அத்தியாயம் 18

  “உங்களுக்கு இப்ப டியூஷன் இருக்குது தானே? இதில உங்களுக்கு கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல! ரெண்டு பேரும் வாயை மூடிக்கொண்டு போயிருங்க!” 

  சித்தியின் அதட்டலைக்  கேட்டுக்கொண்டு, “உதயா!” என்றபடி உள்ளே வந்து நின்றார் புனிதம்  ஆன்ட்டி.

  அவர் வரவை எதிர்பாராததில் சட்டென்று தடுமாறினாலும் கணத்தில் சுதாகரித்து விட்டார் சித்தி.

  “வாங்கோ அக்காஉள்ள வாங்க!” எனக்கு முன்னே விரைந்து சென்று வரவேற்றார்.

   என் கலியாணத்துக்கு முதல் ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின் சித்தியோடு கதைப்பதை முற்றாக நிறுத்தி இருந்த ஆன்ட்டி, நான் சென்று அழைத்தும்  கல்யாணத்துக்கும் வரவில்லை. ஆனாலும், அன்று அத்தனை களேபரங்களின் பின் நர்மதாவோடு வந்த என்னைக் கட்டிக்கொண்டு அழுதார். நிறையவே பேசினார்தான்.(திட்டினார்தான்)

  “இந்த நிலை வந்திரக் கூடாது எண்டு தானே அவ்வளவு சொன்னம்! அது பார்த்தால் கலியாணத்தன்றேவா

  இது எல்லாமே நீயாகத் தேடியது உதயா. உனக்குச் சரிவராது விட்டு விலத்தீரு எண்டு அவ்வளவு சொல்லியும் கொஞ்சம் சரி காதில் வாங்கினியா

  யாருக்குப் பயந்துகொண்டு கலியாணத்துக்குச் சம்மதம் சொன்ன? இப்ப இப்படி வந்து நிக்கிற?” என்று திட்டினாலும், அதன்பின் ஒவ்வொருநாளும் என்னுள் மனத்தைரியத்தை விதைப்பதிலேயே குறியாக இருந்தார் என்றே சொல்லலாம்

   ‘நீ தனியாள் இல்லைஎன்பதைத்  தினமும் உணர்த்திக் கொண்டே இருந்தார்.

  இந்தப் பத்துப் பதினோரு நாட்களில் என்னுள் ஒருதெளிவும் நிமிர்வும் வர அவரும் ஒரு முக்கிய காரணம் என்பேன்.

   இருந்தும், எங்கள் வீட்டுக்கு வருவதை முற்றாக நிறுத்தியிருந்தார். என்னை வெளியே அழைத்தோ தம் வீட்டுக்கு அழைத்தோ தான் கதைப்பார். அது என் மனதில் பெரும் கவலையாகவே இருந்தது. அவரை நன்றாகவே அவமரியாதை செய்துவிட்டேன் என்ற உணர்வை மேலும் மேலும் என்னுள் உருவாக்கிக் கொண்டிருந்தது.

   அப்படியிருக்க, இன்று வீட்டுக்குள்  வந்ததும் என் கண்கள் கலங்கிப் போயின.

   “ஆன்ட்டிவாங்கோ!” என்றபடி நான்  எழுந்து முன்னேற நெருங்கி வந்து அணைத்துக் கொண்டவர் அம்மம்மாவைப் பார்க்க, அவரோ, “நீங்களே எடுத்துச் சொல்லுங்கம்மா…” என்று, அவரிடம் ஆரம்பித்து விட்டார்.

   அமைதியாகக் கேட்டிருந்த ஆன்டியின் பார்வை சித்தியை ஆழம் பார்த்தது

   “இங்க பாருங்க அக்கா, இப்ப ஏன் இப்பிடிப் பார்க்கிறீங்க?” அந்தப் பார்வையில் சூடுபட்டுவிட்டார் சித்தி.

   புனிதம் ஆன்ட்டி பதில் சொல்லாது ஒரு சிரிப்புச்  சிரிக்கவும்  சித்தியின் முகம் கன்றிப் போயிற்று

   “சுத்திச்  சுத்தி இவளின்ர வாழ்க்கையக்  கெடுகிறதத்  தான் நான் குறிக்கோளா வச்சிருக்கிறன் எண்ட மாதிரி எல்லா எல்லாரும் நினைக்கிறீங்க

   திரும்பத்  திரும்பச்  சொன்னதைத்தான் சொல்லப் போறன், இவள் அங்க போய் சூர்யாவோடு சந்தோசமாக இருந்தால் எனக்கும்எனக்கும் அது சந்தோசம் தான் கா!” என்றவர், அப்போதும்  அழுதுவிட்டார்.

  “என்னை விடுங்க, என்ர பிள்ளைகளுக்கு அது எவ்வளவு சந்தோசம் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்.” என்றவர்அப்படியே நிலத்தில் அமர்ந்து விம்ம, “ஐயோக்கா இந்த நடிப்பைப் பார்த்து ஏமாற வேணாம்.” என்றபடி என்னருகில் வந்து நின்றாள் கவி.

   “ஓமக்கா, இவையள் சொல்லுறதுக்கு இனியும் தலையாட்டினீங்களோ…” சிடுசிடுப்போடு வந்தாள் தீபி.

   “பார் இவளவை கதைக்கிறதை! நீ ஒரு அக்காவா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவா போற? இப்பவெல்லாம் என்னை ஒத்த சதத்துக்கு மதிக்கிறாளவே இல்ல.” சித்தியின் அழுகை வலுத்தது.

   “மதிக்கிற மாதிரி நீ நடக்கிற பார்.” அம்மம்மா தன் பங்குக்கு எடுத்துவிட்டார்.

   பதிலுக்குக்  கவி எதையோ சொல்லவர, நான் இடையிட்டேன்.

   “ரெண்டு பேரும் முதல் நடவுங்க! டியூசனுக்கு நேரம் போயிட்டு.” கண்டிப்போடு சொல்லி வெளியில் அழைத்து வந்து விட்டேன்.

  “இதோட எத்தின தரங்கள் சொல்லுறது? இனி இப்பிடிப் பெரியாக்கள் போல கதைக்க வேணாம்; நான்  கதைக்கிறன் தானே?” கடிந்து கொண்டேன்

   என் கோபம் அவர்களைப்  பாதித்ததை இருவரும் கண்கள்  கலங்கி நின்றதிலேயே புரிய முடிந்தது

  “உங்கட நல்லதுக்குதான் சொல்லுறன்.” என்றேன், பரிவோடு.

  “நாங்களும் உங்கட நல்லதுக்குத்தான்.” தீபி.

  “இல்லக்கா, அம்மா நடிக்கிறா. இப்ப எல்லாம் அவவக் கண்டாலே கோவம் தான் வருது.” தழுதழுதாள் கவி.

  “பச்! விடுங்க; சித்தி   நிறையவே மாறீட்டா!”

  “அது அவ்வளவும்  நடிப்பு!” தீபி.

   “அடி தான் வாங்கப் போற நீ. இந்தக் கதைகளையே விட்டுட்டுப் போய்ப் படிச்சிட்டு வாங்க!” 

   “அவா உங்களுக்குச் செய்தத அவ்வளவு கெதியா மறக்காதீங்க அக்கா!”

   “எவ்வளவு சொன்னாலும் திரும்பத் திரும்ப இப்பிடியே கதைக்க வேணாம் என்றன்.” என்ற, என் கோபம் அவர்களைப்  புறப்பட வைத்தாலும், “அக்கா தயவு செய்து அம்மம்மாவும் அம்மாவும் சொல்லீனம் எண்டு அங்க போயிற வேணாம்.” என்றுவிட்டே சென்றார்கள்.

  அவர்கள் சென்று மறையும் வரை பார்த்திருந்த என்னருகில் வந்த சித்தி என் கைபேசியை நீட்டினார்.

   என்னவென்பதாகப் பார்த்தபடி வாங்கிக் காதில் வைக்கையில், சித்தி கண்களைத் துடைத்தபடி உள்ளே செல்வதிலிருந்தே நாங்கள் கதைத்தவற்றைக்  கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது

   ‘ரெண்டுபேரும் இன்றைக்கு வரவிட்டுச்  சித்தியை இனியும் நோக வைக்க வேணாம் எண்டு கண்டிப்போடச் சொல்ல வேணும்.’ என்ற எண்ணத்தோடுதான், “ஹலோ…” என்றேன்

  “என்னடி ஹலோ? நம்பர்ல வச்சு நான் எடுக்கிறன் எண்டு தெரியாதா?” மறுபுறமிருந்து சிடுசிடுத்தாள் நர்மதா.

  “கவி ஆட்களோட கதைச்சுக்கொண்டு நின்றத்தில நம்பர் கவனிக்கேல்லடி. சொல்லு, எப்பிடி இருக்கிற?”

  “ஓமோம்நீங்க கதைச்சது எல்லாம் எனக்கும் கேட்டுச்சுஉன்னைவிட அவேக்குத் தங்கட தாய் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கு!” என்றாள்அவள் தன் பங்குக்கு.

  “சும்மா இரடி, சித்தியைப் பார்க்கப் பாவமா இருக்கு!”

  “பைத்தியம்! சும்மா உருகாத! அவா நடிக்கிறாடி!” 

   “பச் ! விடு, நான் என்ன சொன்னாலும் நீ இப்பிடித்தான் சொல்லுவ.”

  “சரி சரி, விடு விடு! அவா எப்பிடி இருந்தாலும் நமக்கென்ன?” என்றவள். “என்னவாம் உன்ர மாமி?” என்றாளா…   

  “மாமியா? யாரடி?” என்றுவிட்டே அம்மம்மாவைத்தான் சொல்கிறாள் என்று விளங்க அமைதிகாத்தேன் .

    ‘இதோட எல்லாம் மறந்திரு! இப்ப நீ பழைய உதயா. உனக்குக்   கலியாணம் எண்ட ஒண்டு நடக்கவே இல்ல சொல்லீட்டன்.’ என்று, அன்று கத்திவிட்டுச் சென்றவள் இப்படிக் கேட்டால்!

   அவர் இங்க வந்தது இவளுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வியும் எழுந்தது.

   “நர்மதா என்னடி?” என்றேன், ஒரு மாதிரிக் குரலில்.

   “அதைத்தான் நானும் கேட்கிறன். இண்டைக்கு உன்ர சின்ன மச்சாள் எனக்கு எடுத்து மன்னிப்பெல்லாம் கேட்டா! உன்ன அங்க வந்திருக்கச் சொல்லட்டாம். கண்ணில தண்ணி வர விடாயினமாமே! வெங்காயம் கூட உரிக்க விட மாட்டீனமாம்என்ர கடவுளே! குடும்பமே சேர்ந்து என்ன மாதிரி நடிக்குதுகளடி!” படபடவென்று  சொல்லிக்கொண்டு சென்றாள்

  நான் எதுவும் சொல்லவில்லை

  புனிதம் ஆன்ட்டியின் வரவு ஏனென்றும் விளங்கியது.

  காலையில் அண்ணனும் தங்கையும் வந்ததைச் சொன்னேன்.

  “அதுதான் சரிவா, போ எண்டு அவை சொல்லுறதுக்கெல்லாம் ஆட நீ பொம்மையா என்ன? நீ…” சொல்லிக்கொண்டிருக்கையில் கைபேசி கைமாறிவிட்டதை, “உதயா!” என்ற ஆன்ட்டியின் குரல் உணர்த்தியது.

  “ஆன்ட்டி…”

  “என்னடா அண்டைக்கு அப்பிடிக் கூட்டிக்கொண்டு வந்திட்டு இப்பிடிச்  சொல்லுறாவே எண்டு நினையாதையம்மா …” என்று அவர் ஆரம்பிக்கவே,   “அம்மா! உங்களுக்கு என்ன விசரே? நான் தான் சொல்லுறனே அதெல்லாம் கடைசிவரையும் சரிப்பட்டு வரவே வராது. அவள் தான் ஒருக்கா அவ்வளவு சொன்னதையும் கேட்காமல் போய்த்  தலையைக் குடுத்துப் பட்டுட்டு  வந்திருக்கிறாள்  எண்டால் திரும்பவுமா?” 

  கோபமாக இடையிட்டது நர்மதாவின் குரல்.

  எனக்கு ஆன்ட்டி என்ன சொல்ல வருகின்றார் என்று புரிந்து போயிற்று.

 “கலியாணம், வாழ்க்கை எல்லாமே உங்களுக்குப் பகிடிப் பொருளாக்கீட்டு என்ன?” மகளைக் கடிந்து கொண்டார் ஆன்ட்டி.

  “பின்ன? காதலியிட படத்துக்குப்  பூசை போடுறவரோட இவள் போயிருந்தது என்ன செய்யிறதாம்?” சிடுசிடுத்தாள் நர்மதா.

 “அதையே திரும்பத்  திரும்பச் சொல்லாத நர்மதா. அதுதான்அண்ணா மனம் மாறிருவார், அவர் உதாயாட்ட மன்னிப்புக் கேட்கிறன் எண்டு காலம வந்தவர்எண்டெல்லாம் அந்தப் பிள்ள குட்டி சொல்லேல்லையா? பிறகென்ன?” அதட்டலாகச் சொன்னார் ஆன்ட்டி.

  “சொல்லுவீனம் சொல்லுவீனம். கேட்கிற நமக்குப் புத்தி இருக்க வேணும்.” இதைக் கோபத்தோடு தான் சொன்னாள், நர்மதா.

  “சும்மா இரு பிள்ள. குடிக்கிறத முழுசா விட்டிருக்கிறார் எண்டதிலயே எனக்குக்  கொஞ்சம் நம்பிக்கை வந்திட்டு. செய்த தவறைத்  திருத்த அந்தப் பெடியன் நினைக்கிறார். பிறகென்னம்மா?” என்ற வேகத்தில், “உதயாஎனக்குச் சூர்யாவில நம்பிக்கை வந்திருக்கு; நீ அம்மம்மாவோட போம்மா; கொஞ்ச நாளைக்குப் போயிருந்து பாரன்; என்னதான் நடக்குது எண்டு பார்ப்பமே!” முடிவாகச் சொன்னபோது,   என்ன பதில் சொல்வேன் என்ற கணக்கில் நின்றேன் நான்

  வாயிலுக்கு வந்திருந்த புனிதம் ஆன்ட்டிஅம்மம்மா, சித்தி எல்லோர் பார்வையும் என்னில்  தான்.  

  என் மனம் தான்திரும்பவும் அந்த வீட்டுக்கா?’ என்று முரண்பட்டு நின்றது.

error: Alert: Content selection is disabled!!