அத்தியாயம் 28- 2

அன்று, தான் சொன்னதிலிருந்து எப்பவுமே இப்படி வாய் பொத்தி நிக்கும் தீபியின் வம்புக்குணத்தில் உதயாவின் இதழ்களில் முறுவல் மலர்ந்தது.

   அதையெல்லாம் கவனியாத கவியோ,  “குட்டிச் சித்தி பாவம்; நல்லவா எண்டாலும் அந்த மனுசன் பொல்லாதது; நம்பி நீங்க கொழும்புக்கெல்லாம் போக வேணாம்.” தன் மனத்தில் பட்டத்தைச் சொல்லிக்கொண்டே போனாள்.

  அந்த நேரமா சூர்யா வர வேண்டும்? தண்ணி குடிக்க வந்தார் போலும். கவி கதைத்ததை அப்படியே கேட்டுவிட்டார்

  நின்று ஒரு பார்வை பார்த்தாரே! அம்மாடியோவ்!

  “இந்தப் பார்வையை வேறெங்கும்…” என்று ஆரம்பித்த கவி, மின்னல் வேகத்தில் எழுந்து தங்கையையும் இழுத்துக்கொண்டு என் பின்னால் பதுங்கிவிட, அவர்களை நோக்கி வந்தவர் என்னையும் சேர்த்து முறைத்தார்.

 அந்தக் கோபத்தில் மிரண்டுவிட்டேன். உண்மையாகவே திக்கென்று இருந்ததுதான்.

  தங்கைகளையும் தள்ளிக்கொண்டு பின்னால் நகர்ந்த என்னை ஒரு பார்வை பார்த்தார். அதுக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் எனக்கு விளங்கவில்லை.

  அப்படியே என்னுள் ஊடுருவும் பார்வை!

 “இதெல்லாம் நீ குடுக்கிற இடம். இப்படியே போனால் பிறகு உன்ர சொல்லும் கேட்க மாட்டீனம். இப்பவே கண்டிச்சு வை! அன்பா இருக்கிறது வேற, இது வேற. நானும்  பார்த்துக்கொண்டுதான் வாறன், இன்னொருதடவைஇப்பிடிக்  கிழட்டுக்கதை கதைக்கட்டும் அப்பத்  தெரியும்.”

  என் தோள் வளைவால் எட்டிப் பார்த்தவர்களைப்  பார்த்து உறுமிவிட்டு நகர்ந்தவர் அதே வேகத்தில் திரும்பி வந்து என்னை ஆழ்ந்து பார்த்தார்.

  ‘நான் இப்ப என்னவாவது சொன்னனா என்ன?’ 

   மனதுள் முணுமுணுத்தத்தை விழிகள் சொல்லிவிட்டது போலும்.

  “இவே ரெண்டு பேரும் அடிக்கொருதரம் சொல்லுறது போல இந்த வீட்டில இருக்கஎன்னிலஉன்ன ஏதாவது செய்திருவன் எண்டு பயப்படுறியா உதயா?” என்று, அவர் கேட்ட விதத்தில் உண்மையாகவே நான் பதறிவிட்டேன்தான்.

  “நான்நாஎன்னவாவது சொன்னனா என்ன?” என்றேன் தடுமாற்றமாக.

  “இங்க பாருங்க நான் வாயே திறக்கேல்ல. ஆளை விடுங்க…” தீபி.

  “பச்!” சலித்தவரில் வருத்தமே முன் நின்றது

  “அன்றைக்கு நீ இங்க வந்த அடுத்தநாள் இரவு உன்னட்டத்  தண்ணி வாங்கிக்  குடிச்சனே நினைவிருக்கா?”

  ‘நினைவில்லாமல்! முதல் முதல் என் கண்களை நேருக்கு நேராக, அது சில கணங்களே என்றாலும் பார்த்த நாள்!’ மனம் தான் சொன்னது

  அமைதியாக நின்றேன்.

  “அண்டைக்கே உன்னட்டச்  சொல்ல இருந்தன், இன்றைக்கு வரைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கேல்ல.” என்றுவிட்டுத் தங்கைகளை  மீண்டும் பார்வையால் சுட்டவர்

  “இந்த வீட்டிலோ எங்கயுமோ எங்களால உனக்கு எள்ளவும் துன்பமோ ஆபத்தோ வராது உதயா. நாநான் வர விடமாட்டன். இந்த விசயத்தில் உன்ர தங்கச்சிகளுக்குச் சரியான பயம் இருக்குப்  போல! உனக்கும் இருந்தால், இனி இந்தக் கணத்தில இருந்து அது தேவையில்ல!” 

  சொல்லத் தொடங்குகையில் இலேசாகத் தடுமாறிவர் பின்னரோ அடிக்குரலில் சீறிவிட்டு வெளியேறி இருந்தார் .

   “என்ன சத்தம்?” என்று வந்த அம்மம்மாவும் குட்டி அக்காவும் கவிக்குப்  புத்தி சொல்லி அவளை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்கள்.

   “பெரிசா கோபம் எல்லாம் வருது அவருக்கு? நாங்க என்ன இல்லாதது பொல்லாததையா சொல்லுறம்? பெரிய திறமான ஆள்தான் அவர்.” சொல்லிக்கொண்டே தீபி அழுதாள்.

   “நாங்க எப்பவும் எங்கட அக்கான்ட சொல்லுக் கேட்காமல் நடக்க மாட்டம். அதுக்காக மற்ற ஆக்களின்ட சொல்லு எல்லாம் கேட்கவும் மாட்டம். இவ்வளவு சொல்லுறவர் கலியாணம் செய்து வந்த அன்று என்ன செய்தவர் எண்டு மறந்திட்டார் போல. செலக்டிவ் அம்மனிசியாவோ!” அழுதபடி சொன்னாள்  கவி.

  நான் அடுப்பை அணைத்து விட்டேன். இந்த இழுபறியில் முட்டைமா வேற உருவத்தில் அல்லவா வந்துவிடும்.

  “ஐயோ விடுங்கடிஉங்களுக்கும் எத்தின தரம் சொன்னாலும் விளங்குதே இல்ல.”  என் பங்குக்கு நான் சொல்ல, தங்கைகள் இருவரின்  அழுகையும் வலுத்தது.

  “ஐயோ! ஏன்  வீண் பிரச்சனை என்றுதான் சொன்னன். மற்றும் படி என்ர தங்கச்சிகள் பற்றி எனக்குத் தெரியாதா என்ன?” என்று நான் சமாதானம் செய்ய, என்னைக் கட்டிக் கொண்டவர்களோ

  “இப்பஇப்பத்தான் மாமா மாறிருவார் என்ற நம்பிக்கையே எங்களுக்கு வந்திருக்கு அக்கா! என்னதான் அவரைப் பேசினாலும்(திட்டினாலும்) அவர் எங்கட மாமா எண்டத  மறந்திருவமா என்ன? அதையும் விட, இப்ப அவர் எங்கட அத்தான்! இது ஆனந்தக்கண்ணீர்!” என்று சொல்லி இறுக்கமாக என்னைக் கட்டிக்கொள்ள, தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள் குட்டி அக்காவும் அம்மம்மாவும்.

  “நான் இன்னும் அவனோட முகம் குடுத்துக் கதைக்காட்டியும் இந்த எட்டு  மாதங்களுக்கு மேலாக் கவனிச்சதில  என்ர ராசன் பழைய படி ஆகீருவான் எண்ட நம்பிகை  வந்திருக்கு!” கேவினார் அம்மம்மா.

   “என்றாலும் இன்னொருக்கா நான் ஏமாறத்  தயார் இல்ல. முழுசா என்ர மகன் எண்டைக்கு மீண்டு வாறானோ அண்டைக்குத்தான் அவனோட எனக்குக்  கதை.” தீர்மானமாகச் சொல்லவும் செய்தார்.

  “வீம்பு பிடிக்காமல் அண்ணாவோட கதையுங்கம்மா!” 

  அதட்டிவிட்டு வந்த குட்டி அக்கா, தங்கைகளை மெல்ல விலத்திவிட்டு என் தோள்களைப் பற்றியபடி  கண்ணீரோடு பார்த்தார்.

   “நான் வெளிநாடு போன பிறகு…” ஆரம்பித்துவிட்டு  நிறுத்தியவர் பார்வை என்னில் ஆழ்ந்து இறங்கியது, என் மனத்தைப் படித்துவிடும் ஆவலில், நோக்கில்அதையுணர்ந்து அமைதியாக நின்றேன் நான்

  “அண்ணாவையும் அம்மாவையும் கவனமாகப் பார்த்துக் கொள்வீர் தானே உதயா?” தொடர்ந்துகண்கள் குளமாகக் கேட்டவருக்கு என்ன பதில் சொல்வேன்

உங்கட ஆசை அண்ணாவுக்கு  இரவில சாப்பாடு போட்டுக்குடுத்து விடிய ஒரு தேத்தண்ணி ஊற்றிக் குடுப்பன், யோசியாதையுங்க!’ சட்டென்று  இப்படித்தான் சொல்லத் தோன்றிற்று. கவனமாகச்  சொல்லாது விட்டு விட்டேன்

  என் முகத்தையே பார்த்தபடி பதிலுக்காகக் காத்திருப்பவருக்கு மௌனம் போதுமா என்ன?

  “அம்மம்மாவப்  பத்திரமாப் பார்ப்பது என்ர பொறுப்பு! உங்களுக்கு அம்மம்மா பற்றின கவலையே வேணாம்.”  என்று  நான் சொன்னதை  குட்டி அக்காவும் அம்மம்மாவும் வருத்தத்தோடு கேட்டு நின்றார்கள் என்றால், என்னை ஒரு பார்வை பார்த்தபடி சமையலறையால் வீட்டின் முன்பக்கமாகச் சென்றார் சூர்யா.

  நான் சொன்னதை நிச்சயமாகக் கேட்டிருப்பார். மனம் சற்றே ஆடியதுதான்.

  ‘கேட்கட்டுமே! நான் பிழையாக எதையுமே  சொல்லவில்லையே.’  என்ற  முடிவோடு, “சரி, இனி இந்த முட்டை மாவைச் செய்திட்டுத்தான் மற்றக் கதை…” சிறுமுறுவலோடு சொல்லி அடுப்பைப் பற்ற வைத்தேன், அவர்களின் பார்வை என்னில் தயங்கி நிற்பதைக் காணாத பாவனையில்.    

error: Alert: Content selection is disabled!!