என்று சொல்லியிருந்தான்.
மாதவி, நேசன் வீட்டிலேயே வந்து அமர்ந்துகொண்டார். அந்தளவில் இதெல்லாம் உன்னால்தான் என்று அவரை வறுத்து எடுத்திருந்தார் தேவகி.
மாதவிக்கும் தான் தன் குடும்பத்தோடு சேர ஆசைப்பட்டதால் தானே இத்தனையும் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது. இல்லாமல் அவரின் அருமைப் பெண் யாழிசைக்கு இத்தனை துன்பங்கள் நேர்ந்திராதே.
யாழிசைதான் அந்த வீட்டின் மருமகள் என்று தூயவன் சொன்னது கூட அவரை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. அந்த வீட்டில் அவள் சந்தோசமாக வாழ்வாளா என்கிற கேள்விதான் எழுந்து பயமுறுத்தியது.
முறையாக உணவையும் எடுக்காமல், ஒழுங்கான உணவும் உண்ணாமல், மாத்திரைகளையும் போடாமல் அவர் வேறு எல்லோரையும் பயமுறுத்தினார்.

