அத்தியாயம் 17- 4

அப்படி எனக்குக் கெட்டது நினையாதவர்தான் குடியோடு உறவாடிக் கிடந்த தன்ர  மகனை,   அதுவும், வீட்டில் காதலியின்  புகைப்படங்களை மாட்டிவைத்து, அதைப் பார்த்து நாட்களைக் கழிக்கிறவரை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார் போலும்!

   “இப்பிடிப் பார்க்காத பிள்ளைஅவன்அவன்அவன உனக்குத் தெரியாதா என்ன? அந்தப் பொல்லாத விசயம் நடக்க முதல் அவன் எப்படியானவன்? நீயே யோசிச்சுப் பாரன். ”

  ‘இப்ப இதைச் சொல்லி என்ன பிரயோசனம்? அண்டைக்கு அப்பிடி எல்லாம் இருந்தவர் எண்டதா முக்கியம்? இண்டைக்கு எப்பிடி இருக்கிறார் எண்டது தானே முக்கியம்! அதோட அண்டைக்கு எல்லாம் உங்கட  மகன் தங்கக்  கட்டியா இருக்கப் போய்த்தானே எல்லாம் சரியாகும் எண்டு என்ர  மனச நான் தேத்திக் கொண்டிருந்தன்.’ என் மனம் அலறியது.

   அவரோ  தன்  பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு சென்றார்

  “உங்கட அப்பாக்கு அவன் எண்டால் எவ்வளவு விருப்பம்? எங்கட குடும்பத்துக்கும் எல்லாமே அவன் தானேஇடையில கொஞ்சக்காலம் குடியில போய்ட்டான். கலியாணம்அதுவும் சொந்தத்தில செய்தால் எந்தவிதமான சாட்டும் சொல்லாமல் அந்தக் கருமத்த விட்டுத் துலைச்சிருவான் எண்டு நினைச்சன் மாஉண்மையாவே குடியை விட்டுட்டான் தானேம்மா?” கெஞ்சலாக என்னிடமே கேட்டார்

  தன்  மனக்குன்றலுக்குச் சமாதானம் சொல்லிக் கொள்வது போலிருந்தது அவர் கதைத்த விதம்.

  “நீ வேணுமெண்டால் இருந்து பாரம்மா, அந்தக் கல்யாணியின்ட நினைப்பும் முழுசாப்  போயிரும் பிள்ள. அப்படியிருக்க, எடுத்தன் கவிழ்த்தன் எல்லாம் முடிஞ்சிட்டு எண்டு உதறீட்டுப் போறதுக்குஇதுஇது  வாழ்க்கை உதயா!” தொடர்ந்தவரைப் பார்க்காது பார்வையை விலத்திக் கொண்டேன்

  ‘அந்த வாழ்க்கைதான் அண்டைக்கு என்னை அவமானப்படுத்தி உதறியது! பிறகென்ன?’ கேட்க ஆசையாக இருந்தது. இவரிடம் கேட்டு என்ன பயன்?

  “அதுசரி, செய்யிறது எல்லாம் செய்திட்டு இப்ப என்ன ஆளாளுக்கு மாறி மாறி வந்து அக்கறையாக் கேட்கீனம்?” 

  திடீரென்று வந்தார் சித்தி. மறைவாக நின்று இங்குதான் காதுகளைக் கொடுத்துக்கொண்டு இருந்திருப்பார் போலும்.

    எதிரி போலத்தான்  தாயைப் பார்த்தார்.

    “திடீரென்று என்ன ஞானம் பிறந்திருக்கு? காலம அவையள், இப்ப நீங்க! என்ன பிளான்? அதுவும் உதயா தன்ர முடிவச் சொன்ன பிறகும் நீங்க இப்பிடி வந்து நிண்டால்  என்ன நினைக்கிறது?”

   சித்தி கேட்க, விசுக்கென்று எழுந்தார் அம்மம்மா.

   “இங்க பார், உனக்கு எனக்கும் கதையே வேணாம் சரியா? உன்னப் போல ஒருத்தியப் பெத்து வளர்த்தன் எண்டு நானே வயிறு எரிஞ்சுகொண்டு இருக்கிறன்.”

   “பிறகு யார்  இங்க வரச் சொன்னது?” ஏரிச்சலோடு  அதட்டினார்  சித்தி.

    “நான் எங்க உன்னட்ட வந்தன்? பள்ளிக்கூட வாசலில நிக்க என்ர பேத்திகள் தான் இழுத்துக் கொண்டு வந்தவை.”

   “அது சரி, நான் கூடாது என்ர பிள்ளைகள் வேணும் என்ன?”

   “இங்க பார், தேவையில்லாமல் நீ இடையில கதைக்க வராத சொல்லீட்டன்; நான்  வந்தது உதயாட்ட, உன்னட்ட இல்ல

   இந்தப்பிள்ள வாழ்க்கை அழிய வேணும் எண்டுதானே கட்டி வச்சனி? அவன் உன்ர சொந்தத் தம்பி; அவன் நல்லா இருக்க வேணும் எண்டு நினைச்சு இப்பிடிச் செய்யிற எண்டு எவ்வளவு பெருமைப்பட்டன் தெரியுமா

  நீ என்னடா எண்டால் என்ர  மகனக்  கட்டி ஒருத்தி வாழ்வு அழிஞ்சு போகும் எண்டு முடிவே செய்திட்டுக்  கட்டி வச்சிருக்கிற! அதை நினைக்க நினைக்க நெஞ்சு ஆறுது இல்ல.” கோபமும் அழுகையுமாகச் சொன்னார் அம்மம்மா

  “ஐயோ அம்மா! சும்மா சும்மா அதையே சொல்லாதையன! அது அண்டைக்குக்  இருந்த கோபத்தில் ஏதோ சொன்னது. அதைப்  போய்ப்  பெரிசா எடுத்துச் சொல்லிக்கொண்டு…” 

   தாய்க்குச் சொன்னாலும் அங்கே வந்து நின்ற மகள்களையும் முறைத்தார் சித்தி. அவர் விழிகளும் கலங்கிவிட்டன. அதட்டி உருட்டி வைத்திருந்த மகள்கள் இன்று பாராமுகம் காட்டுகிறார்கள். சொல்வதைக் காதுகளில் வாங்கிறார்களா என்றே சந்தேகமாகக் கிடக்கே! மகள்களின் செயலில் நன்றாகவே அடிபட்டிருந்தார் சித்தி

   இப்படியே போனால்?

   மகள்களை நினைத்துப் பயம் பிடித்திருந்தது அவருக்கு

  “இங்க பாரன, இவளுக்கும் அவனுக்கும் கெட்டித்தனம் இருந்தா வாழ்ந்து காட்டட்டுமன்; ஏதோ  நான் அதுக்கு விடாமல் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்த மாதிரிக் கதைக்கிறீங்க.  

  முதல், கட்டாயம் அவனக்  கலியாணம் செய் எண்டு இவள்ட கழுத்தைப் பிடிச்சு நெரிச்சனா என்ன? அவளும் விரும்பித்தான் கட்டினவள்.” என்கையில், என்னைப் பார்த்த சித்தி சடக்கென்று பார்வையை விலத்திவிட்டார்.

  “ஏனம்மா இப்பிடிப்  பொய் சொல்லுறீங்க? தொங்கிச் சாகிறன் எரிஞ்சு சாகிறன் எண்டு நீங்க வெருட்டி உருட்டவில்லையோ!” என்ற, கவியை நோக்கி விரல் நீட்டிய சித்தியின் முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்துப்  போனது.

  “கொன்றிருவன்! ரெண்டு பேரும் ஒரு வார்த்த கதச்சாலும் கொன்றிருவன்! டியூசன் இருக்குத்தானே? மரியாதையாக் கிளம்புங்க!” அடிக்குரலில் சீறினார் .

  “எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கு!” வெடுக்கென்று சொன்னாள்  தீபி.

  “உண்மையைச் சொன்னால் கொல்லுவீங்கதான்!” முணுமுணுத்த கவி, “அக்கா நீங்க போய் உங்கட அலுவலப் பாருங்க! இவையளின்ட விசர்க் கதைகளைக் கேட்டால் நமக்குத்தான் விசர் பிடிக்கும்.” உள்ளே சென்றுவிட்டாள்.

  “ரெண்டு பேரும் இனி ஒரு வார்த்த கதைச்சாலும் நடக்கிறதே வேற!” மகள்களிடம் கத்திவிட்டுத் தாயிடம் திரும்பினார் சித்தி

  “இங்க பாருங்கம்மா, அவனப் பற்றி எல்லாம் தெரிஞ்சுதான் கலியாணம் கட்டினது.”  சொல்லி நிறுத்திவிட்டு என்னைத்தான் பார்த்தார்

  “அவனும் ஓமெண்டுதானே கட்டியவன். பிறகு, அறைக்குள்ள அந்தப் பெட்டையின்ட படங்களையா வச்சிருப்பான்? அதுதானே எல்லாப் பிரச்சினைக்கும் காரணம்? அது உங்களுக்கும் தெரியும் தானே? நீங்க என்ன செய்திருக்க வேணும்? அதை அங்க விட்டு வச்சது  எந்த வகையில நியாயம் சொல்லுங்க பார்ப்பம்?

  பிறகு நான் என்ன குற்றவாளியோ!

  இப்ப என்னடா எண்டால் காலம வந்து முற்றத்தில விறைச்சிக்  கொண்டு நிக்கிறான்அவன் குடியை நான் கெடுத்தது போல! இங்க என்ர  வீடுதான் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசமும் போய் …” தளம்பும் குரலில் சொல்லிகொண்டே உள்ளே பார்த்தவர் குரல் தணிந்தது.

  “கவி, தீபி என்னை என்னவோ கொலைகாரியப் பார்க்கிறது போலப் பார்க்கீனம். நான் சொல்லுறதுக்கு எதிர்வார்த்தை பேசாத பிள்ளைகள், இப்ப எல்லாம் சின்னத்துக்கும் வாய் காட்டீனம்.” என்றவர் விக்கி அழ, உண்மையாகவே பாவமாக இருந்தது.

  புத்தகங்களோடு தயாராகி வந்

தீபி, கவி இருவரும் கதவோரமாக  நின்றுவிட்டார்கள்நடப்பதை மறைந்து நின்று பார்க்கிறார்களாம்.

  “இங்க என்ர வீட்டு நிம்மதி போச்சே எண்டு நான் பதைபதைச்சுக்கொண்டிருந்தா, நீங்க ஆளாளுக்கு, எல்லாம் என்னால் எண்டது போலவே எல்லாத்தையும் என்ர தலையில் போடுங்க!” 

   இதைக்கேட்ட அம்மம்மாவும் சேர்ந்தழுதார்.

   “உதயா! கையெடுத்துக் கும்பிடுறன் பிள்ளை!” 

  திடுமென்று என் கரங்களை பற்றியபடி அம்மம்மா இப்படிச் சொல்ல நான் திகைத்துப் போனேன். கரங்களை விடுவிக்க முயன்றேன், முடியவில்லை.

  “மாட்டன், முடியாது எண்டெல்லாம் சொல்லீராத குஞ்சு! அவனப் பற்றித் தெரிஞ்சே கலியாணம் செய்தனி தானே? ஒரே ஒரு தடவை வீட்ட வந்து இரு. அது உன்ர வீடு! ராங்கியோட வந்திரு! உனக்கு நான் இருக்கிறன். அவன் நான் பெத்தெடுத்தவன் எண்டாலும் எனக்கு நீயும் உன்ர சந்தோசமும் தான் முக்கியம். குடியை விட்டவன் எல்லாம் மறந்து மீண்டு வரக்  கொஞ்ச காலம் குடுப்பமே! அதை நீ இங்க இருந்து குடுத்து எந்தப் பயனும் இல்ல குஞ்சுவீட்ட வந்திரம்மா!” 

  கண்ணீரோடு கெஞ்சினார். என்னையும் மீறி, கண்கள் உடைப்பெடுத்திருந்தன.

  “இங்க பாருங்க, அக்கா கடைசிவரையும் எங்கயும் வரமாட்டா!” என்று வந்தார்கள் தங்கைகள்.

  அந்தநேரம்,  “உதயா…!” என்றபடி உள்ளிட்டார் புனிதம்  ஆன்ட்டி.

error: Alert: Content selection is disabled!!