அத்தியாயம் 31 – 1

அந்தத்தனியார் பேரூந்து யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

  பாதையில் குவிந்திருந்த இருளை அதன் முன்விளக்குகள் விரட்டி விடும் பணியில் இருக்க, உள்ளே, பலவித எண்ணக்கலவைகளோடு அமர்ந்திருந்த அனைவரையும் பொத்தி அரவணைத்துக்கொண்டு ஒருவித மமதையான கம்பீரத்தில் விரைந்து கொண்டிருந்தது, அப்பேரூந்து.

  “தம்பி ரெண்டு வாட்டர் பாட்டில்ஸ் தர முடியுமா?”  

   எனக்கு முன்னால் அமர்ந்திருந்த குடும்பம் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள் போலும்ஒரே தடல்புடல்; ஒரு மகன், மகள், தாய் தகப்பன் தான்; எல்லார் பார்வையையும் தங்கள் மீது திருப்பிக் கொண்டிருந்தார்கள்.

   “இதுக்குத்தான் தனியா வான் பிடிக்கலாம் என்றனான்; உங்களுக்குக்  கேட்க மனமில்ல.”

   அந்தப் பெண்மணி முணுமுணுத்தபடிதான் பேரூந்தில் ஏறினார். இப்போதும் என்னவோ கணவனை முறைத்துக்கொண்டே இருந்தார் .

  அவர்களுக்குப் பின்னால் பேரூந்தின் நடுப்பகுதியில் இருவர் அமரக்கூடிய இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம்.

  வந்து யன்னலோரமாக அமர்ந்த நேரத்திலிருந்து உதயாவின் பார்வை வெளியில்தான். மறைப்பாகத் தொங்கிய தடித்த திரையை இலேசாக விலக்கிவிட்டு  வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

  நான் அப்பப்போ கலைந்தாலும் முன்னே திரையில் செல்லும் திரைப்படத்தில் விழிகள் பதித்திருந்தேன். படம் பார்க்கிறேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

   அருமையான படம் தான் போய்க்கொண்டிருந்தது. பரியேறும் பெருமாள். தாழ்த்தப்பட்டவர்களின் மனநிலையை, எளிமையான வாழ்க்கையைத்  துல்லியமாக வாழ்ந்து காட்டியிருந்தான் நாயகன். வாழ வைத்திருந்தார், இயக்குனர் என்றே சொல்லலாம்.

   இரயிலின் கூவல்; நாயகன் முகத்தில் அதிர்ச்சி; மறுநிமிடம் தலைதெறிக்க ஓடுகிறான்; சாரம் அவிழ்ந்து  விழ அவன் ஓடும் வேகம்இருந்தும், அவன் உயிரான அந்த நாய்…’சதக்திரையில் கேட்ட ஒலி என் உள்ளத்துள் பெரிதாகக் கேட்டது

   அடி நெஞ்சில் சுருக்கென்று வலித்தது

   கல்யாணி எங்கோ தூரமாகமங்கலாகஅவளுக்கும் இப்படித்தான்ஐயோ

   கண்களை இறுக  மூடிக்கொண்டேன். கொஞ்சநேரம் என்னால் எதையும் சிந்திக்க முடியவில்லை. இந்த வேதனைக்கு முடிவே இல்லையோ!

   “ச்சு! தெரியாமல்…” என் தடித்த துன்பத்திரை அத்தனை சுலபமாக எங்கு போனதோ!

   உதயாவின் குரலில் திடுக்கிட்டுப் போய் அவளைப் பார்த்தேன்அவள் கரம் என் முழங்கையோரமாக மோதியதையும் அப்போதுதான் உணர முடிந்தது.

   “இல்ல துங்கிறீங்களா? தெரியாமல் இடி பட்டுட்டு!” என்றாள் மீண்டும்.

   “தூங்க எல்லாம் இல்ல, படம் பார்க்கிறன்; நீர் பார்த்திட்டீரா? நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு படம் பார்க்கிறன்; நல்லா எடுத்திருக்கிறான்கள் என்ன?” என்ற என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள்  அவள்.

   எப்போ  தான் ஒழுங்காகப் பார்த்திருக்கிறாள்?

   “கண்ணை மூடிக்கொண்டே படம் பார்க்கிற ஆள இண்டைக்குத்தான் கண்டிருக்கிறன்.” என்றவள் உதடுகள் நகைப்பில் சற்றே விரிந்தன. சட்டென்று திரும்பிவிட்டாள்

   ! பார்வைக்கு அர்த்தம் அதுதானா? நான் தான் அவளின் ஒவ்வொரு அசையவையும்  வித்தியாசமாக அர்த்தம் கொள்கிறேனோ!

   அவள் அப்படிச் சொன்னதுக்காகவே சிறிது நேரம் படத்தில் கவனம் செலுத்தினேன். படம் தன்னுள் இழுத்துக்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.    

   இருந்தும், பரியேறும் பெருமாள் சட்டக்கல்லுரியில்  இருக்கையில் என் மனமோ, மத்தியானம் நர்மதா வீடு சென்றிருந்த போது நடந்தவைகளில் உலாச் சென்றது.

   விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, முதலில் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்று அங்கிருந்த பைகளை எடுத்துக்கொண்டு அவர்களின் வீடு செல்கையில் இரண்டு மணியாகிவிட்டது.  

   தெஹிவளை, காலிவீதியில் இறங்கி ஹில்ஸ் ரோட்டில் சிறிது தூரம் நடக்க அவர்கள் வீடு வருமாக்கும்

   விமான நிலையத்திலிருந்து வெளிக்கிட்டதில் இருந்து மௌனமாகவே வந்தாள் உதயா. இல்லையென்றால் மட்டும் கதைத்துவிடுவாள் பாருங்க

   அப்படியிருந்த போதும், எனக்கு அந்தப்பிரயாணம் வெகு வித்தியாசமான உணர்வைத் தந்தது. அன்றொருநாள், முதன் முதலாக மோட்டார் சைக்கிளில் அவளை ஏற்றிச் சென்றபோதிருந்ததை விடவும் பலமடங்கு அருமையாகவே இருந்தது.

   அவளில் எத்தனையோ மனச்சுணக்கம் இருந்தாலும், எத்தனையோ என்ன? சிலகாலமாக வீட்டிளுள்ளவர்கள் என்னைப்பற்றி மட்டமாக நினைப்பதுபோலவே, அவளுள்ளும் ஒரு எண்ணமுண்டு என்பது என்னுள்   அழுத்தமாகப் பதிந்து போய்விட்டது

   மனத்தைரியம் இல்லாத ஒரு  வெறிக்குட்டி என்றுதான் என்னை நினைத்திருப்பாள் போலும்

   அதுவும், தான் எனக்கு வாழ்க்கை தந்துவிட்டது போலவும்  ஒரு எண்ணம் அவளுள் உண்டு என்பேன்

    ஏன், என் காதுப்படவே அம்மா அவளுக்குச் சொன்னதை நான் கேட்டேனே! பிறகு அவளுள் இருக்காதா என்ன

   “குடிச்சுச்  சீரழிஞ்சு போக இருந்தவனுக்கு நீதான் குஞ்சு வாழ்க்கை குடுத்திருக்கிற! எவள் இதைச் செய்வாள் சொல்லு? அதுவும் இந்தக் காலத்திலஅது அவனுக்கு இண்டைக்கு விளங்காட்டியும் எங்களுக்கு நல்லாவே விளங்கும். அதனால, நீ யாருக்கும் பயப்படாத, நான் இருக்கிறன் உனக்கு!” என்றுஎன்னை எரிபார்வை பார்த்துக்கொண்டே பலதடவைகள் சொல்லி இருக்கிறாரே!

   அதே எண்ணம் தான் இவளுக்கும். இல்லையேல் இப்படி என்னை மதிக்காது இருக்க வேறென்ன காரணம்

   அந்தப் பாதை சற்றே ஏற்றம். அவள் விறுவிறுவென்று முன்னால்  சென்றாள். என்னோடு சேர்ந்து வர விருப்பமில்லையோ என்னவோ! நானும்  சற்றே பின்தங்கிவிட்டேன் தான்மனத்தின் வீச்சு வேகத்தைக் கட்டுப்படுத்தித்  தன்பாட்டில் அதையிதைப் புரட்டிக் குழம்பியபடி இருக்கே!

error: Alert: Content selection is disabled!!