கடன் அன்பை முறிக்கும் 43 – 1

அத்தியாயம் 43

 

 

தூயவனின் வாகனம் கேட் வாசலில் வந்து நின்றதுதான் தாமதம். மாதவியைத் தவிர்த்து அத்தனை பேரும் வாசலுக்கு ஓடி வந்திருந்தனர்.

 

அவளைக் கட்டிக்கொண்டு கோகிலா அழுது தீர்த்தார். என்னதான் அவள் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்திருந்தாலும் அவளோடு கைப்பேசியில் பேசியிருந்தாலும் அவளைக் கண்ணால் கண்ட பிறகுதான் பெற்ற மனத்தின் தவிப்பு அடங்கிற்று.

 

நளினியின் விழிகளிலும் கண்ணீர். அதுவும் சுரபி அவளை இடுப்போடு கட்டிக்கொண்டு உடைந்து அழுததைப் பார்த்த எல்லோர் விழிகளும் கசிந்து போயின. நேசன் பனித்துவிட்ட விழிகளோடு தங்கையின் தலையை வருடி உச்சி முகர்ந்தான்.

 

இதற்குள் அயலட்டையினர் சேர ஆரம்பித்திருந்தனர். என்னதான் தத்தமது வீடுகளில் அடங்கியிருந்தாலும் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காணவில்லை என்கையில் அந்த வீட்டில் ஒரு காதை வைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். வாகனச் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்து, யாழிசையைக் கண்டுவிட்டு ஓடி வந்திருந்தார்கள்.

 

எங்கே போனாள், இந்த மூன்று நாள்களும் என்ன செய்தாள் என்பவைதான் எல்லோர் மனத்திலும் இருந்த கேள்விகள்.

 

தூயவன் கையைக் கட்டிக்கொண்டு அப்படியே நின்றான். வாயே திறக்கவில்லை. நேசனுக்கு அவனிடம் சொல்கையில் தெரியவில்லை. ஆனால், அந்தக் கேள்விகளை எதிர்கொள்கையில் திணறிப்போனான்.

 

தூயவன் சொன்னதைத் தவிர்த்து வேறு எப்படிச் சொன்னாலும் அது யாழிசையின் பெயரை நிச்சயம் கெடுக்கும் என்று தெரிந்தது. அதற்கென்று அதைச் சொல்லவும் முடியவில்லை.

 

ஆனால், நளினி யோசிக்கவில்லை. திரும்பி ஒரு முறை தூயவனைப் பார்த்தாள். அவன் நின்ற நிலையில் மாற்றமில்லை. அவனிடம் தடுமாற்றமும் இல்லை.

 

அவனை அவளுக்கும் பிடிக்காதுதான். ஆனால், என்ன இருந்தாலும் யாழிசையைக் கொண்டுவந்து அவர்களிடம் சேர்த்தவன் அவன். அவன் இல்லாமல் இருந்திருக்க இன்றும் யாழிசை கிடைத்திருக்க மாட்டாள். அதற்குள் என்னவெல்லாம் நடந்திருக்குமோ, எத்தனை மோசமான பேச்சை எல்லாம் கேட்டிருப்பார்களோ. அத்தனையையும் தடுத்திருக்கிறான். தன் விருப்பத்தையும் சொல்லிவிட்டுச் சம்மதியுங்கள் என்றுதான் நிற்கிறான்.

 

எல்லாவற்றையும் விட அந்தக் கருணாகரன்? என்ன பேச்செல்லாம் பேசினான்? அவனைச் சும்மா விடுவதா? அந்தக் கோபமும் உந்தியதில், “அவளுக்கு நாங்க பேசின கலியாணம் பிடிக்கேல்லையாம். வேற ஆரையோ விரும்புறாளாம். அதத் தமையனிட்ட சொல்லத் தைரியம் இல்லாம அங்க ஹொஸ்டல்லயே இருந்திருக்கிறாள்.” என்றாள் பட்டென்று.

 

“ஏய்! என்ன கதைக்கிறாய்?” இதைக் கொஞ்சமும் எதிர்பாராத நேசன் அவளிடம் உறுமிக்கொண்டு வந்தான்.

 

அவள் பயப்படவில்லை. “நான் என்ன பொய்யா சொல்லுறன்? அப்பிடி எண்டா உங்கட தங்கச்சிய நேராவே கேளுங்களன்.” என்று நின்றாள்.

 

“வாய மூடு நளினி!” வாய்க்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவள் கணவன்.

 

“இதத் தவிர வேற என்ன சொன்னாலும் ஊர் வாய் மூடாது.” என்றாள் அவளும் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

 

“அப்பிடி ஆர விரும்பிறாவாம்? அப்பிடியே இருந்தாலும் ஒரு வார்த்த நேரா சொல்லுறத விட்டுப்போட்டு இதென்ன பழக்கம்? தகப்பனுக்குச் சமனா வளத்த தமையன என்ன பாடுபடுத்திப்போட்டா?” ஆளாளுக்கு யாழிசையைப் பந்தாட ஆரம்பித்தனர்.

 

அதைத் தவிர்க்க முடியாத அவள் குடும்பம் என்ன சொல்வது என்று தெரியாது திகைத்து நின்றது. தூயவன் இறுகிப்போய் நேசனைத்தான் பார்த்தான். அவன் இவனை முறைத்தான்.

 

யாழிசை யார் முகத்தையும் பார்க்கவில்லை. காதுகளை இறுக்கிப் பொத்திக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அது முடியாமல் போனதில் அன்னையின் மடிக்குள் தலையைப் புதைத்துக்கொண்டாள்.

 

கடைசியில் மாதவிதான், “என்னதான் வளந்த பிள்ளை எண்டாலும் ஒரு பிரச்சினையைக் கையாளுற அளவுக்கு அனுபவம் இல்லைதானே. அண்ணான்ர மனதையும் நோகடிக்கேலாம, உண்மையச் சொல்லத் தைரியமும் இல்லாம யோசிக்காம நடத்திட்டா. அதையே கதச்சு கதச்சுத் திரும்பவும் ஏதும் பிழையா நடக்க நாங்க தூண்டிவிடக் கூடாது எல்லோ. அதால விடுங்கோ. எங்களுக்கு எங்கட பிள்ளை வந்து சேர்ந்ததே போதும்.” என்று சமாளித்து, எல்லோரையும் அனுப்பிவைத்தார்.

 

நேரம் வேறு அடுத்த நாளின் முதல் மணித்துளியைத் தொட்டுவிட்டதில் அயலட்டையினரும் களைந்து போயினர்.

 

உடனேயே தூயவனை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் பின்னால் போனான் நேசன்.

 

“ஆர் இதுக்கெல்லாம் காரணம்? உன்ர அப்பாதானே?” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.

 

“அதைப் பற்றி உங்களோட கட்டாயம் கதைக்கோணும் நேசன் அண்ணா. அதுக்கு இன்னொரு நாளைக்கு வாறன். இப்ப நான் போகோணும்.” என்றான் தூயவன் பிடிகொடுக்காமல்.

 

“டேய் மறைக்காதயடா. எனக்கு இப்ப உண்மை தெரியோணும்.”

 

“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? இல்ல, என்ன செய்யேலும் உங்களால?” என்ன சொன்னாலும் கேளாமல் தான் பிடித்த பிடியிலேயே நின்ற நேசனின் மீது சட்டென்று பற்றிக்கொண்டு எரிச்சலில் சினந்தான்.

 

“அந்தத் திமிர்லதானேடா அப்பனும் மகனும் ஆடுறீங்க. நீ சொல்லு முதல். இதுக்கு ஆர் காரணம்? எனக்குத் தெரியோணும்.”

 

“ப்ச்! எரிச்சலைக் கிளப்பாதீங்க அண்ணா. உங்களை மாதிரித்தான் நானும் இந்த மூண்டு நாளும் ஆன நித்திரை இல்லாம அலைஞ்சிருக்கிறன். இனியாவது நான் படுத்து எழும்புறேல்லையா? இல்ல, என்ர வேலைகளைப் பாக்கிறேல்லையா?” என்று கேட்டதும் நேசன் கொஞ்சம் நிதானமானான்.

 

ஆனாலும், “எனக்குத் தெரியும். உன்ர அப்பாதான். அதாலதான் நீ வாயத் திறக்கிறாய் இல்ல. ஆனா விடமாட்டன். எனக்கு நீ பதில் சொல்லியே ஆகோணும்.” என்று பிடிவாதமாகச் சொன்னான்.

 

அப்போது, அங்கே மாதவியை அழைத்துக்கொண்டு வந்தான் குரு.

 

“என்ன சித்தி?”

 

“எனக்கு உன்னோட கொஞ்சம் கதைக்கோணும் அப்பு.” என்றவரின் விழிகளில் பெரும் கலக்கம்.

 

எல்லோர் முன்னும் கதைக்க நினைத்திருந்தால் தான் இருந்த இடத்துக்கு அவனைக் கூப்பிட்டிருப்பார். தனியாகக் கதைக்க எண்ணியதாலேயே தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்று விளங்க, “சரி வாங்க!” என்று, அங்கே வீதியின் ஓரமாக நின்றிருந்த வாகனத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போய், உள்ளே ஏற்றி அமர்த்திவிட்டு, என்ன என்று விசாரித்தான்.

 

“ஐயா, இத எண்டைக்கும் உங்களிட்டச் சொல்லுற எண்ணம் எனக்கு இருக்கேல்ல. ஆனா, இப்ப எல்லாத்தையும் யோசிக்க யோசிக்கப் பயமா இருக்கு. மறைக்கிறதுதான் பிழையோ எண்டும் இருக்கப்பு.” என்றவரால் இலகுவாக மனம் திறக்க முடியவில்லை.

 

பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையைத் தேடிக்கொண்டார்கள். கணவரும் இல்லை. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருப்போமோ தெரியாது. இருக்கும் காலம் வரை, பிறந்து வளர்ந்த வீட்டில், கூடப் பிறந்த தமக்கையோடு இருந்துவிட்டுப் போவோம் என்று எண்ணித்தான் அங்குப் போனார்.

 

இப்போது யோசிக்க யோசிக்க அப்படித் தான் போனதுதான் தப்போ, தன்னால்தான் இதெல்லாமோ என்று அவர் மனம் அந்தரிக்க ஆரம்பித்திருந்தது.

 

“சித்தி, என்ன?” அவர் கையின் மீது கரம் வைத்து இதமாக வினவினான் தூயவன். அவர் கலக்கத்துடன் பார்க்க, “என்ன எண்டாலும் யோசிக்காம சொல்லுங்க. நான் இருக்கிறனெல்லா.” என்று தைரியம் கொடுத்தான்.

 

“தம்பி, அது… அண்டைக்குத் துளசின்ர கலியாணம் நடந்த நேரம் இசைக்குக் குடுத்த சொத்தை எல்லாம் துளசிக்குக் குடுப்பம் எண்டு நான் சொன்னதுக்கு நீங்க வேண்டாம் எண்டு சொன்னீங்க தானே.”

 

“ஓம், இப்ப என்ன அதுக்கு?” புருவங்கள் இலேசாகச் சுருங்க வினவினான்.

 

“அத… அத எல்லாத்தையும் அத்தான்… உங்கட அப்பா எழுதி வாங்கிட்டார்.”

 

அவன் விழிகளில் அப்பட்டமான அதிர்ச்சி. கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. பேச்சற்று அவரையே பார்த்தான். “இது எப்ப? எனக்குத் தெரியாம எப்பிடி நடந்தது?” என்றான் இன்னுமே அந்த அதிர்ச்சி நீங்காமல்.

 

“அக்காவையும் என்னையும் கோயிலுக்கு எண்டு கூட்டிக்கொண்டு போறன் எண்டு கூட்டிக்கொண்டு போய் அக்கான்ர பெயருக்கு மாத்தி எழுதினவர்.”

 

“இதை ஏன் நீங்க முதலே சொல்லேல்ல. அம்மாவும் மறைச்சுப்போட்டாவே!” என்றான் கோபத்துடன்.

 

“ஐயா கோவப்படாத. உன்ர இந்தக் கோவத்துக்குப் பயந்துதான் அப்பு நாங்க வாயே திறக்கேல்ல.” என்றதும் அடி வயிற்றிலிருந்து ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்த முயன்றான்.

 

“சரி சொல்லுங்க. நான் கோவப்படேல்ல.”

 

“தம்பி, இஞ்ச சொத்து, விசயம் இல்லையப்பு. அப்பிடியே நான் அக்காக்குக் குடுத்தாலும் அது உங்களுக்கும் துளசிக்கும்தான் வரப்போகுது. நான் சொல்ல வாறது அது இல்ல. அப்ப அத்தான் இத உங்களிட்டச் சொல்ல வேணாம் எண்டவர். நானும் அப்பா மகனுக்க வீண் பிரச்சினைகள் வேண்டாம் எண்டு நினைச்சன். ஆனா இப்ப, சுவர்ணாட்டயும் எதையும் வாங்கிட்டாரோ எண்டு சந்தேகமா இருக்கு.” என்றதும் உச்ச பட்ச அதிர்வோடு அவரையே பார்த்தான்.

 

அதே நேரம், சமீப காலத்தில் தான் அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் தந்தையின் இன்னொரு முகத்தின் பயங்கரம், இது நடந்திருக்கச் சாத்தியம் உண்டு என்றே சொன்னது.

 

“உங்களுக்கு என்னெண்டு தெரியும்?” மிகுந்த கனமாக வெளிவந்தது அவன் கேள்வி.

 

“இப்பவும் எனக்கு உறுதியாத் தெரியாப்பு. ஆனா இப்ப நடக்கிற ஒவ்வொண்டயும் யோசிக்கேக்க அத்தானில சந்தேகமா இருக்கு. சுவர்ணாவும் முந்தி மாதிரி என்னப் பாக்க வாறேல்ல. ஜீவனோடயும் கதைக்கிறது குறைவாம். ஒருக்கா அவளை விசாரிங்கோ தம்பி. நீங்க கேட்டா உண்மையச் சொல்லுவாள்.”

 

ஆம் என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டவனுக்கு தலையோடு சேர்த்து நெஞ்சமும் இரும்புக் குண்டாகக் கனத்தது. பேசாமல் தலையை இரு கரங்களாலும் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

 

ஆத்திரம், ஆவேசம், சினம், சீற்றம் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு உள்ளே வலித்தது. மிக மிக ஆழமாக வலித்தது.

 

ஏற்கனவே அவர் மீதிருக்கும் கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்று தனக்குள் போராடிக்கொண்டிருந்தான். அவர் அவனுடைய அப்பா. அதை மறந்தோ, தன் கட்டுப்பாட்டை இழந்தோ எதையும் செய்துவிடுவோமோ என்கிற பயம் அவனுக்குள் இருந்தது.

 

அப்படியிருக்க அவன் அறிவது எல்லாம் அவரின் மிக மிக மோசமான பக்கத்தை மட்டுமே என்றால் எப்படி?

 

“தம்பி தூயவா?” அவன் மனத்தை உணர்த்தாற்போல் அவன் தலையைத் தன் முதிர்ந்த கரத்தால் வருடிவிட்டார் மாதவி.

 

“உண்மையாவே இசையை உங்களுக்குப் பிடிச்சிருக்காய்யா?”

 

ஒருமுறை இறுக்கமாக விழிகளை மூடித் திறந்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்து, “பிடிக்காமத்தான் இவ்வளவு தூரத்துக்கு இறங்கி இருக்கிறனா சித்தி?” என்று அவரிடமே திருப்பிக் கேட்டான்.

error: Alert: Content selection is disabled!!