அவர் சொன்ன தொனியில் இருந்த கண்டிப்பில் விசுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள் தங்கை.
‘எத்தின தடவைகள் சொன்னன் கேட்டியா?’ பார்வையால் கடிந்து கொண்டேன்.
“நேரம் போகுதடி, தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் போய் வெளிக்கிடு!” என்றும் சொல்லிவிட்டேன்.
“உங்கட அண்ணா மரியாதை குடுக்கிற மாதிரி முதல் நடக்கட்டும்; பிறகும் நாங்க குடுக்காட்டிக் கதையுங்க. இப்ப நான் ஒண்டும் இல்லாததைச் சொல்லேல்லையே!” அவளோ மல்லுக்கு நின்றாள்.
“தீபி, நீ பள்ளிக்கூடத்தில இருந்து நேர வீட்ட போயிரு!” கண்டிப்போடு நான் சொன்ன பிறகே வாயை மூடினாள்.
இருந்தும் கண்கள் நிறைய கையிலிருந்த தேநீரையும் குடிக்காது வைத்துவிட்டு ஓடிவிட்டாள்.
“ஏய் நில்லு! தேத்தண்ணியக் குடிச்சிட்டு போ!” பின்னால் போக முயன்ற என் கரத்தைப் பற்றி நிறுத்திவிட்டார் குட்டி அக்கா.
“விடும் உதயா! நடந்த பிரச்சனைகளில அவேயும் கேள்வி கேட்கிற மாதிரி என்னனென்னவோ நடந்திட்டு. அவேயில மட்டும் பிழை சொல்லவும் ஏலாது. எண்டாலும், இந்தப் பழக்கம் சரியில்ல. அவேக்குத் தான் கூடாது. அதால தான் இப்ப ஏசினன்.” பெருமூச்சோடு சொன்னவர், “அவள் சொன்ன மாதிரி நீரும் நினைச்சிராதேயும்; நேற்று இரவு கராஜில வேலை எண்டு லேட்டாதான் அண்ணா வந்தவர்.” என்றார், தன்மையாக.
“எனக்குத் தெரியும், ஒருமணிக்குப் பிறகுதானே வந்தவர்.” என்னையும் அறியாது சொல்லி விட்டேன் நான்.
“என்ன தெரியுமா? முழிச்சாம்மா இருந்தனி? அதுதான் முகம் எல்லாம் ஒரு மாதிரி வீங்கிக் கிடக்கு.” என்ற அம்மம்மா, “இனிச்சரி அவன நேர காலத்துக்கு வீட்ட வரச் சொல்லன். யாருக்கு ஒளிச்சு ஓடுறான்? பார் சின்னன் பொன்னன் எல்லாம் கேள்வி கேட்கிற நிலையில நிக்கிறம்.” என்றவர், அப்படியே சுவரோடு அமர்ந்து கண்ணீர் விட, எனக்குத்தான் அங்கு நிற்க முடியாது சங்கடமாக இருந்தது.
“நீங்க வேறம்மா…கண்ணைத் துடையுங்கோ! விடியவெள்ளனத் தொடங்க வேணாம்.” அதட்டினார், குட்டி அக்கா.
“நீங்க மட்டும் என்னம்மா? அண்ணா இப்பத்தான் குடிக்கிறதும் இல்லயே! உதயாவுக்கு, தான் செய்தது பிழை எண்டு மன்னிப்புக் கேட்கிறன் என்றும் வந்தவர். அப்படியிருக்க, ஒரு அன்பான பார்வை, கரிசனையான கதை எண்டு ஏதாவது? நீங்க சாப்பாடு போட்டுக் குடுத்தா எப்பிடி ஆசையாச் சாப்பிடுறவர் எண்டது தெரிஞ்சும்…” தொண்டை அடைக்கத் தாயைக் கோபமாகப் பார்த்தார் அவர்.
“கலியாணத்துக்கு முதல் நாள் வீட்டில இதில இருந்து சாப்பிட்டத்துக்குப் பிறகு அண்ணா வயிறாரச் சாப்பிடேல்லம்மா!” என்றதும், மகளை முறைத்தார் அம்மம்மா.
“நானென்ன அவனைச் சாப்பிட வேணாம் எண்டு ஏதும் சொன்னனா? அப்படியே நான் சொன்னோன்ன செய்திட்டுத்தான் மறு வேலை பார்ப்பான் போல!” சினந்தார் அவர்.
“இதுதானே அம்மா வேணாம் எண்டு சொல்லுறது. சரி, நடந்தது எதுவும் நல்ல விசயம் இல்லை. ஆனாம்மா என்ன செய்யிறது? நடந்திட்டுதே! நம்மட கண்ணுக்கு முன்னாலதான் எல்லாப் பிரச்சனையும் நடந்திச்சு. அதை அப்பிடியேவிட்டு மேல மேல பெரிசாக்காமத் தீர்க்கிறதுக்கு வழி கண்டுபிடிக்கிறதா, இல்லாட்டி இப்பிடிக் கோபம் சாதிச்சு நீங்களும் வருந்தி மற்றவர்களையும் வருத்திறதா நல்லது?”
குட்டி அக்காவும் வருத்தத்தோடு கோபமும் கலக்க, குற்றம் சாட்டும் பாணியில் தான் கேட்டார்.
விருட்டென்று எழுந்தார் அம்மம்மா.
“இங்க பார், நீ எனக்குப் புத்தி சொல்ல வராத! அவன் நல்லா வாழ வேணும் எண்டு மனசார நினைச்சு இவளக் கலியாணம் செய்து குடுத்தன்.” என்னைப் பிடித்துத் தன்னருகில் நிறுத்தினார்.
“அவன் என்ன செய்தவன்? ஒரேயடியா எட்டி உதச்சிட்டான்.”
“அய்யோம்மா! அது முடிஞ்ச கதை. இண்டைக்கு உதயாவ வீட்ட கூட்டிக்கொண்டு வந்திட்டம் தானே?”
“எது முடிஞ்ச கதை? ஒண்ணும் இன்னும் முடியேல்ல; எல்லாம் தொங்கிக் கொண்டுதான் கிடக்கு!
மன்னிப்புக் கேட்க வந்தான் எண்டாக் கேட்டவனா? இல்லக் கேட்கிறன். கூட்டிக்கொண்டு போக வா எண்டா வரவும் இல்ல. பிறகு, வீட்ட வந்த பிள்ளையிட்ட ஒரு வார்த்த? ம்ம்… பிறகெப்படி நீ அவன் மாறிட்டான் எண்டு சொல்லுவ?
இங்க பார் குட்டி, எல்லாம் நல்லபடி நடக்கும் எண்ட நம்பிக்கையில தான் நானும் இவள இங்க கூட்டிக்கொண்டு வந்தனான். அது நடக்க வேணும். அதை நான் பார்க்க வேணும்.
நான் பெத்த ஆறு பிள்ளைகளும் குறையில்லாமல் வாழவேணும் எண்டு நினைச்ச அதே மனசால, இந்தப் பிள்ளேண்ட வாழ்வும் நல்லா அமோகமா இருக்க வேணும் எண்டு நினைக்கிறன். அது எப்ப நடக்குதோ…அண்டைக்கு…” படபடவென்று கதைத்ததில் மூச்சு வாங்கினார்.
கண்கள் கொட்டிய கண்ணீரை நடுங்கும் கைகளால் துடைத்தபடி, “அண்டைக்கு இந்த அம்மா கையால அவனுக்குச் சாப்பாடு கிடைக்கும் எண்டு சொல்லு! நான் உயிரோட இருந்தால்…” என்றுவிட்டு விசுக்கென்று செல்பவரை, செய்வதறியாது பார்த்து நின்றோம் குட்டி அக்காவும் நானும்.