அத்தியாயம் 17- 2

அப்படி அவர்கள் கதைக்கையில், சின்னதாகக் கூட நான் கலங்கிடக் கூடாதுபரிதாபம் என்றது யார் முகத்திலும் வரும் வகையில் நடக்கக் கூடாது எனும் வைராக்கியம் மனதுள் வலுப்பெற, சாந்தியை ஏறிட்டேன்.

   “அது ஒன்றுமில்ல உதயா, எங்கட பக்கத்து வீட்டு ஆன்ட்டி தன்ர  மகளுக்குக்  கணிதம் சொல்லிக் குடுக்க உம்மட்டக் கேட்கச் சொன்னவர்… ’’ என்றுதான் ஆரம்பித்தாவே ஒழியகல்யாணம் என்ற சொல்லையே உச்சரிக்கவில்லை

   அவர்கள் கேட்டிருந்தால் கூடப் பரவாயில்லை என்றளவுக்கு அதன்பின் வந்த யாருமே எதுவும் கதைக்கவில்லை

   பிறகென்ன? இதுவே  நடந்தது எல்லாம் அவர்களுக்குத்  தெரிந்துவிட்டது என்பதை எனக்கு நன்குணர்த்திவிட்டது. அந்த அவர்களின் போக்கு ஆரம்பத்தில் ஒரு மாதிரி அந்தரமாக இருந்தாலும் பிறகு பிறகு  மனத்துக்குப்  பெரும் நிம்மதியாகவும் இருந்தது.

  ‘வாழ்வில் எதுவும் எப்போதும் யாருக்கும் வரலாம். மற்றவர் நிலையை நாம்  பரிகாசம் செய்யவும் வேணாம். இல்லாததை இருக்கின்றது எண்டு சொல்லி அளவுக்கு அதிகமாகப் பாராட்டவும் வேணாம்என்னுள் சொல்லிக் கொண்டேன்

  என் சக ஆசிரியைகளை நினைக்கையில் நிச்சயம் பெருமிதமாகவும் இருந்தது

  துக்கம், விடுப்பு என்று யாரும் என்னை அணுகவில்லை.

  புத்தி சொல்கிறேன் என்று என்னை வருத்தி, நான் குன்றிக்குறுகி நிற்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தவில்லை

  சாடை மாடையாகக் கதைகளோ, பார்வைகளோவும் இருக்கவில்லை.

  அப்போது, “குட்  மோர்னிங்!” என்றபடி வந்தார் குணசீலன் சேர்; கணித பாட ஆசிரியர்; சில மாதங்களுக்கு முன்தான் மாற்றலாகி வந்திருந்தார்; மிகவும் கலகலப்பாக எல்லோருடனும் பழகுவார்.

  என்னைக் கண்டதும் சட்டென்று முகத்தில் ஆச்சரியம்  காட்டினார்.

   “ஹாய்  ஹாய்புது மணப்பெண் இண்டைக்கு வந்திருக்கிறாவே!”

   நீளமாகச் சொல்லி முறுவலித்தவர், “! கலியாண வீட்டுப் பலகாரங்களா? நான் தான் வரப்  பிந்தீட்டுப் போல?”  சொல்லிக் கொண்டே கேக் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தவர், “என்ன உதயா டீச்சர், கலியாணப் பெண் போலவே இல்ல; எப்பவும்  போலவே இருக்கிறீங்க? எங்களுக்குத்தான் கலியாணத்துக்குச் சொல்லேல்ல; கலியாணம் சரி நடந்திச்சுத் தானே?” என்றுவிட்டுக்  கடகடவென்று சிரித்தார்.

   அவர் இயல்பே அதுதான். தானே எதையாவது சொல்லிவிட்டு, அதை இரசித்துத் தானே சிரிக்கவும் ஆரம்பிப்பார். அவர் சொல்லும் விசயங்களில் சிரிப்புக்கு இடமிருக்கோ இல்லையோ, அவரைப் பார்த்தே மற்றவர்களும் அந்த நகைப்பில் இடம் பிடித்துக்கொள்வார்கள்.

   இன்றோ, வழமைக்கு மாறாக, யாருக்குமே அவர் சொன்னதை இரசிக்க முடியவில்லை என்பது அவர்களின் முகபாவங்களில்  தெள்ளெனத்  தெரிந்தது

 அதுமட்டுமின்றி, எல்லோருமே அவரை  ஒரு  பார்வை பார்த்தார்கள். அதைப்  பார்க்கையில் மிகுந்த  சங்கடமாக உணர்ந்தேன் நான்

   எப்போதுமே சேர்ந்து சிரிப்பவர்களின் அமைதியில் அவரும் சுதாகரித்துவிட்டார்.

   கையிலிருந்த மிகுதிக் கேக்கை வாயினுள் வைத்த வேகத்தில் முறுக்கை எடுத்துக்கொண்டு நகர்ந்தவர், தன் தேநீர் பிளாஸ்கை எடுத்துக்கொண்டு வந்து, எனக்கு நேரே முன்னால்  அமர்ந்து கொண்டார்.

  “இப்ப நான் என்ன கேட்டுட்டன் எண்டு எல்லாரும் இப்பிடிப் பார்க்கிறீங்க? சும்மா ஒரு பேச்சுக்குத்தானே கேட்டன்.” என்று அவர் சொல்கையிலேயே, “சேர்…” என்றபடி, தன்புறம் திருப்பிய பூரணி  மிஸ், சாடையில்  கண்டித்ததைக் கண்டேன் நான்.

  அவர் தடுமாறிவிட்டார். என்னையும் மற்றவர்களையும் சங்கடமாகப்  பார்த்தார்.   

  சட்டென்று எல்லாரையும் நிமிர்வாகவே பார்த்தேன். காலையில் வரும் போது இருந்ததை விடவே மனத்தில் ஒரு தெம்பு! துல்லியமாகவே அதை என்னால் உணர முடிந்தது

  நடந்து முடிந்தவற்றை, தாம் கேள்விப்பட்டவற்றைத் தூண்டித் துருவாத சக ஆசிரியர்கள் தந்த அணுசரணையே, அந்தத் தெம்பைத் தந்திருந்தது என்பேன்.

  “அதில்ல சேர், கலியாணத்தில கொஞ்சப்  பிரச்சின ஆயிற்று!” சிறு முறுவலோடு ஆரம்பிக்க, “ஹையோ! நான்நான் சும்மாதான் கேட்டன் டீச்சர்.” பதறிவிட்டார் அவர்.

  “அதில என்ன இருக்கு சேர்? நான் ஒண்டும் குறையா நினைக்கேல்ல. அதோட, கலியாணம் நடந்தது. பிறகென்ன? விடுங்கோ!” 

  இப்போது குழப்பத்தோடு முழிசினார் அவர். இருந்தும் வாய் திறக்கவில்லை

  “பச்! அதை விடும் உதயா.”  எழுந்தார், என்னருகில் அமர்ந்திருந்த சாந்தி மிஸ்.

  “இந்த இன்டர்வல் முடியிற வேகத்த! பிரின்சி கண்டால் சரி! பெல் அடிச்சு ஐஞ்சு நிமிசமாகப் போகுது இங்க என்ன கதை எண்டு விழும். நான் கிளாஸுக்குப் போறன்வாருமன்.”  நடக்கவே தொடங்கியிருந்தார்

 இருவருக்குமே அடுத்த பாடவேளை அருகருகே தான். அடுத்த கட்டிடத்துக்குப் போக வேண்டும். எப்போதுமே ஒன்றாகத்தான் போவோம்.

  நானும் எழுந்தேன். எல்லோருக்கும் சிறு தலையசைப்போடு இருவரும் வெளியேறினோம்அனைவர் பார்வையும் என் முதுகில்.

  “பெல் அடிச்சதா?” எனக்குச் சந்தேகமாக இருந்தது

  “ஏன் உமக்குக் கேட்கேல்லையா?”  

  வெளியில் வந்து நின்ற சாந்தி மிஸ் கொடுப்புக்குள் நகைத்தார்

   அப்போஅந்த இடம் விட்டு வரவே அப்படிச் சொல்லியிருக்கிறார். சிறிதாக முறுவலித்தேன்

   “அந்த சேர் ஒரே விடுப்பு, அதுதான் உம்மை இழுத்துக்கொண்டு வந்திட்டன்.” என்றவர், “யாருக்குத்தான் பிரச்சனைகள் இல்ல உதயா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவத்தில பிரச்சனைகள் தான். எல்லாம் சரியாகும், நம்பிக்கையோடு இரும்கண்டதையும் யோசியாமல் வாரும்.” 

  தோளோடு அன்பாக அணைத்து விட்டு நடந்தவரோடு சேர்ந்து நடந்தாலும் இவ்வளவு நேரமும் இல்லாது என் கண்கள் கலங்கி விட்டன

 உண்மையைச் சொன்னால், முதல் முதல் வேலை என்று இந்தப் பாடசாலைக்குத்தான் வந்தேன். நான்கு வருடங்களாகப் போகின்றது. இப்போவாரை இவர்களை எல்லாம் நான் அவ்வளவாக அருகில் வர விட்டதில்லை. வேண்டுமென்றே எல்லாம் ஒதுக்கவில்லை. என் சுபாவம் அதுதான். சினேகிதி என்றால் நர்மதா மட்டுமே என்றாகிப் போயிற்று! இருந்தும், இதமான மனிதர்கள் சூழத்தான் இருக்கிறேன் என்பதே எவ்வளவு பலம் தருகின்றது. மனதுள் நிமிர்ந்து நிற்கவும் முடிகின்றதே!

   அதன் பின்னரான பாடவேளைகளை எப்போதும் போலவே கடக்க முடிந்தது

  பாடசாலை முடிந்ததும் தங்கைகளோடு சேர்ந்து வெளிவாயிலை நோக்கி நடந்தேன். பள்ளியிலிருந்து சில நிமிட நடையில் எங்கள் வீடுள்ளது.

   வெளியில் வந்து இடப்புறமாகத் திரும்பிப் பாதையைத் தாண்டி மறுபக்கமாக கொஞ்சம் நடக்க, முதல் வரும் ஒழுங்கைக்குள் கடைசியில் எங்கள் வீடு.

  கதைத்துக்கொண்டே வந்து பாதையில் இறங்கிய கவி, “அக்கா!” என் கரத்தைக் கெட்டியாகப் பற்றி நிறுத்தினாள்.

  “என்ன?” கேள்வியாகப் பார்த்த என் பார்வை, அவள் பார்வையைத் தொடர்ந்து சற்றே அதிர்வோடு நிலைத்து நின்றது.

 “இவா எங்க இங்க?” அவரைக் கண்டதும் நடை நின்றிருக்க  முணுமுணுத்தேன்

  “பள்ளிக்கூட வாசலில வச்சு நாடகம் போடப் போகுது கிழவி!” அடிக்குரலில் சீறினாள் கவி.

   “ஓமக்கா! காலம காட்டி அண்ணனும் தங்கச்சியும் வீட்ட வந்திச்சினம்இப்ப இவா; இண்டைக்கு இருக்கு இவவவுக்கு!” 

  கோபமாகச் சொன்னபடி எங்களை முந்திச் செல்ல முயன்றாள் தீபி.

   சட்டென்று எட்டிப் பிடித்து நிறுத்திவிட்டேன். அதேநேரம், கொளுத்தும் வெயிலில் பாதையின் மறுபுறமாக நின்றுகொண்டிருந்தவர் எங்களைக் கண்டுவிட்டுப்  பாதையைக் கடந்து வர எத்தனித்தார்.

  “ஐயோ அம்மம்மா! அங்கயே நில்லன; நாங்க அங்கதானே வாறம்.” சினந்தபடி முன்னால்  நடந்தாள் கவி.

   அவள் தான் அவரருகில் முதல் சென்றது.

   “இப்ப இங்க என்னத்துக்கு வந்து நிக்கிறீங்க? முதல் எதில வந்தீங்க?”

   அவள் அதட்டிக் கேட்பதைக் கேட்டுக்கொண்டே நாங்களும் அவரருகில் சென்றோம்.

error: Alert: Content selection is disabled!!