கடன் அன்பை முறிக்கும் 41 – 1

அத்தியாயம் 41

 

 

அவளின் பழைய ஆடைகள் அடங்கிய பையைக் கையோடு எடுத்துக்கொண்டு வந்து, அங்கே ஹோட்டலுக்கு வெளியே இருந்த பெரிய குப்பை வாளிக்குள் போட்டான் தூயவன். அந்தப் பையைத் தான் கொண்டு வருகிறேன் என்று யாழிசை சொன்னபோதும் அவளிடம் அவன் கொடுக்கவில்லை.

 

அவர்களின் வாகனம் இருக்கும் திசையை நோக்கி அவன் நடக்க, அவள் தேங்கி நின்றாள்.

 

“என்ன?” என்றான் திரும்பிப் பார்த்து.

 

“அது… அந்த வேனுக்கு ஒருக்கா போகோணும்.” கொஞ்சம் தயங்கிச் சொன்னாள் யாழிசை.

 

“ஏன்? அங்க எதையும் விட்டுட்டியா?”

 

இல்லை என்று தலையை அசைத்துவிட்டு, “அங்க அந்த சீட் கிளீன் பண்ணோணும்.” என்றாள் சங்கடத்தோடு.

 

“அதெல்லாம் நான் செய்திட்டன். நீ வா!” என்றதும் அவள் முகத்தில் அதிர்ச்சி.

 

“நீங்க ஏன்?”

 

“ஏன்? நான் செய்தா என்ன? நீ வா!” என்று அழைத்துக்கொண்டு நடந்தான்.

 

கொஞ்ச நேரத்துக்கு அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. திரும்பவும் தயங்கி தயங்கி அவன் முகம் பார்த்தாள்.

 

“இப்ப என்ன?”

 

“அம்மா அண்ணாவோட கதைக்கோணும். பயந்துகொண்டு இருப்பினம்.” சொல்லும்போதே குரல் அடைத்தது. அவளுக்கு இணையாக அவர்களும் பயந்திருப்பார்களே.

 

சொல்லத்தான் வேண்டும். அதுவும் நேசன், அவனையும் நம்பாது தனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் அவளைத் தேடி அலைந்துகொண்டே இருக்கிறான். தெரிந்தும் அவன்தான் சொல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கிறான்.

 

“அகிலன் எங்களை முந்திக்கொண்டு எதையாவது செய்ய முதல் நாங்க அவனைப் பிடிக்கோணும் இசை. இப்ப நாங்க அங்க ஆருக்கு எடுத்துச் சொன்னாலும் கதை கட்டாயம் வெளில வந்திடும். நான் சொல்லுறதைக் கேட்டு நேசன் அண்ணா அமைதியா இருப்பார் எண்டுறது சந்தேகம். சித்தி அங்க உங்கட வீட்டதான் இருக்கிறா. அவா மூலம் அகிலனுக்குக் கதை போகும். இன்னொரு ஆறு மணித்தியாலம். நேராவே போய்க் கதை. அதுக்கிடையில அகிலனை நான் தூக்கிடுவன்.”

 

அவன் சொன்னதைக் கேட்க அவளுக்குப் பயமாக இருந்தது. இந்தத் தூக்குதல், கடத்துதல் என்கிற சொற்களைக் கேட்டாலே நெஞ்சுக்கூடு ஆட்டம் கண்டது. “வீண் பிரச்சினைகள் வேண்டாமே. அதுவும் என்னால.” என்றாள் கெஞ்சலாக.

 

அப்படி எப்படி விட முடியும்? அவன் தங்கையையே மணந்து, அவன் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, அதுவும் அன்று அவனாகவே அழைத்து எப்படி நாடகமாடினான்? அதைவிட அவனுக்கும் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிய வேண்டாமா? அவனுடைய இசையரசிமீது கையை வைத்தவனைச் சும்மா விடுவதா?

 

“அதை அங்க போய்ப் பாப்பம். நீ வா!” அந்தப் பேச்சை அந்த இடத்திலேயே கத்தரித்துவிட்டு அவன் நடக்க, அவள் முகம் சுருங்கிப்போனது.

 

சொல்வதைக் கேட்கிறான் இல்லையே. தான் நினைத்ததைச் செய்யத்தானே நிற்கிறான். அவள் பட்டவை போதாதா? யாரால் நடந்திருந்தாலும் அவளை நிம்மதியாக விட்டால் போதும் என்றுதான் நினைத்தாள்.

 

ஆனால், அகிலனைத் தூக்குவதற்குத் தூயவன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தான்.

 

அவனுடைய பஸ் ட்ரிப் முடிந்ததும் பஸ்ஸை கொண்டுபோய் டிப்போவில் நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுவான் அகிலன். அப்படி அவன் வெளியில் வருகையில் தூக்கச் சொல்லியிருந்தான்.

 

அப்படி அவனைத் தூக்கிய பிறகுதான் யாழிசை கிடைத்துவிட்ட செய்தி ஊரில் யாருக்காய் இருந்தாலும் தெரிய வேண்டும்.

 

விமல் சொன்ன அந்த வல்லவனுக்கும் வல்லவன் யார் என்று காட்ட வேண்டாமா?

 

அதுவரை நேரமும் அங்கே தள்ளி நின்று துளசியோடு பேசிக்கொண்டிருந்த குரு, இவர்களைக் கண்டுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு வந்தான்.

 

யாழிசை பின்னால் ஏறிக்கொள்ள, கதவைச் சாற்றினான் தூயவன். ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையில் ஏறி அமர்வதற்குப் போனான் குரு.

 

“டேய்!”

 

அவன் திரும்பிப் பார்க்க, “நீயே ஓடு!” என்று திறப்பை நீட்டினான் தூயவன்.

 

அதை வாங்கிக்கொண்டு அவன் அந்தப் பக்கம் போக முனைய, இப்போது அவன் பின் சட்டையைப் பற்றி இழுத்தான்.

 

“என்னடா?”

 

“நான் அவளோட பின்னால இருக்கப் போறன்.” முகத்தைத் திருப்பிப் பார்வையை எங்கோ வைத்துக்கொண்டு சொன்னான்.

 

நண்பனைக் கூர்ந்த குருவின் கண்ணோரங்கள் நகைப்பில் சுருங்கின. “என்ன மச்சான்? கேக்கேல்லை.” என்றான்.

 

சிரிப்பை உதட்டுக்குள் மடக்கியபடி, “நான் பின்னால ஏறப்போறன். நீ ஒழுங்கா வேனை ஓட்டு!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் பின் கதவைத் திறந்துகொண்டு ஏறினான்.

 

ஏற்கனவே அவன் மீது மனச் சுணக்கத்தில் இருந்தாள் யாழிசை. அந்த வாகனத்தில் ஏறிய கணம், தவிர்க்கவே முடியாமல் கடந்த இரண்டு நாள்களின் நினைவு வேறு வந்து தாக்கிற்று. அதோடு போராடிக்கொண்டிருந்தவள் வெளியே நடந்த பேச்சில் கவனம் வைக்கவில்லை. இவன் ஏறவும் கேள்வியாகப் பார்த்தாள்.

 

“யன்னல் பக்கமா தள்ளி இரு.” அவள் விழிகளில் தொக்கியிருந்த கேள்வியைப் படித்தாலும் பதில் சொல்லாமல் சொன்னான்.

 

அவளும் காரணம் தெரியாது தள்ளி இருந்தாள். அவளின் அருகில் தானும் அமர்ந்துகொண்டு கதவை இழுத்துச் சாற்றினான அவன்.

 

அவளிடத்தில் மெல்லிய திகைப்பு. குருவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

 

“எனக்கு உன்னோடயே இருக்கோணும் இசை.” அவள் புறம் இலேசாகச் சாய்ந்து மெல்லிய குரலில் சொன்னவனை இன்னும் திகைப்பு நீங்காமல் பார்த்தாள் அவள்.

 

அவனோ இத்தனை நாள்களும் அலைந்த அலைச்சலுக்கு ஓய்வு எடுக்கிறவன் போன்று, தன் இருக்கையில் நன்றாகத் தளர்ந்து அமர்ந்தான்.

 

“அண்ணா என்ன நினைப்பார்? ப்ளீஸ், முன்னுக்குப் போங்க.” மெல்லிய சங்கடத்துடன் முணுமுணுத்தாள்.

 

“அவன் என்ன நினைக்கக் கிடக்கு?” என்றவன், வாகனத்தை பார்க்கிங்கில் இருந்து எடுத்து, வீதிக்கு ஏற்றியவனிடம், “டேய் மச்சான், நீ ஏதும் நினைப்பியாடா?” என்று கேட்டான்.

 

“நான் நினைச்சா மட்டும் கேக்கிற ஆள்தானே நீ?”

 

“என்னடா இப்பிடிச் சொல்லிட்டாய்? உயிர் அவளுக்கு எண்டா உடல் உனக்கடா.”

 

பதில் எதுவும் சொல்லாது கண்ணாடி வழியே இவனைப் பார்த்த குருவின் விழிகள் ‘அப்படியா’ என்றன நகைப்புடன்.

 

‘பக்கத்தில அவளையும் வச்சுக்கொண்டு இவனை…’ சட்டென்று விரிந்துவிட்ட சிரிப்பை உதட்டைக் கடித்து அடக்கி, “அடிங்!” என்று எட்டி அவன் பின் மண்டையிலேயே ஒன்றைப் போட்டு, “ஒழுங்கா ரோட்டை பாத்து ஓட்டு!” என்ற தூயவன் முகத்தில் இலேசான வெட்கத்தின் சாயல்.

 

வாகனம் வீதியில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது.

 

“விமலைக் கையோட தூக்கிப் போட்டுக்கொண்டே வந்திருக்கலாம். அகிலனோட சேத்து இவனுக்கும் ரெண்டு போட்டிருக்க எல்லாம் வெளில வந்திருக்கும்.” பாதையில் கவனமிருக்கச் சொன்னான் குரு.

 

“அவனைப் பக்கத்தில வச்சுக்கொண்டு சத்தியமா என்னால சும்மா இருக்கேலாது மச்சான். ஓடுற வேனில இருந்து அவனைத் தள்ளிவிட்டாலும் தள்ளி விட்டுடுவன். அதான் விட்டனான். தாயும் தகப்பனும் அங்க இருக்கேக்க எங்க போகப் போறான். தமையனும் உள்ளுக்கு எண்டேக்க அங்க வாறதைத் தவிர அவனுக்கு வேற வழியே இல்ல.” விமலைக் குறித்துப் பெரிய கவலை இல்லாது சொன்னான் தூயவன்.

 

கூடவே, இதற்கெல்லாம் சூத்திரதாரி தன் தந்தை என்பது உண்மை எனில் அவரை மாட்டிவிடுவதற்காகவும் வருவான் என்று நினைத்தான்.

 

அந்தப் பேச்சு வந்ததும் திரும்பித் தூயவனைப் பார்த்தாள் யாழிசை. அவளை உணர்ந்து திரும்பி, என்ன என்று புருவங்களை உயர்த்தினான் அவன்.

 

அவனின் அந்தச் செய்கையில் அவள் பார்வை தானாக அவன் புருவங்களுக்குப் போனது. பயந்தே பழகியவள் உள்ளம் திக்கென்று அதிர, வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

அவளையே பார்த்த தூயவன், தன் கரத்தைக் கொண்டுபோய் அவள் மடியில் கிடந்த கரத்துடன் கோர்த்தான்.

 

திடுக்கிட்டுத் திரும்பியவள் குருவைப் பார்த்துவிட்டுக் கையை விலக்கிக்கொள்ள முயன்றாள். அவன் விடவில்லை.

 

“என்ன கேக்கோணும்?”

 

“இது எல்லாத்துக்கும் ஆர் காரணம்? உங்கட அப்பாவா?” அவ்வளவு நேரமாக அதைக் கேட்பதா இல்லையா எண்டு யோசித்துக்கொண்டே இருந்தவள் இப்போது கேட்டுவிட்டாள்.

 

உணவு வேளையின் போது இதே கேள்விக்குப் பதில் சொல்லாது தவிர்த்தவனின் செய்கை வேறு, அவளைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது.

 

அவன் முகம் மாறியது. கரமும் அவளிடமிருந்து தானாக விலகியது. அவ்வளவு நேரமாக உடலைத் தளர்த்தி, இலகுவாகச் சாய்ந்து அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்.

 

அவர்தான். அவர் மீது அவனுக்கும் நிறையக் கோபம்தான். அவளை இந்தளவில் வதைத்தவரை மன்னிக்க அவன் தயாராக இல்லைதான். ஆயினும்கூட, அதை அவளிடம் சொல்ல முடியாமல் பாசம் வந்து நடுவில் நின்றது.

 

என்ன இருந்தாலும் அவர் அவனுடைய அப்பா. அவள்தான் அவரின் மருமகள். அவை இரண்டும் மாறா எனும்போது அவள் மனத்தில் அவர் மீதான கசப்பை விதைக்க அவனால் முடியவில்லை.

 

அதில், “ஆர் வேணுமெண்டாலும் காரணமா இருக்கட்டும். அவேய நான் சும்மா விடமாட்டன். அதால நீ அதைப் பற்றி யோசிக்காத. ஃபிரீயா இரு.” என்றான் அவன்.

 

அவளுக்கு அந்தப் பதிலில் ஒப்புதல் இல்லை. இதை அவனிடம் எதிர்பார்க்கவும் இல்லை. மனம் ஏமாற்றத்தில் சுருண்டது. எத்தனையோ ஏமாற்றங்களைக் கடந்து வந்துவிட்டாள். அவனும் தன்னிடம் உண்மையாக இல்லை என்றபோது இதயத்தில் ஊசியால் குத்தியதுபோல் சுருக்கென்று வலித்தது.

 

கடத்தப்பட்டது அவள். அத்தனை கஷ்ட துன்பங்களையும் அனுபவித்தது அவள். என்ன காரணம் என்று தெரியாது, அடுத்த நொடி என்ன நடக்குமோ என்று தெரியாது, இரவில் உறக்கம் தூக்கி அடித்தபோதெல்லாம் யாராவது தன்னை நெருங்கிவிடுவார்களோ, தனக்கு ஏதும் நடந்துவிடுமோ என்று பயந்து பயந்து செத்தது அவள். அவளுக்கு யார் என்று தெரியக் கூடாது என்றால் எப்படி?

 

தூயவன் என்ன நினைத்தானோ மீண்டும் அவள் கரத்தைப் பற்றப் போனான். இந்த முறை பிடிவாதமாகத் தன் கரத்தை விடுவித்துக்கொண்டு, அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தாள் யாழிசை.

 

கீழுதட்டைப் பற்றியபடி அவளையே பார்த்த தூயவன், சீட்டில் தலையைச் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான்.

 

அவள் கோபம் அவனுக்குத் தெரியாதா என்ன? ஆனால்… நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறியது.

 

*****

 

ஏசி வாகனம். அலுங்காமல் குலுங்காமல் அந்த வேக வீதியில் சீராகப் பயணித்துக்கொண்டிருந்தது. யாழிசையின் பார்வை, நகரும் வீதியோரத்தில் நிலைத்திருக்க, எண்ணங்களோ இறந்துபோன கடைசி இரண்டு நாள்களுக்குள் தொலைந்துபோயிருந்தன.

 

அகிலனை நம்பி ஏறினாள். விழித்துப் பார்க்கையில் விமலோடு இன்னொரு வாகனத்தில் இருக்கிறாள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று யோசிப்பதற்கே அவளுக்கு நேரம் தேவைப்பட்டிருந்தது. பதறி, பயந்து, நடுங்கி விமலிடம் எவ்வளவு கேட்டும் இந்தக் கடத்தலுக்கான காரணத்தை அவன் சொல்லவே இல்லை.

 

வீட்டில் தேடுவார்கள், பயந்துவிடுவார்கள், என்னை விட்டுவிடு என்று கெஞ்சிக் கேட்டும் அவன் அசையவில்லை. ஏன் இப்படி நடக்கிறாய், நான் உனக்கு என்ன செய்தேன் என்றதற்கும் பதில் இல்லை. கடைசியில் அவளாகவேதான் அழுதழுது ஓய்ந்துபோனாள்.

 

அன்று துளசிக்கு உதவியது காரணமா என்றுதான் முதலில் யோசித்தாள். அதைத் தாண்டி அவனுக்கும் அவளுக்குமிடையில் வேறு எதுவும் இல்லையே. தூயவன் வேறு தேடிவந்து எச்சரித்திருந்தானே. ஆனால், அதுதான் காரணமென்றால் துளசியின் நெருங்கிய உறவினனான அகிலன் எப்படி அவனுக்கு உதவுவான்?

 

எவ்வளவு யோசித்தும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல்தான் இருந்தது. முதலில் இப்படி அவளைக் கடத்திப்போய் என்ன செய்யப்போகிறான்?

 

தூயவன் அவளை நேசிப்பதும், அன்று குரு வீட்டில் வைத்து மனத்தைச் சொன்னதும் கருணாகரனுக்குத் தெரிய வந்திருக்காது என்றுதானே தூயவனே முதலில் நினைத்திருந்தான். நேசன் வந்து யாழிசையிடம் கேட்டு, அது அவன் காதுக்கு எட்டிய பிறகுதான் அவனுக்கே கருணாகரன் மீது சந்தேகம் வந்திருந்தது.

 

அப்படி இருக்கையில் நடந்த கடத்தலோடு கருணாகரனை முதலிகள் அவள் முடிச்சிட்டுப் பார்க்கவில்லை.

 

அதே நேரம், இவ்வளவு பெரிய காரியத்தை விமல் மாதிரியான சாதாரண ஒருவன் செய்வானா என்று யோசித்தாள். அன்று துளசியைக் காப்பாற்றியது அவனை இந்தளவிற்குத் தூண்டும் என்றும் நம்பவில்லை.

 

தூயவன் தன்னோடு வந்து கதைத்தது துளசி மூலமோ, மிதிலன் மூலமோ கருணாகரனுக்குத் தெரிய வந்திருந்தால் நிச்சயம் அவர் இதைச் செய்வார். அந்தத் திசையில் யோசித்ததும் ஒருமுறை அவளுக்குப் பகீர் என்றுதான் இருந்தது. அப்போதும் தன் மகளின் வாழ்வோடு விளையாடியவனின் தம்பியைக் கூட்டுச் சேர்ப்பாரா என்கிற கேள்வி முட்டுக்கட்டை போட்டது

error: Alert: Content selection is disabled!!