அத்தியாயம் 24- 2

இப்படி, வீட்டின் நினைவுகள் ஒருபுறமிருக்க கைகள் தம் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன.   

   இன்று காலையில் எட்டு மணிக்கு வந்ததிலிருந்து இதோ நண்பகல் வரை கராஜில் நல்ல வேலை.

  “அண்ணா தேத்தண்ணி!” 

  பெடியன் தந்த தேநீரைக் குடித்துக்  குடித்து வேலைகளைப் பார்த்தேன்.

  இப்போவெல்லாம் இந்த கராஜைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதால் இன்னொரு பெடியனையும் உதவிக்குச் சேர்த்துக் கொண்டிருந்தேன்

  “அண்ணா உங்களுக்குத் சாப்பாடு வாங்கிக்கொண்டு வாறதோ?” 

  மதிய உணவுக்குச் செல்ல ஆயத்தமாகியபடி கேட்டார்கள் கடைப்பையன்கள்.

  “தம்பி வீட்ட போவார், நீங்க போங்க!” 

  தங்கையின் வற்புறுத்துதலில் சில நாட்களாக வீடு போய் சாப்பிட்டுவிட்டே வருவேன் என்றதால்நான் பதில் சொல்ல முன்னர் முந்திக்கொண்டார் பெரியவர்.

    “இல்லஇல்ல..இண்டைக்கு இந்த வேலையை முடிக்க வேணும்; எனக்கும் வாங்கிக்கொண்டு வா!” என்றுவிட்டு நான் வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.

  அது பார்த்தால்… ‘தங்கையின் குரலாச்சே!’ என்று எழுந்தால், காரஜுக்கு முன்னால் சாப்பாட்டுக் கூடையோடு நின்றவள் அவளேதான்.

  “ஏனம்மா இந்த வெயிலுக்க வந்தனீ? நான் தான் காலமையே இண்டைக்குக் கடையில சாப்பிடுறன் என்றனே.”  என்றபடி சென்றேன் நான்.

  “இதெல்லாம் என்ன பெரிய வெயில் அண்ணா! உங்களுக்குச்  சாப்பாடு தந்திட்டு இங்க ஒரு ஃபிரெண்ட் வீட்ட போக வேணும்.” முறுவலித்தவள்உள்ளே வரும் எண்ணத்தில் கால் வைக்கவும் எங்களைப்  பார்த்தபடி கடந்தது ஒரு ஸ்கூட்டி.

  “அது உதயா தானே?” 

  தங்கை கை காட்டிக் கேட்க, முன்னே சென்றுவிட்டவள் அப்படியே வட்டமடித்துக் கொண்டு வந்து கராஜ் முன்னால்  நிறுத்தினாள்.

  “என்ன உதயா இந்தப் பக்கம்? அதுவும் இப்பப் பள்ளிக்கூடமும் விட்டிருக்காதே?” குட்டி தான் கேட்டாள்

   நான் உள்ளே  செல்லவில்லை, அங்கே தான் நின்றேன், அவளைப்  பார்த்தபடி.

  “கச்சேரிக்கு வந்தன் குட்டி அக்கா. வெளிநாட்டில இருக்கிற என்ர  ஃபிரெண்ட் தன்ர காணி உறுதி சம்பந்தமா கொஞ்சம் பார்க்கச்  சொன்னவள், அதுதான் வந்தனான்.

   என்னோட படிப்பிக்கிற டீச்சரிட  தம்பி காணிப்பிரிவில தான் வேலையாம். ஒரு மணிக்கு வாறன் என்றனான்.” என்றவளோ, மறந்தும் என்னை ஏறிடவில்லை.

   நானொருத்தன் அங்கு நிற்பதை உணர்ந்தது போல ஒருபாவனை கூட அவள் முகத்தில் இருக்கவில்லை.

  “ஒருமணிக்கா? இனித்தானே பன்னிரெண்டரை ஆகப் போகுது! உள்ள வாருமன்.” என்றாள் தங்கை

  “இல்ல இல்லநான் கொஞ்சம் நேரத்துக்கே போனால் அவர் நின்றார் என்றால்  வேலையை முடிச்சிட்டுப்  போயிருவன்.” என்று சொல்லிவிட்டு அவள் செல்லத்  தயாராக, “என்ன டீச்சர் இங்க?” என்றபடி அருகில் வந்து தன்  மோட்டார் சைக்கிளை நிறுத்தினான் ஒரு இளைஞன்.

  “ஸ்கூட்டியில ஏதாவது பிரச்சனையா?” அக்கறையாக விசாரித்தான்.

  கராஜின் முன்னால் நிற்பதால்தானே அப்படிக் கேட்டான். “அப்பிடியெல்லாம் இல்ல.” சட்டென்று சொன்னவள், “இது எங்களிட கராஜ் தான்.” சொல்வாள் என்று என்னையும் மீறி எதிர்பார்த்தேன்.

  அவள் அப்படியெல்லாம் நினைக்கவும் இல்லை  போல!

  “நான் உங்களிட்டத்  தான் வந்தனான்; கொஞ்சம் நேரத்துக்கே வந்திட்டன் என்ன? நீங்க வெளிய போறீங்க போல?” 

  அவள், அவனோடு தொடர்ந்து கதைக்கசற்றே தள்ளி நிழலில் வந்து நின்று கொண்டாள் குட்டி

  ‘இனி எனக்கு இங்க என்ன வேலை? உள்ளே சென்று என்ர  வேலையைப் பார்க்க வேண்டியதுதானே?’ மனம் சொன்னாலும் நகராது நின்றேன் நான்.

  “!” என்றுவிட்டுத் தன் கடிகாரத்தைப் பார்த்தான் அவன்.

  “நீங்க ஒரு மணிக்கு வருவன் எண்டதும் நானும் சாப்பிட்டுட்டு வரலாம் எண்டு வெளிக்கிட்டன். காணிப்பிரிவு வாகீசன் சேரும் சாப்பிடப் போயிருப்பார்…” இழுத்தான்

  “அப்பிடியா? அதுக்கென்ன? சாப்பிட்டுட்டு வாங்க; நான் அங்க காத்திருக்கிறன்.” என்று சொல்லிவிட்டு, அவன்சரி, கெதியா வந்திருவன்.” என்று செல்ல, “நானும் போய்ட்டு வாறன் கா!” தங்கையிடம் சொல்லிவிட்டு நகர முயன்றவளைப் பிடித்து நிறுத்தினாள்  குட்டி.

  “அந்தாள் சாப்பிட்டிட்டு  வரும் வரைக்கும் அங்க போய் என்ன செய்யப் போறீர்? பேசாம உள்ள வாரும்.” அன்பான அதட்டலோடு அழைத்தாள்

 அவளோ,  “இல்லஇல்ல வேணாம்.” என்றவள், அப்போதுதான் சற்றே தடுமாற்றத்தோடு என்னைப் பார்த்தாள்.

   அவள் உள்ளே வருவதில் எனக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கலாம் என்றவகையில் இருந்தது, அவள் பார்வையிலிருந்த தவிப்பு

  ‘இனி இதுதானே என்ர இடம் எண்டு வீட்டில அவ்வளவு நடப்பா நடந்து கொள்ளுறவளுக்கு கராஜில அந்த உரிமை இல்லையா என்ன? அதென்ன இப்ப மட்டும் இங்க பார்வை? இவ்வளவு நேரமாக நானொருத்தன் இதில் நின்றேன் தானே?’

  என்ன எதிர்பார்க்கின்றது என்றில்லாது என் மனம் சிலிப்பிக் கொண்டது.  

   உள்ளே செல்லத் திரும்பிய நான், “வெயிலுக்க நிக்காமல் உள்ள வாவன்.” என்றெல்லாம் சொல்வேன் என்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் சொல்லியிருந்தேன்.

   இது போதாதா என் தங்கைக்கு? அப்படியே மகிழ்ந்து போனாள்

   “பாரும், அண்ணாவே உள்ள வரச் சொல்லுறார்; வந்திட்டுப் போம்  உதயா.” இப்போது தங்கையின் குரலில் வற்புறுத்தலும் கெஞ்சலும் கலந்து கிடந்தன.

  அது போதாதென்று, “அம்மா! வாங்கம்மா! நல்லா  இருக்கிறீங்களா?” என்றபடி வந்தார் பெரியவர். இத்தனை நேரமாக மனிதனின் முழுக்கவனமும் இங்க தான் இருந்திருக்கும் போல!

   அதற்குப் பிறகு அவளும் பிகு பண்ணவில்லை; இருந்தும், வெகுவாகத் தயங்கித் தயங்கியேதான் இறங்கி வந்தாள்.

  உள்ளிட்டதும் சுழன்ற விழிகள் சற்றே அதிக கணங்கள் மூலையில்  நிறுத்தியிருந்த ஸ்கூட்டியில் நிலைத்து நின்றன.

  அதை அவதானித்த என்னுள் சஞ்சலம் எழவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்

 ‘இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?’ மனதுள்  தடுமாறிவிட்டேன் தான்.

 தொடர்ந்து அங்கு தாமதிக்க விடாது, “வா உதயா, சாப்பிட்டியா? அண்ணாக்குச்  சாப்பாடு கொண்டு வந்தன், சாப்பிடுறியா?” கேட்டபடி, தங்கை பின்புறமாக அழைத்துச் செல்ல நான் அங்கேயே நின்றேன்.

  “இல்ல இல்ல, எனக்கு ஒண்டும் வேணாம்.” அவள் மறுக்க, “அண்ணா கையைக் கழுவிப்  போட்டு வாங்கவன் சாப்பிட!” என்றாள், குட்டி.

  கைகால்கள் முகம் அலம்பிவிட்டு வந்தபோது உதயாவின் பார்வை அந்த வீட்டில்.

  என் பார்வையும் அங்கே தான் சென்றது.

  ‘அருவமாக நின்று பார்ப்பியா கல்யாணி? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவ? நீ உரிமையாக வந்து போன இடத்தில் இன்னொருத்தி எண்டு கோபம் கொள்ளுவியா என்ன? என்ர நிலையைப் புரிஞ்சு கொள்ளுவியா?’

   குரங்கு மனம். எங்கு திரும்புவதென்று தெரியாது அங்கும் இங்குமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றதே

  “அண்ணா வாங்க!” அழுத்தமாக அழைத்தாள்  குட்டி.

  எங்களைக் கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.

  சட்டென்று உதயாவைப் பார்த்தேன். அவள் விழிகள் கலங்கிக் கிடந்தனவோ! சிலகணங்கள் என் பார்வையைத் தாங்கி நின்றவள் ஒரு பெருமூச்சோடு அங்கிருந்த வயர்க்கதிரை ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டாள்.

  “அண்ணா!” மீண்டும் குட்டி தான்.

   அச்சிறுபொழுதில் மீண்டும் மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தேன் நான். என் மனத்தை ஆட்டுவிக்கும் வித்தை எனக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. என் உதடுகளுள் வருத்த  முறுவல் நெரிந்தது.

   அது தெரியவில்லையோ எல்லாம் மோசம் தான்வந்து அவர்களுக்குச்  சற்றே தள்ளியிருந்த மரக்குற்றியில் அமர்ந்து கொண்டேன்.

   “பிளேட்டில போட்டே கொண்டு வந்திட்டன் அண்ணா!” சாப்பாட்டை எடுத்துத் தந்தாள் குட்டி.

   விளமீன் குழம்பு வாசம் நாசியில் மோதிப் பசியின் வேகத்தைக் கூட்டியது. அம்மாவின் மீன்கறி தனிச் சுவை!

   அருகில் வாழைப்பூவும் பொன்னாங்காணியும் சேர்த்து வறை, கத்தரியில் பால்கறிபசியெடுத்தது

  “கறிகள்  வேறயாகவும் கொண்டு வந்திருக்கிறன் அண்ணா…  சாப்பிடுங்க!”

   இந்த அன்பு, பாசமுள்ள தங்கைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரித்தானது!

   சோற்றைக் குழைத்தேன்

   “நீ சாப்பிட்டிட்டியா குட்டி?”

   “ஓமோம், சாப்பிட்டுட்டுத் தான் வெளிக்கிட்டன்.”

   ‘அப்ப அவள்?’ பாண் கொண்டு போறவள் அதைத்தான் சாப்பிட்டு இருப்பாள். பள்ளியால் போய்த்தான் சோறு. அவளைப்  பார்த்தேன். அவளோ, தன் கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்

    ‘இதில் கொஞ்சம் சாப்பிடன் எண்டு குடுத்தால் வாங்கிச் சாப்பிடுவாளா?’ 

  இப்படி எண்ணிவிட்ட பின்னர் கையிலிருந்த உணவை உண்ண முடியவில்லை. சட்டென்று அவளைச் சாப்பிடச் சொல்லவும் முடியவில்லை

  அந்நேரம், “தம்பி தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வாறதோ?” பெரியவரின்  குரல்.

   சட்டென்று நிமிர்ந்தாள்  உதயா.

   “எனக்கு ஒண்டும் வேணாம், இன்னும் பத்து நிமிசத்தில வெளிக்கிடுவன்.” என்றவள், என் பார்வையைக் கவனமாகத் தவிர்த்துத் தங்கையிடம் தான் சொன்னாள்.

    “அண்ணா என்ன  சாப்பிடாமல் பாத்துக் கொண்டிருக்கிறீங்க?” என்ற குட்டி, என் பார்வை உதயாவில் தங்கி வந்ததைக் கவனித்துவிட்டாள். உதடுகளில் நெளிந்த முறுவலை அடக்கிக் கொள்ளுவது அப்படியே தெரிந்தது

   ‘உதயா கொஞ்சம் சாப்பிடன்தொண்டைவரை வந்த வார்த்தைகள் அங்கேயே நின்றுவிட, சாப்பாட்டை  அவதியோடு பார்த்தேன் நான்.

 அப்போது,  ” இதில ரெண்டு உருண்டை சோறு வையுங்கண்ணா!” கறிகள் மூடி வந்த சில்வர் கிண்ணத்தின் மூடியை நீட்டினாள் குட்டி.

  கேள்வியாகப் பார்த்த எனக்குக்  கண்ணடித்தாள்

  என்னையும் மீறி உதட்டோரம் சிறுமுறுவல். அம்முறுவல் விழிகளையும் மென்மையாக உரசிப் போக உதயாவைப் பார்த்தேன். அவள் எங்களைப்   பார்க்கவில்லை

  இருந்தாலும் காதுகள் இங்குதானிருக்கும் என்றது என்னுணர்வு.

  “வேணாம்ம்மா விடு!” 

  குட்டிக்கு  மட்டுமே  கேட்கும் வண்ணம் மெல்லச் சொன்னேன். வேணாமே வேணாம் என்று சொல்லிவிடுவாள் என்றது என்னுள்ளம்.

  “பச்! வையுங்க என்றா வையுங்க!” வழமைபோலவே பிடிவாதம் பிடித்தாள் குட்டி

  மனம் விரும்பியும் தயங்கி நின்றேன் தானேஅதன் பிறகு எதுவும் சொல்லாது சோற்றைக் குழைத்துத்  தட்டில் வைக்க, “போதும் போதும்; இனி நீங்க சாப்பிடுங்க!” என்றபடி எழுந்தவள், “டீச்சர் மேடம்! இதைச் சாப்பிடுங்க!” அவள்  முன் பிடித்தாள்.

  “அய்யோ! எனக்கு உண்மையாவே வேணாம். இது…” என்னைப் பார்த்தாள்.

  “அவர்அவரையே சாப்பிடச் சொல்லுங்க; நான் பாண் சாப்பிட்டுட்டுத்தான் வந்தன்; உண்மையாவே பசிக்கேல்லக்கா.” எழுந்தே விட்டாள்.

  “ஹலோவேற கதை வேணாம், முதல் இரும்.’ இருத்திவிட்டாள் குட்டி.

   “உம்மட போனையும் பாக்கையையும் இங்க யாரும் எடுக்க மாட்டீனம், இப்படி வையும்.” 

  வாங்கி  அருகில் கிடந்த மர  பெஞ்சில் வைத்துவிட்டு, “சாப்பிடும் உதயா!” என்றாள்.

   “என்ன அண்ணாவைப் பார்க்கிறீர்? சாப்பிடும், அண்ணாவே உருட்டித் தந்தது.” கண்ணடித்துச் சொல்ல, விரல்கள் நடுங்க அந்தக் கிண்ணத்தைப் பற்றியபடி என்னையே பார்த்தவள், “சாப்பிடுகொஞ்சம் தானே?” நான் சொன்னதும் தலையைக் குனிந்து கொண்டாள்

  இருந்தும் கிள்ளி வாயில் வைக்கத் தவறவில்லை.

error: Alert: Content selection is disabled!!