“எங்க அப்பிடியே போறீங்க? இங்க, இதுதான் வீடு!”
அதுவரை ஒரு வார்த்தை கதைக்காதவள் நான் நேரே நடந்துவிட, குரல் கொடுத்திருந்தாள்.
அந்தப்பாதையின் ஓரமாகவே இருந்தது நர்மதாவின் வீடு. ஒரே பார்வைக்கு அழகாக இருந்தது. உயரமாக இருந்த இரட்டைக் கம்பிக்கதவைத் திறந்து விறுவிறுவென்று உள்ளே சென்றாள் உதயா. எதிர்பார்த்திருந்தார்கள் போல, “உதயா!” நர்மதா ஓடிவர, இவளும் ஓரெட்டு எடுத்துவைத்துச் சிநேகிதியைக் கட்டிக் கொண்டாள்.
‘பலவருடங்களின் பின்னர் சந்தித்துக் கொள்கிறார்களாம்!’ ம்ம் …அவர்களை பார்த்தால் அப்படித்தான் இருந்தது. என்னைத் தவிர எல்லாரும் இவளுக்கு மிக மிக வேண்டியவர்கள்.
நான் சற்றே தயங்கி நின்றுவிட்டேன். கலியாண நாளன்று நடந்தவை நினைவில் வராமல் போகுமா? என்ன முகத்தோடு இப்போது இங்கு வந்திருக்கின்றேன். இத்தனைக்கும் உதயாவே என்னை மதிப்பதில்லை. இவர்கள்?
எனக்கு அசையும் எண்ணமே வரவில்லை. ‘இப்பிடியே திரும்பிப் போயிருவமா?’ என்று கூட நினைத்துவிட்டேன்.
நர்மதாவின் பார்வை என்னில் பட்டு விலகியதுதான். வா என்று சொல்லவில்லை. தோழியின் பார்வையைத் தொடர்ந்து என்னில் விழுந்தது உதயாவின் பார்வை.
சட்டென்று தோழியின் பிடியிலிருந்து விலகியவள், “ஏன் அங்கயே நிக்கிறீங்க? வாங்கோவன்.” என்றபடி ஓடி வந்தாள்.
வந்தவேகத்தில் சற்று அழுத்தமாகவே என் வலக்கரத்தைப் பற்றியபடி ஒரு கணம் என்னைப் பார்த்தவள் மிக இயல்பான முறுவலோடு இழுத்துக்கொண்டு நடந்தாள்.
என்னவோ அந்தக்கணம் அவள் என் மனதருகில் மிகையாக நெருங்கிவிட்டதாக…ம்ம்…நான் அவள் மனதருகில் நெருங்கிவிட்டதாக …அட…எப்படியோ ஒன்றை உணர்ந்தேன். அவளின் அந்தச் செய்கையில் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்!
திருமணத்தன்று எப்படியெல்லாம் நடந்திருகின்றேன் என்ற நினைவில் ஒருவித அவமான உணர்வோடு தான் அவர்களை ஏறிட்டபடி நின்றிருந்தேன். ஒத்தவார்த்தை என்றாலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கதைப்பதாம்? இவர்களின் வீடு வரும் வரை அது எனக்கு உறைக்கவில்லை . விமானமேறிய தங்கையும் கூடவே வந்த உதயாவும் தான் சிந்தை முழுதும் நிறைந்திருந்தார்கள்.
இவர்களைக் கண்டதும் தான் மனம் விழித்துக் கொண்டது. அந்தக் கணம் என் மனைவியின் செய்கையில்…
“சூர்யா” என்னை நானே விளித்துப் பார்த்தேன். உதடுகளில் தான். அருகில் வந்தவளுக்கு கேட்டுவிட்டது போல! நின்று ஒற்றைப் புருவம் உயரக் கேள்வியாகப் பார்த்தாள்.
“ஒன்றும் இல்ல; நட…” என்றேன் மெதுவாக.
அதற்குள், “வாங்க தம்பி, வாங்க வாங்க!” அவளின் தாய், தகப்பன் மகிழ்வோடு வரவேற்றார்கள். நர்மதா மட்டும் “ம்க்கும்” ஒரு தலைச் சிலுப்பலோடு தோழியைப் பார்த்து நின்றார். உதயாவின் நண்பியாச்சே!
நர்மதாவின் கணவர் முகமன் முறுவலோடு வந்து என் இடக்கையைப் பற்றி, “வாங்க!” என்று வரவேற்ற போதே தன் பிடியைத் தளர்த்தினாள் உதயா. ஆனாலும், என்னருகிலேயே நின்றாள்.
அதன்பின் அங்கிருந்து இரவுப் பேரூந்துக்குத்தான் கிளம்பி வந்தோம். அதுவரையிலும் பெரும்பான்மை நேரம் என்னோடு இருந்தாள்.
அதைச் சாடை மாடையாகத் தொடங்கி நேரடியாகவே நர்மதா சொல்லிப் பகிடி செய்த போதும் சின்ன முறுவலோடு அமர்ந்திருந்தாள்.
திருமணத்தன்று நடந்தவைகளை நான் தான் நினைத்து மறுகிக் கொண்டிருந்தேன். நர்மதாவின் வீட்டினர், நர்மதாவைத் தவிர மற்றவர்கள் அதை நினைத்துப் பார்த்தது போலவே நடந்து கொள்ளவில்லை. உதயாவோடு போலவே என்னோடும் அன்பாகவே கதைத்துப் பேசினார்கள்.
புறப்பட்டு வருகையில், “உதயாவும் எங்கட மகள் தான்; இவள் வேற அவள் வேற இல்ல தம்பி!” என்றார், நர்மதாவின் அன்னை.
மெல்லத் தலையாட்டினேன். ‘என்ன சொல்ல வாறார்? அன்றைக்கு நடந்தவைகளை …’ மேலும் சிந்திக்கவிடாது தொடர்ந்தார் அவர்.
“அவளை இனிமேலும் கலங்க விட்டிராதீங்க தம்பி; இப்பிடி எப்பவும் சந்தோசமாக வைச்சிருங்க; என்ன பிரச்சனை எண்டாலும் ரெண்டு பேரும் ஒண்டாக நின்று எதிர்கொள்ள வேணும்.” அப்படியே நிறையச் சொன்னார்.
என் மனதில் தங்கியது என்னவோ, ‘இப்பிடி எப்பவும் சந்தோசமா வச்சிருங்க!’ என்றது மட்டுமேதான்.
‘அப்ப, இப்ப, இந்தக் கணம் அவள் சந்தோசமாக இருக்கிறாளா?’
பலத்த சந்தேகத்தில் அவளைப் பார்க்க, அவளோ தோழியிடம் எதையோ குசுகுசுத்துக் கொண்டிருந்தாள். முகம் நிர்மலமாக இருந்தது. அங்கே நிச்சயம் கவலையின், வருத்தத்தின் சுவடு இல்லைத்தான். ஆனால், சந்தோசம்? அது இருக்கின்றதா?
தோழியைச் சந்தித்தது, பாசமான அந்தக் குடும்பத்துடன் சிலமணித்தியாலங்கள் செலவிட்டது என, அந்த மகிழ்வை என்னால் இனம் காண முடிந்தாலும் இவர் சொல்லும் வகையிலான என்னோடுடனான வாழ்வின் மகிழ்வு அந்த முகத்தில் உண்டா என்ன?
உண்மை நிலவரம் தெரிந்த எனக்கு அதைப் பிரித்தறிய முடிந்த அதேவேளை, இந்த முகத்தில் அந்தச் சந்தோசத்தையும் பார்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் இலேசாக எட்டிப் பார்த்தது.
“என்ன தம்பி நான் சொல்லுறது?” என்றவருக்குத் தலையைப் பலமாகவே ஆட்டியதோடு, “நிச்சயம் ஆன்ட்டி!” என்றேனா, சரேலென்று அதே பார்வை பார்த்தாள் உதயா. கணம் தான், மாற்றிவிட்டாள்.
“இங்க பாருங்க, அண்ணா…” சற்றே கடினப்பட்டு அண்ணா என்றழைத்தார் நர்மதா. மனதில் இன்னும் கோபம் உள்ளது என்பதை அவரின் ஒவ்வொரு செய்கையும் சுட்டி நின்றது.
புன்னகையோடு பார்த்து நின்றேன். பெரியவர்கள் நடந்து கொண்ட முறையிலும் நானிருக்கிறேன் என்ற உதயாவின் நடத்தையும் என்னுள் இருந்து தாழ்வுணர்ச்சியையும் குற்றவுணர்வையும் மறையச் செய்திருந்ததில் நர்மதாவை நிமிர்வாகவே எதிர்கொள்ள முடிந்தது .