அத்தியாயம் 40
கீழே இவனுக்காகக் காத்திருந்தான் குரு. இவனைக் கண்டதும், “என்னவாமடா?” என்று விசாரித்தான்.
“அவளில ஆசை வச்சது நான். அதுக்கான அத்தனை தண்டனையும் அவளுக்கு. ஆனா ஒண்டு மச்சான், இதுக்குக் காரணமான அத்தனை பேரும் என்னட்ட நல்லா வாங்கிக் கட்டப் போயினம் பார்.” என்றான் குமுறும் மனதோடு.
ஒன்றும் சொல்லாமல் அவன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு, “அடுத்த ப்ளான் என்ன?” என்று கேட்டான்.
“அந்த வேன் வரைக்கும் ஒருக்கா போயிட்டு வரோணும்டா. நீ இஞ்ச சாப்பிடக் கிடைக்குமா எண்டு பாரு.” என்றுவிட்டு அங்கு விரைந்தான்.
அங்குப் பெரிய கேனில் தண்ணீர் சோப், ஸ்பொஞ்ச் எல்லாம் வாங்கி, அவள் இருந்த சீட்டைக் கழுவிவிட்டான். ஓடும்போது வாகன ஓட்டி, திறப்பையும் விட்டுவிட்டுத்தான் ஓடி இருந்தான். யாழிசையோடு ஹோட்டலுக்குச் செல்லும்போது இவன் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டு போயிருந்தான். இப்போது சீட்டை கழுவிட்டு, திறப்பைத் திரும்பவும் அந்த வேனிலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டான்.
ஒரு பெண் பிள்ளையை வேனிலேயே வைத்துக்கொண்டு சுற்றுவதற்கு உடன்பட்டவனின் வாகனம் இருந்தால் அவனுக்கு என்ன, களவு போனால்தான் அவனுக்கு என்ன? செய்த பாவத்துக்கு அனுபவிக்கட்டும்.
அவன் திரும்பி அறைக்கு வந்தபோது குளித்து உடைமாற்றியிருந்தாள் யாழிசை. மூன்று நாள்களாக உடலில் சேர்ந்திருந்த அழுக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாரமும் இறங்கிய உணர்வு. சொர்க்க சுகமாக இருந்த அதே வேலை உடல் அளவுக்கதிகமான வசதியையும் சுமந்திருந்தது.
வீட்டினரின் நினைவில் விழிகள் கலங்கின. நிச்சயம் எல்லோரும் கதிகலங்கிப் போயிருப்பார்கள். யார், எதனால் என்று தெரியாமல் திகைத்து நிற்பார்களாயிருக்கும்.
அந்த நிமிடமே அவர்களுக்கு அழைத்துப் பேசப் பிரியப்பட்டாள். எல்லோர் இலக்கங்களும் அவள் கைப்பேசியில்தான். நினைவில் ஒன்றும் இல்லை. தூயவனிடம்தான் கேட்க வேண்டும்.
அப்போது குருவின் கைப்பேசியிலிருந்து அழைத்தான் தூயவன்.
எருமை என்றுதான் விழுந்தது. அது உண்டாக்கிய சின்ன புன்னகையோடு எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.
“அறைக்கு வரலாமா?”
“ம் வாங்கோ.”
உணவுப் பார்சல்கள் அடங்கிய பையோடு வந்தான் தூயவன். அவள் தலைக்குக் குளித்து, வேறு உடையில் இருந்ததைப் பார்க்க அவனுக்கும் இதமாக இருந்தது.
“போட்டிருந்த உடுப்பு எல்லாம் எங்க?”
அவள் சங்கடமாக அங்கிருந்த பையைப் பார்த்தாள்.
“என்ன சங்கடம் உனக்கு?” என்றபடி அந்தப் பையை எடுத்தவன், “வீட்ட கொண்டுபோய்த் தோச்சுப் பாவிக்கப் போறியா, இல்ல இப்பிடியே எறிஞ்சு விடவா?” என்று கேட்டான்.
“எறிஞ்சு விடுங்கோ.”
அதைக் கட்டி ஓரமாக வைத்துவிட்டு, “வா, வந்து சாப்பிடு.” என்றபடி பையில் இருந்த பார்சல்களில் ஒன்றை எடுத்து அவன் பிரிக்க ஆரம்பிக்க, “நீங்க?” என்று கேட்டாள்.
“நானும் ஒரு குளியலைப் போடோணும் இசை. அதுக்குப் பிறகுதான் சாப்பாடு.”
“அவர்… உங்கட பிரென்ட்?”
இவ்வளவு காலமும் அண்ணா என்று சொன்னவள், அன்றைய நாளுக்குப் பிறகு அப்படி அழைப்பதை நிறுத்திவிட்டதைத் தூயவன் ஏற்கனவே கவனித்திருந்தான். இன்றும் அவள் அப்படியே சொல்ல, அவள் முன்னே வந்து நின்று, “அண்டைக்கு அவன் எனக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டவன். அதால அவனோட கோவிக்காத. இந்த மூண்டு நாளும் எனக்குத் துணையா இருந்தது, என்னோட சேந்து உன்னத் தேடினது, நான் உடஞ்சு நிண்ட நேரம் எல்லாம் என்னைத் தாங்கினது எல்லாம் அவன்தான். நீ சொன்னியே, எப்பிடியும் நான் வருவன் எண்டுற நம்பிக்கை இருந்தது எண்டு. அவன் என்னோட இல்லாம இருந்திருந்தா நிச்சயமா அது நடந்திருக்காது இசை. பிழைதான். ஆனாலும் கோவிக்காத ப்ளீஸ்.” என்று கெஞ்சலாக வேண்டினான்.
அவளுக்கும் புரிந்தது. ஆனால், அவள் நம்பும், பாசம் வைக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து நம்பிக்கைத் துரோகத்தையே பரிசாக்கினால் அவளும் என்ன செய்வாள்? அன்றைக்கு குரு இன்றைக்கு அகிலன்.
அவள் கண்ணீரும் அமைதியும் அவள் உள்ளத்தைச் சொல்ல, “இதுக்கு எல்லாம் காரணம் நான்தானே? என்னோடயே கதைக்கிறாய். அவனோட கதைக்க மாட்டியா? எனக்காக ப்ளீஸ்!” என்று அப்போதும் கெஞ்சினான்.
அவன் அப்படிக் கெஞ்சுவது ஒரு மாதிரி இருக்க, “இல்ல, நான் கதைக்கிறன்.” என்று சொன்னாள் அவள்.
“தேங்க்ஸ்!” என்று அவளை இலேசாக அணைத்து விடுவித்தான்.
“வா, வந்திருந்து சாப்பிடு.” மேசையை நோக்கி நடந்தபடி அழைத்தான்.
“நீங்களும் குளிச்சிட்டு வாங்க.”
“பசிக்கேல்லையா?”
இல்லை என்று தலையை அசைத்தாள். உண்மையில் பசியெல்லாம் வற்றிய உணர்வு அவளுக்கு. விமல் வாங்கித் தந்தான்தான். அதில் ஏதும் இருக்குமோ என்கிற பயத்தில் உண்ணவில்லை. உடைக்காத பக்கெட் பிஸ்கெட்டுகளை மட்டுமே உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட்டாள்.
அவன் இரண்டு நிமிடத்திலேயே குளித்து, உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.
முற்றிலும் ஈரம் நீங்கியிராத தலையைக் கையாலேயே உதறியபடி வந்தவனின் குளித்ததில் சிவந்துவிட்ட விழிகளும் புத்துணர்ச்சியோடு மிளிரும் முகமும் அவள் பார்வையைத் தழைக்க வைத்தது.
“குருவும் குளிக்கோணும் எண்டவன். அவனையும் கூப்பிடட்டா?” என்று கேட்டான்.
“ஏன் என்னட்ட கேக்கிறீங்க? கூப்பிடுங்க.”
குரு வந்ததும் வராததுமாக இவள் முன்னால் வந்து நின்றான். “உண்மையா சொறிமா. இனி இந்த எருமைக்காக ஒரு வேலையும் நான் செய்ய மாட்டன். இவனுக்குப் பாவம் பாத்து உனக்கு முன்னால கெட்டவனா நிக்கிறன். துளசி கூட இன்னும் என்னோட ஒழுங்கா கதைக்கிறேல்ல.” என்று அவன் கேட்ட மன்னிப்பைக் காட்டிலும் அவன் சொன்ன எருமை சின்னதாய்ச் சிரிப்பை வரவழைக்க, அவள் பார்வை தூயவனைத் தொட்டு மீண்டது.
“அதெல்லாம் பரவாயில்ல அண்ணா.” என்றாள் அதே சிரிப்புடன்.
அவனுக்கும் அவள் தன்னை மன்னித்ததை விடவும் தூயவனிடம் அவள் பரிமாறிக்கொண்ட பார்வைப் பரிமாற்றமும் சிரிப்பும்தான் வியப்பிலாற்றின. திரும்பித் தூயவனைப் பார்த்து வேண்டுமென்றே புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினான்.
தூயவனின் முகத்தில் அடக்க முடியா நகைப்பு. ஆனாலும் அடக்கி, “என்ன பார்வை? போ, போய்க் குளிச்சிட்டு வா!” என்று அவனைத் துரத்திவிட்டான்.
இதுவரையில் அவனை அப்படி அவள் பார்த்ததில்லை. தன் பல் வரிசை தெரிய மெல்ல நகைத்தவனிடமிருந்து பார்வையை அகற்றச் சிரமப்பட்டாள் யாழிசை. மனம் இனிமையாய்க் குழம்பித் தடதடத்தது.
“ஹல்லோ, என்ன?” என்றான் அவன் அவளைக் கண்டுகொண்டு.
பார்வையைத் தழைத்து ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள் அவள்.
வேகமாய் அவளை நெருங்கித் தாடையை நிமிர்த்தியவன், “வந்திடுவானா?” என்றான் ரகசியக் குரலில்.
அவள் புரியாமல் பார்த்தாள். குளியலறைப் பக்கமாகப் பார்வை வேகமாகச் சென்று வர, அதைவிட வேகமாக அவள் நெற்றியில் இதழ்களை ஒற்றி எடுத்துவிட்டு, அவள் ஆதாரங்களை ஒற்றை விரலால் அழுத்தமாக வருடிவிட்டு விலகினான் அவன்.
குப்பென்று முகம் சிவந்துபோயிற்று அவளுக்கு. அதுவே தன்னை அழைப்பது போலிருக்க பால்கனிக்கு ஓடிப்போனான் தூயவன்.
மனம் தானாக அவளை ‘புக்’ பண்ணிய தினத்தில் சென்று நின்றது.
அன்று அவனே உணராத முத்தம் அது. ஆனால் இன்று, எதுவும் நடக்கவேயில்லை. ஆனால், என்னென்னவோ நடந்ததுபோல் உள்ளம் கிளர்ச்சியுற்றிருந்தது. ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுக் கேசம் கோதினான். எந்த உணர்வும் அடங்குவதாக இல்லை. அத்தனையும் அவளிடம் போ, அவளை அள்ளிக்கொள் என்று அவனைத் தள்ளிக்கொண்டிருந்தன.
மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தான். இன்னும் குறையாமல் இருந்த அவளின் முகத்தின் சிவப்பு, அவள் மனநிலையும் அதேதான் என்று சொல்லியதில் அவனுக்குள் ஒரு சந்தோச ஊற்றுப் பொங்கிற்று.
அவள் சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள். தானும் வந்து அவள் எதிரில் அமர்ந்தான். அவள் தலை இன்னுமே தாழ்ந்து போனது.

