முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிடுவேனோ என்ற தவிப்பில் அவள் முகம் கலங்கிக் கிடந்ததை உணர முடிந்தது. என்றாலும், ‘இதெல்லாம் என்ன வீம்பு?’ என்று எரிச்சல் வராமலும் இல்லை.
“மச்சானிட்ட போய் அப்பிடியெல்லாம் சொன்னியா குட்டி? அவர் என்ன நினைப்பார் சொல்லு? எப்படா விசா வரும் எண்டு காத்திருந்தவர் எல்லா? வீணா உன்ர குடும்பத்துக்குள்ள பிரச்சனைகள இழுத்து விடாத!” கண்டிப்போடு சொல்ல, இப்போது கோபத்தோடு பார்த்தாள்.
“எனக்குச் சின்னன் எண்டதும் இவ்வளவு யோசிக்கிற நீங்க என்னைப் போலத்தான் உதயாவும் எண்டு ஏன் நினைக்கிறீங்க இல்ல? அவளுக்கு எண்டு யாரும் இல்லை எண்ட அசட்டை தானே?”
“அய்யோ ! அப்பிடியெல்லாம் இல்லம்மா…” தடுமாறினேன்.
“அண்ணா! நீங்க என்ன சொன்னாலும் நான் சொன்னது சொன்னதுதான். உங்களுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்தது நடந்ததுதான். உதயா இங்க வர வேணும்.
அங்க வந்து நீங்க கனக்க ஒண்டும் கதைக்கத் தேவையில்ல. அன்றைக்கு இங்க நடந்தது, அது எவ்வளவு பெரிய பிழை எண்டு நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்ல அண்ணா. அதுக்கு அவளிட்ட மன்னிப்புக் கேட்கிறதில நாம ஒண்டும் குறைஞ்சு போக மாட்டம்.
நாலு வார்த்தைகள் கதையுங்க. அவள் வந்திருவாள் அண்ணா.” கண்ணீரோடு சொல்ல, பார்வையை விலத்திக் கொண்டேன்.
“அவள் இங்க இருந்து போகேக்க கொழும்புக்குப் போயிருவாள் எண்டுதான் நினைச்சன். அவள் போகேல்ல எண்டதும் எவ்வளவு சந்தோசமாக இருந்திச்சுத் தெரியுமா?”
குட்டி தொடர்ந்தாள். என்னையும் அறியாதுதான் பார்வை அவள் முகத்தில் படிந்தது. அவளோ, என் மனத்தைத் துளாவும் பார்வையோடு தொடர்ந்தாள்.
“உங்களக் கட்டினா அவள்ட வாழ்க்கை சீரழிஞ்சு போகும் எண்டு நினைச்ச பெரியக்காட நினைப்பைப் பொய்யாக்க வேணும் அண்ணா.” என்று அவள் சொல்கையில், என் மனம் போலவே முகமும் பாறையாக இறுகியது.
“உதயா இந்த வீட்டில சந்தோசமா வாழ வேணும். அப்பத்தான் நான் சந்தோசமா இருப்பன். ஒண்டும் வேணாம், பெரியத்தாரை யோசிச்சுப் பாருங்கவன். நமக்காக எவ்வளவு செய்திருக்கிறார்? காசுதவி மட்டுமா? நம்மட வீட்டில என்ன எண்டாலும் அவர்தானே முன்னுக்குப் பொறுப்பா நிக்கிறவர்.
இன்றைக்கு அவர் இல்லாத நேரத்தில அவர்ட மகள் இப்பிடி நிக்க நாமளே காரணம் ஆகலாமா? அந்தப் பாவம் நம்மட குடும்பத்தச் சும்மா விடாது சொல்லீட்டன்.”
குட்டி படபடவென்று சொல்லிக்கொண்டே போக என் தலை தாழ்ந்துவிட்டது.
“இங்க பாருங்கண்ணா, உங்களப் பற்றி எல்லாம் தெரிஞ்சே அவள் கட்டினவள், அண்டைக்கு நர்மதாவே சொல்லேல்லயா? தாங்க எவ்வளவோ தடுக்கவும் கேட்கேல்ல, நல்லா வாழுவன் எண்டு நம்பிக்கையாச் சொன்னாள் என்று.” என்று அவள் சொல்கையில் மேலும் மேலும் அவமானமாக இருந்தது.
கசந்த நெஞ்சம் தலையை நிமிர்த்த விடவில்லை.
” உங்கட காதலைக் குறைவாச் சொல்லேல்ல அண்ணா! ஆனா…அது முடிஞ்சிட்டு! விருப்பமே இல்லையென்றாலும் உங்கள நம்பி ஒரு பெண் வந்தாச்சு! அவளை ஒரு சக மனிசியா நீங்க மதிச்சு நடத்த வேணும். இன்றைக்கு உதயான்ட நிலையில …இதுபோல நாளைக்கு என்ர புருசன் எனக்குச் செய்தால்…அங்க வெளிநாட்டில இன்னொரு …”
முச்சு விடாது அடுக்கிக் கொண்டு வந்தவள் சரேலென்று நிமிர்ந்த என் பார்வையின் உக்கிரத்தில் நிறுத்தினாள்.
இதெல்லாம் இவள் சொல்லியா எனக்குத் தெரிய வேண்டும்?
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இங்கிருந்து தப்பித்துப் போவதுபோலவே அவள் போய் விட்டாள் என்று முடிவே செய்துவிட்ட நான் மீண்டும் குழம்பி நின்றேன்.
“பச்! நெருப்பு என்றால் சுடாது அண்ணா! நீங்க மட்டும் உதயாவை இங்க கூட்டிக் கொண்டு வரச் சம்மதிக்கேல்லையோ, நானும் இங்கதான். அது மட்டும் இல்லை, அம்மா இப்படிப் புலம்பிப் புலம்பி நேரத்துக்கே போயிருவா! அவ்வளவும் தான் நான் சொல்லுவன். ” என்றுவிட்டு, எழுந்து சென்றுவிட்டாள் குட்டி .
நான் அப்படியே அமர்ந்திருந்தேன்.