அப்படியிருந்தும், “உங்கட பெரியக்கா, அதுதான் இவளின்ர ஆசை அருமையான சித்தி…” என்று ஆரம்பிக்க என் முகம் இறுகியதைத் தவிர்க்க முடியவில்லை.
“நர்மதா…” கண்டிப்போடு இடையிட்டார் அவரின் அன்னை.
“சும்மா இருங்கம்மா! அவரின்ட அக்கா பற்றி நான் சொல்லியா தெரிய வேணும்?” என்றவளை, “எருமை சும்மா இரு!” என்றது உதயாதான்.
“அந்த மனிசிக்கு என்ன ராசியோ? இவள் ஒரு சொல்லுச் சொல்ல விடாள்.” தோழியை முறைத்துவிட்டு என்னிடம் திரும்ப, “நர்மதா அவேக்கு பஸ்சுக்கு நேரம் போயிற்று!” இடையிட்டது, அவரின் கணவர்.
“அதெல்லாம் நேரம் கிடக்கு. சொல்ல வந்ததைச் சொல்ல விடுங்க பார்ப்பம். உங்கட அக்கா கோல்மால் செய்து இவளக் கல்யாணத்துக்கு ஓமென்ற வச்சு, எழுத்தும் முடியத் தான் எனக்குத் தெரியும். அப்பவே கையில கிடந்த மோதிரத்தைக் கழற்றிச் சுழற்றி எறியப் பார்த்தனான். இவள் தான் …”
“சும்மா இருக்க மாட்டியா?” திரும்பவும் இடையிட்ட உதயாவை அப்பால் விலக்கிவிட்டுவிட்டு, “நீங்க நல்லவர் வல்லவர் சந்தோசமாக இருந்து காட்டுறன் பார் எண்டு சவால் எல்லாம் விட்டுட்டுத்தான் கலியாணம் செய்தவள். அது பார்த்தால்…” என்றவளின் வாயில் கைவைத்துப் பொத்தி அப்பால் இழுத்துவிட்டாள் உதயா.
“ப்ளீஸ்!” என்றது வேறு எனக்கு கேட்டிச்சு.
“உதயா விடும் ! அவா சொல்ல வந்தைதைச் சொல்லட்டும்.” என்றேன் நான்.
“அவளுக்கு விசர் தம்பி, ஒன்றைப் பிடித்தால் அதிலேயே நிற்பாள்.” என்றுவிட்டு மகளிடம் திரும்பி, “பேசாமல் விடு நர்மதா, நம்மட கண்கள் பொய்யா சொல்லுது? ரெண்டு பேரும் சந்தோசமாக இருப்பீனம்.”என்ற நர்மதாவின் தாய் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அதுதான் நானும் சொல்ல வாறன். இல்லையோ, அண்ணா எண்டு வேற சொல்லீட்டன், இங்க இருந்து வந்து கொலை செய்வன்.” மிரட்டிவிட்டு உள்ளே சென்றார்.
“அவளுக்கு உதயா என்றால் உயிர்; சின்னப்பிள்ளையில இருந்து ரெரண்டுபேரும் அவ்வளவு ஒட்டு; நீங்க ஒண்டும் நினையாதீங்க!” என்றார், நர்மதாவின் தந்தை.
“இல்ல இல்ல. நான் என்ன நினைக்க இருக்கு? இங்க இருந்து கலியாணத்துக்கு வந்த உங்களுக்கு எங்கட வீட்டில வீண் மனத்துன்பம் நடந்திட்டு; அதுக்கு நான் தான் உங்களிட்ட மன்னிப்புக் கேட்க வேணும்.” என்று சொல்லிவிட்டேன். அதுவரை அப்படிச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணியிருக்கவில்லை, அந்தச் சூழ்நிலை, அவர்களின் அன்பும் அக்கறையும் அதைச் சொல்ல வைத்துவிட்டது.
கேட்டவர்கள், “அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை தம்பி!” என்று பாசத்தோடு தோளில் தட்டிக் கொடுத்தார்கள். உதயா தான் ஒரு சாதியாகப் பார்த்தாள்.
“அம்மா இந்தாங்க…” என்றபடி வந்த நர்மதாவிடமிருந்து ஒரு தங்கச் சங்கிலியை வாங்கி என்னிடம் தந்து, ” உதயாவுக்குப் போட்டு விடுங்க தம்பி!” என்றார் ஆன்ட்டி.
“இதெல்லாம் என்னத்துக்கு ஆன்ட்டி?” என்றபடி திரும்பவும் என்னை ஒரு பார்வை பார்த்தாள் உதயா. அதே பழைய முறைப்போ!
‘வாங்கிவிடாதே!’ என்று சொல்வது போலத்தான் இருந்தது.
“வேணாம் ஆன்ட்டி, இதெல்லாம் என்ன சம்பிரதாயம்? உங்கட அன்பே போதும்.” என்றேன். அவர்கள் விட்டால்தானே?
என் கையில் சங்கிலியைத் திணித்தார்கள்.
அணிந்தால் கழுத்தோடு நிற்கும் என்பது பார்த்ததும் புரிந்தது. அதன் எஸ் கழற்றி இருக்க, “போட்டுவிடுங்க சூர்யா.” என்றபடி, தன் கைபேசியைத் தயாராக்கினார் நர்மதாவின் கணவர்.
“போட்டுவிடுங்க அண்ணா!” உதயாவை என்பக்கம் தள்ளினார் நர்மதா.
முறைப்போடு அருகில் வந்து என்னில் இலேசாக மோதி நின்றவள்,” சரி தாங்க, நானே போட்டுக் கொள்ளுறன்.” என்று வாங்கப் பார்க்க, “அதெல்லாம் முடியாது; அண்ணா நீங்க போடுங்க!” என்றார் நர்மதா.
அதன் பிறகும் பெரிதாக மறுக்கத் தோன்றவில்லை. அதோடு எனக்கு மிக அருகில் நின்றவள் கழுத்தில் அதை போட்டுவிடும் ஆவல் வேறு என்னுள் எழுந்திருந்தது .
சட்டென்று முறுவலோடு போட்டுவிட்டேன்.
“அது! ”
“இனி நீ போட்டு விடு! உதயாட்டக் குடுங்கோ அம்மா!” நர்மதா சொல்ல, அவள் கையில் ஒரு மோதிரம் கொடுக்கப்பட, அவளோ அப்படியே நின்றாள்.
‘அதெல்லாம் முடியாது; மாட்டன் என்று விடுவாளோ!’ அக்கணம் இந்த எண்ணம் தான் என்னுள் .
என்னையும் அறியாது வலது கைவிரலை அவள் முன்னால் நீட்டிவிட்டேன் .
“ஓ ஓ ஓ!” நர்மதாவின் கூச்சல்.
உதடுகளில் இருக்கின்றதா இல்லையா என்றறியமுடியாத சிறுமுறுவலோடு பட்டும் படாமலும் விரல் பற்றி மோதிரத்தைப் போட்டு விட்டுட்டாள் உதயா.
அப்பாடா என்றிருந்தது.