அத்தியாயம் 22 – 1

  “அக்காஅக்கோய் பாருங்க நல்லா விடிஞ்சிட்டு, எழும்புங்கோ!”

   தீபியின் உலுக்கலில்தான் விழித்தேன். இருந்தும் கண்களின் எரிச்சல் தாங்க  முடியவில்லை. தலை வேறு விண் விண்ணென்றது.

  “என்னடி? எத்தின மணி?” என்றபடி எழுந்தமர்ந்து பிறங்கையால் கண்களை கசக்கிவிட்டு மெல்ல விழிகளைத் திறந்ததும் தான், நான் எங்கிருக்கிறேன் என்பதே புரிந்தது.  

  மறுகணம் துள்ளி இறங்கிவிட்டேன்.

  “ஐயோ நல்லா விடிஞ்சிட்டு! நாம இப்படித் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறம்; அம்மம்மா என்ன நினைப்பா?” 

   என்னை எழுப்பிய தீபியோ கட்டிலை விட்டெழாது, “ஆறரையாகுதுக்கா! அவா என்ன நினைக்கக் கிடக்கு?” என்று சொல்லிவிட்டுப் புரண்டு படுத்தாள்.

  “மோட்ட சைக்கிள் சத்தத்தில தான் நானே முழிச்சன். நேரம் செல்லப் படுத்தது தானே? எனக்கு இன்னும் நித்திரை வருதக்கா. ஐயோ இண்டைக்குச் சனிக்கிழமையா இருந்திருக்கக் கூடாதா? நல்ல காலம் காலேல டியூசன் இருக்கேல்ல.”  போர்வையை இழுத்துப் போர்த்தியவள், “இன்னும் அரை மணித்தியாலம் கா!” முனகியவாறே கண்களை மூடிக்கொண்டாள்.

  “எழும்பு தீபிநம்மட வீடு போல…” என்னையும் அறியாதுதான் இப்படி ஆரம்பித்துவிட்டேன். மறுநொடியே எழுந்தமர்ந்தவள், “அதேதான் கா, இது நம்மட வீடு இல்ல எல்லா? பிறகு ஏன் இங்க இருப்பான்?” என்றாள்ஒருமாதிரி.

  “விடியவெள்ளனவே தொடங்காத தாயே! வாய்தவறி வந்திட்டு. என்னதான் எண்டாலும் இது உன்ர அம்மம்மா வீடுதானே?” 

  “பெரியஅம்மம்மா தான்…”

  “சரி சரி விடு! நான் முதல் குளிச்சிட்டு வாறன், நீயும் படுத்தது காணும் எழும்பு!” என்றுவிட்டு, வீட்டின் பின்னாலுள்ள குளியலறை நோக்கிச் சென்றேன்.

  “உதயா எழும்பீட்டீரா? குளிச்சிட்டு வந்து எழுப்புவம் எண்டிருந்தன்.” என்றார், குளியலறைக்குளிருந்து வந்துகொண்டிருந்த குட்டி அக்கா.

  “எழும்பக் கொஞ்சம் நேரம் போயிட்டு!” மெல்லச் சொன்னேன். சங்கடமாக இருந்தது.

   “அதுக்கென்ன? இப்ப ஆறரைதானே இருக்கும்; அவசரமில்ல, ஆறுதலா வெளிக்கிடும்.” என்றுவிட்டுச்  செல்பவரை, ஒருகணம் நின்று பார்த்த என் விழிகள் அங்கு சுற்றிலும் ஒருதடவை சுழன்றன.

  வேறு யாரும் தென்படவில்லை. வீடு வெகு அமைதியாக இருந்தது.

  ‘இரவு நேரம் செல்ல வந்திட்டு நல்ல நித்திரை போல!’ என்ற நினைப்போடு குளிக்க ஆரம்பிக்கையில் தான், “மோட்டார் சைக்கிள் சத்தத்தில் தான் எழும்பினன்.” என்று, தீபி சொன்னதே நினைவில் வந்தது.

  ‘இப்பிடி விடிஞ்சும் விடியாததுமா கராஜ் திறப்பீனமோ!’ என்ற நினைப்போடு, ‘நான் இங்க இருக்கிற படியால் தான் இந்தாள் இப்பிடி ஓடுறாரோ!’ என்ற எண்ணமும் கலந்து முகமிறுக வைத்தது.

  தொடர்ந்து கண்டதையும் நினைத்துக் குழம்ப நேரமிருக்கவில்லை. சட்டுப்புட்டென்று குளித்துவிட்டு வர, “நல்லா நித்திர கொண்டியாம்மா? என்ன கண்ணெல்லாம் சரியாச் சிவந்து கிடக்கு? முகமும்  ஒரு மாதிரிக் கிடக்கு?” கேட்டுக்கொண்டே, கரிசனையாகக் கழுத்தில் கைவைத்துப் பார்த்தார் அம்மம்மா.

 “நித்திரை கொண்டம் அம்மம்மா. இல்ல, அதெல்லாம் ஒண்டுமில்ல.” விண்ணென்ற தலையிடியை மறைத்துச் சிரித்தேன், வந்ததும் வராததுமாக வருத்தம் சொல்லிக்கொண்டு இருப்பதா? தேத்தண்ணி குடிச்சிட்டு இரண்டு பரசிட்டமோல் போடுவம் என்ற எண்ணத்தில்

  “சரி  வா, பிள்ள தேத்தண்ணி போட்டிருக்கிறாள்.” என்று அழைத்துப் போக, “நான் தேத்தண்ணி குடிச்சிட்டுக்  குளிக்கிறன்.” குளிக்கவென்று வந்துவிட்டு என் பின்னால் வந்தாள்  தீபி.

   “நீ என்ன எந்தநேரம் பார்த்தாலும் உன்ர அக்காக்கு வால் பிடிச்சுக்கொண்டு திரியிற பிள்ள? போய் உன்ர வேலைகளைப்  பாரன்! அவளுக்கு இதென்ன புது இடமே?” அம்மம்மாதான்.

  “ஹலோ! எனக்கு அதைச் செய் இதைச்செய் எண்டு சொல்லற வேலை வேணாம். புது இடமில்ல தான். பழைய மனிசரும் தான். ஆனால் என்ன? குணம் தான் அப்பிடி இப்பிடி. எப்ப என்ன வருமெண்டு தெரியாதே!”  

  நீளமாக இழுத்தவளுக்குத் தோளில் ஒரு அடி போட்டேன். கண்டிப்போடு, ‘கனக்கக் கதைக்காத!’ என்று சாடையும் செய்தேன்

  “மனுசருக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாதெண்டு இவளவைகள் ரெண்டு பேரின்ட வாயும்அப்பப்பாஉங்களோட இருந்து  வளர்ந்த பிள்ள தானே உதயாவும்? பார், தேவைக்கு அளவோட கதைக்கிறாள். அக்காவைப் பார்த்துச் சரி நடக்கிறதில்லையா?” என்று சொல்லிவிட்டார் அம்மம்மா.

  “அப்பிடி வாங்க வழிக்கு! அக்கா அப்பிடி இருக்கப் போய்த்தான் நீங்க எல்லாரும் ….” 

   வரிந்து கட்டிக்க கொண்டு ஆரம்பித்தவளைக் கதைக்க விடாது வாயைப் பொத்தியிருந்தேன் நான்.

  சமையலறை வாயிலுக்கு வந்திருந்தோம். தீபி கதைத்தவற்றை அங்கு நின்ற குட்டி அக்கா கேட்டிருப்பார் போலும். அவளை முறைத்துப் பார்த்தார். அவள் எங்கே அதையெல்லாம்  பார்த்தாள்?

 “சின்னன் என்று செல்லம் குடுத்துக் குடுத்துப் பொல்லாத வாய்!” என்றபடி உள்ளே நுழைந்தார் அம்மம்மா.

  “ஆங்! அதைப்பற்றியெல்லாம் நீங்க யோசிக்க வேணாம் அம்மாம்மா! வாய் இருந்தாத் தானே நீங்க பெத்த இரத்தினங்கள் போல இருக்கிற ஆட்களைச்  சமாளிக்க ஏலும்!” 

   மீண்டும் வம்பிழுத்தவளை என்ன செய்யலாம் என்று ஆயாசமாகப் பார்த்தேன்.

   “இனி அதை இதைக் கதைச்சால் கட்டாயம் அடி வாங்குவ தீபி. குளிக்கத்தானே வந்தனீ? ஓடு! போய்க் குளிச்சிட்டு வா!” அதட்டல் போட்டேன்.

  “சரி சரிநானொன்றுமே கதைக்கேல்ல. குட்டிச் சித்தி எனக்கு டீ…” கரம் நீட்டியவளுக்குத்  தேநீரைக் கொடுத்தாலும் சிடுசிடுவென்று இருந்தது அவரது பார்வை. அவளைத்தான் அப்படிப் பார்த்தார். அவள் கதைப்பதை அவர் இரசிக்கவில்லை, கோபம் கொள்கிறார் என்று எனக்கு விளங்கினாலும் அவள் வாயை மூடினால்  தானே

  “என்ன அம்மம்மா, உங்கட அருமந்தப்புத்திரன்ட சிரமனக் காணேல்லை(ஆளரவம் இல்லை). இரவும் நாங்க தூங்கப்போற வரைக்கும் வரேல்ல. ஒருவேளநாங்க இங்க வந்தது பிடிக்கேல்லையோ! அதை இதைச் சொல்லித்  திரும்பவும் தூக்கில தொங்கிருவன் எண்டு வெருட்டித் தான் அக்காவ இங்க கூட்டிக்கொண்டு வரச்  சம்மதம் வாங்கினீங்களோ!?” என்றாள் தீபிஒரு மாதிரிக்குரலில்.

   சட்டென்று வெளிப்படையாகவே முறைத்தார் குட்டி அக்கா.

  “இங்க பார் தீபி, நீ சின்னப்பிள்ள; முதல் எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு; அண்ணாவ மரியாதை இல்லாமல் இப்பிடிக் கதைக்கிறத நான் இனிக் காணுறது இல்ல.” 

error: Alert: Content selection is disabled!!