அங்கே யாழிசை பக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருந்ததில் அவன் கோபம் முழுவதையும் அமைதியாக வாங்கிக்கொண்டு, “என்னாலதானே உங்கட தங்கச்சிக்கு இந்த நிலை. நானே கொண்டு வந்து அவளை உங்கட கைல தருவன். வீட்டுக்குப் போங்க அண்ணா.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அப்படி எப்படி அவனால் பேசாமல் இருக்க முடியும்?
அன்று காலையில் காவல் நிலையம் சென்று வருவதற்கு அகிலனும் கூட வந்தான். தானும் தன்னால் முடிந்த வரையில் அனுராதபுரப் பேருந்து நிலையத்தில் ஏதாவது அறிய முயற்சிப்பதாகவும் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றிருந்தான் அவன்.
ஜீவன் அடிக்கடி அழைத்துக் கேட்டுக்கொண்டே இருந்தான். அவன் நண்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில் இங்கே தேட ஆரம்பித்தார்கள். சுவர்ணாதான் எல்லோருக்கும் சமைத்து உணவு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள்.
இப்படி இருக்கையில்தான் தூயவனாக இரவு பதினொன்றைத் தாண்டிய பொழுதில் நேசனுக்கு அழைத்தான்.
“உங்கட தங்கச்சி கிடைச்சிட்டா.” என்றான் எடுத்ததுமே.
“விளையாடாத தூயவன். உண்மையாவா சொல்லுறாய்?” எனும்போதே அவனுக்குக் குரல் நடுங்கியது.
“ஐயோ என்ன?” என்னவோ ஏதோ என்று பெண்கள் அலற, “அவவோட கதைங்க.” என்று கைப்பேசியைக் கொடுத்தான் தூயவன்.
“அண்ணா.” எனும்போதே யாழிசைக்கு விம்மல் வெடித்தது. அங்கே நேசனும் நொடியில் நிலைகுலைந்துபோனான். “இசை. நீதானே? உனக்கு ஒண்டும் இல்லையே…” அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்ணீர்தான் வந்தது. கைகால்கள் எல்லாம் நடுங்கின.
அதற்குள், “என்ன தம்பி? தங்கச்சியோ? ஐயோ கொண்டா ஃபோன?” என்று எட்டி பறித்த கோகிலா, “அம்மாச்சி இசை?” என்றவரின் அழைப்பே கதறலாக வந்தது.
அதன் பிறகு நடந்ததெல்லாம் பெரும் பாசப்போராட்டம். இரண்டு பக்கமும் அத்தனை நாளின் தவிப்பை, பயத்தை, அனுபவித்த துன்பத்தை எல்லாம் அழுது தீர்த்தார்கள்.
‘பயப்பிடாதீங்க. எனக்கு ஒண்டும் இல்ல. நான் நல்லா இருக்கிறன். நீங்க பயப்பிடுற மாதிரி எதுவுமே நடக்கேல்ல.’ என்பதை அவர்கள் உள்ளத்தில் பதிவதுபோல் திரும்ப திரும்பச் சொன்னாள் யாழிசை.
அவர்களின் உணர்வுப் போராட்டம் ஓயும் நேரத்தில் அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கி, நேசனோடு பேசினான்.
“அண்ணா, நான் சொல்லுறத நல்லா கேளுங்க. ஊருக்க ஆர் கேட்டாலும் நீங்க சொல்ல வேண்டியது, நீங்க பேசின கலியாணம் இசைக்குப் பிடிக்கேல்ல. அத உங்களிட்டச் சொல்லேலாம அவா அனுராதபுரத்திலேயே இருந்திட்டா. அதுக்கும் மேல ஆரும் கேட்டா அவாவும் நானும் விரும்புறம், அது நடக்காது, ரெண்டு வீடும் ஓம் எண்டு சொல்லாது எண்டு தெரியும். அதுதான் அவா இப்பிடி நடந்திருக்கிறதா எண்டு சொல்லுங்க.” என்றதும் கொதித்து எழுந்துவிட்டான் நேசன்.
“என்னடா நடந்ததை உனக்குச் சாதகமாக்கப் பாக்கிறியா? கடைசி வந்தாலும் அவளை உனக்குக் கட்டித் தர மாட்டன் தூயவன். ஊராக்களிட்ட என்ன சொல்லோணும் எண்டுறது என்ர பிரச்சினை. அதைப் பற்றி நீ கவலைப்படாத!” என்றான் முகத்தில் அடித்தாற்போல்.
இரவு நேரம். இரு பக்கமும் பேசிக்கொண்டிருந்த இருவரின் பக்கத்தில்தான் மற்றவர்கள் எல்லோரும் நின்றிருந்தனர். அதில் இரு தரப்பும் பேசிக்கொண்டது எல்லோருக்குமே மிக நன்றாகக் கேட்டது.
குருவின் முகமே மாறிப்போனது. கை விரல்களை இறுக்கித் தன் கோபத்தை அடக்கினான். பெரும் பயத்துடன் தூயவனைப் பார்த்தாள் யாழிசை. ஒரு சொல் பொறுக்க மாட்டானே! தன் தமையனுக்கும் அவனுக்குமிடையில் சண்டை வந்துவிடுமோ என்றெண்ணிக் கலங்கினாள்.
ஆனால், முகம் மாறினாலும் நேசனைப் பொறுமையாகக் கையாண்டான் தூயவன்.
“எதையும் எனக்குச் சாதகமாக்கோணும் எண்டு எனக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. அவள் எனக்குத்தான் எண்டு அண்டைக்கே உங்களிட்டச் சொல்லிட்டேன். அதே மாதிரி அவளைப் பற்றி ஒரு சொல்லுப் பிழையா வாறதும் எனக்கு விருப்பம் இல்ல. வரக் கூடாது. நான் சொன்ன மாதிரி சொல்ல மாட்டீங்க எண்டா பொருத்தமா வேற ஒண்ட நீங்க எனக்குச் சொல்லுங்க.” என்றான் அவன்.
“அவளைப் பற்றிப் பிழையா ஒரு சொல்லு வரக்கூடாதா? இதப் போய் உன்ர அப்பாட்ட சொல்லு. நரம்பில்லாத நாக்கால அந்த ஆள் என்ன எல்லாம் சொன்னவர் எண்டு தெரியுமாடா உனக்கு? எல்லாம் உன்னால. இண்டைக்கு எங்கட மொத்தக் குடும்பமும் அனுபவிக்கிற அத்தனை துன்பத்துக்குக் காரணம் நீ. எங்களை விட்டுடு தூயவன். சத்தியமா உன்னோடயே உன்ர அப்பாவோடையோ போராடுற அளவுக்கு என்னட்ட வலு இல்ல. இதச் சொல்லுறதில எனக்கு எந்த வெக்கமும் இல்ல. உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன், எங்களை விட்டுடு.” என்றதும் தூயவனால் பேச முடியாமல் போயிற்று.
கோபப்பட்டால் கூட வேறு. இப்படிக் கெஞ்சினால்? யாழிசையைப் பார்த்தான். தமையன் பேசியதை எல்லாம் கேட்டு மௌனமாகக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவளை எப்படி விடுவான்? ஒற்றைக் கையை நீட்டி அவளைத் தன்னிடம் அழைத்தான். வந்தவளை குரு நிற்பதையும் மறந்து
தன்னுடன் சேர்த்தணைத்து, அவள் தலையை இதமாக வருடிக்கொடுத்தான்.
அது, அழாதே என்று அவன் தேற்றுவதாக அவளுக்கு மொழி பெயர்க்கப்பட அவள் கண்ணீர் இன்னுமே கூடிப்போயிற்று.
“நீ இல்லாட்டி என்ர தங்கச்சி இப்பவும் கிடைச்சிருக்க மாட்டாள் எண்டு எனக்குத் தெரியும். என்னால முடியாதது உன்னால முடிஞ்சிருக்கு. அதுவும் எனக்கு விளங்குது. தேடியலஞ்சு அவளைக் கண்டு பிடிச்சுத் தந்தத்துக்கு தேங்க்ஸ். உண்மையா மனதில இருந்துதான் சொல்லுறன். காலத்துக்கும் நீ செய்த இந்த உதவிய நான் மறக்கவே மாட்டன். ஆனா, அதுக்காக அவளை உனக்குத் தரேலாது. எனக்கு என்ர தங்கச்சி பணம் பகட்டோட வாழோணும் எண்டெல்லாம் ஆசை இல்ல.
அமைதியான நிம்மதியான ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கத்தான் விருப்பம். அதால இந்தக் கதையை விட்டுட்டு அவளைக் கொண்டுவந்து விடு.” உண்மையில் கோபதாபம் எதுவும் இல்லாமல் சொன்னான் நேசன்.
“அமைதியான நிம்மதியான வாழ்க்கை அவாக்கு என்னட்ட கிடைக்காது எண்டு எப்பிடி முடிவு செய்தீங்க நீங்க? முதலாவது எனக்கு மட்டும்தான் அவாவை பிடிச்சிருந்தது. இப்ப அவாக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. இதுக்குப் பிறகும் இன்னொரு கலியாணத்துக்குப் பாப்பீங்களா?” என்றதும் திரும்பவும் நேசனின் பொறுமை பறந்து போயிற்று.
அவன் சொன்ன விடயம் நேசனுக்கு அதிர்ச்சிதான். ஆனால், ஏற்றுக்கொள்ள மறுத்தான். “விசராடா உனக்கு? தேடிவந்து தன்னைக் காப்பாத்தினதில உணர்ச்சிவசப்பட்டு ஏதும் சொல்லி இருப்பாள். ரெண்டு நாள் போக, அவளே உன்ன விட்டு ஒதுங்கிடுவாள்.” என்றதும் அப்படி நடக்காது என்று தெரிந்தாலும் சுருக்கென்று வலித்தது அவனுக்கு.
குனிந்து இசையின் முகத்தைப் பார்த்தான். பரிதவிக்கும் விழிகளோடு அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
“ரெண்டு நாள் என்ன ரெண்டு வருசம் ஆனாலும் மாறமாட்டா. எனக்குத் தெரியும்.” என்றான் அவளையே பார்த்தபடி.
“என்ர தங்கச்சியப் பற்றி என்னைவிட உனக்குக் கூடத் தெரியுமா? நான் விளக்கமாச் சொன்னா அவள் விளங்கிக்கொள்ளுவாள். நீ தயவு செய்து அவளைக் கொண்டுவந்து விடு தூயவன். அவளைப் பாக்கோணும் எங்களுக்கு. முதல் இதெல்லாம் கதைக்கிற நேரம் இது இல்ல.”
ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டு, “சரி, நான் அவாவைக் கொண்டு வந்து விடுறன். ரெண்டு நாள் இல்ல. பத்து நாள் தாறன். தூக்கில தொங்கிருவம், கிணத்துல குதிச்சிருவம் எண்டெல்லாம் வெருட்ட கூடாது. அதத் தவிர்த்து அவளின்ர மனதை நீங்க மாத்த முயற்சி செய்யலாம். பத்தாவது நாள் நான் உங்கட வீட்டை வருவன். அண்ணனும் தங்கச்சியும் உங்கட முடிவை என்னட்டச் சொல்லுறீங்க.” என்றான் முடிவு போன்ற குரலில்.
சினம்தான் வந்தது நேசனுக்கு. ஆனால், அவன் பேச முதல் கைப்பேசியை வாங்கி கோகிலா பேசினார்.
“தம்பி, உங்களக் கெஞ்சிக் கேக்கிறன். முதல் எங்கட பிள்ளையக் கொண்டுவந்து கண்ணில காட்டுங்கப்பு. அவவப் பாக்காம கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கொண்டு இருக்கிறன். மற்றதெல்லாம் பிறகு பாக்கலாம் தம்பி.”
நேசனிடம் முட்டி மோதியவனால் அவரிடம் எதையும் சொல்ல முடியவில்லை. “சரி அம்மா. சரியா இன்னும் ஒரு மணித்தியாலத்தில உங்கட மகள் உங்களுக்கு முன்னால நிப்பா.” என்றுவிட்டுக் கைப்பேசியை வைத்தவன், “வா, போவம்!” என்றுவிட்டு வாகனத்தை நோக்கி நடந்தான்.
அவளிடம் ஒன்றும் சொல்லாமல் போகிறானே. யாழிசை கலங்கிப்போனாள். அவளால் அவனைப் பின் தொடர முடியவில்லை. நின்ற இடத்திலேயே நின்று போகிறவனையே பார்த்திருந்தாள்.
தூயவனுக்கும் அவள் தன்னோடு வரவில்லை என்று தெரியாமல் இல்லை. நான்கடி நடந்தவன் நின்று திரும்பி, “இப்ப உனக்கு என்ன?” என்றான் ஒரு கோபத்தோடு.
“ஒண்டுமே சொல்லாம போறீங்க?” உடைந்த குரலில் வினவினாள்.
“என்ன சொல்லோணும்?”
எதையும் பகராமல் அவனையே பார்த்தாள்.
“வீட்டை போக ஆசை இல்லையா உனக்கு?”
அவள் விழிகளில் நீர் திரண்டது. உடைத்துப் பேச மாட்டானா என்று பார்த்து நின்றாள்.
“நேரமாகுது இசை.”
“தூயவா!” அவளால் அதற்குமேல் முடியவில்லை. அவன் பெயரையே உடைந்த குரலில் யாசிப்பாக்கினாள்.
ஒரு கணம் தன்னை அடக்கப் பார்த்து முடியாமல் அவளை இரண்டு எட்டில் அணுகியவன், அவள் கையைப் பற்றி இழுத்து, “நீ எனக்குத்தானே? சொல்லு! நீ எனக்குத்தானே. இல்லையாம் எண்டு உன்ர அண்ணா சொல்லுறார். ரெண்டு நாள் போனா மனம் மாறிடுவியாம். அதையும் ஒருக்கா எனக்குப் பாக்கோணும்.” என்று அடக்கப்பட்ட சினத்துடன் சீறினான்.
“ஓ! அப்ப நான் மாறிடுவன் எண்டு நினைக்கிறீங்களா?” நலிந்து நடுங்கிய குரலில் வினவியவளுக்கு அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவன் அணைப்புக்குள் அடங்கி, அவன் தந்த முத்தங்களை வாங்கி, அவன் உணர்வுகளோடு இரண்டரக் கலந்தவள் மாறிவிடுவாள் என்று எப்படி நினைத்தான்?
“அதப் போய் உன்ர வீட்டில சொல்லு!”
“நீங்க என்ன நினைக்கிறீங்க. அதச் சொல்லுங்க முதல்!” அவள் பிடிவாதம் பிடித்தாள்.
“உன்னக் கொண்டுபோய் உன்ர வீட்டில விடப்போறன். அப்ப நான் என்ன நினைக்கிறன் எண்டு தெரியேல்லையா உனக்கு?” முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னான்.
“எனக்கு நேரா பதில் சொல்லுங்க நீங்க.”
“நீ எனக்குத்தான்!” என்றான் அவன் இப்போதும் அவளைப் பாராமல்.
“அதச் சொல்லவே பிடிக்கேல்லையோ? முகமே பாக்காமச் சொல்லுறீங்க.”
சரக்கென்று திரும்பி அவளை முறைத்தான் அவன்.
அவள் மனத்தாங்கல் எல்லாம் அப்போதுதான் கரைந்தது. “பிறகு என்னத்துக்கு இவ்வளவு கோவம்?” மென்மையாகவே வினவினாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு முகம் திருப்பிக் கேசம் கோதினான் அவன். அவள் மனத்தில் இடம் பிடிப்பதற்கே அவன் பாட்ட பாடுகள் ஓராயிரம். இதில் இரண்டு நாள்களில் மனம் மாறிவிடுவாள் என்றால் கோபம் வராமல் போகுமா?
அவள் அவனையே பார்த்திருந்தாள். அந்தப் பார்வையில் அவனுக்குள் என்னவெல்லாமோ நிகழ ஆரம்பித்தன.
“இப்பிடிப் பாக்காத இசை. பப்ளிக் பிளேஸ்ல நிக்கிறம்.” என்று எச்சரித்தான்.
“ஆரும் கேட்டா என்ன சொல்லுறது?”
“நானும் உன்ர அண்ணாவும் கதைச்சதை கேட்டுக்கொண்டுதானே நிண்டனி. இனி நீதான் முடிவு செய்யோணும்.” அவனும் ஒரு முடிவுக்கு வந்திருந்ததால் தெளிவாகவே சொன்னான்.
ஒரு கணம் அவனையே இமைக்காது பார்த்தவள், “சரி வாங்க!” என்றுவிட்டுச் சென்று வாகனத்தில் ஏறிக்கொண்டாள். இப்போது தூயவன் வாகனத்தை எடுக்க, குரு அவன் அருகில் அமர்ந்துகொண்டான்.

