கடன் அன்பை முறிக்கும் 45 – 2

அத்தனையையும் கேட்டுவிட்டு, “எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டீங்க எண்டா வைங்க. நான் பிறகு எடுக்கிறன்.” என்று சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு, அழைப்பைத் துண்டித்திருந்தான் தூயவன்.

 

கடந்த மூன்று நாள்களும் ஒழுங்கான உணவு, உறக்கம் இல்லாதது, மனத்தின் அளவுக்கு அதிகமான அழுத்தம், கைக்காயம் என்று எல்லாமாகச் சேர்ந்து அவனுக்குக் காய்ச்சலில் உடல் கொதித்தது.

 

மருந்து மாத்திரைக்கு அடங்கவும் இல்லை.

 

அதற்கென்று வீட்டுக்குப் போகவும் விருப்பமில்லை. குருவின் கட்டாயத்தில் உணவையும் முடித்துக்கொண்டு, மருந்துகளையும் விழுங்கிக்கொண்டு, முதல் நாள் அகிலனை அடைத்து வைத்திருந்த தென்னிந்தோப்பு வீட்டில் பாயை விரித்துப் படுத்துவிட்டான்.

 

நேசன் அழைக்கவும் அவ்வளவு முடியாத நேரத்திலும் யாழிசைக்கு ஏதுமோ என்றுதான் அழைப்பை ஏற்றான். இதை விடவும் பல மடங்கு அதிகமான அதிர்ச்சிகளை எல்லாம் ஒற்றை நாளில் விழுங்கிக்கொண்டதாலோ என்னவோ அவனுக்கு நேசன் சொன்னதைக் கேட்டு எந்த அதிர்ச்சியும் இல்லை.

 

மனம் மொத்தமாக விட்ட நிலை. காய்ச்சலில் கசந்து கிடக்கும் அவன் நாவுக்கு ஒப்பாக, உள்ளம் முழுக்கக் கசந்து வழிந்தது. யார் முகத்திலும் விழிக்க விருப்பமில்லை. யாரோடும் கதைக்க மனமில்லை. எந்த வேலையைப் பார்க்கவும் உடலிலோ மனத்திலோ தெம்பில்லை.

 

உள்ளம் அளவுக்கதிகமாக யாழிசையைத் தேடிற்று. பத்து நாள்கள் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அவளிடம் போகவும் முடியாது. முதலில் அப்படி அவர்கள் வீட்டுக்குப் போவது சரியா என்றும் தெரியவில்லை.

 

அப்படி அவளைப் பார்த்து, அவளிடம் தனக்கான ஆறுதலைத் தேட முடியா நிலையும் சேர்ந்து அவனை இன்னும் சோர்வடையச் செய்யப் படுத்துவிட்டான்.

 

இங்கே வீடு வந்த நேசன், அந்தக் கருணாகரன் இப்படி நடக்கக் காரணமே தூயவன் என்கிற கோபத்தில், தூயவன் நினைப்பது நடக்கவே நடக்காது என்றான் யாழிசையிடம்.

 

கண்ணீர் உகுத்தாளே தவிர மறுத்துப் பேசவில்லை அவள். அவனுக்கு அவளை அப்படிப் பார்க்கவும் முடியவில்லை. ஆசைப்பட்டவள் அவர்களைப் போன்று சோலி சுரட்டு இல்லாத ஒரு குடும்பத்துப் பெடியனில் ஆசைப்பட்டிருக்கக் கூடாதா என்று தனக்குள் கலங்கினான்.

 

ஆனாலும் அவளை அப்படியே விட முடியாமல் மாப்பிள்ளை வீட்டினர் சொன்னதை எடுத்துச் சொன்னான். சண்முகம் தன்னிடம் பேசியதை, பேசிய விதத்தைச் சொன்னான். கோகிலாவிடம் கருணாகரன் பேசியதைச் சொன்னான். அதற்கு முன்னும் அவர்கள் குடும்பமே இவர்களை, அவளை மோசமாக நடத்திய விதங்களை அவளுக்கு நினைவூட்டினான்.

 

அத்தனைக்குப் பிறகும் அவள் அசையாமல் இருந்தாள். அவளின் அந்த மௌனம், வாய் வார்த்தைகளால் வரும் மறுப்பை விடவும் உறுதியானதாக இருந்ததில் நேசன்தான் சோர்ந்தான். அவன் அவளிடம் போராடிக்கொண்டு இருப்பதே அவளுக்காகத்தான் என்று புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறவளை என்ன செய்ய என்று தெரியாது பார்த்தான்.

 

“நீ ஆசைப்பட்டதை உனக்குத் தரக் கூடாது எண்டு நான் நினைக்கேல்ல இசை. நீ சந்தோசமா இருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுறன்.” என்றான், அவள் மனத்தைத் தன்னால் மாற்ற முடியாமல் போய்விடுமோ என்கிற இயலாமையில் இறங்கிவிட்ட குரலில்.

 

கண்களில் படர்ந்துவிட்ட கண்ணீருடன் நிமிர்ந்து, “நீங்க அவரிட்ட எவ்வளவு கோபப்பட்டாலும், மரியாதை இல்லாமக் கதைச்சாலும் இப்ப எல்லாம் அவர் உங்களிட்ட கோவப்படுறேல்ல தானே அண்ணா. ஏன் எண்டு யோசிச்சீங்களா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள்.

 

அவனும்தானே அவர்களின் ‘சேட்’டை பார்த்தான். இன்றைக்குக் கூட எடுத்து எப்படிக் கத்தினான். அப்போதும் அவன் கோபப்படவில்லையே. அதன் பின்னிருக்கும் காரணம் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதைத் தங்கையிடம் சொல்லப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, “அதுக்காக எல்லாம் அவனுக்கு உன்னக் குடுக்கேலாது.” என்றான்.

 

“என்னாலயும் வேற ஆரையும் கட்டேலாது அண்ணா.” அவளிடமிருந்து வந்த முதல் நேரடி மறுப்பு. மெல்லிய அதிர்வுடன் திரும்பித் தங்கையைப் பார்த்தவனால் கொஞ்ச நேரத்துக்கு அவள் சொன்னதை நம்பவே முடியவில்லை.

 

தமையனின் அந்த அதிர்ந்த தோற்றம் அவளையும் பாதிக்க, “சொறி அண்ணா!” என்றாள் கலங்கிவிட்ட குரலில்.

 

“கொஞ்ச நாள் போக எல்லாம் மறந்திடும் இசை.”

 

“சரி, அந்தக் கொஞ்ச நாள் போகவிட்டுப் பாப்பம் அண்ணா.” என்றாள் அவள் அப்போதும்.

 

அவனுக்குக் கோபம்தான் வந்தது. “உனக்கு நான் சொல்லுறது விளங்குதா இல்லையா எண்டு தெரியேல்ல. அவன்ர அப்பா எந்தளவு மோசமானவர் எண்டு உனக்கே தெரியும். சொத்து, சாதி எண்டு பைத்தியம் பிடிச்சு அலையுற மனுசன். அவரால நாளைக்கு உன்ர உயிருக்குக் கூட எதுவும் நடக்கலாம் இசை.” என்று இழுத்துப் பிடித்த பொறுமையோடு எடுத்துச் சொன்னான்.

 

“அவரின்ர அப்பா எப்பிடி, அம்மா எப்பிடி, அவரின்ர அப்பாவால எனக்கு என்ன எல்லாம் நடக்கும் எண்டு எனக்குத் தெரியாதுதான் அண்ணா. ஆனா, அங்க அவர் இருப்பார். எனக்கு எதுவும் நடக்க அவர் விட மாட்டார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்ற தங்கையைத் திகைப்புடன் பார்த்தான் நேசன்.

 

அதே நேரம், ஒற்றை நாளில் இந்தளவுக்கு மனம் மாறும் அளவுக்கா அவள் இருக்கிறாள் என்பதையும் அவனால் நம்ப முடியவில்லை.

 

அவனை உணர்ந்தவளாய் மறுத்துத் தலையை அசைத்தாள் யாழிசை. “மனம் மாறினது வேணுமெண்டா ஒரு நாளிலயா இருக்கலாம் அண்ணா. ஆனா, ஆரம்பத்தில இருந்தே அவர் மோசமா நடந்த விதங்கள் எல்லாம் எப்பிடி என்ர மனதில ஆழமாப் பதிஞ்சதோ அப்பிடி அவர் நல்ல மாதிரி நடந்ததும் பதிஞ்சிருக்கு. அப்ப எல்லாம் அதைப் பற்றி நான் அலசி ஆராஞ்சு பாக்கேல்லை. நீங்க சொல்லுற மாதிரி அவரின்ர கண்ணிலேயே படாம ஒதுங்கி இருந்தா போதும் எண்டுதான் நினைச்சிருக்கிறன். ஆனா இப்ப… எனக்குச் சொல்லத் தெரியேல்ல அண்ணா. அவர் இல்லாட்டி நான் இல்ல.” என்றதும் அவளை முறைத்துவிட்டு எழுந்துபோனான் நேசன்.

 

அவன் மட்டுமில்லை கோகிலாவுக்குமே இது வேண்டாம் என்றுதான் இருந்தது. எவ்வளவோ புத்திமதிகளைச் சொன்னார். காதல் கண்ணை மறைக்கும். திருமண வாழ்க்கை என்பது வேறு. அது கணவன் மனைவியை மட்டுமே கொண்டதில்லை. இரண்டு குடும்பங்களும் சேர்ந்து பழக வேண்டும். அவர்களாலும் இவர்களிடம் வந்து போக முடியாது, இவர்களால் அவர்கள் வீட்டுப் படியை மிதிக்க முடியாது என்று அவர் என்ன எடுத்துச் சொன்னாலும் மறுத்து ஒரு வார்த்தை அவள் பேசவில்லை.

 

அதே நேரம், நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன், அவனை மறந்துவிடுகிறேன் என்றும் சொல்லவில்லை.

 

கடைசியில், “விடுங்க மாமி, அவளுக்கு என்ன தலைல எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்.” என்று நளினிதான் தடுத்தாள்.

 

யாழிசை எழுந்து போனதும், “உங்களுக்கு இதில விருப்பம் போலயே நளினி.” என்றார் கோகிலா.

 

“விருப்பம் எண்டுறதை விடக் கருணாகரனின்ர வாய்க்கு இது நடக்கோணும் எண்டு ஆசையா இருக்கு மாமி.” அவள் மறைக்கவெல்லாம் இல்லை. தன் மணத்தைச் சொன்னாள்.

 

“கலியாணம் எண்டுறது அப்பிடி ஒரு கோபத்துக்காகச் செய்ற ஒண்டு இல்ல நளினி. பிறகு எங்கட வீட்டுப் பிள்ளை சந்தோசமா இருக்கமாட்டா. அதைவிட அப்பிடி ஒரு கலியாணம் ஈஸியா நடந்திடாது. என்னதான் தூயவன் தைரியமான பெடியன் எண்டாலும் அவரின்ர மொத்த இனசனத்தையும் சமாளிச்சு, இந்தக் கலியாணம் நடக்கிறது லேசுப்பட்ட விசயம் இல்ல. அப்பிடியே நடந்தாலும் தம்பி சொன்ன மாதிரி இசைக்கு மட்டுமில்ல உங்களுக்கோ நேசனுக்கோ கூட என்னவும் நடக்கலாம்.” பெரும் கலக்கத்துடன் தன் பயத்தை மருமகளிடம் பகிர்ந்தார் கோகிலா.

 

அதற்கெல்லாம் நளினி பெரிதாக அதிரவில்லை. “அப்பிடிப் பயந்தா வாழவே ஏலாது மாமி. அத விடத் தூயவன் அந்தளவுக்கு விடமாட்டார் எண்டுதான் நினைக்கிறன்.” என்றாள் அவள் இலகுவாக.

 

எப்படி இவளுக்கு அந்தளவு நம்பிக்கை வந்தது என்று பார்த்தார் அவர்.

 

“எனக்கும் சரியா சொல்லத் தெரியேல்ல மாமி. இசையைக் காணேல்ல எண்டதும் அவளின்ர அறையை வந்து அவர் பாத்த விதம், அவளுக்காக அவர் பாடுபட்டது, இவரைப் பொறுத்துப்போறது எண்டு புதுத் தூயவனைப் பாத்தன். இது எல்லாத்தையும் விட இசைக்கும் இப்ப தூயவனைப் பிடிச்சிருக்கு மாமி.” என்றதும் கோகிலா மௌனமாகிப்போனார்.

 

அவர் மடியில் படுத்திருந்தவளைத்தானே தூயவன் தேற்றினான். அப்போது அவன் கண்ணில் தெரிந்த கனிவையும் பாசத்தையும் மிக நெருக்கத்தில் பார்த்தாரே. அத்தனை அன்பு அவனிடத்தில். அதன் பிறகு அவர் மகள் அழவும் இல்லையே.

 

ஆனால், நெஞ்சின் கலக்கம் தீருவதாக இல்லை. அவளை அவனுக்குக் கொடுப்பதை நினைத்தும் பயந்தார், கொடுக்காமல் விடுவதை நினைத்தும் பயந்தார்.

 

இப்படி இருக்கையில்தான் அடுத்தநாள் காலையிலேயே அவர்கள் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள் குருவும் துளசியும்.

 

error: Alert: Content selection is disabled!!