அவரோ, கவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது என்னையே பார்த்துக் கொண்டு நின்றார்.
‘பள்ளிக்கூட வாசலில வச்சு என்ன இதெல்லாம்?’ எனக்கும் மிகுந்த சங்கடமாகவே இருந்தது. எரிச்சலாகவும்.
‘வேணாம் எண்டால் விட்டிருங்களன். முதல் நீங்களும் அப்படியொண்டும் விருப்பத்தில இல்லயே! பிறகென்ன திடீரென்று? கலியாணம் முடிஞ்சு இந்தப் பத்து நாட்களில இல்லாத அக்கறை இண்டைக்குத் திடீரென்று ஏன்?’
மனத்தில் பலத்த சிடுசிடுப்பு. இருந்தும், விழிகள் கலங்கிக் கிடக்க, என் முகத்தையே பரிதவிப்போடு பார்த்து நிற்பவரைச் சுடு சொற்களால் பதம் பார்க்க வியரும்பவில்லை நான்.
“இப்ப இதில ஏன் வந்து நிக்கிறீங்க? வாங்க வீட்ட போவம்.” என்றேன்.
“வீட்டயோ? அங்க போக விருப்பம் இருந்திருக்க இங்க வந்து ஏன் நிக்கிறன் பிள்ள? நான் அங்க எல்லாம் வரேல்ல. அந்த ராட்சசி இருக்கிற பக்கத்திலும் நான் தலை வச்சுப்படுக்க மாட்டன்.” சினந்தார் அவர்.
“ஹலோ! அந்த ராட்சசி யாரு எண்டு கேக்கிறன்? நீங்க பெத்து வளர்த்த மகள் தானே? அதோட, இப்ப நீங்க இருக்கிற வீட்டில உள்ளவே எல்லாம் அப்பிடியே நல்லது மட்டும் செய்யிற ஆட்கள் பாருங்க! சும்மா அதையும் இதையும் சொல்லி இதில நிண்டு நாடகம் போடாமல் பேசாமல் வாங்கோ!”
அதட்டல் போட்டபடி, அவரின் கரத்தைப் பற்றி நடத்திச் சென்றாள் தீபி.
“அதுதான். எல்லாரும் சேர்ந்து எல்லாம் செய்துபோட்டு, இப்ப வந்து ஆளாளுக்கு நல்லவே போல நாடகமா போடுறீங்க?”
சிடுசிடுத்தபடி வந்த கவியோடு சேர்ந்து நடந்தாலும், ‘இவர் இப்ப எதுக்காக வந்திருக்கிறார்?’ என்ற கேள்வியே என்னுள்.
எங்கள் நால்வரையும் ஒன்றாகக் கண்டதும் முகம் கோணியது சித்திக்கு. தாயில் அவ்வளவு கோபத்தில் இருக்கிறாரே.
“கெட்டழிஞ்சு போக இருந்தவன் இண்டைக்கு நேராக நிக்க நான் தான் முழுக்காரணம்; இல்லாட்டி அவன்ட கலியாணம் பற்றி யோசிச்சே இருக்க மாட்டீனம்; அதையெல்லாம் யோசிக்காமல் என்னைக் கெட்டவள் ஆக்கியாச்சு!” என்று, அடிக்கடி சொல்லித் தாயைப் பேசுவார்(திட்டுவார்).
இப்போது அவரைக் கண்டதும் விசுக்கென்று எழுந்து உள்ளே போய்விட்டார்.
“பச்! நீங்க உள்ள வாங்க அம்மம்மா.” தீபி கையோட அழைத்துச்சென்று இருத்திவிட்டே உள்ளே சென்றாள் .
“தனியாவா வந்தீங்க? எதில?” கவி கேட்க, “தனியாத்தான் வந்தன், பொடிநடையா வந்திட்டன் பிள்ள.” என்றார் அவர்.
“என்ன?! தின்னவேலியில இருந்து நடந்து வந்தீங்களோ? உங்கள என்ன செய்யிறது? தலை சுத்து அது இது எண்டு எந்தநேரமும் சொல்லுற ஆள் இந்த வெயிலில அங்க இருந்து நடந்து வந்திருக்கிறீங்க! அதுவும் தனிய!” அக்கறையாகக் கடிந்து கொண்ட பேத்தியைப் பாசமாகப் பார்த்தார் அவர்.
“என்னம்மா செய்யிறது? ஒரு நிமிசம் நிம்மதியாக் கண் மூட முடியேல்ல! போற காலத்திலும் என்ர விதி இப்படியெல்லாம் ஓட வச்சுப் பார்க்குதே!” என்றவர் பார்வை என்னில்.
“இது நல்ல பகிடியாக் கிடக்கே! நீங்க எல்லாரும் சேர்ந்து இவ்வளவு நாளும் நிம்மதியாக இருந்த எங்களையும் சேர்த்து ஓட வைக்கிறீங்க! அப்படியிருக்கேக்க இதென்ன புதுக்கதை?” என்றபடி வந்த தீபி, டியூஷன் செல்லத் தயாராகி இருந்தாள்.
“கவி உனக்கும் டியூசன் இருக்குத் தானே?” அவளிடம் கேட்டபடி அங்கேயே கைப்பையை வைத்துவிட்டு, “அம்மம்மா உங்களுக்குக் குடிக்க ஏதாவது தரட்டா?” என்றேன் நான்.
“இந்தா போகப் போறன் கா.” என்று உள்ளே சென்ற கவி, “மத்தியானம் சாப்பிட்டாவோ தெரியாது.” என்று, என்னிடம் சொல்லிவிட்டே சென்றாள்.
அவர்கள் இப்போது இப்படிக் கோபமாகக் கதைத்தாலும் தம் அம்மம்மாவில் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
“நீங்க மத்தியானம் சாப்பிட்டீங்களா?”
அருகில் சென்று கேட்ட என் கரங்களைப் பற்றிய அவரோ, “முதல் இப்பிடி இரம்மா!” என்று, தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.
“எனக்கு ஒண்டுமே தேவையில்ல; நீ…நீ மட்டும் என்னோட வீட்ட வந்திரம்மா; அதுவே போதும்.”
என் முகத்தையே ஆழ்ந்து பார்த்தபடி சொன்னவர் விழிகள் ஊறின.
மிகுந்த சங்கடத்தில் நெளிந்தேன் நான். அதோடு, நெஞ்செல்லாம் என்னவோ செய்தது. என்னுள் அழுத்தி அடைத்து வைத்திருந்த வேதனையின் வாசம் மெல்ல மெல்ல கசிய முயன்றது.
“அண்டைக்கு உன்ர சினேகிதி பிடிச்ச பிடியில வீட்டை விட்டுப் போன போதே உன்னட்ட என்ன சொன்னன்? என்னதான் பிரச்சின நடந்தாலும் அவசரப்பட்டுப் போகாத எண்டு சொன்னன் தானே? நீதான் காதிலும் வாங்கேல்ல.
சரி விடு! நடந்ததக் கதைச்சு என்ன பிரயோசனம் சொல்லு?
அதுதான் உன்ர வீடு பிள்ள. என்ன எண்டாலும் ராங்கியா அங்க இருந்து கொண்டு உன்ர கோபத்தக் காட்ட வேணும். அதைவிட்டுட்டு இங்க வந்திருக்கிறது சரியா எண்டு யோசியன்!
இப்பிடியே எத்தின காலத்துக்கு இருப்ப?” தழுதழுத்தவருக்கு என்ன சொல்வேன்.
இப்படிக் கேட்கத்தான் வந்துள்ளார் என்ற யூகம் இருந்தாலும் கேட்டதும் என் முகம் இறுகிப் போயிற்று.
சூட்டோடு சூடாக எல்லாம் முடிந்தது என்ற மனநிலையிலிருந்த என்னால் இன்றைய இவர்களின் மாற்றத்தை அவ்வளவு இலகுவில் உள்வாங்க முடியவில்லை. அதட்டி உருட்டி அடக்கப் பார்த்த எரிச்சலும் கோபமும் கொப்பளிக்க ஆவேசம் தான் கொண்டது.
இப்படியே எத்தின காலத்துக்கு இருப்பாய் என்றால்?
‘அது அந்தக் காலம் உருளும் போது பார்த்துக் கொள்ளலாம். என்னில காட்டும் இவ்வளவு அக்கறைக்கு மிக்க நன்றி!
காலில மாட்டுற தேஞ்ச செருப்ப விடக் கேவலமா அண்டைக்கு என்னை நடத்தினதை இல்ல என்று மறுப்பீர்களா?
வேண்டாதவள் எண்ட முத்திரை குத்தின பிறகுதானே அங்க இருந்து வெளிய வந்தன். அப்பிடி வந்தது வந்ததாகவே இருக்கட்டும்.’ என்று, பட்டென்று சொல்லி அவரை அனுப்பி வைத்து விடவேண்டும் எனப் பரபரத்தது உள்ளமும், கொந்தளித்த உணர்வும்.
என்னையே பார்த்திருந்தவர் என் மனத்தையும் படித்தாரோ!
அவர் பற்றியிருந்த விரல்களில் அழுத்தம் கூடியது.
“உதயா! என்னை இன்னார் எண்டெல்லாம் பார்க்காதம்மா; ஒரு பெரிய மனிசியா நான் சொல்லுறதக் கொஞ்சம் பொறுமையாக் கேள்; ஒருநாளும் உனக்குக் கெட்டது செய்ய நினைக்க மாட்டன்.” என்றதும்தான் தாமதம், என்னையுமறியாது அவரைப் பார்த்த என் பார்வையில் குற்றச்சாட்டு இருந்ததுதான்.