அத்தியாயம் 29
ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். நிரோஜனுக்காக நவீன்தான் அதை ஏற்பாடு செய்திருந்தான்.
முதலில் நிரோஜன் மறுத்தான். என்னவோ அவனுக்கு எதிலுமே பற்றற்ற நிலை. நவீன் விடவில்லை. வரச் சொல்லி வற்புறுத்தினான்.
கடைசியில் எல்லாமே முடிந்துபோயிற்று, இனி அத்தனைலிருந்தும் வெளிவந்துதான் ஆக வேண்டும் என்று அறிவு எடுத்துச் சொன்னதில், இப்படித் தனக்குப் பிடித்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று போனாலாவது மெல்லிய ஆறுதல் கிடைக்குமா, தெளிவு கிடைக்குமா, இதிலிருந்து வெளியே வர முடியுமா என்று எண்ணித்தான் வந்தான்.
உள்ளே வந்ததும் மொத்தச் செலவையும் எலோருமாகச் சேர்ந்து பங்கு போட வேண்டும் என்று நவீன் அறிவித்தான். யாரும் ஒன்றும் சொல்லாதபோதும் எல்லோர் பார்வையும் ஒருமுறை நிரோஜனைத் தொட்டு வந்தது.
அவன் ஒன்றுமே சொல்லவில்லை. என்னவோ சொல்லத் தோன்றவில்லை.
விளக்குகள் அணைக்கப்பட்டு, வர்ணஜாலமாய்ப் பலவர்ண விளக்குகள் சுற்றிச் சுழன்று எரிய, டீஜே பாடல்கள் அதிரடியாக ஒலிக்க ஆரம்பித்தன. துள்ளலான இசைக்கு ஏற்ப மொத்த கிளப்பும் ஆட ஆரம்பித்தது.
நிரோஜன் மட்டும் கிடைத்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்துகொண்டான். எங்குப் போனாலும் இதயத்தை இறுக்கிப் பிடித்திருந்த அந்த இறுக்கம் மட்டும் அகலுவதாக இல்லை. அவனுள் பரவிவிட்ட வெறுமை அவனை விட்டு நீங்குவதாக இல்லை. சதா சிந்தனை அவளிடமே ஓடிக்கொண்டிருந்தது.
கிடைக்கிற நேரங்களில் எல்லாம் அவளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்பாட்டுக்குக் கைகள் தட்டி தட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தன. அவ்வபோது அவளின் சிரித்த முகத்தை, அழகிய விழிகளை, அவனுக்குப் பிடித்த ஜும்காவை, அந்த நீண்ட கூந்தலை, அதில் அவன் விளையாடிய பொழுதுகளை எல்லாம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கைகள் அந்தப் புகைப்படங்களைத் தட்டினாலும் எண்ணம் முழுக்க அன்று கண்ணீருடன் கடைசியாகப் பேசிய அந்த முகத்திலேயே நின்றிருந்தது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு பிரிவைச் சொல்லிவிட்டான். கோபம் தெளிந்ததும் வருவான் என்று எதிர்பார்த்திருக்கிறாள்.
காயப்பட்டிருந்த நேரத்தில் அவன் அவளைத் தேடவில்லை என்பதும் சேர்ந்து அவளை மிகப் பெரிதாகத் தாக்கியிருக்கிறது.
ஆனால் அது உண்மையில்லை. அவன் தேடினான். அவள் எப்படி இருக்கிறாள் என்று கண்காணித்தான். என்ன அதை அவளுக்குத் தெரியும் விதமாக அவன் செய்யவில்லை.
அவள் கண்ணீர் விட்டுக் கெஞ்ச கெஞ்சப் பிரிவைச் சொல்லிவிட்டு வந்தவன் அவன். அது அவனுக்கும் உயிர் போகிற வலியைத் தந்தபோதும் இருவருக்குமே அந்த முடிவுதான் சரி என்று நம்பியவன்.
அப்படியிருக்க அவளைத் தேடுகிறோம், அவள் எப்படி இருக்கிறாள் என்று கவனிக்கிறோம் என்று அவளுக்கே காட்டி, அவளுக்கு எப்படித் திரும்பவும் நம்பிக்கை கொடுப்பான்? அது இன்னுமின்னும் அவளை மோசமான நிலைக்குத் தள்ளாதா?
சொன்ன பிரிவில் உறுதியாக இருக்கிறேன் என்று காட்டினால்தான் அவளும் அதிலிருந்து வெளியே வருவாள்.
அவள் இரண்டு நாள்கள் கொழும்பிலேயே இருந்தது, பிறகு கிளிநொச்சி போனது, திரும்பி வந்தது எல்லாமே அவனுக்குத் தெரியும்.
ஏன் இரண்டு வாரங்கள் அவள் மெடிக்கல் விடுமுறையில் இருந்தது கூடத் தெரியும். காரணம்தான் அவனால் அறிய முடியாமல் போயிற்று. அவர்களின் அலுவலகத்தில், வேறு ஒரு டீமில் இருந்த ஒருவன் மூலம்தான் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான்.
அப்படி அவள் மெடிக்கல் விடுமுறையில் இருக்கிறாள் என்று அறிந்ததும் பயந்துபோய் அஜந்தாவிற்கு அழைத்திருந்தான்.
அவள் இவனைப் பேச விடவேயில்லை. அழைப்பை ஏற்ற கணமே, “நீங்க எல்லாம் இவ்வளவு கேவலமான ஆளா இருப்பீங்க எண்டு நினைச்சுப் பாக்கவே இல்லை நிரோஜன். அப்பா இல்லாமப் போய், அம்மா சகோதரி ரெண்டு பேருமே ஆதரிக்காம விட்டதில, தனக்கெண்டு இருக்கிற ஒரே ஒரு உறவா அவள் உங்களைப் பாத்தவள். அதுக்கு நீங்க குடுத்த பரிசு பிரேக் அப். ஆனா ஒண்டு, நிதானமா இருந்து யோசிச்சுப் பாக்கேக்க நீங்க ப்ரேக் அப் பண்ணினதுதான் சரி நிரோஜன். இண்டைக்கு வலிச்சாலும் நாளைக்கு அவள் நிமிர்ந்திருவாள். அவளுக்கும் நல்ல வாழ்க்கை ஒண்டு அமையும். இல்லாம உங்களைக் கட்டி, பிள்ளை குட்டி எண்டு வந்த பிறகு, இதே மாதிரி ஒரு பிரச்சினை வந்து, அப்ப நீங்க விட்டுட்டுப் போறதுக்கு இது எவ்வளவோ பெட்டர்.” என்று சீறியிருந்தாள்.
சுடாமல் இல்லை. முகம் கருகாமல் இல்லை. ஆனால், தோழிக்காகப் பேசுகிறவள் மீது அவன் திருப்பிக் கோபப்படவில்லை.
அதற்கு மாறாக, “இப்ப சொன்னீங்களே, நாளைக்குக் கலியாணம் குழந்தை குட்டி எண்டு ஆனபிறகு இப்பிடி ஒரு நிலை வந்திருந்தா என்ன ஆகியிருக்கும் எண்டு. அத யோசிச்சுத்தான் நானும் பிரிவைச் சொன்னனான் அஜந்தா. ஆசைப்பட்டுச் சொல்லேல்ல. இன்னொருத்தியப் பாத்துப்போட்டும் சொல்லேல்ல. பரவாயில்ல, உங்கட பார்வைல அது பிழையா இருந்தா இருந்திட்டுப் போகட்டும். யாமினி மெடிக்கல் லீவுல நிக்கிறாளாம். என்ன நடந்தது எண்டு மட்டும் சொல்லுங்க. உண்மையாவே அவளுக்கு ஏத்துமா?” என்று விசாரித்தான்.
அவர்களின் அலுவலகங்களில் ‘மெடிக்கல் விடுமுறை’ எடுத்துக்கொண்டு அவர்கள் வேறு வேலைகளும் பார்ப்பார்கள் என்பதில் விசாரித்தான்.
அவளோ, “திரும்ப சேருற பிளான் இருக்கா உங்களுக்கு?” என்று திருப்பி ஒரு கேள்வி கேட்டாள்.
இவன் அமைதியாக இருக்க, “இல்லை என்ன? பிறகு என்னத்துக்கு அவளைப் பற்றி விசாரிக்கிறீங்க நிரோஜன்? முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். அவள் உங்களை மறந்து வெளில வரட்டும். தயவு செய்து அவள் எப்பிடி இருக்கிறாள், என்ன செய்றாள் எண்டு கேட்டுக்கொண்டு வராதீங்க. இனி நீங்க எடுத்தா நான் எடுக்க மாட்டன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.
இத்தனை பேசிய அஜந்தா, யாமினிக்கு உண்மையில் ஒன்று என்றால் அவனைச் சும்மா விட்டிருக்க மாட்டாள். ஆக, அவள் வேறு எதற்கோதான் அந்த விடுமுறையை எடுத்திருக்கிறாள் என்று அவன் எண்ணியிருந்தான்.
நான் முடியாமல் இருந்த அந்த ஒரு மாதத்தில் கூட நீ என்னைத் தேடவில்லையே என்று அவள் சொன்னபோது இதையெல்லாம் அவனுக்குச் சொல்ல விருப்பம் இல்லை. பொருந்தா இடத்தில் மனத்தை விட்டுவிட்டு இருவருமே அழுதுகொண்டிருக்கிறார்கள் என்கையில் சொல்லி என்னாகப்போகிறது?
இதோ இப்போதும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று நிம்மதியிழந்து தவிக்கிறான்தான். உயிர் போவதுபோல் வலிக்கிறதுதான். தவறு செய்துவிட்டோமோ என்கிற எண்ணம் அவன் உள்ளத்தைப் பதறச் செய்கிறது. அவளின் நினைவுகளில் இருந்து வெளியே வர முடியாமல், இன்னுமின்னும் அவற்றோடு அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
அவளின் நிலையைவிட அவனின் நிலை எந்த விதத்திலும் மேலானதல்ல. வித்தியாசம் ஒன்றுதான். அவள் அவன் முன்னே கண்ணீர் சிந்தினாள். அவனோ யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறான்.
ஆனால் இதற்கு வேறு என்ன வழி என்று அவனுக்கு இப்போது வரை தெரியவில்லை. அவனின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை; அவளின் நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை. அப்படி இருக்கையில் எதிரும் புதிருமான இருவர் மீண்டும் இணைந்து, இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியுமா? அது மீண்டும் இன்னொரு சண்டை, இன்னொரு காயப்படுத்தல், இன்னொரு பிரிவு என்றுதானே முடியும்.
எல்லாம் அறிவுக்குப் புரிகிறதுதான். இந்த மனம்தான் பழகிய நாள்களையும், பகிர்ந்துகொண்ட இனிமையான தருணங்களையும், அழகிய நினைவுகளையும் மறக்கவிடாமல் செய்து உள்ளத்தைப் போட்டுக் கசக்கிப் பிழிகிறது.
அவன் தோளில் ஒரு கை பதியவும் நிமிர்ந்து பார்த்தான். நவீன்தான் பக்கத்தில் வந்து அமர்ந்தான். “இப்பிடி அவளையே நினைச்சுக்கொண்டு இருக்கிறதுக்கு அவளோட கதையடா.” மேசையில் இருந்த அவன் கைப்பேசியில் இருந்த அவள் படத்தைக் காட்டிச் சொன்னான்.
கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தான் அவன்.
“அவளை வெறுத்திட்டியா?”
அப்படித்தான் நினைத்திருந்தான். அவள் கொடுத்த நெருக்கடிகளில், போட்ட சண்டைகளில் வதைக்கிறாள், கொடுமை செய்கிறாள் என்று எண்ணியிருந்தான். மனம் விட்டுப் போய், வெறுத்துத்தான் பிரிவைச் சொன்னான்.
பிறகு எதற்கு இரண்டு மாதங்களாகியும் இந்த நரக வேதனை என்று அவனுக்குப் புரியவேயில்லை.
“என்ன மச்சான்?”
“விடுடா!”
“அவளும் சந்தோசமா இல்லையடா. அண்டைக்கு எப்பிடி அழுதாள் எண்டு பாத்தாய்தானே?”
அந்த அழுத முகம்தானே அவனைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது.
“நாங்க ஆரும் கதைக்கவா? இல்ல, அசோகன் அண்ணாவை விட்டு எண்டாலும் கதைக்கலாம்.” நண்பன் தனக்குள் படுகிற பாட்டைப் பார்க்க முடியாமல் கேட்டான் நவீன்.
“என்னடா கதைக்கப்போறீங்க?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
நவீன் பதிலாற்றுப் பார்க்க, “இஞ்ச சமாதானமாகிறது முக்கியம் இல்ல மச்சான். அதுக்குப் பிறகு சண்டை சச்சரவு இல்லாம ரெண்டு பெரும் சந்தோசமா வாழோணும். அவளை நானோ என்னை அவளோ வேதனைப்படுத்தக் கூடாது. அது நடக்குமா சொல்லு?” என்று கேட்டான்.
“இனி அவள் எனக்கு இல்லை எண்டுற நினைப்பே கொல்லுது மச்சான். தப்பித் தவறி அவளை இன்னொருத்தனோட பாத்தன் எண்டு வையன், செத்தாலும் செத்திருவன்டா. ஆனாலும் இப்பவும் எனக்கு நான் வாழுற முறைல பிழை இருக்கிற மாதிரி தெரியேல்ல. அவளால என்னை நான் இருக்கிற மாதிரியே ஏற்று ஏலாது. அப்ப என்ன நடக்கும் எண்டு நினைக்கிறாய்?”
“சரி, இனி என்ன செய்யப்போறாய்?”
அது தெரியாமல்தானே கிடந்து தினம் தினம் சாகிறான்.
“ஒரு பியர் சொல்லவா?” அவனைக் கொஞ்சம் குளிர்விக்க எண்ணி வினவினான்.
மறுப்பாகத் தலையசைத்தான்.
“குடி மச்சான். நல்லாருக்கும்.”
“ப்ச் விடு!”
“ஏன்?”
“அவளுக்குப் பிடிக்காது.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

