அத்தியாயம் 17- 1

எனக்குத் திருமணம் என்றுதானே பாடசாலையில் விடுமுறை எடுத்திருந்தேன்

  அந்தநேரமே, “கலியாணத்துக்கு எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டிரோ?” என்று கேட்ட சக ஆசிரியர்களுக்கு அழகான புன்னகையோடு, “பெரிசா எல்லாம் செய்யேல்ல; சொந்தத்தில மட்டும் தான் சொல்லியிருக்கிறம்.” என்று சொல்லிச் சமாளித்துவிட்டேன்

   நானே கலங்கிக்கொண்டு செல்லும் கலியாணத்துக்கு அவர்களை எல்லாம் அழைத்தும்ம்ம்விட்டுவிட்டேன்.

   சக ஆசியர்களுக்கோ பெரும் ஏமாற்றம். என்ன இது என்றதுபோல் பார்த்தாலும் பெரிதாகத் தூண்டித் துருவவும் இல்லை

   இருந்த போதும், “இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை உதயா; கலியாணம் முடியவிட்டு எங்கள் எல்லாருக்கும் பெரிய விருந்து வைக்க வேணும்!” என்று வம்பு செய்திருந்தார்கள், என் சமவயது ஆசிரியைகள்.

   அதற்கும் புன்னகையையே பதிலாகக் கொடுத்திருந்தேன்.

   அவ்வளவாகக் கலகலப்பாகக் கதைத்துப்பழகாத என் குணம் இந்த இடத்தில் பெரிதும் கைகொடுத்தது எனலாம்.

  அதன்பிறகு, இந்தப் பத்து நாட்களுமே, பாடசாலையில் கலியாணப் பெண்ணாக என்னை எதிர்கொள்வார்களே என்ற சிந்தனை வரும் வகையிலா நான் இருந்தேன்? அதைபற்றிச் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை

   இப்போதோ, பாடசாலையை அண்மிக்கும் வரையிலும் வீட்டில் நடந்ததை நினைத்துக் கோபத்தில் பொருமிக்கொண்டு வந்த எனக்கு, காலை வணக்கம் சொன்ன மாணவிகள் தம்முள் குசுகுசுவென்று கதைத்துச் சிரிக்கவும் தான், திருமணம் முடித்து முதல் முதல் பாடசாலை வரும் ஆசிரியையாக அவர்கள் என்னைப்  பார்ப்பதே புரிந்தது.

  “உதயா மிஸ்!” ஓடி வந்தாள்ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவி கீர்த்திஅவளுக்கு நான் என்றால் மிகவும் பிடித்தம்.

  “குட் மோர்னிங் மிஸ்!” அழகாகச் சொன்னவளின் விழிகள் குறுகுறுவென்று என் முகத்தில் வட்டமிட்டன

  என்னை மீறிய முறுவல் உதடுகளில் வந்தமர, “குட் மோர்னிங் கீர்த்தி! பிரேயர்ஸ் தொடங்கப் போகுதுஇங்க என்ன செய்யிறீர்ஓடிப் போம்!” என்றேன், வரிசையாக வந்து கூடும் மாணவிகளைப்  பார்த்தபடி

  முதலாவது மணி  அடித்திருந்தார்கள்இன்றைக்கு நாங்கள் தான் தாமதம்.

  “இதோ போறன் மிஸ்.” என்றவள், இன்னும் சற்றே நெருங்கி வந்தாள், இரகசியம் கதைப்பது போல்

  “நாங்க போயிட்டு வாறம் கா!” தங்கைகள் தம் வகுப்புப் பிள்ளைகளோடு சேர்ந்து நடக்க, தலையாட்டி விடைகொடுத்துவிட்டு கீர்த்தியைப் பார்த்தேன் நான்

  “மிஸ்! இண்டைக்கு நீங்க நல்ல வடிவா இருக்கிறீங்க! இந்தச்  சாரி புதுசா?” 

   தன் சின்னக் கையால் இலேசாகத் தொட்டுப் பார்த்தபடிக்  கேட்டவளை முறுவலோடு பார்த்தேன். அந்தக் குழந்தையின் விழிகளில் மின்னிய ஆர்வத்திலும் அன்பான பேச்சிலும், மனதுள் இருந்த கருமையெல்லாம் மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கியிருந்து

   “உங்கட கலியாண  போட்டோஸ் கொண்டு வந்தீங்களா மிஸ்? தேர்ட்  பீரியட் எங்களுக்குச்  சமயம், எனக்குத்தான் முதல் தரவேணும் சரியோ?” உரிமையாகக் கேட்டு வைத்தாள்.

   சட்டென்று  என் முகம் மாறியதுதான்; இருந்தும் சமாளித்து விட்டேன்.

   “பெரிய  மனுசி!” கன்னத்தில் மெல்லத் தட்டினேன். “பாடம் படிக்கிற நேரத்தில ஃபோட்டோவா பாக்கிறது?”

   “இல்ல மிஸ் இன்டர்வலில பார்ப்பம்; ப்ளீஸ்எனக்கு முதல்.” கெஞ்சலாகச் சொன்னாள்

   “வந்ததும் வராததுமா கேட்டடியில நிண்டு இப்பிடிக்க கதைச்சுக்  கொண்டிருந்தா  என்ன நடக்கும் தெரியுமா? அங்க பாரும், ப்ரிஃபெக்ட்  அக்காமார் வருகீனம். கீர்த்தி பிந்தி வந்திருக்கிறா எண்டு கேட்டடியில பிடிச்சு வைக்கப் போகீனம்.” சொன்னதும் விசுக்கென்று திரும்பிப் பார்த்தவள், “நான் போயிட்டு வாறன் மிஸ்; எனக்குத்தான் முதல் தர வேணும் சரியோ?” சொல்லிக்கொண்டே சிட்டாக ஓடிச் சென்றாள்.

   நானும் நடக்கத்  தொடங்கினேன். இன்னும் சில நாட்களுக்குப்  புதுக் கலியாணப்பெண் என்றதை இப்படிப் பல வழிகளிலும் சந்தித்தே  ஆகவேண்டிய சூழல்

   ‘என் கலியாணம் கந்தலான கதை சக ஆசிரியர்களுக்குத் தெரிந்தும் இருக்கலாம்.’ எண்ணிய மனதுள் அவமான உணர்வு இல்லாமல் இல்லைஎன்றாலும், சாதாரணமாகவே இருக்க முயன்றபடி பிரார்த்தனைக்காக வரிசையாகக் கூடி நின்ற ஆசிரியர்களோடு சேர்ந்து கொண்டேன்.

   எங்கள் தலைமை ஆசிரியை ஒரு கன்னியாஸ்திரி. மிகுந்த கண்டிப்பும் கறாறுமாகவே இருப்பவர். அவர் எதிரில் நின்றதாலோ என்னவோ, அங்கிருந்த ஆசிரியர்கள் என்னைக் கண்டதும் சற்றே முகம் மாறினாலும்  எதுவும் கதைக்கவில்லை. சிறு தலையாட்டலோடு நின்றார்கள்.

  பிரார்த்தனை முடிய ஒவ்வொரு வகுப்பு மாணவிகளும் வரிசையில் செல்ல ஆசிரியர்கள் ஓய்வறை நாடிச்சென்றார்கள். நான் அங்கு செல்லவே நினைக்கவில்லை. எனக்கு முதல் பாடம் ஒன்பதாம் வகுப்புக்கு. அந்த வகுப்பறை மாணவிகளுக்குப் பின்னால் நானும் சேர்ந்து கொண்டேன்.

  எத்தனைக்கென்று இப்படித் தவிர்க்க முடியும்? அடுத்தடுத்த பாடவேளைகள் முடியத் தேநீர் இடைவேளையில் ஓய்வறையை நாடிச் சென்றேன். அங்கிருந்த நாலைந்து ஆசிரியைகளும் என்னை எப்போதும் போலவே எதிர்கொண்டார்கள்.

  மற்றவர்கள் இன்னமும் வந்திருக்கவில்லை. நான் வழமையாக  அமரும் இடத்தில் சென்றமர்ந்து கொண்டேன்

 “ஹே உதயா! எப்பிடிப்பா இருக்கிறீர்?” என்றபடி, அருகில் வந்தமர்ந்த சாந்தி டீச்சர், “நேற்று மகனிட பிறந்தநாளுக்குச் செய்த பலகாரங்கள், எல்லாரும் எடுத்துச் சாப்பிடுங்க!” என்று, பெரிய பிளாஸ்டிக் பெட்டியைத் திறந்து எல்லாருக்கும் பொதுவாக வைத்தார்.

  இது பொதுவான வழக்கம் தான். அநேகமாக எல்லா ஆசிரியர்களும் வீடுகளில் நடக்கும் விசேசங்களுக்குத் தயாரித்த  தின்பண்டங்களைக் கொண்டு வந்து பகிர்வார்கள். எனக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது. அப்படிப் பார்த்தால் நானும் தானே கொண்டு வந்திருக்க வேண்டும்?

  ‘உதயா எங்க உம்மட கலியாண வீட்டுப் பலகாரங்கள்? கலியாணத்துக்குத்தான் எங்களுக்குச் சொல்லேல்ல; பலகாரங்கள் சரி கொண்டு வந்திருக்கிறீரா?’ என்று யாராவது கேட்டுவிட்டால்!

   அவ்விடத்தில் இருக்கவே மிகுந்த சங்கடமாக இருந்தது. எழுந்து போய் விடுவோமா என்று கூட யோசித்தேன்.

   “உதயா என்ன யோசனை? பலகாரம் எடும்!” 

   தோளில் தட்டி அந்தப் பெட்டியை என்னருகில் இழுத்து வைத்தார், எனக்கு மறுபுறமிருந்த சித்ரா மிஸ்

  “தேங்க்ஸ் மிஸ்!” முணுமுணுப்போடு அதிலிருந்த ஒரு லட்டை எடுத்துக் கொண்டேன்.

   “உதயா, உம்மட்ட ஒண்டு கேட்க வேணும், எப்போ வருவீர் எண்டு பார்த்துக்கொண்டிருந்தன்.” 

   தானும் பலகாரத்தைக் கடித்துக் கொண்டே சாந்தி டீச்சர் சொல்ல, “லட்டு ருசியா இருக்கு.” என்றுவிட்டு, “என்ன சொல்லுங்க?” என்றேன் நான்.

  சாதாரணமாகக் கேட்பது போலிருந்தாலும் எப்போது யார் என் கல்யாணக்  கதையை ஆரம்பிப்பார்களோ என்பதிலேயே என் சிந்தை சுழன்றடித்தது

error: Alert: Content selection is disabled!!