கடன் அன்பை முறிக்கும் 39 – 1

அத்தியாயம் 39

 

 

தூயவன் விட்டதே போதும் என்று தலைதெறிக்க அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான் விமல். அதன் பிறகுதான் அவனுக்குத் தன் நிலை மெல்ல மெல்ல உறைத்தது.

 

கையில் ஒரு ரூபாய் இல்லை, விற்றோ அடகு வைத்தோ எடுப்பதற்கு ஒரு பொருள் இல்லை, யாருக்காவது அழைத்து உதவி கேட்கக் கைப்பேசியும் இல்லை. யாரிடமாவது கைப்பேசியை வாங்கி வீட்டினருக்கு அழைத்துத் தகவல் சொல்லலாம் என்றால் யாரின் நம்பரும் நினைவில் இல்லை.

 

அப்போதுதான் ‘நடந்தே வவுனியாவுக்கு வந்து சேர்!’ என்று தூயவன் சொன்னதன் பொருள் முழுமையாகப் புரிந்தது. இல்லையா, யாரிடமாவது அவன் இரக்க வேண்டும். அதை நினைத்ததுமே அப்படியே நின்றுவிட்டான். பிச்சை எடுக்க வைத்துவிட்டானே!

 

*****

 

விமலிடமிருந்து பறித்த எல்லாவற்றையும் அவன் வைத்திருந்த பைக்குள்ளேயே போட்டுவிட்டுத் திரும்பிய தூயவனால் யாழிசையை நோக்கி அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை.

 

அவளைக் கண்டுவிட மாட்டோமா என்றுதான் இந்த இரண்டரை நாள்களாக அன்னம் தண்ணி இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தான். அவள் இங்கே இருக்கிறாள் என்று குரு சொன்ன கணத்தில்தான் அவனுக்கு உயிரே வந்தது.

 

அப்போது ஓடி வந்ததுபோல் ஓடி வந்திருந்தால் அவனிடம் இருந்த துடிப்புக்கு அவளை அப்படியே இழுத்துத் தன் சிறகுகளுக்குள் பொத்திக்கொண்டிருப்பான். ஆனால் இப்போது?

 

இப்போதும் அந்தத் துடிப்பு உண்டுதான். அவளைத் தன் கைகளுக்குள் வைத்துத் தொட்டுணர்ந்து, உண்மையிலேயே அவள் கிடைத்துவிட்டாள்தான் என்று உணரவேண்டியிருந்தது. உனக்கு ஒன்றுமில்லை, நீ என்னிடம் வந்துவிட்டாய் என்று அவளுக்கும் சேர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது.

 

ஆனாலும், அவனிடம் ஒரு இறுக்கம். கால்களை நகர்த்தி அவளிடம் போக முடியவில்லை. ‘இப்போது சந்தோசமா உனக்கு, உன்னால் நான் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் போதுமா?’ என்று கேட்டுவிடுவாளோ என்று பயந்தான்.

 

அப்படி ஏதும் கேட்டுவிட்டாள் என்றால் அதில் இருக்கும் உண்மை அவனைச் சுட்டுப் பொசுக்கிவிடும்.

 

ஆனாலும், நிலத்தில் வேரூன்றிவிட்ட கால்களை மெல்ல நகர்த்தி அவர்களிடம் சென்றான். அங்கே இவன் எதிர்பார்த்ததற்கு மாறாகக் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் யாழிசை.

 

“கூப்பிட கூப்பிட இறங்கி வாறா இல்ல.” அவன் அருகில் வந்ததும் சொன்னான் குரு.

 

திரும்பி வேனுக்குள் இருந்த யாழிசையைக் கேள்வியாகப் பார்த்தான் தூயவன். அப்போதும் அவள் தலையை நிமிர்த்தினாள் இல்லை.

 

“இசை!” என்றான் தன் கனத்த குரலில்.

 

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் விழிகளில் வாய்விட்டு எதையும் சொல்லிவிட முடியாத பெரும் பரிதவிப்பு.

 

தூயவன் விழிகளில் பெரும் அதிர்வு. அவன் நெஞ்சை ஏதோ ஒரு பயமும் பதற்றமும் கவ்விப் பிடித்தன.

 

“நீ போய் எங்கட வேன எடுத்துக்கொண்டு இஞ்ச வா!” என்று திறப்பைக் கொடுத்துக் குருவை அனுப்பிவிட்டு, உள்ளே ஏறி அவளருகில் அமர்ந்து, கதவைச் சாற்றினான்.

 

“ப்ளீஸ், தள்ளி இருங்க!” என்றாள் அவசரமாக.

 

“ஏன்? உனக்கு என்ன?” என்றபடி அவளை பார்த்தான். அவள், தான் தள்ளி அமராமல் அவனைத் தள்ளி இருக்கச் சொன்னதில் கண்ட கண்ட கற்பனைகள் எல்லாம் கண்முன்னே வந்து போனதில் கழுத்து நரம்புகள் புடைத்தன. என்ன என்று அறிய முதலே விமலின் உடலைப் பிய்த்து உயிரைக் குடிக்கும் ஆவேசம் வந்தது.

 

அதற்கு முதலில் அவளைத் தேற்ற வேண்டும். அவளுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும். அவள் அவனுடைய இசை! அது மாறாது. மாற்ற மாட்டான்.

 

அதை அவளிடமும் சொல்கிறவனாக அவள் மடியில் கிடந்த ஒற்றைக் கரத்தை அழுத்தமாகப் பற்றினான். அதுவும் கிடுகிடு என்று ஆடியது. பலகீனமாக அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

 

ஒரு கணம் அவள் முகத்தைப் பார்த்தவன் அதன் பிறகு யோசிக்கவில்லை. அவளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவன், அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “உனக்கு ஒண்டும் இல்ல. நீ என்னட்ட வந்திட்டாய். என்ன நடந்திருந்தாலும் எதைப் பற்றியும் யோசிக்காத. நான் இருக்கிறன்! விளங்குதா? நான் இருக்கிறன் உனக்கு!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

கண்களில் நீர் பெருக இமைக்காது அவனையே பார்த்த யாழிசை அவன் தோள் வளைவிலேயே நெற்றியை முட்டி உடல் குலுங்க உடைந்து அழுதாள்.

 

சில கணங்களுக்குத் தூயவன் அப்படியே உறைந்துபோனான். அந்தக் கணத்தில்தான் அவனும் உடைந்தான். அவன் கண்களும் கலங்கின. கைகள் நடுங்கின. நெஞ்சம் விம்மி வெடித்தது. ஆழ மூச்சை இழுத்து வெளியேற்றியும் அவன் உணர்வுகள் சமன்படுவதாக இல்லை.

 

கடந்த மூன்று நாள்களும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவன் பயந்த பயமும் நடுங்கிய நடுக்கமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவையாயிற்றே.

 

அவள் தேகத்தின் கதகதப்பைத் தனக்குள் உணர்ந்து, அவள் இதயத்தின் துடிப்பைத் தானும் உள்வாங்கி, அவள் தலையை வருடி, கேசம் ஒதுக்கி, கன்னம் வருடியும் அவன் தவிப்பு அடங்குவதாக இல்லை.

 

இன்னும் கொஞ்சம் தன் அணைப்பை இறுக்கினான். அப்போதும் அவனுக்குப் போதவில்லை. அவள் முகத்தைத் தன் கன்னத்தோடு வைத்து மென்மையாக உரசினான். ம்கூம்! அவளைத் தனக்குள் புதைத்துக்கொண்டால் மட்டுமே அவள் தன்னிடம் இருக்கிறாள் என்பதை நம்ப முடியும் போலிருந்தது.

 

இன்னும் இறுக்கினால் அவள் பயந்துவிடுவாளோ என்று இவன் பயந்தான். அவள் முகத்தைத் தன்னைப் பார்க்க வைத்து, அழுதது போதும் என்று சொல்கிறவனாக, ஒற்றைக் கையாலேயே அவள் கண்களையும் கன்னங்களையும் துடைத்துவிட்டான்.

 

அப்போதும் கலங்கும் விழிகளோடு அவனைப் பார்த்தாள் யாழிசை. சில கணங்களுக்கு அவள் பார்வையைச் சந்தித்தவனால் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை. அவள் நெற்றியோடு நெற்றி முட்டி விழிகளை மூடிக்கொண்டான்.

 

அப்போதுதான் அவள் இதயத்தின் துடிப்பு இன்னும் அதிகமாக இருப்பதைக் கண்டுகொண்டான். கூடவே மெல்லிய நடுக்கமும். இன்னும் என்ன பயம்? விழிகளைத் திறந்து, “என்ன?” என்றான் கேள்வியாக.

 

அவள் பார்வை தாழ்ந்தது. முகம் மாற அவனிடமிருந்து விலக முயன்றாள். அணைப்பின் இறுக்கத்தைத் தளர்த்தினாலும் தன் கைக்குள்தான் அவளை வைத்திருந்தான்.

 

இதற்குள் பக்கத்தில் அவன் வேன் வந்து நிற்பது தெரிந்தது. போக வேண்டும். அவளை விட்டு விலக மனமேயில்லை. அவள் உச்சியில் இதழ் பதித்து, “குரு வந்திட்டான். எங்கட வேனுக்கு மாறுவமா? அங்க வீட்டில எல்லாரும் உன்னப் பாத்துக்கொண்டு இருப்பினம்.” மெல்லச் சொன்னான்.

 

அதைக்கேட்ட அவளுக்கு இன்னும் அழுகை பெருகியது. அவனை நிமிர்ந்தே பார்க்க முடியாதவள் போல் தலையை இன்னுமின்னும் குனிந்துகொண்டாள்.

 

என்னவோ சரியில்லை என்று திரும்பவும் மனம் சொல்ல, “என்ன இசை?” என்றான் மீண்டும்.

 

தன் நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் கண்ணீரைத்தான் உகுத்தாள் அவள்.

 

“இப்பிடி அழுதுகொண்டு இருந்தா நான் என்னத்த எண்டு நினைக்க? என்னென்னவோ எல்லாம் மண்டைக்க ஓடுது. என்ன எண்டு சொல்லு இசை.” என்றான் வார்த்தைகளுக்கு மெல்லிய அழுத்தம் கொடுத்து.

 

“எ…எனக்குப் பீ…பீரியட்ஸ்.” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.

 

தூயவன் திகைத்துப்போனான். அதோடா இந்த மூன்று நாள்களும் இத்தனை துன்பங்களையும் அனுபவித்தாள்? நெஞ்சம் பிசைய, “சரி, அதுக்கு என்…” என்றவன் அதிர்ந்துபோய்ப் பேச்சை நிறுத்திவிட்டான். “பேட் வேணுமா.” என்றான் கனத்துவிட்ட குரலில்.

 

“அதும் தான். சீட்… சீட்…” என்றவளுக்கு மேலே சொல்ல முடியவில்லை.

 

அன்று அவளுக்கான நாள் இல்லை. ஆனால், மூன்று நாள்களாகத் தொடர் வாகனப் பயணமா, அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடுங்கியதா, மனத்தின் அளவுக்கதிகமான அழுத்தமா ஒழுங்கான உணவு, உறக்கம், ஓய்வு எதுவும் இல்லாததா தெரியவில்லை. அன்று காலையில் மாதவிடாய் வந்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!