பெரியக்கா எப்படிப்பட்ட எண்ணத்தோடு உதயாவை எனக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் என்றது மட்டும் பெரு நெருப்பாக என்னுள் எரிந்து கொண்டிருந்தது.
அவரின் நோக்கத்திற்கு நானும் துணை போகின்றேன். இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்?
கோபத்தில் கனன்றது உள்ளம்!
‘ஒருக்காலும் அவர் நினைக்கிற மாதிரி அவள்ட வாழ்க்கை இருக்கப் போறதில்ல, அதுக்கு நான் ஒருபோதும் விடவும் மாட்டன்.’ என்று, ஓயாது முணுமுணுக்கும் மனமோ, உண்மையிலும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது திண்டாடிப் போயிருக்கின்றது.
அதுவரை, மனத்தின் உளைச்சல்களில் கிடந்து உழன்ற என் செவிகளில், “அம்மா எனக்கு விசா வந்திட்டு எண்டத அண்ணாட்டச் சொல்ல வேணும்.” என்ற தங்கையின் குரல் விழச் சற்றே நிதானமானேன்.
“என்ன விசா வந்திட்டாமே!” நான் கேட்டதில் எனக்கே சந்தேகமாக இருந்தது.
“எப்ப வருமென்று காத்திருந்த விசயமாயிற்றே! வந்தால் அடுத்த நிமிசமே வெளிக்கிட்டிருவாளே! அப்பிடி எந்தச் சிரமனும் இருக்கேல்லையே!”
முணுமுணுத்த நான், உள்ளத்தின் கடும் முறைப்பில் அடங்கிவிட்டேன்
‘அப்பிடியே சிரமன் இருந்தாலும் உன்ர கண்ணில பட்டிருமாக்கும்! அவ்வளவு அக்கறையா வீட்டைக் கவனிக்கிற தானே?’
சினந்த உள்ளம், ‘இப்ப எதுக்குப் பயந்து இந்த ஓட்டம் போடுற சூர்யா?” என்றது.
மனத்தின் காத்திரமான அந்த அதட்டலில் உள்ள நிஜம் உறைத்தது. எனக்கு என் மீதான கோபமே அதிகரித்தது.
அதை விசிறியது அம்மாவின் வார்த்தைகள்!
“விசா வந்தத அவனுக்குச் சொல்லி என்னத்துக்குக் குட்டி? தொல்லை துலைஞ்சிது எண்டு இனித் தூங்கவும் வீட்டுக்கு வராமல் கராஜில கிடப்பான். நீ போன கையோட நான் கோயில் குலமெண்டு வெளிக்கிடப் போறன் பிள்ள. செய்த மா பாவத்துக்குப் பரிகாரமா எதையாவது செய்ய வேணும் தானே?” என்றவர் குரலில் அத்தனை விசனம்.
என்னில் அம்மாவுக்குத் துளி நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டுகிறார்.
இவர்களை என்றாவது தொல்லை என்று நினைத்தவனா நான்? இவர்களுக்காகவே பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தவன்.
வேதனையை மீறி அடங்க மறுத்த ஆத்திரம் தான் எழுந்தது. முதலெல்லாம் குடித்து அழிகிறாய் என்று கோபித்தாலும், சின்னச் சின்ன விசயங்களிலும் பரிவும் அக்கறையும் காட்டும் அம்மா, இப்போது, கொலையாளி போலல்லவா பார்க்கிறார்!
இத்தனைக்கும் நான் எத்தனை தடவைகள் இந்தக் கலியாணம் வேண்டாம் என்றேன். அதில் உறுதியாக நின்று மறுத்தாயா இல்லையா என்ற கேள்வியைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், சாகப் போறேன் என்று அவர் போட்ட கூத்தில் தானே சம்மதித்தேன்.
அதோடு கல்யாணின் படங்களை உடைத்தது உதயா என்றுதானே அவளை அடித்துவிட்டேன்? அது பிழைதான், சரியென்று எல்லாம் வாதாடவில்லை. அதற்காக இப்படியா?
‘அவளை வீட்டை விட்டுப் போ எண்டு நானா சொன்னன்? அப்பிடி ஒரு கணம் கூட நினைச்சுப் பார்த்திருப்பனா?’
என்ன மீறி இந்த எண்ணம் எழ, என்னையும் அறியாது கல்யாணியின் படங்கள் இருந்த மூலையை நாடின விழிகள்.
‘குடிச்சோ வெறிச்சோ, அரைமயக்கத்தில பார்க்கிறவை எல்லாரும் முகம் திருப்பினாலும் நானும் என்ர கல்யாணியுமா இருந்தன். இப்ப?’
“ச்சே! நீங்க யாரும் சாகத் தேவையில்லை. நான்…நான் தான் உயிரோடவே இருக்கக் கூடாத பிறப்பு!”
ஓங்கி ஒரு கத்துக் கத்திவிட்டேன்.
அதேவேகத்தில் எழுந்து எதிரில் இருந்த கதிரையை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியில் வர, சமையலறையில் இருந்து வந்த அம்மாவும் தங்கச்சியும் கண்ணீரோடு என்னைப் பார்த்து நின்றார்கள்.
“ஓம்! உங்களுக்கு எல்லாருக்கும் ஏனிந்த வேதனை சொல்லுங்கோ? என்னால உங்களுக்குத் தொல்லையும் தலைகுனிவும் மட்டும் தான்; வேறெந்தப் பிரயோசனமும் இல்லை எல்லா? இனி நான் இங்க வர மாட்டன். நீங்க எல்லாரும் நிம்மதியா இருங்கோ!”
கத்திவிட்டு வெளியேற, “அண்ணோய்!” என்ற கத்தலோடு ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கதறிவிட்டாள் குட்டி.
என் கண்களிலும் கசிவு தான்! அடக்க முடியாது திண்டாடிப் போனேன்.
“உன்னப் போய்த் துலையுது தொல்லை எண்டு நினைப்பேனாம்மா? என்ன வார்த்தை இப்ப அம்மா சொன்னது? உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து …”
வார்த்தை வராது பெரிய மீன் முள்ளாய்த் தொண்டையில் குத்தி நின்றது கொடும் வேதனை!
“ஐயோ அண்ணா! அம்மா கோவத்தில…அது தெரியாதா உங்களுக்கு?” சீறினாள் தங்கை.
அம்மா அப்படியே நின்ற இடம் விட்டு அசையாது நின்றிருந்தார். அவரைத் திரும்பிப் பார்க்க விசுக்கென்று சமையலறைக்குள் சென்று விட்டார்.
குட்டி அதைப் பார்த்துவிட்டு, “அம்மான்ட கோபம் இப்போதைக்குக் குறையாது அண்ணா! அதுக்கு நீ …” என்று விட்டு என்னைப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ, சொல்ல வந்ததைச் சொல்லாது தன் கண்களைத் துடைத்துவிட்டு, “நீங்க முதல் வாங்க சாப்பிடலாம்.” என்றழைத்தாள்.
“வேணாம், எனக்குப் பசியில்ல; நீ போய்ச் சாப்பிடு!”
நான் மறுக்க மறுக்க இழுத்துச் செல்ல, நான் வருவதையறிந்த அம்மா சமையலறையிலிருந்து விசுக்கென்று வெளியே இறங்கிச் சென்றுவிட்டார்.
“பச்! நீங்க வந்திருங்க…” என்றவள், “இன்னும் கைகால் அலம்பேல்லையா? போய் அலம்பீட்டு வாங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்.” என்று, அவள் கண்ணீரோடு சொன்னதைத் தட்ட முடியாது கைகால் அலம்பிவர நகர்ந்தேன் நான்.
“பேசாமல் விடு குட்டி! போய்ச் சாகட்டும் எண்டு விடன். மாறி மாறி என்ன கதைச்சாலும் அந்தப் பிள்ளைக்குச் செய்ததுக்குப் பரிகாரமே இல்ல சொல்லிப் போட்டன்.
ஐஞ்சு பெட்டைகளோட பிறந்தவன் இப்பிடி ஒரு பிள்ளேட வாழ்க்கையை அழிச்சுப் போட்டு குத்துக்கல்லாட்டம் திரியிறானே! அவனப் போய் நீ இன்னமும் அண்ணா கொண்ணா எண்டு கொஞ்சு!”
அம்மா வெளியில் நின்றபடி தலையில் அடித்து அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரை நோக்கிச் செல்ல முயன்ற என்னைப் பிடித்து, “நீங்க போய்க் கைகால் அலம்பீட்டு வாங்கண்ணா! அம்மா சொல்லுறதைக் காதில வாங்க வேணாம்.” அடிக்குரலில் சொல்லிவிட்டு வெளியே சென்ற தங்கை,
“அதுதான் நானும் சொல்லுறன், நடந்தது நடந்திட்டு; வீட்டுக்கு வந்த உதயா ஏன் திரும்பிப் போனவள்?” எரிச்சலோடு கேட்டது, நகர்ந்த என் செவிகளில் நுழையவே செய்தது.
“அதை என்னட்ட என்ன கேட்கிற? அதுதான் ஊருக்கே தெரியுமே!” என்றார் அம்மா, சத்தமாகவே.
எனக்குக் கேட்க வேண்டும் என்றே அவர் கதைப்பது புரிந்தது. என்ன செய்வது? முகம் கன்ற முகத்தில் நீரை வாரி அடித்தேன்.
“அதுதான் மா! நடந்ததைச் சொல்லிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு மூலைக்கொரு ஆளாக இருந்தாச் சரியா? ஏதாவது செய்து சரிப் பண்ணப் பார்க்க வேணும்.
தயவு செய்து உங்களுக்கு அண்ணாவோட கதைக்க விருப்பம் இல்லையோ, கதைக்காதீங்க! இப்பிடித் திட்டி எல்லாம் செய்யாதீங்க! ப்ளீஸ் மா!
இந்தப் பத்து நாளா அண்ணா வீட்டில சாப்பிடேல்ல; இன்றைக்குத்தான்…” என்றவள், அழுகிறாள் என்பதைக் குரலில் உணர்ந்து கொண்டேன்.
அவள் எனக்குக் கேட்டுவிடக் கூடாது என்று குரலையும் தணித்தே தான் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டே சமையலறைக்குள் வந்துவிட்ட என் காதுகளில் அவை பளீரென்று விழுந்தன.
“நான் இன்னும்… எப்பிடியும் ஒரு இருபது நாள்தான் இங்க உங்களோட நிப்பன் மா! ப்ளீஸ்!” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தவள், என்னைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றது ஒரு கணம் தான். பின்னர் கண்களைத் துடைத்துக்கொண்டே உணவைப் பரிமாறத் தொடங்கிவிட்டாள்.