கடன் அன்பை முறிக்கும் 43 – 2

“ஆனா ஐயா…” என்று தயங்கியவர், அன்று கோகிலாவோடு அங்குப் போனபோது கருணாகரன் வார்த்தைகளில் விசம் தடவிப் பேசியதை, சண்முகம் கொக்கரித்ததை எல்லாம் சொன்னார்.

 

கெட்டவனின் கழுத்து நரம்புகள் புடைத்துப் போயிற்று. அவள் பற்றிப் பிழையாக ஒரு பேச்சு வந்துவிடக் கூடாது என்று நேசனோடே மல்லுக் கட்டியவன் அவன்.

 

அவன் தந்தையானால்…

 

அதற்குமேல் அவன் அங்கே நிற்கவில்லை. அவரை அழைத்துப்போய்க் கோகிலா அம்மாவின் அருகிலேயே அமர்த்தினான்.

 

கோகிலாவின் மடியில் படுத்திருந்தாள் யாழிசை. உடலும் உள்ளமும் மொத்தமாகச் சுருண்டு போனதில் விழிகளை மூடியிருந்தாள். ஆனால், உறங்க முடியவில்லை. கருணாகரனும் சண்முகமும் பேசியவற்றை அன்னை மூலம் அறிந்ததிலிருந்து உள்ளத்தில் பெரும் இரைச்சல்.

 

அந்த நேரத்திலும் அவன் வாசத்தை அவள் உணர்ந்தாள். மெல்ல விழிகளைத் திறந்து அவனையே பார்த்தாள்.

 

மாதவியை அமர்த்திவிட்டு அவர் அருகில் ஒற்றை முழங்காலைத் தரையில் ஊன்றி அமர்ந்திருந்தவனும் அவளைத்தான் பார்த்தான்.

 

அவள் விழிகள் இலேசாகக் கலங்க ஆரம்பித்தன.

 

“ம்ஹூம்! அழுறேல்ல!” மறுப்பாகத் தலையையும் அசைத்துச் சொன்னான் அவன்.

 

அவனின் அந்தக் கனிவில் அவளுக்கு இன்னும் கண்ணீர் பெருகிற்றே தவிரக் குறையவில்லை.

 

அவன் யோசிக்கவேயில்லை. கோகிலாவின் மடியில் படுத்திருந்தவளின் தலையை வருடி, “நீ ஏதும் பிழை செய்தனியா?” என்று கனிவான குரலில் வினவினான்.

 

அவள் இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தாள்.

 

“பிறகு என்னத்துக்கு அழுறாய்?”

 

அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.

 

“அத விட என்ன நடந்தாலும் நான் இருக்கிறன் எண்டு சொன்னனான்தானே.”

 

ஆம் என்று தலையை அசைத்தாள்.

 

“அப்ப இனி அழுறேல்ல. கண்ணைத் துடை.” என்றதும் மந்திரத்துக்குக் கட்டுண்டவள் போன்று எழுந்தமர்ந்து, கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

 

“இப்பிடியே இருக்கோணும் சரியா?” என்று கேட்டு, அவள் தலையசைப்பைக் பெற்றுக்கொண்டு புறப்பட்டான் அவன்.

 

அங்கிருந்த எல்லோருமே ஒருவித அதிர்வில் இருந்தனர். தாம் இருக்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல், வெகு இயல்பாக ஆறுதல் சொல்லி, அவள் அழுகையை நிறுத்திவிட்டுப் போனவன் சென்று மறைந்த திசையையே பார்த்திருந்தனர்.

 

அதுவும் நேசன், அவன் மனநிலை என்ன என்று அவனாலேயே கணிக்க முடியா நிலையில் அமர்ந்திருந்தான். ‘ரெண்டு நாள் இல்ல ரெண்டு வருசமானாலும் மாறமாட்டா.’ என்று தூயவன் சொன்னது அவன் காதினுள் எதிரொலித்தது.

 

 

*****

 

 

அங்கிருந்து புறப்பட்ட தூயவன் நேராகச் சென்றது சுவர்ணாவிடம். அங்கே அவள், எப்போதும் இந்த நேரத்திற்கு வேலை முடிந்து வந்துவிடும் கணவன் இன்னும் வரவில்லையே என்கிற பயத்தில் உறங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். அவன் கைப்பேசிக்கு அழைத்தாலும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

அப்போதுதான் தூயவனின் வாகனம் அவள் வீட்டின் முன்னே வந்து நின்றது. இந்த நேரத்தில் யார் என்கிற பயத்துடன் யன்னல் வழியாக ஒளிந்து நின்று எட்டிப் பார்த்தாள். தூயவனைக் கண்டதும் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்தாள்.

 

“அண்ணா, வேலைக்குப் போன இவரைக் காணேல்ல. நோர்மலா இந்த நேரத்துக்கெல்லாம் வீட்டை வந்திடுவார். லேட்டாகும் எண்டாலும் எடுத்துச் சொல்லுவார் அண்ணா.” என்றாள் பயமும் பரிதவிப்புமாக.

 

“பயப்பிடாத. அதச் சொல்லத்தான் வந்தனான். அவரின்ர ஃபோன் சார்ஜ் இறங்கிட்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாராம் எண்டு சொல்லிவிடச் சொன்னவர்.”

 

“உண்மையாவா? இசையையே இன்னும் கண்டு பிடிக்கேல்ல. இதில இவருமா எண்டு எனக்கு உயிரே போயிற்றுது.” கணவனுக்குத் தான் பயந்ததுபோல் எதுவுமில்லை என்பதில் ஆசுவாசமாகினாள்.

 

இதற்குள் அவளின் வீட்டுக்குள் வந்திருந்தார்கள்.

 

“இசையைக் கண்டு பிடிச்சாச்சு.” அவள் முகத்தில் அதிர்வெதும் தெரிகிறதா என்று ஊன்றிக் கவனித்தபடி சொன்னான் தூயவன்.

 

ஆனால், “உண்மையாவா? எங்க போனவளாம். இல்ல, எல்லாரும் சொல்லுற மாதிரி பெரியப்பாதான் காரணமா?” என்றவள் முகத்தில் இசை கிடைத்துவிட்ட மெய்யான மகிழ்ச்சியும், என்ன நடந்தது என்பதை அறியும் ஆர்வமும் மட்டுமே இருந்தன.

 

அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், தேநீர் தரவா என்று அவள் கேட்டதையும் மறுத்துவிட்டு, “அப்பா உன்னோட எதுவும் கதைச்சவரா சுவர்ணா?” என்றான் மீண்டும் அவள் முகத்தை ஊன்றிக் கவனித்தபடி.

 

இந்த முறை சட்டென்று அவள் முகம் மாறியது. அந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்பாராத ஒரு பதற்றம். கூடவே அவன் விழிகளையும் சந்திக்க மறுத்தாள்.

 

“பொய் எதுவும் சொல்ல நினைக்காத சுவர்ணா. எனக்கு உண்மையக் கண்டு பிடிக்கிறது சின்ன விசயம். அதால நீயே உள்ளதைச் சொல்லிடு!”

 

தமையனின் கண்டிப்புக் குரல் இனியும் எதையும் மறைக்கும் தைரியத்தை அவளுக்குத் தரவில்லை. “அது… அண்ணா… மினி பஸ் சொந்தமா வாங்கித் தாறன் எண்டு பெரியப்பா சொன்னவர். அதுக்குப் பதிலா சொத்தை மாத்தித் தரச் சொல்லி… ஆனா பஸ் காச நாங்க திருப்பிக் குடுத்ததும் சொத்தைத் திருப்பித் தாறன் எண்டவர்.” திக்கித் திணறி உண்மையைச் சொன்னாள்.

 

தந்தை மீதான தன் சந்தேகம் பொய்த்துவிடாதா என்று ஓடி வந்தவன் உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனான். அடுத்து என்ன கேட்பது என்று கூடத் தெரியவில்லை.

 

“இது அகிலனுக்குத் தெரியுமா?” அத்தனையையும் மௌனமாகக் கேட்டிருந்த குரு விசாரித்தான்.

 

“இல்லை… அது இன்னும் நான் சொல்லேல்ல. பஸ் வந்ததும் அவருக்கு சப்ரைஸ் குடுப்பம் எண்டு நினைச்சன்.”

 

சுர் ஏறிக்கொண்டு வந்தது தூயவனுக்கு.

 

“சொத்தைத் தூக்கி இன்னொருத்தருக்குக் குடுக்கிறது உனக்கு சப்ரைஸ் பண்ணுற விசயமா?” என்று சீறினான்.

 

“அண்ணா அது பெரியப்பா தானே எண்டு…”

 

ஆக மனைவிக்குத் தெரியாமல் கணவனிடமும் கணவனுக்குத் தெரியாமல் மனைவியிடமும் விளையாடியிருக்கிறார். தப்பித்தவறித் தன் சொல்லுக்கு நிற்காமல் அகிலன் திமிறினால் இந்தச் சொத்தை வைத்து அவனைப் படிய வைக்க நினைத்திருக்கலாம்.

 

அவனுக்கு வெறுத்தே போனது. நெஞ்சமெல்லாம் கசந்து வழிந்தது. அந்த மனிதரின் முகமே பார்க்காமல் வாழ முடிந்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது.

 

ஒற்றைக் கையால் நெற்றியைப் பற்றித் தேய்த்துவிட்டான். அவனால் உண்மையில் முடியவேயில்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து துவண்டது. கடந்த மூன்று நாள்களாக ஓய்வு உறக்கமென்பது மருந்துக்குமில்லை. இனியும் இருக்கும்போல் தெரியவில்லை.

 

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்தவன், “நான் வந்தது, கேட்டது எண்டு எதைப் பற்றியும் அப்பா இல்ல ஆர் கேட்டாலும் சொல்லாத. ஆனா, இனி அப்பா என்ன சொன்னாலும் எனக்கு எடுத்துச் சொல்லு.” என்றதுமே அவள் கலங்கிப்போனாள்.

 

சொத்தை அவரிடம் கொடுத்ததில் இருந்தே அவளுக்குள் ஒரு கலக்கம்தான். இப்போது தூயவனும் அப்படிச் சொல்ல, “என்ன அண்ணா பிரச்சினை? எனக்குப் பயமா இருக்கு.” என்றாள் கண்ணீரோடு.

 

“இப்ப பயந்து என்ன பிரயோசனம்? இனி என்ன நடக்குதோ அதக் கண்டுகொள்!” என்றுவிட்டு வெளியேறியவன் நேராகப் போனது அவர்களின் தென்னந்தோப்புக்கு.

 

அங்கேதான் அகிலன் இருந்தான். வேலை முடிந்து வெளியே வந்தவனை ஒரு வாகனம் மறித்தபோது சாதாரணமாகத்தான் என்ன என்று பார்த்தான். அவர்களோ குண்டுக் கட்டாக இவனைத் தூக்கி உள்ளே போட்டுக்கொண்டு வந்துவிட்டார்கள்.

 

தூயவனின் தென்னந்தோப்பில் இருந்த அந்தத் தோட்ட வீட்டில் அவனைக் கொண்டுவந்து விட்டபோதே தன்னைத் தூக்கியது யார் என்று அவனுக்குத் தெரிந்துபோயிற்று. இவ்வளவு நேரத்தில் எதை எப்படி சொல்ல வேண்டும் என்று ஓரளவுக்குத் தன்னைத் தயார்படுத்தியும் இருந்தான்.

 

ஆனாலும், விடுவிடு என்று வந்த தூயவனைக் கண்டதும் உதறாமல் இல்லை. பயத்தை வெளியே காட்டாமல், “என்ன தூயவன் இதெல்லாம்?” என்றான் தானே முந்திக்கொண்டு.

 

“சத்தியமா கொலை வெறில இருக்கிறன் அகிலன். சும்மா ஒண்டுமே தெரியாதவன் மாதிரி நடிச்சாய் எண்டு வை. எதைப் பற்றியும் யோசிக்காமத் தூக்கிப் போட்டு மிதி மிதி எண்டு மிதிச்சுப்போட்டு, மண்ணைத் தோண்டிப் புதைச்சுப்போட்டுப் போயிடுவன். ஒழுங்கா உண்மையச் சொல்லிடு.” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

 

பாறையாய் இறுகிக் கிடந்த அவன் முகமும், இரத்தக் கட்டிகளெனச் சிவந்திருந்த விழிகளும், அவன் உறுமிய உறுமலும் நெஞ்சுக் கூட்டையே ஆட்டம் காண வைக்காமல் இல்லை.

 

ஆனாலும், என்றைக்கு யாழிசை திரும்பி வருகிறாளோ அன்றைக்கு இது தெரியவரும் என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால் கொஞ்சம் தைரியமாகவே பதில் சொன்னான்.

 

“உண்மையா எனக்கும் என்ன நடந்தது எண்டு தெரியாது தூயவன். ஒரு பிரைவேட் ட்ரிப்புக்கு அனுராதபுரம் போனனான். அங்க வச்சுத்தான் இசையைப் பாத்தனான். கூட்டிக்கொண்டு வரேக்க எல்லாரும் சாதாரணமாத்தான் இளநி குடிச்சனாங்க. பிறகு எனக்கு என்ன நடந்தது எண்டே தெரியேல்ல. இரவு போல எழும்பிப் பாக்க, நான் மட்டும் பஸ்ஸுக்க இருக்கிறன். எனக்குப் பயமா போச்சு. அதான் பேசாம வந்து இருந்திட்டன். நான் சொல்லி இருக்கோணும்தான். ஆனா, இப்ப மாதிரி அப்பவும் என்னைச் சந்தேகப்படுவீங்களோ, எந்தப் பிழையும் செய்யாத என்னில, யாழிசை காணாம போன கேஸ் திரும்பிடுமோ எண்டுற பயத்திலதான் சொல்லேல்ல தூயவன். பிழை எண்டு விளங்குது. உண்மையா சொறி.”

 

வேறு எதுவுமே கேட்கவில்லை தூயவன். கொஞ்ச நேரம் விழிகளை மூடி அப்படியே அமர்ந்திருந்தான். அவன் சொன்னதை நம்பினானா இல்லையா என்று கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. திடீர் என்று எழுந்து வந்தவன் சடார் சடார் என்று ஒற்றைக் கையாலேயே அவனின் இரு கன்னங்களிலும் மாறி மாறி விளாசித் தள்ளினான்.

 

அகிலனின் உதடு கிழிந்து இரத்தம் வந்தபோதும், சுளீர் சுளீர் என்று அடித்ததில் அவன் விரல்களில் வலி வந்தபோதும் விடவேயில்லை. குருதான் ஓடி வந்து தடுத்திருந்தான்.

 

தோட்ட வீடு என்பதில் கூரையைத் தாங்கிப் பிடிப்பதற்கு ஏதுவாக நடுவில் வரிசையாக மூன்று பெரிய மரக்குற்றிகளைத் தூண்கள் போன்று நிறுத்தி வைத்திருந்தார்கள்.

 

அதில் ஒன்றில்தான் அகிலன் கட்டப்பட்டிருந்தான். தூயவன் கொடுத்த அறைகளில் அவனால் முகத்தைத் தூக்கவே முடியவில்லை. அவன் முகம் தரையைப் பார்த்துத் தொங்கிக்கொண்டிருந்தது.

 

அவன் கட்டை அவிழ்த்துவிட்டு, “போ!” என்றான் வேறு எதுவும் சொல்லாமல்.

 

error: Alert: Content selection is disabled!!