Skip to content
கோபத்தோடு சொன்னபடி கரம் பற்றி இழுத்த கவியைச் சீறலோடு அடிக்க ஓங்கிக் கொண்டு வந்தார் சித்தி.
அதன் பிறகும் வாயை மூடிக்கொண்டு நின்றால் மீண்டும் நானே பிழை செய்தவளாகிவிடுவேன் தானே?
“கவி, தீபி… கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க; நானே கதச்சுக் கொள்ளுறன், சரியோ?” கடிந்தவாறே என் பின்னால் அவளைத் தள்ளிவிட்டுவிட்டுச் சித்தியைத் தீர்க்கமாகப் பார்த்த பார்வை, அவரின் தங்கையில் சென்று நின்றது.
“உங்களுக்கு என்ன சொல்ல வேணுமென்றாலும் கெதியாச் சொல்லுங்க! எங்களுக்கு நேரம் போகுது.” வெடுக்கென்றுதான் சொல்லிவிட்டேன். பரவாயில்லை, அதுவும் நல்லதுக்குத் தான்.
அவர் பார்வை என் கழுத்தில் இருந்து விழிகளுக்கு வந்தது. நான் கதைத்த தோரணை நெற்றியைச் சுருக்கியது. முகமும் சுர்ரென்று கன்றிப் போயிற்று!
“அண்ணாவும் நானும்…” என்று ஆரம்பித்துவிட்டுக் கணம் நிதானித்தார். அவர் குரலில் சிறு தயக்கம் பளிச்சிட்டதை உணர முடிந்தது. சொல்லி முடிக்கட்டுமே என்று பார்த்துக் கொண்டு நின்றேன்.
“உம்ம வீட்ட கூட்டிக்கொண்டு போகத்தான் வந்தம் உதயா. அண்ணா உம்மட்ட மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறார். அவர் அண்டைக்கு அப்பிடி நடந்தது பெரிய பிழை. அதை மனசில வச்சி வீணா உம்ம நீரே கஷ்டப்படுத்தாமல்… ப்ளீஸ்… வீட்ட போவம் வாரும்.”
ஒரே மூச்சில் கனிவோடு சொல்லிக்கொண்டே மீண்டும் கரம் பற்ற, விடுவித்துவிட்டு வாயிலை நோக்கித் திரும்பி நடந்தேன் நான்.
“ஓ! ஞானம் பிறந்திட்டாமோ! எங்களுக்கும் தான். அதனால இதுக்கெல்லாம் வேற ஆள் பாருங்க! எங்கட அக்கா எங்கயும் வரமாட்டா! இதுதான் அவாட வீடு!” சிடுசிடுத்தபடி பின்னால் வந்தார்கள் தங்கைகள்.
“உங்களை எல்லா ஒண்ணும் கதைக்க வேணாம் என்றன்!” என்னையும் மீறி குரல் உயர்ந்திருந்தது.
நெஞ்சம் நடுங்கியது. சத்தியமாக ஏனோ கடுமையான கோபம் என்னை ஆட்டுவித்தது.
நானென்ன உணர்ச்சிகளே இல்லாத பொம்மையா என்ன?
நீங்க அடிக்கும் போதும் அவமதிக்கும் போதும் உணர்வே இல்லாமல் வாங்கவும், வேணாம் போ என்று குப்பையாகத் தூக்கிப் போட ஒதுங்கி வரவும், பிறகு வா என்றதும் போகவும்!
என்னதான் நினைத்துக்கொண்டார்கள்?
அன்றைக்கு அத்தனை கேவலமாக, அதுவும் என் சினேகிதி குடும்பமே என்றாலும் இவர்களுக்கு அவர்கள் பிறத்தியார் தானே? எந்தளவுக்கு அவமரியாதை செய்தார்? இப்ப வந்து மன்னிப்பு என்றால் சரியாகுமா என்ன?
‘இடையில இந்தப் பத்தே பத்து நாட்களில் கல்யாணியை மறந்திட்டார் போல!’
இதை எண்ணுகையில் என்னையும் மீறி உதடுகள் ஏளனமாக மடிந்தன.
‘நான் அவளை மறப்பதென்பது முடியாத காரியம்‘ என்று சொன்ன போதும் கல்யாணத்துக்குச் சம்மதம் என்றேனே ஏன்?
அவ்வளவு வெளிப்படையாக இருக்கும் மனிதன் போகப் போக நடைமுறையை விளங்கிக் கொள்வார், என்னைத் துன்புறுத்தும் அளவுக்கெல்லாம் நடந்து கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில் தானே?
மனம் குமுற வெளியில் இறங்க, வாயிலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார், அந்த மனிதன்.
நேருக்கு நேராகவே என் விழிகள் அவர் விழிகளைச் சந்தித்தன.
‘தங்கச்சிகளில் பாசம் வைத்த ஒரே விசயத்துக்காக என்னை ஒரு புழுவென்று நினைத்து வீட்டீரோ!
பாசம் என்ற ஒன்றுக்காக எதையும் செய்வேன். ஆனால்…’
விறுவிறுவென்று நெருங்கிச் சென்று முன்னால் நின்றேன்.
“அன்றைக்கு நான் தெளிவாகச் சொல்லாமல் வந்தது என்ர பிழைதான். ஏன், உங்கட பக்கத்தை நீங்க அவ்வளவு தெளிவாச் சொன்ன பிறகும் கலியாணம் வரை வர விட்டது எண்டு எல்லாமே என்ர பிழை. பிழை என்று தெரிஞ்சப் பிறகு அதைத் திருத்திக்கொள்ளாமல் இருக்கிறது அழகில்லை தானே?”
நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெகு நிதானமாகவே வார்த்தைகளை உதிர்த்தேன்.
“உதயா? நான்…” எதையோ சொல்ல முயன்றார். நான் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை.
“இனி என்னால் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது. அதோட, கலியாணம் செய்திட்டமே எண்டு வீட்ட கூட்டிக் கொண்டுபோய் வச்சிருந்து தினம் தினம் சகிச்சு வாழ வேண்டிய தேவையும் இல்ல.
நான் ஒண்ணும் வீடில்லாமல் வாழ வழியில்லாமல் ரோட்டில அநாதையாக நிக்கேல்லையே! நீங்க எப்பவும் போல உங்கட வாழ்க்கையைப் பாருங்க! எனக்கு என்ர வாழ்க்கையைப் பார்க்கத் தெரியும்.
அன்றைக்கு நடந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையில் ஒண்டுமே இல்லை. இல்ல இல்ல…சின்னத் திருத்தம், நம்மப் பொறுத்த வரையில் ஒண்டுமே இல்லை.
அதனால இனி நமக்குள்ள எந்தப் போக்குவரத்தும் வேணாம். அதாவது இது சம்பந்தமா.”
மூச்சு விடாது சொன்ன வேகத்தில் என் பார்வை சித்தியில் கூர்மையோடு படிந்துவிட்டு தங்கைகளிடம் திரும்ப, கண்ணீரோடு நின்றார்கள் அவர்கள்.
“வாங்கடி போவம்; ஏற்கனவே நல்லா நேரம் போயிற்று!”
விடுவிடுவென்று நடந்தேன் நான். திரும்பியும் பார்க்கவில்லை. மனதிலோ, அத்தனை நேரமிருந்த புழுக்கமும் பாரமும் மறைந்து அலாதியான அமைதி குடியேறியிருந்தது.
அதுவும் நான் சொல்ல சொல்ல அந்தாளின்ர முகம் போன போக்கு இருக்கே! யார் என்ன சொன்னாலும் என்ன? மனத்துக்குத் திருப்தியாக இருந்தது.
உதயா ஒண்ணும் முதுகெலும்பில்லாத கோழை இல்லை! எதிர்வருவது எதுவென்றாலும் சந்திக்கத் தயாராகவே உள்ளேன்.
error: Alert: Content selection is disabled!!