“அக்கா சாப்பிடேல்லையா? வாங்கோவன்.” தீபி வந்து அழைத்தாள்.
“நீங்க சாப்பிடத் தொடங்குங்க, இந்தா வெளிக்கிட்டு முடியுது; தலையிழுத்திட்டு வாறன்.” என்ற நான், எங்கள் அறையின் ஒரு மூலையைத் தனக்கென்று நிலையாகப் பிடித்துக்கொண்ட கண்ணாடி மேசையின் முன் சென்று நின்றேன்.
எப்போதும் போலவே கரமிரண்டும் அந்த மேசையை மெல்ல வருடின.
“நல்லாப் பழசாப் போயிட்டுது. தூக்கிப் போட்டுட்டுப் புதுசா ஒண்டு வாங்குறத்துக்கு இதைக் கட்டிக்கொண்டு …” எப்போதும் முணுமுணுப்பார் சித்தி.
அப்புறப்படுத்தவும் எவ்வளவோ தடவைகள் முயன்றும் இருக்கிறார். அதெல்லாவற்றையும் கடந்து, இந்த அறையைத் தாண்டாது இதே இடத்தில் கம்பீரமாக நிற்கின்றது இந்த மேசை.
எழுபதுகளின் இறுதியில் செய்த மேசையாம் என்று அப்பா ஒருதடவை சொல்லியிருக்கிறார்; நல்ல தேக்கு மரத்தால் ஆனது; இப்போ வரும் கண்ணாடி மேசைகள் போலில்லாது சற்றே பெரிய மேசைதான்; அதன் கீழே நல்ல விசாலமான லாச்சி; உடுப்புகள் வைக்கலாம் என்றால் பாருங்களேன். மேலே இரு மருங்கிலும் அழகிய வேலைப்பாடுகளோடு செல்லும் மரப்பலகையில் பொருந்தியிருக்கும் அழகிய வேலைப்பாடு கொண்ட சதுர வடிவிலான சட்டத்தில் அடங்கியிருந்த கண்ணாடியை அப்படியும் இப்படியும் அசைக்கலாம்; அதற்கென்று ஒரே சுற்றாகச் சுற்றிவிடலாம் என்றில்லை; அந்த அசைவிலும் ஒரு எல்லை உண்டு.
என் அம்மாவின் மேசையிது! எங்கள் வீட்டில், அத்தனை நாட்டுப் பிரச்சனைகளிலும் தப்பிப் பிழைத்திருந்த ஒரே தளபாடம் என்றால் இதுதான்.
அதைப் பார்க்கையில் எல்லாம், “நான் தான் இடையில் விட்டுட்டுப் போய்ட்டன்; இந்த உருவில சரி உன்ன நானும், என்னில நீயும் பார்த்துக் கொள்ளுவமே!” என்று, அம்மாவே சொல்வது போலிருக்கும்.
அதுமட்டுமில்லாமில்லாது இன்னொன்றும் சொல்லும் அது; அதை வார்த்தைகளால் விபரிப்பதை விட ஆழ்ந்து உணர்ந்து கொள்வதே சிறப்பாகவிருக்கும்; அந்த உணர்வு, உதயா என்பவளின் தனித்தன்மைக்கும் மனவுறுதிக்கும் வலுச் சேர்த்துவிடுமென்றால் மிகையில்லை.
கண்ணாடி மேசையைப் பாசத்தோடு வருடிவிட்டு நகர்ந்த என் வலக்கை எனது கறுப்பு நிற சீப்பை எடுக்க, மறுகை, முதல் நாளிரவு போட்ட இரட்டைப் பின்னல்களில் ஒன்றைக் கலைக்கும் பணியைச் செவ்வனே செய்தாலும் என் பார்வை மட்டும் கண்ணாடியில்!
அதில் பளிச்சென்று தெரிந்தது என் முகம். இன்னும் பவுடர் கூடப் போடவில்லை. நடந்து முடிந்த கல்யாணமே களேபரமாக மாறியிருந்தது. அதன் பின்னும் இத்தனை அமைதியாய் …
என் முகத்தை நானே கண்கள் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக மனத்தில் உள்ள எந்த உணர்வுகளையும் காட்டாது அத்தனை நிர்மலமாக இருந்தது அது.
“இன்றோடு…” வாய்விட்டு முணுமுணுத்த நான் என்னையும் அறியாது நாட்கணக்குப் பார்த்தேன்.
“பதினொரு நாட்கள்…” உதடுகளுள் மெல்லச் சொல்லிக் கொண்டேன். நடந்தவை எல்லாமே நேற்றுப் போலிருந்தது.
நர்மதாவின் இழுவைக்கு இழுபட்டு வெளியில் வந்து, “இனி ஒரு நிமிசமும் இங்க இருக்க வேணாம்; இப்பிடியே கொழும்புக்கு வா!” என்றவர்களோடு கதைத்துப் பேசி, “என்னால இங்கயே இருக்க முடியும் டி; அப்பிடியே முடியேல்ல எண்டால் அப்ப வாறனே…” என்று, திடமாக நின்று அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் நுழைந்த நேரத்திலிருந்து, இதே விசயத்தில் ஆயிரமாம் முறையாக ஆச்சரியப்பட்டுப் போகிறார் சித்தி.
“கலியாணம் முடிஞ்ச கையோட இங்க வந்திட்டமே, அதுவும், புருசனிட்ட அறை வாங்கி அவமானப்பட்டு வந்தமே, பார்க்கிறவன் நம்மைப் பற்றி என்ன நினைப்பான்? இப்பிடி எந்தவிதக் கவலையும் இல்லாமல் ஒண்டுமே நடவாத மாதிரி உன்னால மட்டும் எப்படி இருக்க முடியுது? அவ்வளவு அழுத்தக்காரி நீ!”
அத்தனை கோபத்தையும் எரிச்சலையும் மீறிய ஆச்சரியத்தை மறைக்காது வெளிப்படுத்தியும் விடுகிறார் அவர்.
இப்போ பார்த்தால் எனக்குள்ளும் அதே ஆச்சரியம் எழுந்தது.
இதழ்களில் பட்டும் படாமலும் சின்னச் சிரிப்பொன்று உரசிச் சென்றது.
“மனத்தில் உள்ள குமுறல் வெளியில் தெரியாது இப்படி இருப்பதும் நல்லதுக்குத்தான். அப்பிடி எருமைமாட்டில மழை பெய்த கணக்கில் இருக்கப் போய்த்தான் சித்திட ஓயாத ஏச்சுப் பேச்சும் குறைஞ்சிட்டுது!”
முணுமுணுத்தபடி, விறுவிறுவென்று தலை வாரி கொண்டை போட்டுக் கொண்டேன்.
வெறுமையாக இருந்த கழுத்தில் எப்போதும் நான் அணியும் சங்கிலியை எடுத்துப் போடும்பொழுது, “ஏய்! என்னடி செய்யிற? கலி முத்திப் போச்சு என்றதுக்கு இதுதான் நல்ல உதாரணம். தாலி கட்டி முழுசாய் ஒரு நாள் ஆகேல்ல. அதுக்குள்ள தாலியக் கழட்டிறியே! நீ என்ன எல்லாமே உன்ர விருப்பப்படி செய்யலாம் எண்டு நினைச்சுப் போட்டியா? உனக்குப் பிறகிருக்கிற இந்த ரெண்டுக்கும் நல்ல வழிகாட்டுற போல!” கிரீச்சிட்ட சித்திதான் நினைவில் வந்தார்.
“சரிதான். கலி முத்தீட்டுத் தான், தாலி கட்டி ஒரு நாளுக்குள்ள இப்பிடி வந்து நிக்க முடியும் எண்டால் இதைக் கழட்டுறதில என்ன வரப் போகுதாம்?”
கலியாணக் கோலத்தைக் களைந்து கொண்டிருந்த நான்தான் சொல்லியிருந்தேன்.
“பாருங்கடி உங்கட கொக்காவிண்ட திமிர! இந்தக் கோலத்தில சுவரில அடிச்ச பந்தா இங்க வந்து நிண்டும் அவளுக்குத் திமிர் மட்டும் அடங்கேல்லப் பார்த்தீங்களா?
இப்ப மட்டும் உங்கப்பன் இருந்தா, தன்ர செல்ல மகள் இப்பிடித் தாலி கட்டின அண்டைக்கே வாழாவெட்டியா வந்து நிக்கிறதைப் பார்த்திட்டு…மூச்சடைச்சுச் செத்துப் போயிருப்பார்.”
அவர் சொல்லி முடிக்கவில்லை, “அம்மாஆஆஆஆ…” உச்சக் குரலில் கத்தினாள் கவி.
“என்னடி மகளே குரல் உயருது? உன்ர கொக்கா தான் தன்ர மூப்புக்கு நிண்டு கெட்டழியப் போறாள் எண்டால், நீயும் அவளப் பார்த்துப் பழகப் போறியா? வரவர உங்களின்ட போக்குச் சரியில்ல!” நெருங்கிய வேகத்தில், அவள் கன்னத்தில் விளாசியிருந்தார் சித்தி.
எப்போதும் போல அவள் ஓடவில்லை; அழவுமில்லை.
“சித்…” நான் தடுக்க முனைகையில், “ஓமோம்! தன்ர எண்ணத்துக்கு அவா நின்ற படியால் தான், இந்தா சாகிறன் என்று பயமுறுத்தி நீங்க கை காட்டின வெறிக்குட்டிக்குக் கழுத்தை நீட்டினா போல!”
அடிவிழுந்த கன்னத்தைத் தாங்கியபடியே எகிறினாள் அவள்.
“அப்படிக் கேளு சின்னக்கா. அதோட அது என்ன ‘இங்க வந்து நிக்கிற’ என்று ஒரு மாதிரிச் சொல்லுறீங்க?
இது அக்காண்ட வீடு! அவா இங்கதான் இருப்பா! அது பற்றி யாரும் கதைக்கத் தேவையில்லை.”
தாயை விரோதிபோல் பார்த்தபடி சொன்னாள் தீபி.
“ச்சே! உண்மையிலேயே உங்களை எங்கட அம்மா எண்டு சொல்லவே வெக்கமா இருக்குத் தெரியுமா?”
அவள் தொடர்ந்து சொல்கையில் சித்தியின் முகம் இருண்டு போனது. இப்படியான வெறுப்பை அவர் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை தான்.
“அதுதான். இப்ப மட்டும் அப்பா இருந்திருந்தா உங்களக் கொலையே செய்திருப்பார்.
அக்காண்ட வாழ்க்கை நாசமாகப் போக வேணும் எண்டு திட்டம் போட்டு உங்கட தம்பியைக் கட்டி வச்சிப்போட்டு, எங்கட அப்பாவை அந்த ஆளோடு ஒப்பிட்டுக் கதைக்கிறீங்களே!