“உங்களுக்கும் உங்கட அப்பாக்கும் நடுவில பிரச்சினையா வந்து நிக்கிறனா?” தன்னிடம் அவரைப் பற்றி அவன் சொல்லாததால் அவளுக்குப் மிகப்பெரிய மனக்குறை இருந்தது. ஆனால், அவரைத் தட்டிக் கேட்டிருக்கிறான் என்பது அவள் மனக்குறையை மொத்தமாகப் போக்கிற்று.
இப்போது, என்ன இருந்தாலும் அப்பாவையும் மகனையும் மோதிக்கொள்ள வைத்துவிட்டோமோ என்கிற எண்ணத்தில் கேட்டாள்.
அவள் சஞ்சலத்தை அவள் கண்களிலேயே படித்தவன், அவள் பற்றியிருந்த தன் கரத்தாலேயே அவள் கரத்தைப் பற்றித் தன்னிடம் இழுத்தான். அவன் கைக்கு வலித்துவிடுமோ என்கிற பயத்தில் அவன் இழுக்கும் அவசியமே இல்லாமல் அருகில் வந்து, பாயில் அமர்ந்தாள் அவள்.
அவள் கன்னத்தை மறு கரத்தால் வருடி, “இன்னும் நீ வேற நான் வேற எண்டு நினைக்கிறியா?” என்றான், உறங்கி எழுந்ததில் கரகரத்த குரலில்.
அவள் பேச்சு அப்படியே நின்று போயிற்று. இமைக்கவும் மறந்தவளாக அவனையே பார்த்தாள். அவன் நேசத்தின் ஆழம் அவள் இதயத்தைத் தொட்டது. விழிகளில் கண்ணீர் சூழ்ந்தது.
“அழுறேல்ல இசை!” அவள் கன்னத்தில் இலேசாகத் தட்டிச் சொல்லிவிட்டு எழுந்து அமர்ந்தான்.
சட்டென்று அவள் பார்வை தடுமாற்றத்துடன் தழைந்தது. முதலில் அதை அவன் கவனிக்கவில்லை. ஒற்றைக் கையால் தன் தலையைக் கோதிச் சீர் செய்ய முயன்றபடி, “எப்பிடி வந்தனி? வீட்டுல விட்டிருக்காயினமே.” என்று விசாரித்தான்.
கோகிலா, நேசனைப் பற்றி அவனுக்கும் தெரியும். கூடவே, அன்று காலையில் வந்த மாதவியும் துளசியும் நடந்ததைச் சொல்லியிருந்தார்கள்.
“அது… அண்ணிதான் கூட்டிக்கொண்டு வந்து விட்டவா.”
அவனுக்கு வியப்பு. “அப்ப அவா எங்களுக்கு சப்போர்ட்டா?” ஆச்சரியத்துடன் கேட்டவன் அப்போதுதான் அவள் தன்னைப் பாராமலேயே பதில் சொல்வதைக் கவனித்தான்.
“இசை என்ன?” என்றான் சிரிப்புடன்.
அவள் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.
“அதை என்னைப் பாத்துச் சொல்லுறதுதானே.”
அவளும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனை இயல்பாக எதிர்கொள்ளத்தான் நினைக்கிறாள். முடிய வேண்டுமே. உள் பெனியனுடன், உறங்கி எழுந்த தோற்றத்தில், கலைந்த தலையும், சற்றே சிவப்பேறிய விழிகளுமாக அருகிலேயே இருக்கிறவன் அவளைப் பாதிக்கிறான் என்று எப்படிச் சொல்ல?
உதட்டு முறுவல் நன்றாகவே விரிய, “அங்க பார் தொங்குது, என்ர டீ ஷர்ட். எடுத்துத் தா!” என்றான் அவன் அவளை உணர்ந்து.
வேகமாக எழுந்துபோய் எடுத்து வந்து கொடுத்தாள்.
“இதுக்குத்தான் இவ்வளவுமா?” என்று கேட்டபடி கட்டுப்போட்ட கையோடு கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அணிந்தான். பார்க்கப் பாவமாக இருந்தது. அதுவும் வலது கையில் கட்டு. சாப்பிடுவது தொடங்கி எல்லாமே சிரமமாக இருக்குமே.
அப்போதுதான் நினைவு வர, “சாப்பிடேல்லையா? மருந்தும் நீங்க இன்னும் போடேல்லையாம் எண்டு குரு அண்ணா சொன்னார்.” என்று, பார்வை அங்கே அவனுக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த உணவுக்குச் சென்று வர வினவினாள்.
“சாப்பிடோணும்தான். நீ சாப்பிட்டியா?”
ஆம் என்று தலையை அசைத்தவள், அவனுடைய உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னே வைத்தாள்.
அவன் சாப்பிடுவதற்கு வசதியாகக் கரண்டியும் இருந்தது. அவளால் அப்படி நீயே சாப்பிடு என்று கொடுக்க முடியவில்லை. அன்று உண்ண முடியாமல் இருந்தவளுக்கு அவன் ஊட்டிவிட்டது நினைவு வந்தது.
தயக்கம் பிடித்து அவளைப் பின்னால் இழுத்தாலும் அதன் சொல்லைக் கேட்காமல் எழுந்துபோய், வீட்டின் வெளியே கையைக் கழுவிக்கொண்டு வந்து, அவன் முன்னால் அமர்ந்தாள். அப்படியே உணவுத் தட்டையும் கையில் ஏந்தி, சோற்றைக் கறிகளோடு சேர்த்துக் குழைத்து, ஒரு பிடி அள்ளித் தயக்கத்தோடு அவன் முன்னே நீட்டினாள்.
அவ்வளவு நேரமாக அவளின் செய்கைகளையே சின்ன புன்னகையும் வியப்புமாகக் கவனித்திருந்தான் தூயவன். அவள் உணவை அவன் முன்னே நீட்டவும், அவனுடைய ஒற்றைப் புருவம் மட்டும் விசமத்தோடு உயர்ந்தது.
அவள் முகம் இலேசாகச் சிவந்தது. அதை நகைக்கும் விழிகளால் ரசித்தபடி வாயைத் திறந்து உணவை வாங்கினான். அவளும் அவன் விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தபடி கொடுத்தாள்.
அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. “இந்த ஒரு பிடிச் சோறு மட்டும்தான் எனக்கா, இல்ல, அதத் தாற ஆளுமா?” என்று வினவினான் அந்த நகைப்பினூடு.
அவள் முகம் அப்பட்டமாகச் சிவந்துபோனது. அவனுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்தபடி அடுத்த வாய் உணவைக் கொடுத்தாள்.
அதை மறுக்காமல் வாங்கினாலும் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்திருந்தான் அவன்.
அவள் அடுத்த வாயையும் கொடுத்தாளே தவிர்த்துப் பதில் சொன்னாள் இல்லை. அவனும் விடாமல் அவளையே பார்த்தான். கடைசியில் முடியாமல், “எல்லாம் உங்களுக்குத்தான். ஆனா…”
“அண்ணா சொன்னாத்தான் கட்டுவன்.” அவளோடு சேர்ந்து தானும் சொல்லிவிட்டுச் சிரித்தான் தூயவன்.
வாய்க்குள் உணவோடு சிரிக்கவும் புரையேறியது. “அச்சோ! சாப்பிடேக்க கதைச்சா இதான் நடக்கும்!” என்றபடி, உணவுத் தட்டைத் தள்ளித் தரையில் வைத்துவிட்டு, எட்டி அவன் தலையில் தட்டினாள் அவள். அப்போதும் விடாமல் இருமியபடி நெஞ்சைத் தடவிக்கொண்டு அவளையே பார்த்தான் அவன்.
“இப்பிடிப் பாக்காதீங்க முதல்.” ஒரு வேகத்தில் அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பிவிட்டுத் தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.
அவனுக்கு அவள் செய்கைகள் ஒவ்வொன்றும் இன்னுமின்னும் சிரிப்பையே மூட்டின. இருமலோடு இன்னும் சிரித்தான். அவள் தந்த தண்ணீரைப் பருகி, தன்னைக் கொஞ்சம் ஆசுவாசமாக்கிய பின்னும் அவன் முகத்தில் இருந்த முறுவல் மறையவே இல்லை.
“ஓகேயா? இருமல் நிண்டுட்டா? ஏற்கனவே கைல காயம். இதுல இது வேற. சின்ன பிள்ளையா நீங்க? சாப்பிடேக்க கதைக்கக் கூடாது எண்டு தெரியாதா?” அவனைக் கடிந்தபடி இன்னும் அவன் தலையைத் தட்டி கொடுத்தவளைக் கண்டு, அவன் பார்வையில் நெருக்கம் கூடிப் போயிற்று.
அவளை இடையோடு சேர்த்துத் தன் அணைப்புக்குள் கொண்டு வர, அவன் செய்கையில் அதிர்ந்தாலும், “ஐயோ என்ன செய்றீங்க? கை கை கை!” என்று பதறினாள் அவள்.
அவன் அதற்கும் சிரித்தான். “கைக்குச் சொந்தக்காரன் நானே பேசாம இருக்கிறன். நீ ஏன் இந்தக் கத்து கத்துறாய்?” என்றான் அவள் முகத்தையே ஆசையாகப் பார்த்தபடி.
“ப்ளீஸ் விடுங்க. கதவும் திறந்திருக்கு.” தேகமெல்லாம் கூசிச் சிலிர்க்க, அவன் கைகளுக்குள் இருந்து நழுவ முயன்றாள்.
“நாங்களா வெளில போற வரைக்கும் குரு வரமாட்டான். வேற ஆரையும் வர விடவும் மாட்டான்.”
“அதுக்காக… விடுங்க ப்ளீஸ்!” அன்றைக்கு அவன் கைக்குள்தான் பாதுகாப்பாக உணர்ந்தாள். அவன் மார்பில்தான் ஆறுதலும் தேடினாள். ஆனால், இன்றைக்கு வெட்கம் வந்தது. இது வேறு வகையான உணர்வு.
ஆனால், அவன் இன்னும் அவளை முதுகோடு வளைத்துத் தன்னோடு சேர்த்தணைக்க முயலப் பதறிப்போய் விலகினாள். அவன் கண்களில் குறும்பு மின்னியது.
அதைக் கவனித்தாலும் கவனிக்காததுபோல் காட்டி, “முதல் சாப்பிட்டு முடிங்க. ஏற்கனவே சூடாறிப் போச்சு.” என்றபடி அவனுக்கு உணவைக் கொடுத்து முடித்தாள். அப்படியே என்னென்ன மாத்திரைகள் போட வேண்டும் என்று அவனிடமே கேட்டு அதையும் கொடுத்தாள்.
அவள் தன்னைக் கவனிக்கும் அழகைப் பார்த்திருந்தவனுக்கு மனம் கனிந்துபோயிற்று. மிகவுமே இதமாக உணர்ந்தான்.
அந்த உணர்வு தந்த இதயத்தோடு, “நீ ஓகேயா இப்ப?” என்று விசாரித்தான்.
அவளுக்கு என்ன? அவள் நன்றாகத்தானே இருக்கிறாள். கேள்வியுடன் ஏறிட்டாள் அவள்.
அவன் பதில் சொல்லவில்லை. அவளையே பார்த்தான். மாதவிடாயைக் குறித்து விசாரிக்கிறான் என்று அதன் பிறகுதான் விளங்க, அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, ‘ஓகே’ என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“உங்களுக்கு இன்னும் உடம்பு சுடுகுதே. காயம் அவ்வளவு பெருசா?” அவன் அணைத்தபோது உணர்ந்த கணகணப்பை மனத்தில் வைத்து வினவினாள்.
“அந்தளவுக்கு எல்லாம் ஒண்டும் இல்ல. இப்பதானே குளுசை போட்டனான். இன்னும் கொஞ்ச நேரத்தில வேர்த்துக்கொண்டு வர ஆரம்பிச்சிடும்.” என்றான் அவன் சின்ன புன்னகையோடு.
“ஆனா சோர்வா இருக்கிறீங்க. இதான் உங்கள நான் இப்பிடிப் பாக்கிறது முதல் தரம்.”
அவன் ஒன்றும் சொல்லாமல் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபடி பக்கத்தில் இருந்த அரிசி மூட்டையில் சாய்ந்து அமர்ந்தான்.
“அண்ணா சொன்னார் நீங்க நல்லா உடஞ்சிட்டிங்களாம் எண்டு.”
அதற்கும் ஒன்றும் சொல்லாமல் சின்னதாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையின் பின் இருந்த சோகத்தில் அவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. “நடந்தது எல்லாம் முடிஞ்சதா இருக்கட்டும். இனியும் இப்பிடிக் கோவப்படாதீங்க ப்ளீஸ். அவருக்கு அவரின்ர மகன் அவர் காட்டுற பிள்ளையைக் கட்டோணும் எண்டுற ஆசை இருந்திருக்கும். அது இல்லை எண்டதும்…” என்று அதை முடிக்கத் தெரியாமல் அவனைப் பார்த்தாள்.
“மன்னிக்கிற பிழைகளை அவர் செய்யேல்ல இசை.”
“ப்ளீஸ்!”
“அத விடு. உன்ர வீட்டில என்னவாம்?” அந்தப் பேச்சையே அவன் தவிர்த்தான்.
அதில் அவள் முகம் இலேசாக வாடியது. ஆனாலும், “கடத்தினது ஆர், எப்பிடி நடந்தது எண்டு அண்ணா கேட்டவர். ஆனா நான் ஒண்டும் சொல்லேல்ல.” என்று சொன்னாள்.
அவன் விழிகளில் வியப்பு. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் கேட்டதற்கு அவன் சொல்ல மறுத்தானே தவிர்த்து அவளைச் சொல்லாதே என்று சொல்லவே இல்லை.
“இல்ல. நீங்க ஏன் வெளில விடாம இருக்கிறீங்க எண்டு தெரியேல்ல. அதான், நானா எதையாவது சொல்லப்போய்…”
அவளின் எண்ணம் சிந்தனை யாவும் அவனோடு இரண்டராக் கலந்துவிட்டன என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும் அவனுக்கு? அவளைத் திரும்பவும் இடையோடு வளைத்துத் தன்னிடம் கொண்டு வந்து, முத்தமிடப் போனவன் அதை நிறுத்தி, அவள் நெற்றியோடு நெற்றியை முட்டி விழிகளை மூடிக்கொண்டான்.
அவனுக்குள் எழுந்த வேகத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். முடியவில்லை. அவன் உதட்டினில் ஒரு துடிப்பு. அது தன் இணையைச் சேரத் தவித்தது. மெல்ல விழிகளைத் திறந்து, “கிஸ் பண்ணவா?” என்றான்.
அவள் முகத்தில் சட்டென்று ஒரு பதற்றம். தானாகவே அன்றைய நாள் நினைவில் வந்தது. அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவன் முகம் அப்படியே சின்னதாகிப் போனது. “சொறி!” என்றபடி தன் அணைப்பைத் தளர்த்தினான்.
“இப்ப கேட்டதுக்கு மட்டுமில்ல, அண்டைக்கு நடந்துக்கும் சேர்த்து.” என்றான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி.
“என்ன எண்டாலும் அண்டைக்கு நான் அப்பிடி நடந்திருக்கவே கூடாது. அதுவும் அண்டைக்கு என்னை உனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அப்பிடி இருக்க நான் நடந்தது… ஒரு பொம்பிளைப்
பிள்ளையிட்ட அத்து மீறி இருக்கிறன். அது ஒரு மாதிரி எனக்கே என்னைக் கேவலமாக் காட்டும்.” என்று என்னென்னவோ சொன்னான்.
அவ்வப்போது அதை நினைத்து அவனும் தனக்குள் குறுகிக்கொண்டு இருக்கிறான் என்று அதுவே சொல்லிற்று. அவ்வளவு நேரமாக அவன் தன் அணைப்பைத் தளர்த்தியிருந்தபோதும் அவன் கைகளுக்குள்ளேயே இருந்தவள் அவன் முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள்.
அவன் வியப்புடன் அவளைப் பார்க்க, “சத்தியமா அந்த நேரம் உங்களைக் கொல்லுற வெறியே எனக்கு இருந்தது. மனதால அந்தளவுக்கு உங்களை வெறுத்தும் இருக்கிறன். ஆனா இப்ப… விடுங்க பரவாயில்ல.” என்றாள் புன்னகை முகத்துடன்.
அவளையே சில கணங்கள் பார்த்தவன் அவள் முகத்தைத் தான் ஏந்தி, அவள் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான். என்னவோ ஆழ்ந்து போக முடியவில்லை. சற்று விலகி அவளைப் பார்த்தான். அவள் விழிகளில் வெட்கம். தலையைக் குனியப் போனாள். முகம் மலர இந்த முறை ஆழமாக முத்தமிட ஆரம்பித்தான்.
அன்றைய நாள் நிகழ்வை மறக்க வைக்குமளவுக்கான முத்தம். தன் ஆசை தீர்ந்தபின் மெல்ல விலகி அவள் முகம் பார்த்தான். முகம் திருப்பித் தன் வெட்கம் மறைக்க முயன்றவளின் செய்கை சிரிப்பை மூட்ட, ஆசையாக அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டுத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவனின் உள்ளம் நிறைந்துபோய் இருந்தது.

