கடன் அன்பை முறிக்கும் – 49

அத்தியாயம் 49

 

 

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாகியும் நளினியின் முகம் பார்க்கவில்லை நேசன். அப்போதுதான் தூயவனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனாலும் ஏற்றான்.

 

“தம்பி நேசன், நான் தூயவன்ர அம்மா தேவகி கதைக்கிறன் அப்பு.” என்று பேசியது தேவகி.

 

இதை எதிர்பாராத நேசன் ஒரு நொடி தடுமாறினாலும், “சொல்லுங்க அம்மா.” என்றான் தன்னை மீறி.

 

“இதெல்லாம் வீட்டுக்கு முறையா வந்து கதைக்க வேண்டிய விசயம் தம்பி. ஆனா, அதுக்கு வழி இல்லாம நிக்கிறதால இப்பிடி ஃபோன்ல கதைக்கிறன். குறை நினைக்காதீங்கோப்பு.” நயமாகவே பேச்சை ஆரம்பித்தார் தேவகி.

 

“இல்ல. பரவாயில்ல சொல்லுங்க.” அவர் என்ன பேசப்போகிறார் என்று தெரிந்துவிட்டதால் இப்போதும் அவனிடம் தடுமாற்றமே!

 

“என்ர மகனுக்கு உங்கட தங்கச்சியக் கலியாணத்துக்குக் கேக்கத்தானப்பு எடுத்தனான். நடந்துகள மனதில வச்சிருக்காதீங்கோ தம்பி. அதெல்லாம் சின்ன விசயம் இல்லை எண்டு எனக்குத் தெரியும். எங்களால உங்கட குடும்பமே என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறீங்க எண்டும் தெரியும். என்ர மகன் என்னோடயும் கோவப்பட்டவர். ஆனா நான், வீடே உலகம் எண்டு இருக்கிற பொம்பிளை. வெளில போற ஆம்பிளைகள் என்ன செய்யினம், எப்பிடி நடக்கினம் எண்டு எனக்குத் தெரியாது. ஆனாலும், என்ர மனுசன் செய்த மோசமான காரியங்களுக்காக நான் உங்களிட்ட மன்னிப்புக் கேக்கிறன்.” என்றவரின் குரல் தழுதழுத்துப் போயிற்று.

 

அவர் மார்க்கண்டேயரின் மகள். அந்தப் பெருமையோடே வளர்ந்தவர். சீரும் சிறப்புமாகத் திருமணம், செழிப்பான வாழ்க்கை என்று இதுவரையில் எந்த இடத்திலும், யாரிடமும் இறங்கிப் போனதில்லை. அந்த நிலை வந்ததும் இல்லை. ஆனால் இன்று… அவராவது குறைந்தபட்ச நியாயத்தை அந்தக் குடும்பத்துக்குச் செய்துவிட வேண்டும் என்று நினைத்தே மன்னிப்பைக் கேட்டார்.

 

இந்தப் பக்கம் இருந்த நேசன் எப்படி அதை எதிர்பார்க்கவில்லையோ, அப்படியே தேவகி அருகில் இருந்த தூயவனும் எதிர்பார்க்கவில்லை.

 

“அம்மா! உங்களை என்ன கதைக்கச் சொன்னா என்ன கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்க? நீங்க ஃபோன தாங்க முதல்.” என்று அவன் பறிக்க வர, அவர் கொடுக்கவில்லை.

 

“இல்லையப்பு. இந்த மன்னிப்பை நான் கேக்கத்தான் வேணும். நீ விடு.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “தம்பி நேசன், உங்கட பயம், எங்களில உங்களுக்கு இருக்கிற கோவம் எல்லாம் எனக்கு விளங்குது. நான் சொல்லுறதெல்லாம் ஒண்டே ஒண்டுதான். வேணவே வேணாம் எண்டு நினைக்கிற அளவுக்கு என்ர மகனில ஏதும் குறை குற்றம் இருக்கா எண்டு யோசிங்கோ. அதத் தாண்டி என்ர மனுசனால ஏதாவது பிரச்சினை வரும் எண்டு பயப்பிடாதீங்க. தம்பி இருக்கிறான். அவன் பாப்பான். வேற குடும்பத்தில குடுத்தாலும் பிரச்சினை எண்டுறது வராம இருக்கப் போறேல்ல. ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விதமான சண்டை சச்சரவுகள் வந்துதான் போகும். ஆரும் சந்தோசமா மட்டுமே இருக்கிறேல்ல. அதால இவரை நினைச்சு வேண்டாம் எண்டு சொல்லாதீங்க. யோசிங்கோ தம்பி. யோசிச்சு நல்ல முடிவாச் சொல்லுங்கோ.” என்று சொல்லிவிட்டு வைத்தார் தேவகி.

 

அப்படி தேவகியே பேசியது அவனுக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. எத்தனை விளக்கங்களைத் தூயவன் சொன்னாலும், அவன் வீட்டுப் பெரியவர்கள் யாரும் முன்னுக்கு நிற்காமல், அவனுக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டு, நாளைக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் யாரிடம் போய் நியாயம் கேட்பது, இல்லை யாரோடு பேசி அதைச் சீர் செய்ய முயல்வது என்றெல்லாம் யோசித்திருக்கிறான். இப்போது அது அடிபட்டுப் போயிற்று.

 

அவர் அவனோடு மட்டும் பேசவில்லை. கோகிலாவோடும் கதைத்தார். கோகிலாவுக்குமே அவர் பேசியது பெரும் மாற்றத்தைக் கொடுத்தது.

 

நேசனோடு பேசச் சொல்லித் தூயவன் கேட்டபோது முதலில் மறுத்திருந்தார் தேவகி. இதுவரையில் கணவரிடம் சொல்லாமல், அவருக்குத் தெரியாமல் எதையும் செய்து அவருக்குப் பழக்கமே இல்லை.

 

ஆனால், அன்னை அப்படி மறுத்ததை அறிந்த துளசி, தமையனுக்கு யாழிசையை எவ்வளவு பிடிக்கும் என்று சொல்லி, அவளுக்காக அவன் என்னவெல்லாம் செய்தான் என்பதையும் விளக்கினாள். கூடவே, கருணாகரன் சத்தமே இல்லாமல் எவ்வளவு பெரிய காரியங்களை எல்லாம் செய்திருக்கிறார் என்று சொன்னபோது, மொத்தமாக இடிந்துபோனார் தேவகி.

 

அகிலனைக் கூட்டுச் சேர்த்தத்தைக் கூட ஓரளவுக்கு ஜீரணிக்க முடிந்தது. ஆனால், மகளின் வாழ்க்கையையே நாசமாக்கியவன் அருள். அவள் இருக்கையிலேயே இன்னொருத்தியைப் பிடித்தவன். இன்று குரு என்கிற ஒருவன் வந்தபடியால் அவள் வாழ்க்கை மீண்டும் நன்றாகிப் போயிற்று. இல்லையானால்?

 

மகன் காதலைப் பிரிப்பதற்காக அப்படியானவனின் தம்பியோடு கணவர் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என்பது, உயிரைக் கொல்லும் விசத்தைப்போலத்தான் அவர் நெஞ்சுக்குள் இறங்கிற்று.

 

இரண்டு நாள்கள் யாரோடும் எதுவும் பேசாமல் அமைதியிலேயே கழித்தவர் மூன்றாம் நாள் தானாகத்தான் தூயவனிடம் கேட்டு நேசனோடு பேசினார்.

 

அதன் பிறகும் பல முறை நேசனோடும் கோகிலாவோடும் பேசினார். அவர் மட்டுமல்லாமல் ஜீவன், மாதவி, குரு, துளசி என்று எல்லோரும் நேசனை விட்டு வைக்கவில்லை.

 

கருணாகரனைப் பற்றி யோசிக்காமல் பெண்ணைக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்கள். அவர் ஒருவருக்காக வாழ வேண்டிய வயதில் இருக்கிற அவர்களின் சந்தோசத்தைக் கெடுக்க வேண்டாம் என்றார்கள்.

 

ஒரு கட்டத்தில் தூயவனுக்குப் பொறுமை போயிற்று. அவன் மனத்தில் இருக்கும் திட்டத்தை நிறைவேற்ற நிறைய நாள்களும் இல்லை.

 

அதில், “இன்னும் என்ன சொல்லி என்னை உங்களுக்கு விளங்கப்படுத்திறது எண்டு எனக்குத் தெரியேல்ல நேசன் அண்ணா. ஒரு காலம் முட்டாள்தனமா சாதி பாத்து, வசதி பாத்து உங்களை எல்லாம் மோசமா நடத்தி இருக்கிறன்தான். இண்டைக்கு அத நினைச்சு வெக்கப்படுறன். ஆனா அண்டைக்கு இந்தத் தெளிவு எனக்கு இருக்கேல்ல. என்னைச் சுத்தி இருக்கிற மனுசரோட சேந்து நானும் அப்பிடி நடந்திட்டன். அதத் தாண்டி ஏன் உங்கட தங்கச்சிக்கு நான் பொறுத்தம் இல்லை எண்டு ஏதாவது ஒரு காரணம் சொல்லேலுமா உங்களால? ஆனா ஒண்டு, எந்தக் காலத்திலயும் அவளை இன்னொருத்தனுக்கு மனுசியாக விடமாட்டன். ஒண்டு உங்கட தங்கச்சியா காலம் முழுக்க உங்களோட இருப்பாள். இல்லையா என்ர மனுசியா என்னோட இருப்பாள். இதையும் நினைவில் வச்சு யோசிச்சு எனக்குப் பதிலச் சொல்லுங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் நேசன். என் தங்கையை எனக்குப் பிடித்தவனுக்கு கட்டிக்கொடுக்க நீ விடமாட்டாயா என்று கோபம் வந்தது. அதே நேரம், மனத்தை அவனிடம் கொடுத்துவிட்டுத் தன் முகத்தை முகத்தைப் பார்க்கும் தங்கையை அவனை எதிர்த்தாவது இன்னொருவனுக்குக் கட்டிக்கொடுப்போம் என்று யோசிக்கவும் முடியவில்லை.

 

கடைசியில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கலங்கிப்போனவன், “என்னம்மா செய்ய?” என்றான் அன்னையிடம்.

 

கோகிலாவுக்குமே அவர்கள் எல்லோரும் பேசிப்பேசி மனம் ஓரளவுக்கு மாறிவிட்ட நிலை. அதே நேரம் முழு மனத்துடன் சம்மதிக்கவும் பயந்தார். அதில், “எனக்கும் என்ன சொல்ல எண்டு தெரியேல்ல ஐயா. நீ என்ன முடிவை எடுத்தாலும் அம்மாக்குச் சரிதான்.” என்றார் அவர்.

 

திரும்பி அங்கே இருந்த தங்கையைப் பார்த்தான். அவ்வளவு நேரமாக என்ன முடிவை எடுப்பானோ என்கிற கலக்கத்துடன் அவனையே பார்த்திருந்த அவள், அப்படி அவன் பார்க்கவும் சட்டென்று கன்னத்தில் இறங்கிவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தலையைக் குனிந்துகொண்டாள்.

 

“நான் என்ன செய்ய இசை?” அவளிடமும் கேட்டான்.

 

கலங்கியிருந்த விழிகளோடு நிமிர்ந்து, “நீங்க எனக்காகத்தான் யோசிக்கிறீங்க எண்டு தெரியும் அண்ணா. ஆனா, நான் அவரோட இருந்தாத்தான் சந்தோசமா இருப்பன். என்ன கஷ்ட்ட துன்பம் வந்தாலும் அவர் பக்கத்தில இருந்தா சமாளிப்பன் அண்ணா.” என்ற தங்கையையே சில கணங்களுக்குப் பார்த்தான் நேசன். அவனுக்கே அவனைச் சமாளித்துக்கொள்ள கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

 

இப்போது முடிவெடுக்கும் இடத்தில் ஒற்றை ஆளாக நின்றான் நேசன். துணைக்கு மனைவியை எதிர்பார்த்தான். ஆனால் அவள், அவன் புறம் திரும்பவே இல்லை.

 

இத்தனை நாள்கள் தெரியவில்லை. ஆனால் இன்று, இவர்கள் மூவரும் வேறு அவள் வேறு என்பதுபோல், நடந்த பேச்சு எதிலும் கலந்துகொள்ளாமல் அவள் இருந்தது அவனைத் தாக்கிற்று.

 

“என்ன நளினி பேசாம இருக்கிறாய், ஏதாவது சொல்லு.” என்றான், நடுவில் எதுவுமே நடக்காததுபோல் பாவித்து.

 

“நான் என்ன சொல்லக் கிடக்கு? அவள் உங்கட தங்கச்சி. முடிவு எடுக்க உரிமை உள்ளவர் நீங்கதானே. தேவை இல்லாத உத்தியோகம் பாத்து நான் கேட்ட பேச்சு எல்லாம் போதும்.” என்றுவிட்டு எழுந்துபோனாள் அவள்.

 

‘இனி இவளையும் சமாளிக்கோணுமா?’ இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு வாயால் காற்றை ஊதி வெளியேற்றினான் நேசன்.

 

இரவு அவள் உறங்க வந்தபோது பிடித்துக்கொண்டான். சுரபி இப்போதெல்லாம் யாழிசையுடன் படுப்பது அவனுக்கு வசதியாகிற்று.

 

பாயை விரித்து, அவர்கள் இருவருக்குமான தலையணைகளைப் போட்டு, போர்வையையும் எடுத்து வைத்துவிட்டுப் படுக்காமல் பாயிலேயே அமர்ந்து காத்திருந்தான்.

 

வந்தவள், அவன் பேசக் காத்திருக்கிறான் என்று தெரிந்தும் தெரியாதவள் போன்று பேசாமல் பாயில் சரிந்துகொண்டாள்.

 

அப்படித் தன்னைத் தவிர்த்துவிட்டுப் படுத்துவிட்ட மனைவியையே சில கணங்களுக்குப் பார்த்த நேசன், தானும் சரிந்து, பின்னிருந்து அவளைக் கட்டிக்கொண்டு, அவள் முதுகில் முகம் புதைத்தான்.

 

“அவளை அவனுக்கே குடுத்து அவள் சந்தோசமா வாழுறதப் பாக்க ஆசையா இருக்கு. அதே நேரம் பயமாவும் இருக்கு. தப்பித்தவறி அவளுக்கு அந்தாள் எதுவும் செய்திட்டா? அதுக்குப் பேசாம எனக்குத் தங்கச்சியா அவள் என்னோடயே இருக்கட்டும் எண்டும் இருக்கு.” என்று அவன் சொன்னபோது நளினியின் அசைவுகள் அத்தனையுமே நின்று போயிற்று.

 

அவளிடம் பதிலை எதிர்பார்த்தான் நேசன். அது வராமல் போகவும், “ஏதாவது சொல்லு நளினி. எனக்கு மட்டும் அவேயப் பிரிச்சு வச்சுப் பாக்க ஆசையா என்ன?” என்றான் திரும்பவும்.

 

மெல்ல அவன் கைகளுக்குள்ளேயே திரும்பி அவன் முகம் பார்த்தாள் நளினி. அவனிடத்தில் அத்தனை கலக்கம். ஒன்றுமே சொல்லாமல் அவனை அரவணைத்துத் தாங்கிக்கொண்டாள். நேசனுக்குமே மனைவியும் அவள் தருகிற ஆறுதலும் தேவையாகத்தான் இருந்தன.

 

கணவன் மனைவிக்கென்றே கழிந்த நேரத்தின் பின், மனைவியைத் தன் மார்பில் சேர்த்தபடி, “என்ன செய்ய நளினி? ஏதாவது சொல்லு?” என்றான் திரும்பவும்.

 

“உங்கட பயம் எனக்கு விளங்குது. அதத் தூயவனோட கதைங்க. உங்கட பயத்தைப் பற்றிச் சொல்லுங்க. அதுக்கு ஏதாவது செய்யச் சொல்லுங்க. அத விட்டுப்போட்டு அவேயப் பிரிக்க நினைக்காதீங்க. வாழட்டும் விடுங்க.” என்று அவள் எடுத்துச் சொன்னதைக் கேட்டுக்கொண்டான் நேசன்.

 

அதேபோல் தூயவனிடமும் அதைப் பற்றிக் கதைத்தான். தகப்பனைத் தான் பார்த்துக்கொள்வதாக நம்பிக்கை கொடுத்தான் தூயவன். நேசனால் அதை முழு மனமாக நம்ப முடிந்ததா தெரியவில்லை. ஆனால், அவனைத் தவிர்த்து வேறு யாரையும் யாழிசை மணக்கமாட்டாள் என்பதும், தூயவனும் அதற்கு விடமாட்டான் என்பதும் மிக நன்றாகவே புரிந்ததில் சம்மதித்தான்.

 

அவனுடைய அந்த ஒற்றைச் சம்மதத்திற்காகவே காத்திருந்த தூயவன், தன் திருமணத்தை ஊரைக் கூட்டியே செய்து முடித்திருந்தான்.

 

இதை அகிலன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒருவிதப் பயத்துடன்தான் கருணாகரனின் பிறந்தநாளுக்கு என்று அவன் வந்ததே. இப்போது இன்னும் நடுங்கியது. வேகமாகக் கருணாகரனைத்தான் பார்த்தான்.

 

அவர் அவனைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அதற்குமேல் அவன் அங்கு நிற்கவில்லை. பொய்க் காரணம் ஒன்றைச் சுவர்ணாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான்.

 

error: Alert: Content selection is disabled!!