நானும் வெடுக்கென்று தான் பதில் சொல்லி விட்டேன்.
அவள் பதில் சொல்லாது என்னையே பார்த்தாள். கண்கள் கலங்கினவோ என்று நான் உற்றுப் பார்க்க முதல் திரும்பி விட்டாள்.
“இந்த வீட்டு ஆள் எண்டு புதுசாக் கண்டுபிடிச்சிருகிறார்…பெரிய அக்கறை தான்.” தெளிவாகவே முணுமுணுத்தாள்.
“என்ன சொல்லுறது எண்டாலும் சத்தமாச் சொல்லு உதயா! கேட்கேல்ல…”
“நான் இப்ப உங்களுக்கு ஒண்ணும் சொல்லேல்ல சரியா?”
“ஓ! சரிதான். பகல் கறியேதும் இருந்தாக் கொஞ்சம் போடுறியா?” தட்டை நீட்டினேன்.
“மீன் குழம்பு இருக்கு…” வாங்கிப் பரிமாறிவிட்டு நிலத்தில் வைக்கமுதல் நான் வாங்கிக் கொண்டேன். அதுக்கும் ஒரு பார்வை! முறைப்புத்தான்.
“சரியான பயமாக் கிடக்கு எனக்கு!” என்னையும் மீறி வார்த்தைகள் விழுந்துவிட்டது.
“ஏய் தீபி! இதுதான் கடைசித் தடவை. கெதியா வந்து சாப்பிடு!” அவள் சொன்ன விதமும் முகபாவனையும் இன்னுமொரு வார்த்தை கதைத்தால் முன்னால் திறந்திருந்த மீன் குழம்புச் சட்டியால் முகத்தில் அடிப்பாள் போலிருந்தது.
“என்ர அம்மாளே! வந்த வேலையைப் பார்ப்போம்.” விறுவிறுவென்று தோசைகளைப் பிய்த்து சாப்பிடத் தொடங்கினேன். அவளைப் பாராது. ஆனால், அவள் பார்வை என்னைச் சுட்டது.
அது போதாதென்று, வளவளவென்று நியாயம் கதைத்தபடி வந்தாள் தீபி.
“வாங்கி இவ்வளவு நாளா நல்லா ஓடின ஸ்கூட்டி அது. அநேகமா அக்கா கிளாஸுக்குப் போக மட்டும் தானே பாவிக்கிறதும். ஏதாவது சின்னப் பிழையாத்தான் இருக்கும். இப்படி உடனே திருத்த முடியாமல் எல்லாம் இராதெண்டு நினைக்கிறன். எனக்கென்னவோ சந்தேகமாக் கிடக்கு அக்கா. நீங்க வேற எங்கயாவது விட்டிருக்கலாம். வேற கராஜ் கிடைக்கேல்லையோ!” என்று சொல்லிக்கொண்டே தன் சாப்பாட்டுத் தட்டோடு தமக்கை அருகில் அமர்ந்துகொண்டாள் அவள்.
“வேணாம் தீபி! இந்த வாயடிக்கிற வேலையை விட்டுட்டுப் படிக்கிறதில கவனத்தைச் செலுத்து!” நான் தொடங்க, “சும்மா விசர் பிடிச்ச கணக்கில தேவையில்லாம அலட்டாமல் சாப்பிடு! சாப்பிட்டுப்போட்டுப் போய்ப் படி! அடுத்த கிழம சோதினை எல்லா தொடங்குது.” தங்கைக்குச் சொல்லிவிட்டு, “ஆட்டோ எல்லாம் தேவையில்ல; நாங்க பார்த்துக் கொள்ளுறம். காலமைக்கு வர வேணாம் எண்டு சொல்லிவிடுங்க.” என் முகத்தைப் பார்த்து நிதானமாகச் சொன்ன போது உண்மையிலும் எரிச்சல் தான் வந்தது.
“அதான் சரி! பெரிசா உதவி செய்யினமாம் உதவி. இங்க எங்களுக்கு யாரிண்ட உதவியும் எப்பவும் தேவையில்லை. புத்தி சொல்லுறதும் தான். எங்களப் பார்க்க எங்கட அக்கா இருக்கிறா. அவா மட்டும் எங்களுக்குப் போதும்.”
பார்வையால் குத்தியபடி தீபி வார்த்தைகளை விட, என் பொறுமை முற்றாகப் பறந்திட்டு!
” உன்ன … திருப்பித் திருப்பிச் சொன்னாலும் மண்டையில ஏறுதில்ல என்ன? எல்லாத்துக்கையும் வந்து மூக்கை நுழைக்கிறது.”
நான் சாப்பாட்டுத் தட்டைக் கீழே வைக்க, விசுக்கென்று எழுந்து, “அம்மம்மா!” கூவியபடி ஓடிவிட்டாள் அவள்.
“இங்க பார் உதயா, உன்ர தங்கச்சி கெதியா என்னட்ட கன்னம் மின்ன வாங்குவாள், பல்லுக் கில்லு எல்லாம் கழன்று கொட்டும்…சொல்லிப் போட்டன்.”
“ஆங்! அதான் உங்களுக்குக் கைவந்த கலையாச்சே! எல்லாரும் உதயா இல்ல சரியோ! எங்கட கை ஒன்றும் பூப்பறிக்காது !” அவள் விடாது குரல் கொடுக்க, “இவள இண்டைக்கு…” நான் எழுந்தே விட்டேன்.
“திரும்பத் திரும்ப எத்தின நாளுக்கு நடந்த ஒண்டையே எல்லாரும் சொல்லிக்கொண்டு மனிசரை விசரன் பேயன் ஆக்குவீங்க? ” உதயாவிடம் உறுமிவிட்டு நகர,
“அய்யோ! மாறி மாறி அலட்டாமல் சாப்பிட வந்தா பேசாமல் சாப்பிடுங்கோவன். எனக்கும் பசிக்குது , டெஸ்ட் பேபேர்ஸ் திருத்தவும் கிடக்கு…இன்னும் கொஞ்சப் பள்ளிக்கூட வேலைகள் கிடக்கு…” விசுக்கென்று எழுந்து என்னை மறித்தாள் உதயா.
“யாரு? நான் அலட்டுறானா? அப்ப உன்ர தங்கச்சிமார் என்ன கதைச்சாலும் நான் பேயன் போலக் கேட்டுட்டு வாயப் பொத்திக்கொண்டு போகவேணும் எண்டு சொல்ல வாறியோ?”
அவள் அதுக்குப் பதில் சொல்ல முதல், “யாரும் இங்க நடக்காத ஒரு புதினத்தையும் சொல்லேல்லையே! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தான். கோபமும் வரும் தான். அதுக்கு நாங்க ஒண்ணும் செய்யேலாது.” அம்மா தன் பங்குக்கு எடுத்துவிட்டார்.
“ச்சே! போதும். எல்லாமே போதும். வயிறாரச் சாப்பிட்டுட்டன். மனமும் நிறைஞ்சிட்டு. நீங்க சாப்பிடுங்க!”
சொன்ன வேகத்தில் வெளியே வந்துவிட்டேன்.
பார்த்துப் பார்த்து என்ன செய்தாலும், எப்படி எப்படித் தணிஞ்சு போனாலும் ஒருத்தனைக் குட்டுறதிலேயே எல்லாரும் குறியாக இருந்தால்?
வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. “இந்தச் சீவியத்துக்கு ரோட்டு ரோட்டா அலையிறது மேல்!” சத்தமாகச் சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்து கரங்களைக் கழுவிட்டுத் திரும்ப, “தயவு செய்து வந்திருந்து சாப்பிடுங்க; இனி அவள் அப்பிடியெல்லாம் கதைக்க மாட்டாள்.”
மீண்டும் குறுக்கே வந்து மறித்த உதயாவின் கண்கள் குளமாகி இருந்தன. அம்மாவும் தீபியும் வாய் திறவாது அமர்ந்திருந்தார்கள்.
மூவரையும் பார்த்த என்னுள் கோபம் அதிகரித்ததேயொழியக் கொஞ்சமும் கொஞ்சமும் குறையவில்லை.
அவளுக்குப் பதில் சொல்லாது விருட்டென்று நகர்ந்து சென்று மோட்டார் சைக்கிளின் திறப்பை எடுத்தவேகத்தில் வெளியேறிவிட்டேன்.
எங்கென்று இல்லாது சீறிப்பாய்ந்தது, மோட்டார் சைக்கிள்.
கோபம் கொண்ட நெஞ்சமோ எதையும் நினைக்கும் சக்தியற்றுக் கொந்தளிப்பும் சீறல் மூச்சுகளுமாகக் கிடந்தது.
இந்நிலையிலும், “தயவு செய்து சாப்பிடுங்க!” என்று, கண்ணீரோடு வழிமறித்தவள் உரு மனத்தில் எட்டிப் பார்க்கவும் செய்தது.
“ச்சே! அவள்தான் எல்லாத்துக்கும் காரணம். ஆட்டோவுக்குச் சொல்லியிருக்கிறேன் என்றால் அதுக்கு ஒரு கதை!
அவளே இப்பிடி எடுத்தெறிஞ்சு கதைச்சால் அதைப்பார்த்து அவளவே ரெண்டு பேரும் கதைக்கிறதுக்கு எவ்வளவு நேரமாகும்.” கொந்தளித்துப் போனது மனம். “அம்மா அடுத்தவா. என்னத்த எதிர்பார்க்கீனம் எண்டல்லோ விளங்கேல்ல!”
மாலையில், புதினமாக என்னுள் வந்திருந்த துளி அமைதிக்கு இவ்வளவுதானா ஆயுள்?

