அத்தியாயம் 21 – 3

அந்த நிலையிலும் சிரிப்புத்தான் வந்தது.

   “சிரிக்காதீங்க அக்கா! உண்மையாகத்தான் சொல்லுறம், அடிக்கிறது பேசுறது சண்டை போடுறது எண்டு என்ன கேள்விப்பட்டாலும் அவர் துலைஞ்சார்; அவ்வளவும் தான் சொல்லுவன்.” சீறலாகச் சொன்னாள் கவி.

   “ஓம்! அண்டைக்கு உங்களில கை வச்சதுக்கு வட்டி குட்டியோட உடனேயே குடுத்திட்டம் தான், எண்டாலும் இனி கை  எல்லாம் பேசாது!” மிரட்டல் விட்டாள் தீபி

   “என்னடி ரெண்டு பேரும் ரௌடி போல கதைக்கிறீங்க?” செல்லமாகத் தலையில் கொட்டினேன்.

   “இவையளப் போல இருக்கிற ஆட்களுக்கு அப்பிடி இருந்தால் தான் சரியக்கா. நீங்களும் அப்பிடி இருக்கப் பாருங்க!” கவி.

   “!” என்றுவிட்டு, “நானும் ஒண்டு சொல்லுறன் நல்லாக் கேட்டுக் கொள்ள வேணும் சொல்லீட்டன். சித்தியோட எதிர்த்துக் கதைக்கிறது, முகம் நீட்டுறது, கதைச்சுக் கொண்டிருக்கேக்க மரியாதை இல்லாமல் விலகிப் போறது இதுகளை எல்லாம் இனிச்  செய்யக் கூடாது. ” என்றதும், இருவர் கண்களும் நிறைந்து விட்டன.

   “உங்களுக்கே தெரியும் தானேக்கா, நாங்க அவவுக்கு எவ்வளவு பயம்? ஆனா இப்பபச்! பயமும் மரியாதையும் எல்லாம் போயிற்றே!” கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் கவி

  “அவவைக் காணேக்க எல்லாம், உங்கட வாழ்க்கை சீரழிய வேணும் என்று மாமாவக்  கலியாணம் செய்து குடுத்தன் எண்டு அன்றைக்குச்  சொன்னதுதான் கா நினைவு வருது.

   அம்மா எண்டு சொல்லவே வருதில்ல. பிறகு எப்பிடி மரியாதையும் பயமும் வரும்

  அடிக்கப் போறியோ நல்லா அடி; மொத்து; என்னவும் செய்; எங்களுக்கு அது எதுவுமே உறைக்காது எண்டளவில சரியான  கோபம் தான் கா வருது.” என்றுவிட்டு, என் மடியில் படுத்துவிட்டாள் தீபி.

  மெல்ல அவளின் தலையை வருடின என் கரங்கள்.

  “சித்தி அண்டைக்கு உண்மையிலும் கோபத்தில சொல்லி இருக்கலாம். இல்லை, உண்மையாகவே சொல்லியிருந்தாலும் என்ர வாழ்க்கை என்ன சீரழிஞ்சு போய்ட்டா என்ன? பிறகென்ன? அப்பாவும் இல்லாத நேரம் சித்தியை வருத்த வேணாமே!” 

  “அவாவை வருத்தி எங்களுக்கு என்ன சந்தோசம் கா? நீங்க சந்தோசமாக இருக்கிறீங்க எண்டு எங்களுக்கு எப்பப் புரியுதோ அதுக்குப் பிறகுதான் அம்மாவோடு கதைக்கிறது. என்ன தீபி சொல்லுற?” 

   தீர்மானம் செய்துவிட்ட குரலில் கவி சொல்ல, “அதே தான்!” ஆமோதித்தாள்   தீபி

   மாறி மாறி அவர்கள் தங்கள் பிடியில் நிக்க, சமாதானம் செய்விப்பதற்குள் என் தொண்டைதான் வறண்டு போயிற்று.

  “சரி, நீங்க சொல்லுறபடியே கொஞ்ச நாளைக்குப் பொறுமையா இருந்து பார்ப்பமே என்னதான் நடக்குது எண்டு?” ஆமோதித்த கவி, “அக்கா எனக்கு ஒரு சந்தேகம்…” என்றாள், முதலிலிருந்து ஆரம்பிக்கும் தொனியில்.

   “என்ன?” என்றேன் நான்.

   “இல்ல, அந்தக் கல்யாணிட படங்கள் இப்பவும் அந்த அறைக்குள்ள இல்லை என்றதுக்கு என்ன அத்தாட்சி? எனக்கு அதைத் தெரிஞ்சு கொள்ள வேணும்.” போட்டாளே ஒரு போடு!

   “அது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? பேசாமல் இருங்க!” என்றுவிட்டேன் நான்.

  ‘அவரிட அறைக்குள்ள  பார்த்திட்டு, இருந்தால் எடுத்து எறிஞ்சு கூட  விடலாம். மனத்தில்?’ 

  என் உள்ளம் கேள்வியும் பதிலுமாக முணுமுணுத்துக் கொண்டது

   எல்லாம் சரியாவிடும் என்று தங்கைகளுக்குச் சமாதானம் சொல்லிச்  சிலநிமிடங்கள் கடக்கவில்லை அதற்குள் இந்த நினைவுகள்.

  நெஞ்சில் அழுத்திய கனம் தலையையும் பிடித்திழுத்தது. தலைவலிக்கத் தொடங்கியிருந்தது. என்னால் முடிந்ததைச்  செய்வது மட்டுமே என் கையில். மிகுதி?

   அந்தக்கணம் ஒன்றுமட்டும் மிக மிக நன்றாகப் புரிந்து போயிற்றுஎங்களுள் எழும் பற்பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடைகளைக்    காலம் தான் வழங்க வேண்டும். பொறுத்திராது எதுவுமே செய்ய முடியாது

 பார்ப்போம். இறுதியில் இப்படித்தான் எண்ணிக் கொண்டேன்.

  என்னைப்  போல் சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் தங்கைகளுக்கு இல்லவே இல்லை

  என்னை முறைத்துவிட்டு எழுந்தாள் தீபி.

   “கவிக்கா! நீ வா நாம அந்த அறையத் திறந்து பார்ப்பம். போட்டோக்கள் இருந்திச்சோ அந்தாள் வரவிட்டுத்  தலையில போட்டு உடைக்கிறன்.” எழுந்தாள்.

   “சரியாச்  சொன்ன, அந்த அறை  எப்பிடி இருக்கு என்றதில வச்சே அவரில மாற்றம் இருக்கா  இல்லையா எண்டு நாங்க கண்டு பிடிக்கலாம் வா!”  என்றபடி, கவியும் சேர்ந்துகொண்டாள்.

  “உங்களுக்கு என்ன விசராடி? இப்பிடி எண்டா ரெண்டு பேரும் வீட்டுக்கு நடவுங்க! ” நான் அதட்ட, அந்த நேரம் பார்த்து உள்ளே வந்தார் குட்டி அக்கா.

  “என்ன அக்காவும் தங்கச்சிகளும் ஒரே பாசமழை போல!” என்றபடி வந்தாலும், அவர் முகம் இருந்த விதமே நாங்கள் இங்கே கதைத்தவற்றைக்  கேட்டிருக்கிறார் என்று சொல்லீற்று!

  “பேசாமல் இங்கயே நில்லுங்க!” அடிக்குரக்குரலில் தங்கைகளை அதட்டிவிட்டு, “இல்லசும்மாதான் …” சமாளிப்பாகச்  சிரித்தேன் நான்.

 “பிளேன் டி போட்டன், வாங்க குடிப்பம்.” என்றவர், கவியையும் தீபியையும் உற்றுப்பார்த்தார்.

 “நேற்றுத்தான் போல இருக்கு! நான் தூக்கி வளர்த்த குஞ்சுகள் பெரிய மனிசிகளாகீட்டிங்க போல!” என்று சொல்லவும் செய்தார்.

  “இதைச் சொல்லிச் சொல்லியே…” என்று ஆரம்பித்த தீபி, நான் நறுக்கென்று கிள்ளியதில் என்னை முறைத்தாள்

 “நாங்க கதைக்கிறதில ஏதாவது பிழை இருந்தாச் சொல்லுங்க!” என்றவள் கண்கலங்க, எட்டி அவளை அணைத்துக்கொண்டார் அவர்

   “நீங்க விடுங்கோ! எல்லாரிலும் நாங்க கோவமா இருக்கிறம்.” திமிறினாள் தீபி.

 “நீங்க கதைச்சது எல்லாமே நான் கேட்டன்.” என்றார், அவர்

  “அதுக்கு?” தீபி சிலிர்க்க, “நாங்க ஒண்ணும் ரகசியம் கதைக்கேல்லயே! அதோடநடக்காத எதையும் கதைக்கவும் இல்ல.”  கவி.

  “ஐயோ கடவுளே! இப்ப நான் அதைக் குற்றமாச் சொல்ல இல்லையடி பிள்ளைகளா! உங்கட பயம் எதுவுமே தேவையில்ல. அண்ணா சத்தியமே செய்திருக்கிறார். உதயாக்கு இங்க எந்தவிதத்திலும் ஒரு கரைச்சலும்  வராது.” என்றார், ஆணித்தரமாக.

 “பார்ரா! உங்கட அண்ணா சத்தியம் செய்தவரே? பார்ப்பம். எதையும் இனி நடந்த பிறகுதான் நாங்க நம்புவம்.” என்றாள் கவி.

  “அதைவிடுங்க, அந்த போட்டோஸ் எல்லாம் எங்க?”  

  தீபி கேட்க, ஒருகணம் தடுமாறிப் போனார் அவர். அதிலிருந்தே அவை இன்னும் சூர்யாவின் அறைக்குள் தானென்று யூகித்துக் கொண்டேன்.

  “கவி, தீபி இதோட இந்தக் கதைகள விடுங்க! இனி எனக்குக்  கெட்ட கோபம் வரும் சரியா?” அதட்டல் போட்டு, “நடவுங்கநல்லா நேரமும் போயிட்டு.” அவர்களை வெளியில் தள்ளிக் கொண்டு வந்துவிட்டேன்.

  அதன் பிறகு, “எட்டு மணியாகப் போகுது அவையள் வந்திருவீனம். சாப்பிட நேரமில்லை நான் கொண்டு போய் வீட்ட சாப்பிடுறன்.” என்று கவி சொல்ல, சித்திக்கும் அவளுக்குமாகச் சாப்பாட்டைக் கொடுத்து விட்டார் அம்மம்மா.

  கவி சென்ற பின்னர், நாங்களும்  சாப்பிடுவோம் என்றதும் தீபி அவரோடு சேர்ந்து எல்லாம் எடுத்து வைத்தாள்

  “நீங்க சாப்பிடுங்க, நான் அண்ணா வரவிட்டுச்  சாப்பிடுறன்.” என்றுவிட்டார் குட்டி அக்கா.

  “நீ பகல் ஏதாவது சாப்பிட்டியா என்ன? பிறகு இப்பிடிப் பட்டினி கிடக்கிறன் எண்டு சொல்லுற? அவன் எப்ப வந்து நீ எப்ப சாப்பிடுறது? பேசாமல் வா!” அம்மம்மா சொன்னதைக் கேட்கவில்லை அவர்.

  “உதயா சமையலில் நல்ல கெட்டிக்காரியாச்சே! அவசரம் அவசரமா புட்டை அவிச்சன், நல்லாவா இருக்கு?” அன்போடு கேட்டார் அம்மம்மா.

   உண்மையில் இத்தனை காலத்தில் இப்படி நெருக்கமாக இவர்களோடு  கதைத்துப் பழகியதில்லை. இன்று கதைக்கையில் அத்தனை இதம் கிடைத்தது.

  கதைத்தபடியே சாப்பிட்டு எழுந்த பிறகும் சிறிதுநேரம் பொதுவாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலை பற்றியே அதிகம் கதை நகர்ந்தது.

   பின்னர், “இங்க பார் பத்தரையாச்சு! நாளைக்குப்  பள்ளி, நீங்க   தூங்குங்கோ!” என்ற அம்மம்மா, குட்டி அக்காவைச் சாப்பிடும் படி கடிந்து கொண்டுவிட்டுத்  தானும் தூங்கப் போய்விட்டார். நாங்களும் அறைக்குள் வந்துவிட்டோம் .

  நேரம் செல்லச்  செல்ல தீபி உறங்கிய பின்னும் உறக்கம் வராது புரண்டு கொண்டிருந்தேன் நான்.  

   ஏனோ என் மனம் நிலையில்லாது தவித்தது .

   ‘நான் இங்க வாறதில சூர்யாவுக்குச் சம்மதம் எண்டே வச்சுக் கொண்டால், தங்கச்சி ஆட்கள் சொன்னது போலவே நான் உள்ள வந்த பிறகு வீட்டுக்க வராமல் அப்பிடியே போனவர், இப்ப…’ எண்ணியபடி அருகிலிருந்த கைபேசியை எடுத்து மணி பார்த்தேன், பன்னிரண்டு பத்து.

   இவ்வளவு நேரமாக ஏன் இன்னும் வரவில்லை. ஆனாலும், இது வழமை என்பது போலவே அம்மம்மா நடந்து கொண்டாரே! ஒருவேளை காராஜில் வேலையோ?

  எழுந்து சென்று சமையலறையில் நீர் அருந்திவிட்டு வந்தேன். குட்டி அக்காவும்  தூங்கிவிட்டார் போலும். வீடு நிசப்தத்தில் கிடந்தது.

   மெல்ல அசந்து போவதும் திடுமென்று விழிப்பதுமாக இருக்கையில் ஒரு மோட்டார் சத்தம் முழுமையாக விழிப்பை ஏற்படுத்தியது.

   சூர்யா தான். ‘இப்ப நான் போய்க் கதவைத் திறக்க வேணுமோ? இல்லை, அவரிட்டையே திறப்பு இருக்குமோ?’ 

   எண்ணிய எனக்குக்  கதவைத் திறக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. அப்படியே கிடந்தேன்.

  திறப்பு இருந்திருக்கும் போல. உள்ளே வந்து விட்டார். சிறிது நேரம் அங்கும் இங்கும் காலடிச் சத்தங்கள்  கேட்டன . பிறகு அடங்கிப் போனது.

  ‘இவர் வந்த பிறகு சாப்பிடுறன் என்ற குட்டி அக்கா சாப்பிடேல்ல; இவரும் சாப்பிடேல்ல. அதுக்கு நான் என்ன செய்யேலும்.’ எண்ணியபடியே என்னையும் அறியாது அசந்து உறங்கிவிட்டேன்.

error: Alert: Content selection is disabled!!