கடன் அன்பை முறிக்கும் 45 – 1

அத்தியாயம் 45

 

 

அடுத்த நாளின் காலை, புலர்ந்த பின்பும் கூடக் கருணாகரனின் இதயத்தின் துடிப்புச் சீராகவில்லை.

 

அந்தளவில் தனக்கான உலகத்தில் தானே ராஜா, தானே மந்திரி என்று இறுமாப்புடன் வாழ்ந்து வந்தவரின் முகத்தில் கொதி நீரையே தூக்கி அடித்திருந்தான் தூயவன்.

 

கருணாகரன் சாதாரண குடும்பத்துப் பிள்ளைதான். மிக நல்ல பண்புகளோடும், வாழ்வின் நெறிமுறைகளோடும் வளர்க்கப்பட்டவர்.

 

அவரின் தந்தையும் மார்க்கண்டேயரும் நண்பர்கள். அவர் கண் பார்க்க வளர்ந்த அருமையான கருணாகரனைத் தவற விட மனமின்றி, மகளுக்கே மணமுடித்துக் கொடுத்தார் மார்க்கண்டேயர்.

 

ஆரம்ப காலங்களில் மார்க்கண்டேயருக்குக் கிடைக்கும் மதிப்பு மரியாதைகளைக் கண்டு வியந்து பார்த்திருக்கிறார். இந்த மனிதருக்கு இவ்வளவு சொத்துகளா என்று வாயைப் பிளந்திருக்கிறார். அவர் மீது பெரும் பிரமிப்பே இருந்திருக்கிறது.

 

மார்க்கண்டேயரும் மகன் இல்லையே என்கிற ஏக்கத்தைப் போக்க முனைந்தாரா, இல்லை, என் மருமகன் என்கிற பாசமா தெரியாது, மருமகனை மகனாகவே நடத்தினார். அவருக்கான அத்தனை மதிப்பு மரியாதைகளும் இவருக்கும் கிடைக்க வைத்தார்.

 

அதுவும் மாதவி போன பிறகு மருமகனோடு இன்னுமே ஒட்டிக்கொண்டிருந்தார்.

 

அதில், நான்தான் இந்த வீட்டுக்கு எல்லாம் என்கிற ஆணவமும், முழுச் சொத்தும் எனக்குத்தான் என்கிற பேராசையும், என்னைத் தாண்டி இங்கு எவனாலும் எதையும் செய்ய முடியாது என்கிற அகம்பாவமும் அவருக்குள் கிடுகிடு என்று வளர்ந்து, அவர் கண்ணையே மறைத்திருந்தது.

 

அவர் அந்த வீட்டின் மருமகன் என்பதோ, அவருக்கு அந்தச் சொத்துகளில் எந்த உரிமையும் இல்லை என்பதோ அவர் நினைவிலேயே இல்லை.

 

இன்றைக்கு அவர் மகனோ அதை நினைவூட்டிவிட்டான். நீ ஒன்றுமில்லாதவன் என்று முகத்தில் அறைந்து சொல்லிவிட்டான். அவர் உள்ளம் வெகுண்டு எழுந்தது. அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுமியது. ஆனால், இன்னொரு பக்கம் அந்த உண்மை அச்சுறுத்தியது. வெறும் பயலாக நடுத்தெருவுக்கு வந்துவிடுவேனோ என்று பயந்தார்.

 

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க அவர் இதயம் இன்னும் அதி வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. முகத்தில் வியர்வை முத்துகள் அரும்ப ஆரம்பித்தன.

 

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அறைக்குள் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார்.

 

 

*****

 

யாழிசை வீட்டில் காலையில் எழுந்து வேலைக்குப் புறப்பட்டான் நேசன். கடந்த இரண்டு நாள்களும் திடீரென்று சொல்லிவிட்டு விடுமுறை எடுத்ததில் இன்று கட்டாயம் வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்கிற நிலை அவனுக்கு.

 

நேரத்திற்கே எழுந்துவிட்ட யாழிசை, தமையன் ஏதும் கதைப்பானோ என்று தயங்கி அங்கேயேதான் இருந்தாள்.

 

அவனோ அப்படி எதுவும் அவளோடு கதைக்கவில்லை. அவனுக்கு அவள் மீது அவ்வளவு கோபம். இரவு தூயவன் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட பிறகு, என்ன நடந்தது, எப்படி, யார் உன்னைக் கடத்தினார்கள் என்று நேசன் விசாரித்தபோது, வாயே திறக்கவில்லை அவள்.

 

என்ன கேட்டாலும் தூயவனிடம் கேட்கச் சொன்னாள். தனக்கு இத்தனையும் நடந்தபிறகும் அவன் தன் தந்தையை விட்டுக்கொடுக்க மறுக்கிறானோ, காப்பாற்ற நினைக்கிறானோ என்கிற கவலையும் ஏமாற்றமும் அவளுக்கும் உண்டுதான். அதற்கென்று அவன் சொல்லப் பிரியப்படாத ஒன்றை அவளால் சொல்ல முடியவில்லை.

 

கூடவே, அகிலனும் இதில் உடந்தை என்று அறிந்தால் மாதவி என்னாவார், சுவர்ணாவின் வாழ்க்கை என்னாகும் என்கிற பயமும் அவளுக்கு இருந்தது. அதில், தூயவனே இந்தப் பிரச்சனையைக் கையாளட்டும் என்று எண்ணினாள்.

 

நேசன், கோகிலா, நளினி என்று யார் கேட்டும், “ப்ளீஸ் அண்ணா. எல்லாம் அவருக்குத் தெரியும். அவரையே கேளுங்கோ.” என்றாள் கெஞ்சலாக.

 

“கடத்தினது உன்னை!” என்று பல்லைக் கடித்தான் தமையன்.

 

ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தாள் அவள்.

 

கேட்டு கேட்டுப் பார்த்த நேசன், “உன்னட்ட இத நான் எதிர்பாக்கவே இல்ல இசை.” என்று அவள் முகத்தைக் கறுக்கச் செய்துவிட்டு, வெடுக்கென்று அங்கிருந்து எழுந்து போயிருந்தான். அப்போதிலிருந்து அவளோடு அவன் ஒரு வார்த்தை கதைக்கவில்லை.

 

அவனுக்குத் தங்கை மீது மலையளவு கோபம் இருந்தாலும் நிறைய யோசிக்கவேண்டியும் இருந்தது.

முதல் நாள் இரவு, கோகிலாவின் மடியில் படுத்திருந்தவளின் தலையை வெகு இயல்பாக வருடிக்கொடுத்துத் தூயவன் அவளைத் தேற்றிய விதமும், தான் அவ்வளவு கேட்டும் அவனுக்காக வாயைத் திறக்காத யாழிசையும் அவனைப் பெருமளவில் பாதித்தனர்.

 

இனியும் அவளுடைய அந்தத் திருமணப் பேச்சை வளர்ப்பதில் ஏதும் அர்த்தமிருக்கிறதா என்கிற சந்தேகமும் வந்தது.

 

அதைவிட, அவளுக்குப் பேசிய திருமணத்தில் விருப்பம் இல்லையாம் என்று சொல்லி ஊர் வாயை ஓரளவுக்கு அடைத்தாயிற்று. அவள் காணாமல் போன இரண்டு நாள்களுக்கு மாப்பிள்ளை வீட்டினரிடம் என்ன காரணம் சொல்லுவான்?

 

அதற்கென்று தூயவனுக்கு அவளைக் கொடுப்பதற்கும் அவனுக்கு மருந்துக்கும் ஒப்புதல் இல்லை.

 

இத்தனை குழப்பத்துக்கு மத்தியிலும் வேலைக்குப் போனவனை அன்று மாலை வந்து சந்தித்தார்கள், அந்த மாப்பிள்ளையின் அம்மாவும் அப்பாவும்.

 

அவன் தயக்கத்துடன் யாழிசை காணாமல் போய்க் கிடைத்ததைச் சொன்னான். காரணம் கேட்டார்கள்.

 

ஒரு கணம் தடுமாறினாலும் வேறு வழியில்லாமல், “அவாக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்லையாம். அதால அங்க அனுராதபுரத்திலேயே ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்க நினைச்சிருக்கிறா.” என்று, தூயவன் சொல்லித் தந்ததைத்தான் சொன்னான்.

 

“இது என்ன கதை? அவாட்டக் கேட்டு, அவாக்கும் விருப்பம் எண்டு சொல்லித்தானே எல்லா வேலையும் நடந்தது. அவாதான் தன்ர வருங்காலம் எண்டு நம்பிக்கொண்டு இருக்கிற எங்கட மகன்ர நிலை என்ன?” சட்டென்று சூடாகிவிட்ட குரலில் கேட்டார் அந்தப் பெண்மணி.

 

“பிழைதான் அம்மா. ஆனா விருப்பமில்லை எண்டுறவாவ என்ன செய்யச் சொல்லுறீங்க?” தயக்கத்துடன் வினா எழுப்பினான் அவன்.

 

பார்த்தாயா என்பதுபோல் கணவரைப் பார்த்த அந்தப் பெண்மணி, “உண்மையாவே நீங்க சொன்னதுதான் காரணமா? இல்ல…” என்று சந்தேகத்தோடு இழுத்தார்.

 

நேசனின் முகமே மாறிப்போனது. என் தங்கையைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று சூடாகக் கேட்கத் துடித்த நாவை அடக்கி, “தங்கச்சின்ர விருப்பம் தெரியாமக் கலியாணம் பேசினது என்ர பிழை. அதாலதான் உண்மையச் சொல்லி மன்னிப்புக் கேக்கிறன். அதுக்காக அவளைப் பற்றி நீங்க தேவை இல்லாமக் கதைக்கிறத என்னால பாத்துக்கொண்டு இருக்கேலாது.” என்று எச்சரித்தான்.

 

“பாத்தீங்களா! தேவை இல்லாமக் கதைக்கிறனாம். அந்த ஆள் வந்து சம்மந்தமே இல்லாம நல்ல மனுசன் மாதிரிக் கதைக்கேக்கையே யோசிக்கச் சொல்லிச் சொன்னனான் எல்லா. நீங்கதான் கேக்கேல்லை.” என்று இப்போது நேரிடையாகவே கணவரிடம் பாய்ந்தார் அவர்.

 

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது அந்த அப்பாவிக் கணவர் விழிக்க, திகைப்புடன் அவர்களைப் பார்த்துவிட்டு, “எந்த ஆள் வந்து என்ன சொன்னவர்?” என்று அவசரமாக விசாரித்தான் நேசன்.

 

“வேற ஆர்? உங்கட ஊர்ப் பெரிய மனுசன் அந்தக் கருணாகரன்தான். அவரின்ர மனுசின்ர தங்கச்சிக்கு என்னவோ நடக்கேலாத வருத்தமாம். அவாவை உங்கட தங்கச்சிதான் பாத்தவாவாம். அருமையான பிள்ளையாம். அதால அவாக்கு ஒரு நல்லது நடக்கோணும் எண்டு ஆசைப் படுறாராம். இந்தக் கலியாணம் நடந்தா, காலத்துக்கும் இருந்து சாப்பிடுற மாதிரி அவர் செய்வாராம். அத உங்கட தங்கச்சிக்கோ, உங்கட குடும்பத்துக்கோ தெரிஞ்சு செய்ய விருப்பம் இல்லயாம். பிறகு அவான்ர அன்புக்கு, பாசமா செய்த உதவிக்குத் தான் கூலி குடுத்த மாதிரிப் போயிடுமாம் எண்டு நல்ல மனுசன் மாதிரி வந்து சொன்னவர். இஞ்ச பாத்தா உங்கட தங்கச்சி காணாமப் போய் வந்திருக்கிறா. உள்ளுக்கு என்னென்ன கோல்மால் எல்லாம் நடந்துதோ எங்களுக்கு என்ன தெரியும்?” என்று அவனிடம் பொறிந்தவர்,

 

“எனக்கு என்னவோ இதெல்லாம் உருப்படுற கதை மாதிரித் தெரியேல்ல. இவரின்ர தங்கச்சி தானா காணாம போனாவா, இல்ல, ஓடிப்போனாவா எண்டு எங்களுக்குத் தெரியாது. எப்பிடி இருந்தாலும் எங்கட மகனுக்கு என்ன குறை எண்டு இப்பிடியான பிள்ளையைக் கட்டி வைக்கோணும்? முதலாவது இவரின்ர தங்கச்சி நல்ல பிள்ளை எண்டு நினைச்சன். இவ்வளவுக்குப் பிறகும் காசுக்கு ஆசைப்பட்டு என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை என்னால நாசமாக்கேலாது. நீங்க வாங்க!” என்று கணவருக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு எழுந்துபோனார் அவர்.

 

அடக்க முடியா ஆத்திரத்தில், அவமானத்தில் முகம் சிவக்க அப்படியே அமர்ந்திருந்தான் நேசன்.

 

“தம்பி…” என்றவரை வேகமாகக் கை நீட்டித் தடுத்து, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு நிமிர்ந்து, “போதும் ஐயா. போயிற்று வாங்க. இந்தக் கலியாணப் பேச்சை இதோட விட்டுடுவம்.” என்றுவிட்டு எழுந்து வந்திருந்தான் அவன்.

 

அவர்கள் மீதான அத்தனை ஆத்திரமும் அப்படியே தூயவன் புறமாகத் திரும்ப, உடனேயே அவனுக்கு எடுத்து, நடந்ததைச் சொல்லிக் கத்து கத்தென்று கத்தினான்.

error: Alert: Content selection is disabled!!