“அண்ணே நீங்க வீட்ட போவீங்களா இல்லாட்டிக் கடையில…” கடைப்பெடியன் முடிக்கவில்லை நான் எழுந்துவிட்டேன்.
“இல்ல, எனக்கும் எதையாவது வாங்கீட்டு வா!” என்று சொல்லித் தாமதித்தால் போச்சு!
குடுகுடுவென்று வரும் பெரியவர் தயங்கித் தயங்கி என்றாலும் தூண்டித் துருவுவார். பட்டும் படாமலும் மெல்ல மெல்ல, “வயசில பெரியவனாச் சொல்லுறன் தம்பி” என்றோ, “என்ர மகன்கள் போல நினைச்சுச் சொல்லுறன்” என்றோ, உணர்வுபூர்வத் தாக்குதல் வேறு நடத்துவார்.
‘இந்தப் பத்து நாட்களும் கேட்டுக்கேட்டுக் காதடைச்சுக் கிடக்கு!’ என எண்ணிய மனத்தில் ஒருவகையான உணர்வுக்கலவை! அதில், என் மீதும் பெரியக்கா மீதுமான கோபமே முன்னணியில் நின்றாலும், விரக்தி, கண்டபடி தாவித் தொங்கிக் கொண்டு இழுபட்டது.
‘ச்சே!’ ஒரேயடியாய் உதறிவிட மனம் நினைத்தாலும் முடியாதுள்ளதே!
“நான் வீட்ட போயிட்டு ஒரு மணித்தியாலத்தில வாறன் ஐயா!”
சற்றே குரலுயர்த்திச் சொல்லிக்கொண்டே, பிசுபிசுத்த கறைபடிந்த கரங்களைப் பார்த்த எனக்கோ அதைக் கழுவும் எண்ணமும் வரவில்லை, என் மனத்தைப் போலவே! ச்சே!
அங்கு கிடந்த துண்டுத்துணியில் அப்படியும் இப்படியும் அசிரத்தையாய்த் துடைத்துவிட்டு வெளியேற, பின்புறம் வேலையாக இருந்த பெரியவர் அவசரமாக விரைந்து வந்தார்.
“தம்பி!”
“என்னய்யா?” நின்று திரும்ப, என் முகத்தையே ஆராய்ந்தார்.
“இல்ல, ஒண்டும் இல்ல தம்பி, இங்க நாங்க பார்த்துக்கொள்ள மாட்டமா? விடியப்புறமும் நேரத்துக்கே வாறீங்க; பின்னேரமும் நாங்க எல்லாரும் போன பிறகும் நிண்டு எல்லா வேலைகளையும் தனியாவே செய்து முடிக்கிறீங்க!” என்றவர், என்ன காரணம் என்று கேட்கவில்லை. தெரிந்த விசயத்தை ஏன் கேட்பான் என்று நினைத்தார் போலும்.
“மூண்டு வருசங்களுக்கும் மேலா நான் பார்க்க வேண்டிய வேலைகள், பொறுப்புக்களையும் சேர்த்து நீங்க தானே பார்த்தீங்க? இப்ப நான் பார்க்கிறன், இதிலென்ன இருக்கு? நான் வேலைகள முடிச்சிட்டன் எண்டு நீங்க யாரும் இங்க சும்மா இல்லயே?” என்றேன் நான்.
உண்மையும் அதுதான். காராஜில் இப்போது ஒன்று முடிய ஒன்று என்று வேலைகள் வந்து கொண்டேயுள்ளன.
அதையே ஆமோதித்தார் பெரியவர்!
“அது எண்டால் உண்மைதான் தம்பி, கராஜ் திரும்பவும் நல்லபடி போகத் தொடங்கியிருக்கு. எல்லாம் அந்தப் பிள்ள வந்த நேரம்!” என்றுவிட்டு, என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தார்.
‘இதுக்கு மேலும் நின்றன் என்றால் தொடங்கீருவார்!’ மனம் எச்சரிக்க, “வாறன்.” தலையாட்டிவிட்டு வெளியேறி, மோட்டாரை இயக்கிப் பாதையில் சீற விட்ட என்னிதயத்தின் ஆழத்திலிருந்து, பலத்த பெருமூச்சு எழுந்து பெரும் நோவோடு வெளியேறியது.
உண்மையைச் சொன்னால் இப்போது வீடு செல்லவே எனக்கு விருப்பமில்லை.
அம்மா தூங்கிய பின்னர் நடு இரவில் அறைக்குள் புகுந்து, அவர்கள் எழ முன்னர், விடிந்தும் விடியாததுமான நேரத்தில் வெளியில் வந்துவிடவே விரும்பியதுள்ளம்.
இதைத்தான் இந்தப் பத்து நாட்களாகச் செய்து கொண்டிருக்கின்றேன். இருந்தும், தவிர்க்க முடியாது இடையில் சந்தித்துக் கொண்டால்…போச்சு!
அம்மாவின் முகத்தில் தெறிக்கும் கோபமும், வெறுப்பும் ‘என்ன வாழ்க்கையிது?’ என்ற கேள்வியை என்னுள் எழுப்பி விட்டுவிடும்.
குடிகாரனாகத் திரிந்த போதும் கோபப்பட்டிருக்கிறார்; வெறுத்துப் போய் அழுதபடியே திட்டித் தீர்த்தும் இருக்கிறார். ஆனால், அப்போதெல்லாம் அவை என்னைச் சுள்ளென்று குத்தியதில்லை. இதயம் கனத்து என்னை நானே தாங்க முடியாத பாரமாகவும் உணர வைத்ததும் இல்லை.
அப்போதெல்லாம் என் இதயத்தின் மொத்தக் கனமும் நான் இழந்ததில் மட்டுமே! மற்றவற்றைத் தூசெனக் கடக்கவும் முடிந்தது.
இப்போதோ…நானே ஒருத்தியின் வாழ்வோடு விளையாடிவிட்டேனே!
விடாது நெஞ்சிலும் முகத்திலும் கடுமையாக அறையும் அப்பட்டமான உண்மையிது!
ஒருபுறம், குற்றவுணர்வு கண்டபடி கடித்துக் குதறித் தள்ளுகின்றது. மறுபுறமோ, அம்மா! பார்வையாலே கூனிக் குறுகிக் குன்ற வைக்கின்றார்.
“உன்ன நம்பிக் கலியாணம் வரை கொண்டு வந்ததுக்கு எங்களுக்கு நல்ல வெகுமதி தந்திட்ட!” அக்காக்கள் சபித்தார்கள்.
ஒருகிழமை விடுமுறையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அக்காவும் தங்கையும் என் முகம் பார்த்து விடைபெறாது தான் திரும்பிச் சென்றிருந்தார்கள்.
இது போதாதென்று, காண்கையில் எல்லாம் தன் பங்கிற்கு வெடுக்கென்று சீறுவாள் குட்டி, சின்னத் தங்கை.
கல்யாணியின் மறைவின்பின், என் மாற்றம் பார்த்துக் கடிந்து கொள்வதுபோலக் கதைத்தாலும், அதன் பின்னால் என் மீதான பாசமே பிரதானமாக இருக்கும். அண்ணா என்ற மரியாதையை வெளிப்டையாகக் காட்டுபவள் அவள்.
இப்போதோ, வெறுப்புப் பார்வையால் என் பார்வையை விலகி ஓட வைக்கிறாளே! அவள் வாயிலிருந்து படபடவென்று சிதறிவிழும் ஒவ்வொரு வார்த்தைகளும் என் நெஞ்சில் ஊசியாய்க் குத்தியது மட்டுமா? என்னைக் கொல்லாமல் கொன்று போட்டது. ஏற்கனவே குற்றவுணர்வில் சிக்கி மூச்சுத்திணறும் என்னை, மேலும் மேலும் குத்திப் பதம் பார்த்தாள்.
அவர்களுக்கெல்லாம் நான் எந்த விதத்தில் சமாதானம் சொல்லவியலும்? அதற்கான தகுதியை முழுதாய் இழந்து நிற்கின்றேனே!
அந்த நேரத்துக்குத் தப்பும் விதமாக, விருட்டென்று வெளியேறி கராஜில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழி?
திருமணத்தன்று, ஆத்திரமும் கனத்த மனமுமாகத்தான் மணமேடையில் சென்றமர்ந்தேன். எதிரில் நடமாடிய என் குடும்பத்தினரையும் அருகில் வந்தமர்ந்த உதயாவையும் கழுத்தை நெரித்துவிட வேண்டும் போலெல்லாம் ஆத்திரம் உண்டாயிற்று.
இருந்தும், விழிகள் முற்று முழுதாய்ப் பதற்றத்தை அப்பிக் கொண்டிருக்க, கரங்களைப் பிசைந்தபடி அம்மா நின்ற பரிதாபமான நிலை பார்த்து என் நெஞ்சம் மிகையாகவே வலித்தது, என்னுள் கனன்ற ஆத்திரத்தை வென்றது அது.
அவர்கள் மீதான என் அன்பே என்னைப் பொம்மை போலாக்கீற்று!
அப்பவும், தாலியைக் கையில் ஏந்திய அந்தக் கணம் என்னுள்ளத்தில் பிரளயமே நடந்ததை யாரறிவார்?
இரணமாகக் கிடந்த என் நெஞ்சம் கதலறலோடு துடித்த துடிப்பை என்னவென்று சொல்லுவேன்?
அந்தநொடி, என் உயிர் போயிருந்தால் என்னை விடப் பாக்கியசாலி வேறு யாருமில்லை என்றிருப்பேன்.
அது எங்கே?